ரேவதி நரசிம்ஹன்

அன்புள்ள வல்லமை ஆசிரியர் அவர்களுக்கு,

சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று என்னை மிகவும் பாதித்தது. அதை உங்களுக்கு எழுதி அனுப்புகிறேன். ஏற்புடையதாக இருந்தால் பிரசுரிக்கவும் , என்ற கோரிக்கையோடு வந்த அனுபவக் கடிதம் இது.  சில ஆண்களின் போக்கு பற்றிய அறச் சீற்றம் அந்தக் கடிதத்தில் தொனித்தது. அதில் இருந்த பிழைகளை நீக்கி , சிறிது சுவை சேர்த்து இதோ பிரசுரிக்கிறோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நாங்கள் (வாசகர் ரேவதி நரசிம்மனும் , அவர் கணவரும்)  ,  எங்கள் மகனோடு ஸ்விட்சர்லாந்தின் ஒரு அழகிய நகரமான இன்டர்லாகன் எனும் இடத்திற்குப் பயணம் மேற்கொண்டோம்.  ஊர் சுற்றிப் பார்க்க எங்களுக்குக் கிடைத்தது ஏழு மணி நேரம் தான். ஏனென்றால் எங்கள் பேத்தி பள்ளியில் இருந்து வருவதற்குள் திரும்ப வர வேண்டும். ரயிலில் ஏறியதும் இன்னொரு இந்திய தம்பதியினரின் அறிமுகம் கிடைத்தது. மக்கட்பேறு இல்லாதவர்கள் என்றும் நல்லவசதி படைத்தவர்கள் என்பதும் புரிந்தது. இருவரும் சென்னையில் ஒரு டூரிஸ்ட் கம்பெனியில் பாக்கேஜ் டூர் எடுத்துக் கொண்டு இருபது நாட்கள் ஐரோப்பியப் பயணமாக வந்திருக்கிறார்கள்.

அந்தப் பெரியவருக்கு ௭ழுபது வயதிருக்கும் . நல்ல திடகாத்திரமான உடல். அவரின் கம்பீரத்தையும் ஆளுமையையும் பார்த்தால் எதோ பெரிய அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பாளராக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். மனைவிக்கு அறுபத்தெட்டு வயது என்று சொன்னார். ஆளுக்கொரு ஜன்னலோரத்தை அவர்கள் பிடித்துக் கொண்டதால் நாங்கள் அடுத்த இருக்கைகளைத தேடி அமர்ந்துகொண்டோம்.

பரஸ்பர அறிமுகத்தை அடுத்து நான் மௌனமாக வெளியில் தெரிந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்தவாறு வந்தேன். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத பசுமை ,   மாசுகளற்ற மரகதப் பசுமை.  நான் கண் இமைக்கவே  மனமில்லாமல் பார்த்துக் கொண்டு வந்தேன். ஆனால் அந்த அம்மாளோ வெறித்த நோக்கோடு எல்லோரையும் கவனித்துவந்தார்.
அந்தப் பெரியவரோ  என் கணவரிடமும்  மகனிடமும் தான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் தலைமை வகித்த நாட்களில்  தான் செய்த உலோகங்கள் சம்பந்தப்பட்ட தனிமனித சாதனைகளை விஸ்தாரமாக எடுத்து உரைத்துக் கொண்டு வந்தார்.  மரியாதை கருதி நாங்களும் கேட்டுக் கொண்டு வந்தோம். இடையிடையே அந்த அம்மாள் ஏதோ சொல்ல எத்தனிக்கும் போதெல்லாம் அந்தப் பெரியவர் அவர்களை வாயை மூடிக்கொண்டு வருமாறு சைகை செய்வார்.

என் அருகே அந்த அம்மாள் இருந்ததால் அவர்கள் முணுமுணுப்பு என் காதில் விழுந்தது. “எப்பப் பார்த்தாலும் தன்னைப் பற்றிய புராணம் தான்.  மத்தவாளையும் கொஞ்சம் பேச விடக் கூடாதோ” என்றார்.  நான் ”அவர் ஏதோ சுவையாகத்தானே சொல்கிறார்” என்று சொல்லி வைத்தேன். அந்த அம்மாள் “இல்ல, இல்ல நான் இந்தக் கதையை பத்து வருஷமாக் கேக்கறேன். இதத் தவிர என் வாழ்க்கையில வேற எதுவுமே இல்லே , இந்த வயசுக்கு மேல விடவும் முடியலை. சேர்ந்து இருக்கவும்  முடியலை , என்னை ஒரு மனுஷியாவே அவர் மதிச்சதே கிடையாது , நீங்களாவது தமிழ் பேசறவர்களாகக் கிடைத்தீர்கள். இல்லாவிட்டால் நான் பேசவே முடியாது.” என்று புலம்பியவர் கண்களில்  கண்ணீர் பளபளத்தது. எனக்குச் சங்கடமாக இருந்தது.

“உங்களுக்குள் எப்படி இந்த வயதிலும் கருத்து வேறுபாடு இருக்கிறது? ” என்றேன்.  ”எங்கள் திருமணம் நடந்து நாற்பத்தைந்து வருடங்கள் ஆகிறது. கல்யாணமான முதல் வருடமே  குழந்தைப் பேறு வாய்த்தது . ஆனால் ஏனோ அது தக்காமல் போயிற்று.  அதன் பிறகு என்ன முயற்சி மேற்கொண்டும் ஒன்றும் பயனில்லாத நிலையில் என் தம்பி மகனைத் தத்தெடுக்கலாம் என்று நான் சொல்ல, ” உன் பிறந்த வீட்டார் உட்கார்ந்து சாப்பிட நான் ஒன்றும் சம்பாதிக்க முடியாது. நாம் இருவர் போதும்” என்று ஒரே உறுதியாகச் சொல்லி என் வாயை அடைத்து விட்டார்” என்றார் அந்த அம்மாள்.
“கொஞ்சக்காலம் தனிமையில் வருத்தப் பட்டேன். பிறகு வேறு விஷயங்களிலும் ஆன்மீகத்திலும் மனதைச் செலுத்தி எப்படியோ என்னை நானே தேற்றிக் கொண்டு விட்டேன்.” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே நாங்கள் இறங்கும் இடம் வந்தது. அங்கிருந்து படகுப் பயணமாகக் கடைசி நிலையத்தை அடைவதாக் ஏற்பாடு. திருவாளர்களும் திருமதிகளுமாக அந்த அழகான படகில் ஏறி உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். .

என் மகன் அனைவருக்கும் காபி, கேக் என்று வரவழைத்து உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்தினான். அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த அம்மாள். அவரது கவனத்தைக் கலைக்கும் வண்ணமாக ” உங்கள் பயணம் எப்போது முடியும்?” என்று கேட்டேன்.  “இங்கேயே இப்போதே முடிந்தாலும் சரி” என்று அவர் சொன்னதும் ,எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.  அதைப் பார்த்த அவர் முகத்தில் ஒரு வெற்றுச் சிரிப்பு. “அப்படியெல்லாம் எதுவும் செய்யமாட்டேன். ஜஸ்ட் ஒரு நினைப்பு அவ்வளவு தான்”  என்றார்.

படகின் ஓரத்தில் நின்று அலைகளின் அழகைப் பார்த்தவாறு வந்தோம். காற்று அதிகமாகவே இருந்ததால் நான் உள்ளே செல்ல முற்பட்டேன்.  தடால் என்ற சத்தம்.  பதறிப் போய் என்னவோ எதோ என்று மீண்டும் வெளியில் வந்து பார்த்தேன். நல்ல வேளை அந்த அம்மாள் அங்கேயே தான் நின்றிருந்தார்.  ஆனால் பெரியவரைக் காணோம். அதற்குள் படகின் அடித்தளத்தில் ஏதோ சலசலப்பு.

அந்தப் பெரியவர் படிகளில் சறுக்கி , கழிப்பறைக்குச் செல்லும் இடத்தில் விழுந்து கிடந்தார். அந்த அம்மாளின் முகத்தில் கலவரம் கூடிக் கொண்டே  போனது.  “பாவி மனுஷன்.   கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு இறங்கக் கூடாதோ.” என்று புலம்ப ஆரம்பித்தார். அதற்குள் அந்தப் படகின் முதலுதவி டாக்டர் வந்து பெரியவரின் உடல் நிலையைப் பரிசோதித்து விட்டுக்  காலில் சிறிய காயம் மட்டும் பட்டிருப்பதாகவும், மற்றபடி அவருக்குக் கவலைப்படும்படியாக அடி படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்குள் மற்ற பயணிகள் கைத்தாங்கலாக அவரை மேலே அழைத்து வந்தனர்.  “ஏன்னா “, என்றபடி அருகில் விரைந்த அம்மாளைப் பக்கத்தில் அணுகக் கூட  விடவில்லை அவர். “ஐ ஆம் ஓகே” என்றவர்  என் மகனின் உதவியோடு இருக்கையில் அமர்ந்தார்.  கொஞ்ச நேரம் அந்த அம்மாளிடம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு விலகினோம்.  இருந்தாலும் அவர்கள் உரையாடலை காற்று எங்கள் காதில் கொண்டு சேர்த்தது.

அந்த அம்மாள் கவலையான குரலில் “நாம் ஊருக்குத் திரும்பி விடலாமா ? பாஷை தெரியாமல் வெளி நாட்டில் உடல் நலக் குறைவோடு அவஸ்தைப் படவேண்டாமே” என்றார். அவரை எரிப்பது போலப் பார்த்தார் அந்த மனிதர்.  “ஊரிலிருந்து கிளம்பும்போதே நீ அபசகுனமாவே தான் பேசினே. எனக்கு இப்படி ஏதாவது ஆகணும்னு காத்துக் கொண்டிருந்தியாக்கும்” என்று படபடத்தார். இன்னும் என்னென்னவோ பேசினார்.

மற்ற பயணிகள் அந்த அம்மாள் வடித்த கண்ணீரின் காரணம் புரியாமல் ,  அருகில் வந்து ஆறுதல் சொல்லிச் சென்றார்கள்.  அப்பொழுது வாய மூடியவர்தான் அந்த அம்மாள்.. படகு விட்டு இறங்கி சக்கர வண்டியில் கணவரை ஏற்றிக் கொண்டு, பக்கத்தில் இருக்கும்  அவசர வைத்திய உதவியை நாடிச் செல்லும் வரை பேசவேயில்லை. எனக்குத்தான் கவலை அதிகமானது.

விடைபெறும்போது அந்த அம்மாளின்  கண்கள் என்னைப் பார்க்கவில்லை. உலகத்தில் மனைவிகளாகப் படைக்கப் பட்ட எத்தனையோ மரக்கட்டைகளில் ஒருத்தியாக கணவன் சென்ற சக்கர வண்டியுடன்  நடந்து கொண்டிருந்தார். அப்போது என் கண்களிலும் கண்ணீர்.

 

வடிவ மேம்பாடு – ஸ்ரீஜா வெங்கடேஷ்

 

படத்திற்கு நன்றி.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “இப்படியும் சில ஆண்கள்…

  1. Dear Srija Venkatesh,

    Thank you for publishing my post .
    you have done a marvelous job of editing it.!! Thanks a lot.
    ,kindly excuse my commenting in English.

  2. பாவம்தான் அந்தம்மா.. காலம் போன கடைசில கூட மனைவியை புரிஞ்சிக்கலையே அந்த பெரிய மனிதர் 🙁

  3. எனக்கென்னவோ தவறு அவரிடம் மட்டுமே அல்லாமல் அந்த அம்மாவிடமும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாற்பத்தைந்து வருட தாம்பத்தியத்தில் அவருக்கு ஏதாவது ஒன்றிரண்டு விசயங்களில் வெறுப்பு ஏற்படும்படி அந்த அம்மா நடந்திருக்கலாம்.ஆண்கள் சில விசயங்களில் வருட கணக்கில் பிடிவாதமாக இருப்பார்கள். பெண்களின் சில சிறு அன்பு செயல்களால் அவர்களது பிடிவாதம் உடைந்து போகும். உறவுகள் கடமைகாக அல்ல. அன்புக்காக என்பதை பெண்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *