-எம்.ஜெயராமசர்மாமெல்பேண்

அழகான ஆலமரம்                                             banyan tree
கிளைவிட்டு
நின்றதங்கே
விழுதெல்லாம்
விட்டுஅது
வேரோடி
நின்றதங்கே

ஆலமர நிழல்தேடி
அனைவருமே
வருவார்கள்
வேலையில்லா
நிற்போரும்
விரும்பி
வந்திருப்பார்கள்

காலைமாலை என்றின்றி
காளையரும்
வருவார்கள்
சேலையுடன்
பெண்கள்வந்து
சிரித்து
விளையாடிடுவர்

நாலுமணி ஆனவுடன்
ஆளரவம்
கூடிவிடும்
ஓடிடுவார்
ஆடிடுவார்
உல்லாசம்
கூடிவிடும்

பந்து விளையாடிடுவர்
சிந்து
கவிபாடிடுவர்
கெந்தி
அடித்துநிற்பர்
கிட்டிப்
புள்ளும்ஆடிடுவர்

பெரியவரும் வருவார்கள்
சிறியவரும்
வருவார்கள்
பேசாமல்
ஆலமரம்
பெருமையுடன்
வரவேற்கும்

 விழுது பற்றியாடிடுவர்
மேல்மரத்தில்
ஏறிடுவார்
அழுங்குழந்தை
ஆடுதற்கு
அங்கூஞ்சல்
கட்டிடுவார்

சீட்டு விளையாடிடுவர்
சிரித்து
விளையாடிடுவர்
ஆர்ப்பரித்துச்
சிறுவரெலாம்
அங்கங்கே
ஓடிநிற்பர்

வேர்க்கடலை கொறிப்பாரும்
வெற்றிலையை
மெல்வாரும்
பாற்பொருளை
உண்பாரும்
பார்த்திடலாம்
மரநிழலில்

ஆயிரம் பேரமர
ஆலமரம்
நிழலைத்தரும்
அனைவருமே
இளைப்பாறி
அகமகிழ்வு
பெற்றிடுவர்

 சித்திரை பிறந்துவிட்டால்
எத்தனையோ
கொண்டாட்டம்
நித்திரையே
கொள்ளாது
நீண்டகூத்து
நடக்குமங்கே

வடமோடி தென்மோடி
வகைவகையாய்க்
கூத்தங்கே
பாய்விரித்துப்
பார்த்தபடி
பார்த்திடுவார்
ஊரார்கள்

தேனீர்க்கடையும் வரும்
தித்திப்புக்கடையும்
வரும்
அப்பம்சுட்டு
விற்கின்ற
ஆச்சியும்
வந்திடுவார்

கடலையும் வறுப்பார்கள்
கச்சானும்
வறுப்பார்கள்
கமகமக்கும்
வாசனையால்
களைகட்டும்
ஆலையடி

குடும்பமெலாம் ஒன்றாக
குதூகலமாய்
இருப்பார்கள்
குழந்தைகளும்
குறும்புசெய்து
குதூகலத்தில்
மிதப்பார்கள்

அமைதியாய்ப் பார்த்துநிற்கும்
அதையெல்லாம்
ஆலமரம்
ஆர்வந்து
போனாலும்
ஆலமரம்
அகமகிழும்

போரொன்று வந்ததனால்
ஊரெல்லாம்
ஓடிற்று
யாருமே
ஊரிலில்லை
ஊரிப்போ
உறங்குகிறது

களைகட்டி நின்றவிடம்
நிலையிழந்து
நிற்கிறது
ஆருமே
வருவதில்லை
ஆலமரம்
நிற்கிறது

 ஆலமரம் மட்டுமிப்போ
அப்படியே
இருக்கிறது
ஆலடியைப்
பார்ப்பதற்கு
அழுகைதான்
வருகிறது

மரம்மட்டும் பேசிவிடின்
வக்கிரங்கள்
தெரிந்துவிடும்
மரமாக
இருப்பதனால்
வக்கிரங்கள்
தொடர்கிறது

ஆலமரம் அழுதுவிடின்
ஆறாக
ஆகிவிடும்
அதுமரமாய்
நிற்பதனால்
நாமழுது
நிற்கின்றோம்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆலமரம் நிற்கிறது!

  1. உங்கள் எழுதுகோலில் எழுந்துநின்ற ஆலமரம்..
    எத்தனைக் கதைகள் பேசியது எண்ணிலடங்குமா?

    அடையாரில் பிறந்துவளர்ந்தவன் நான் எனும்போது
    அடையாறு ஆலமரம் நினைவுகள் தொடர்கிறது!

    அடடா.. ஆல்போல் தழைத்து என்னும் வாசகத்தில்
    ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது!

    ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு ஆலமரம்போல்..
    உணர்ந்தவர் வாழ்க்கையெல்லாம் உயர்ந்திருக்கும்கோயிலாக!!

    பெருமைகள் அதற்கு உண்டு.. பேசித்தான் மாளாது..
    பரவிடும் பரப்பினில் விழுதுகள் யாவுமே..தூண்களாக!!
    பறவைகள்மட்டுமல்ல..மனிதர்களும் அடைக்கலமாக..
    பாசத்தின் பள்ளிவாசல்.. பார்க்கப் பார்க்க இன்பம்!!

    கர்வமோடு சொல்லலாம் நான் ஆல்மரபில்வந்தவனென்று
    கவிதைகூட பேசலாம் ஒருமைப்பாட்டின் சின்னமென்று!

    ஊஞ்சல்கட்டி ஆடலாம் உறவுகளும் மகிழலாம்..
    உள்ளம் பாட்டுப் பாடலாம்.. ஆலமர நிழலிருந்தால்!!

    உங்கள் கவிதையில் உள்ளம்திருடிய வரிகள்..
    பேசாமல் ஆலமரம்
    பெருமையுடன் வரவேற்கும்
    அழுங்குழந்தை ஆடுதற்கு
    அங்கூஞ்சல் கட்டிடுவார்
    ஆயிரம் பேரமர
    ஆலமரம் நிழலைத்தரும்
    ஆர்வந்து போனாலும்
    ஆலமரம் அகமகிழும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *