–சு.கோதண்டராமன்.

 

இந்திரன்
 

cambodia-indra

இந்திரன் தேவர்களில் முக்கியமானவர். முக்காலத்திலும் ஈடு இணையற்றவர். அவர் தன் செயல் திறமைகளால் தேவர்களுக்குப் பெருமை உண்டாகுமாறு செய்தார். இவர் மனிதனின் நண்பர். அவர்களைத் துன்பத்திலிருந்து விலக்கி அழைத்துச் செல்வதில் நாட்டம் உடையவர். மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரி. வீரம் மிக்கவர். தன் வலிமையால் பல பகைவர்களை அழித்துத் தன் பக்தர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அவருடைய சிறப்புகளை ரிக் வேதம் எப்படிக் கூறுகிறது என்று பார்ப்போம்.  

வலிமை
எதிரிகளின் செல்வத்தைப் பறவை போல் கவரும் திறமை உள்ளவர் இந்திரன். மிக நிலைத்தவரையும் அசைத்து விடுபவர். எல்லா வீர்யமும் அவருள் அடக்கம். அவரது ஆயுதம் வஜ்ராயுதம். அதற்குத் தப்பின பகைவர் எவரும் இல்லை.

இந்திரனின் தேர் இரண்டு குதிரைகளால் இழுக்கப்படுவது. இவை வசோயுஜா  (சொல்லால் இயங்குவது) என்றும் ப்ரஹ்மயுஜா (மந்திரத்தால் இயங்குவது) என்றும் கூறப்பட்டுள்ளன.

இந்திரனால் வெல்லப்பட்ட பகைவர்கள்- வ்ருத்ரன், விச்வரூபன், அர்புதன், வலன், சம்பரன், ரௌஹிணன், நார்மரன், த்ருபீகன், உரணன், ஸ்வச்னன், சுஷ்ணன், பிப்ரு, நமூசி, ருத்ரிகா, வர்ச்சின், சுமுரி, துனி, க்ரிவி, குயவன், ஸண்டிகர்கள்.

இந்திரனால் உதவப்பட்ட நண்பர்கள்- த்ரிதா, அங்கிரஸ், தபீதி, துர்வீதி, வய்யன், ஏதஸன், குத்ஸ, ஆயு, அதிதிக்வா.

இந்திரன் இன்றி வெற்றி இல்லை என்பதால் போரில் இரு திறத்தாரும் இவரை உதவிக்கு அழைக்கின்றனர். மேலோரும், கீழோரும் அழைக்கின்றனர். ஒரே தேரில் பயணம் செய்யும் இருவர் இவரைத் தனித்தனியே அழைக்கின்றனர். பணிவுடன் வேண்டுவோருக்கு மட்டுமே அவர் உதவுவார். தன் வலிமையில் திமிர் கொண்டோருக்கு அவர் உதவுவதில்லை. பாவிகளையும் தேவர்களை வணங்காதவர்களையும் அழிக்கிறார்.

இந்திரனின் உணவும் பானமும்
தன் வலிமையால் பல செயற்கரும் செயல்களைச் செய்தவர், அதற்கேற்ற உணவு உண்பவராகவும் கூறப்படுகிறார். இந்திரனுக்காக பூஷனும் விஷ்ணுவும் 100 எருமைகளைச் சமைத்தனர் என்கிறது ஒரு மந்திரம்.[1]

சோமம் இந்திரனை மகிழ்விக்கிறது. அதனால் அவர் வளர்கிறார். சோமத்தினால் அவர் மகவான் (பெருஞ் செல்வர்) ஆனார்.[2]  அவர் பிறக்கும்போதே சோமத்தை அருந்தினார். சோமத்தை அருந்திய களிப்பில் அவர் செய்த அருஞ்செயல்கள் பல. அஹியைக் கொன்று நதிகளைப் பெருகச் செய்தது, மலைகளை உடைத்து வலனைக் கொன்றது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது, தபீதியை மீட்டது, ஆற்றைக் கடக்க முடியாமல் இருந்த தன் நண்பர் துர்வீதி மற்றும் வய்யனுக்காக, ஆற்றைத் தடைசெய்து அவர்கள் மறு கரைக்குச் சென்று செல்வம் அடைய உதவி செய்தது, பெண்கள் ஒளித்து வைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்தது, புறம் தள்ளப்பட்ட மனிதனை வெளிக் கொணர்ந்தது, குருடனைப் பார்க்க வைத்தது, காலில்லாதவனை நடக்க வைத்தது, சுமுரி, துனி ஆகிய தஸ்யுக்களை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திக் கொன்றது மற்றும் பல செயல்களை இந்திரன் சோமபானத்தின் களிப்பில் செய்தார்.

செல்வமும் கொடையும்
இந்திரன் செல்வத்தின் இருப்பிடம். செல்வத்தின் பாதைகளின் ஒன்று கூடும் இடம். அவருடைய ஆணையின் கீழ் குதிரைகள், தேர்கள், பசுக்கள், கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர் தன் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார். அவர் பெரும் கொடையாளி. இந்திரனை விட வலிமையானவர், பணக்காரர் பிறந்தது இல்லை.

யக்ஞம்
மற்ற தேவர்களைப் போல இந்திரனும் யக்ஞங்களைப் பாதுகாக்கிறார். யக்ஞத்தால் வலுப்பெறுகிறார். ஆகுதி செய்வோர், சோமம் பிழிவோர், தோத்திரம் சொல்வோர் என வேள்வியின் பல் வேறு பிரிவு வேலைகள் செய்வோரையும் செல்வர், வறியர் என்ற வேறுபாடு இல்லாமல் அவர் ஊக்குவிக்கிறார். பக்தி நெறி அறியாதவரையும் அவர் கை விடாமல் உணவு அளிக்கிறார்.

தலைவர்
நல்ல பாதையிலும் கடினமான பாதையிலும் முன்னே சென்று வழிகாட்டுவதால் பதிக்ருத் எனப்படுகிறார்.

அறிவாளி
அக்னியைப் போலவே இவரும் சிறந்த அறிவாளி. கவிகளுக்குள்ளே மேலான கவி எனப்படுகிறார். அக்னி ஜாதவேதஸ் (பிறந்தது எல்லாம் அறிந்தவர்) என்று கூறப்படுவது போல, இந்திரனும் விச்வானி விதுஷ (எல்லாம் அறிந்தவர்)  எனப்படுகிறார்.

மனிதனின் நண்பர்
இந்திரனைத் திருப்திப்படுத்த யக்ஞம், சோமம், ஹோத்ரம் (புகழ்ச்சி) என மூன்று வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றால் அவர் வலுப்பெறுகிறார்.  மகிழ்ச்சி அடைந்து தன் பக்தர்களுக்கு பெரும் செல்வம் தருகிறார். செல்வம் மட்டுமல்ல, பசுக்கள், மக்கட்பேறு, வீடு, நண்பர்கள், வலிமை, உதவி, பாதுகாப்பு ஆகியனவும் தருகிறார். அவரைக் குறித்து எத்தகைய சிறு தொண்டு ஆற்றினாலும் அவருடைய அருளைப் பெறலாம். புகழ்வோர்க்கு இவர் உதவுவதால் காருதாயர் எனப்படுகிறார்.   இவரைப் புகழ்வோர் வளர்கின்றனர்.

இவ்வளவு சிறப்பு உடைய இந்திரனைத் தனக்கே உரிமை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று ரிஷிகள் ஆசைப்படுவதைப் பார்க்கிறோம்.

பந்துக்கள் அற்றவர்களாகிய நாங்கள், பந்துக்கள் உள்ள உன்னோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறோம்.[3]  நீ சகோதரன் அற்றவன். என்னைச் சகோதரன் ஆக்கிக் கொள்.[4]  “நீ எங்களுடையவன். நாங்கள் உங்கள் பக்தர்கள். மற்ற பக்தர்களின் யக்ஞங்களுக்குப் போவதற்கு முன்னால் எங்கள் யக்ஞத்திற்கு வாருங்கள்” என்று ஒரு ரிஷி அழைக்கிறார்.[5] நூறு அல்லது ஆயிரம், பத்தாயிரம் பசுக்களைக் கொடுத்தாலும் இந்திரனை விற்க மாட்டேன் என்கிறார் மற்றொருவர்.[6 ]

மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரி
பல எதிரிகளை அழித்து மனிதர்களைக் காத்தது இந்திரனுடைய சாதனைகளில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனித குலத்தின் எதிரி யார்? தாஸர் என்றும் தஸ்யு என்றும் ஒரு கூட்டம் ரிக் வேதத்தில் பேசப்படுகிறது. அவர்கள் கறுப்பு நிறத்தவர்களாகவும் மூக்கு இல்லாதவர்களாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள். யக்ஞம் முதலான வழிபாடு செய்யாதவர்கள். மாயையில் வல்லவர்கள். இந்திரன் தானும் மாயையைக் கைக் கொண்டு அவர்களை அழித்தார். பலரைக் குகையில் அடைத்தார். தனக்குச் சாவு இல்லை என்று கருதிக் கொண்டிருந்த தாஸர்கள் அழிந்தனர்.

தேவர்களும் இந்திரனும்
அக்னி, விஷ்ணு, சோமன், வருணன், வாயு ஆகிய ஒவ்வொருவருடனும் சேர்த்துப் போற்றப்படுகிறார் இந்திரன்.  அப்பொழுது இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைகிறது.

இந்திரனை மழை தரும் பழமையான ஜோதி என்றும் அவர் மேலே பிரகாசிக்கும் போது மக்கள் பார்க்கிறார்கள் என்றும் போற்றி சூரியன் இந்திரன் வேறு வேறு அல்லர் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது. [7]

சாதனைகளால் தேவ பதவி
இந்திரனின் சாதனைகளைப் பார்த்தோம். முன் அத்தியாயத்தில் கூறியபடி இந்திரன் மனிதனாக இருந்து தன் சாதனைகளால் தேவ பதவி அடைந்தவரா என்பதை ஆராய்வோம். மேலே குறிப்பிட்டவை அருஞ் செயல்கள் தாம் என்றாலும் ஒரு வலிமையான மனிதன் செய்யக் கூடியவை தாம். இந்த அருஞ் செயல்களைச் செய்ததால் தான் அவர் தேவ நிலையை அடைந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

அவர் தன் சாதனைகளால் மானிடப் பிறவியைக் கடந்து அமர்த்யன் (இறவாதவன்) என்ற பெயரால் விளங்குகிறார்.

இந்திரனே பரம்பொருள்
இந்திரனின் பல்வேறு சாதனைகளைப் புகழ்ந்து கொண்டிருக்கும்போதே ரிஷிகள் பரவச நிலைக்குச் சென்று விடுகின்றனர். இந்திரனைப் பரம்பொருளாகக் கருதி அவரைச் சர்வ வல்லமை உள்ளவராக வர்ணிக்கின்றனர். இவருடைய வஜ்ரத்தின் ஓசையால் மண்ணும் விண்ணும் மலைகளும் பயப்படுகின்றன, வணங்குகின்றன. விண்ணும் மண்ணும் அவரை வெல்ல முடியாது. கடலோ மலைகளோ அவருடைய ரதத்தைத் தடுக்கா. அவர் தான் மண்ணையும் விண்ணையும் படைத்தார். அவற்றைத் தாங்குகிறார். அவரே சூரியனைத் தன் பாதையில் உலவ விட்டார். அவரே நதிகளைத் தன் பாதையில் ஓடவிட்டார். அவரே பசுக்களிடம் பாலை வைத்தார் என்று புகழ்கிறார்கள்.

இதே போல எல்லாத் தேவர்களும் பரம்பொருள் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள் என்பதை முதலில் பார்த்தோம்.

 

குறிப்புகள்:
1    6.17.11.
2    6.43.4.
3    8.21.4.
4    8.21.13.
5    7.69.6
6    8.1.5.
7    8.6.30.

படம் உதவிக்கு நன்றி: http://i385.photobucket.com/albums/oo297/Vetty_Gurl/tracks-cambodia-indra.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 17

  1. பல இந்திரர்கள் இருப்பது உண்மையா? ஒவ்வொரு யுகத்திற்க்கு ஒரு இந்திரன் என்பது குறித்து வேதத்தில் ஏதேனும் குறிப்பு உள்ளதா? மேலும் நான்கு யுகங்கள் குறித்தும் வேதம் சொல்வது என்ன? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *