— பி.எஸ்.டி.பிரசாத்.

women life

​மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ! – என்று கவிமணி பாடிய நம் மண்ணில் சமீப காலமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

“தாயருகில் சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகில் தாயாகும் பெண்ணே !” – என்று கவியரசு வைரமுத்து அவர்கள் திரையிசையில், பெண்ணின் வாழ்க்கைச் சக்கரத்து மாற்றங்களை அருமையாகப் பாடியுள்ளார். ஆனால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியப்படுகின்ற அந்த நேரம் முதல், எல்லாக் கட்டத்திலும், தன் வாழ்வில் துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது ஒரு பெண்ணால். சேயாக இந்த பூமியில் பிறக்கும் முன்பே கொன்றுவிடும் கூட்டம் – குழந்தை பருவத்திலே சிறுமியாக இருக்கும்போது, பாலியல் உட்பட பல்வேறு வகையான குற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதையும் தாண்டி குமரிப் பருவம் வந்தால் கேட்கவே வேண்டாம். இரைக்கு அலையும் கழுகுகளின் பார்வையிலிருந்து தப்பித்து கற்பைக் காத்து வளர்வது…அம்மம்மா !  Eve teasing, கற்பழிப்பு, கொலை….இன்னும் எத்தனை எத்தனை குற்றங்கள்…

அலுவல்களுக்குச் செல்லும்போது, வேலை செய்யும் இடத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பல இடங்களில் விவாதிக்கப் படக் காணலாம். இதையும் தாண்டி அடுத்தக் கட்டத்தை அடைந்து வீட்டில் தனியாக இருக்கும் போது பொருளற்ற வாழ்வு வாழும் கொள்ளையர்கள், உயிரை மாய்த்து பொருளை சுருட்டிக் கொண்டு ஓடுகின்றனர். நினைத்துப் பாருங்கள்…என்னதாங்க நடக்குது? !

தாடகையின் தொல்லை தாங்காது ரிஷிகளும், முனிவர்களும் அவதிப் பட்டுக்கொண்டிருந்த போது விஸ்வாமித்ரர் அவர்கள், ஸ்ரீ ராம பிரானிடம், தாடகையை வதம் செய்யச் சொன்னாராம். அதற்கு, ஸ்ரீராமன், “அவள் ஒரு பெண்…அவளை என்னால் கொல்ல இயலாது” என்று சொல்லி தயங்கியதாகவும், பிறகு விஸ்வாமித்ரர், ஸ்ரீ ராமனுக்கு பல காரணங்களைச் சொல்லி தாடகையை வதம் செய்ய வைக்கப் பெரும் பாடு பட்டார் என்றும் ராமாயணம் சொல்கிறது. இது போன்ற ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை தொலைக்காட்சியில் ஆர்வமுடன் பார்ப்பவராக இருந்தும், காட்சியில் வரும் தத்துவங்களையும், சொல்லப்படும் கருத்துக்களையும் மனதில் எடுத்துக் கொள்ளதவராய் இருக்கிறோம் என்பது மிகவும் வருந்தத் தக்கது. ஒரு அரக்கி, அழிக்கப் பட வேண்டியவள், அவளை கொல்வதற்கு, ‘அவள் ஒரு பெண்’ என்ற ஒரே காரணத்திற்காக  தயக்கம் காட்டிய ஸ்ரீராமனை முன்னுதாரணமாய் கொள்ள வேண்டாமா?

காசும், பணமும் பெருகப் பெருக, மேலும் பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழிகளிலும், பெண் போதையிலும் தான் மனம் அலைகின்றது.”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்றக் கோட்பாடுகள் எல்லாம் காற்றோடு போய் கட்டுப்பாடற்ற நாகரீகத்தை நோக்கி பயணித்து வருகிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.

“மகளிர் தினம்” கொண்டாடுவதால் பெண்களை போற்றுவோர் ஆக மாட்டோம். அந்த நாள் கூட பலருக்கு, வியாபார ரீதியாக “தள்ளுபடி விற்பனை” செய்வதற்கான வாய்ப்பாகத் தான் கருதப்படுகிறது. பெண்களுக்கு நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்குத் தள்ளுபடி செய்தபாடில்லை ! உண்மையிலேயே, உரத்த சிந்தனை தேவைப்படுகிறது …இந்த பிரச்சனையை எதிர் கொண்டு சமாளிக்க…வாருங்கள்…சிந்திப்போம் !

 

 

படம் உதவிக்கு நன்றி:   http://eluthu.com/images/poemimages/l/112934.gif

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பெண்களுக்கெதிரான குற்றங்கள்

  1. Good one. But I feel that apart from other factors, ladies should also take a part of the blame isn’t it?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *