நான்தான் அடுத்த கணவன்…என்ன தலைப்பு அய்யா !

0

எஸ் வி வேணுகோபாலன்

அன்பின் அ முத்துலிங்கம் அவர்களுக்கு

வழக்கம்போல் காலச்சுவடு வேண்டாம் என்றுதான் இந்த மாதமும் சொன்னேன். கோடம்பாக்கம் ரயில் நிலைய புத்தகக் கடை அன்பர் வெங்கடேசன், “ஆனால், இந்த மாதம் நீங்க வாங்கத்தான் செய்வீங்க” என்றார். ஏனோ தெரியவில்லை, பல மாதங்களாயிற்று காலச்சுவடு வாங்கி வாசித்து. ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருக்கும் இதழ்களையே முழுதாய் வாசிக்க முடிவதில்லை.

அவரது தூண்டில், என்னை இன்று வந்த ஆகஸ்ட் மாத இதழைக் கையிலெடுத்து பிரிக்கவைத்தது….முதல் பக்கத்தில், பொருள் அடக்கத்தில், பக்கம் 45 என்று போட்டு சிறுகதை: அ. முத்துலிங்கம் – நான்தான் அடுத்த கணவன் என்று போட்டிருந்தது. வளர்ப்பானேன், புத்தகம் என் பைக்குள் வந்து உட்கார்ந்துவிட்டது.

தீராநதி அட்டையில் ராமானுஜன் பட விமர்சனம் என்று போட்டிருக்கவே, முதலில் அதையே வாசித்தேன். அதற்கும் நான் மவுண்ட் ஸ்டேஷன் இறங்கி, ஓர் அன்பரது மாமனார் மறைவுச் செய்தி வந்திருக்கவே அங்கே சென்று அஞ்சலி தெரிவித்துவிட்டு, அதே மவுண்ட் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து அமர்ந்ததும்தான் வாசிக்க வேண்டியிருந்தது. அற்புதமான விமர்சனத்திற்காக தீராநதி அலுவலகத்திற்கு ஃபோன் செய்து என்னை ஒரு வாசகர் என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்ட பிறகு வெளி ரங்கராஜன் அவர்கள் நம்பர் கிடைத்தது…பின் அவரோடு பேசக் கிடைத்த ஆனந்த அனுபவம் தனி விவரிப்புக்குட்பட வேண்டியது. இருக்கட்டும்.

பிறகு உங்களை எடுத்துக் கொண்டேன் அ மு. அந்தத் தலைப்பே என்னை என்னவோ செய்தது. ஒரு சிறந்த கவிதை என்றால் படித்தவுடன் அடிவயிற்றை ஞம ஞம என்று ஏதோ செய்ய வேண்டும் என்பார் எழுத்தாளர் சுஜாதா. உங்களது தலைப்பே என்னை என்னவோ செய்து கொண்டிருந்தது. நான் தான் அடுத்த கணவன், ஆத்தாடி என்ன தலைப்பு. என்ன மலைப்பு!

45ம் பக்கத்தில் உங்கள் கதை என்று போட்டபின் எனது கைவிரல்கள் ஒரே கொத்தில் அந்த 45ஐ பிடித்து எடுத்துவிட்டன. இதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. 44ம் பக்கத்தில் எனக்கு நோபல் பரிசுக்குப் பரிந்துரைப்பதாக செய்தி இருந்தால் கூட எனக்கு அதில் அத்தனை சுவாரசியம் இருக்க முடியாது. ஓவர் டு அ மு தான் எனது நாட்டமாக இருக்கும்.

பத்மபிரியா என்ற பெயரே ஆளை உண்டு இல்லை என்று செய்துவிடத் தக்க காந்தப் பெயர். அந்தப் பெயரில் ஒரு கன்னிகை வசீகரமாக வேறு இருந்தால், இலங்கையிலிருந்து கனடா நோக்கிச் செல்லும் அகதிக்கு சென்னையில் இப்படியான ஒரு வாழ்க்கை திசை அமையும்போது ஏற்படும் உளவியல் சித்திரவதைகள் வேறு எப்படித் தான் இருக்கும்? ஆனால், பத்ம பிரியாவுக்கு அபி என்கிற சினிமாக்காரன் தான் முதலாவது காதலனாக இருக்கிறான். அகதி இரண்டாம் இடத்தில். கனடா, நயாகரா நீர்வீழ்ச்சி, உலகப் பயணம் எல்லாம் அவளுக்கும் பிடித்திருக்கிறது, ஆனால், அபி அவளை திரை நட்சத்திரமாக ஜொலிக்க வைப்பவனாயிற்றே… அது நடந்துவிடுகிறது. கதாநாயகி ஆகிற விஷயமல்ல, அபி அவளைக் கடத்திப் போய்த் திருமணம் செய்வது. அவளும் உடன்பட்டுத்தான்!

அகதிக்கு இப்போது கனடா செல்வதைத் தவிர வேறு வழி இருப்பதில்லை. அட்லாண்டிக் சமுத்திரம் கடந்துபோயும், பத்மபிரியா மறப்பதில்லை என்று எழுதுகிறீர்கள் அமு! அடடா..ஆஹா..
இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீ இருந்தா
இந்து மகா சமுத்திரத்த இங்கிருந்தே தாண்டிடுவேன்

என்ற புதையல் படத்தின் ஜே பி சந்திரபாபு பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணில் காதலியர் கடைப்பார்வை காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்கிற கவிதை வரிகளும்!

அகதி விரும்பியபடியே அபி – பத்மபிரியா திருமணம் விவாகரத்தில் முடிகிறது.. நம்மாள் உடனே ஆசைக் கோட்டைகளோடு சென்னை வந்து இறங்குகிறார்…இந்த முறை விதி வேறுமுறையில் விளையாடுகிறது…அங்கிருந்து கதை பற்றுகிறது…கள்ள பாஸ்போர்ட், சிறை, வழக்கு, ஏமாற்றம், துரோகம்…!

திஹார் ஜெயிலில் வாசம் செய்ய நேருகிறது அகதிக்கு! கண்ணீரோடு சென்னையிலிருந்து பத்மபிரியா தில்லி வரவும் செய்கிறாள். அங்கே நடப்பதென்ன! கொடுமை….

அதற்குப் பிறகு காதுக்கு வரும் செய்தி, பத்மபிரியாவுக்கு கல்யாணம் ஆகிவிடுகிறது. இரண்டாம் முறை! ஜாமீன் ஆசை காட்டிப் பணத்தை ஆட்டையப் போட்ட அதே வக்கீல்தான் இப்போது அவளது புருஷன். சிறையிலிருந்து வெளிவரும் அகதிக்கு வாழ்க்கை அனுபவம் கனடா திரும்ப அறிவுறுத்துகிறது…ஆனால் பத்மபிரியாவின் முத்து முத்தான கையெழுத்தில் வந்திருக்கும் கடிதம்தான் கதையின் முதல் வரியாகக் கதையாக மலர்கிறது.

இன்னும் என்ன காதல் நினைவு என்று கடிந்து பேசுகிறார் அவனது பாஸ்! அவரிடம் பகிரும் கதைதான் இப்படி விரிந்து செல்கிறது. இல்ல அவள் அழைக்கிறாள்…அந்த லாயரை அவள் விலக்கி வைத்துவிட்டாள்…காதலுற அழைக்கிறாள்…அவளது அடுத்த கணவன் இந்த அகதிதான் என்ற முடிவோடு!

கதை நெடுக உங்களது தேர்ந்த சொல்லாட்சி சிறப்பாக இருக்கிறது…

கோடம்பாக்கம் வெங்கடேசனுக்குக் கடன் பட்டிருக்கிறேன்…
ஆமாம் 45 ரூபாய்க் கடனுக்குத் தான் தீராநதியும், காலச் சுவடும் வாங்கிவிட்டு, ரயிலேறி சென்றுவிட்டேன் – காலையில் நேரம் இல்லை என்று!

அன்புடன்

எஸ் வி வேணுகோபாலன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *