நாகேஸ்வரி அண்ணாமலை

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம தேதி பின் லாடன் அமெரிக்க வர்த்தகக் கட்டடங்களை விமானங்கள் மூலம் தகர்த்தெறிந்த சம்பவத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் முஸ்லீம்கள் பற்றி ஒரு எதிர்மறையான படிமம் ஏற்பட்டிருக்கிறது.  இதற்கு முன்னும் முஸ்லீம்கள் பற்றி தவறான எண்ணம் பலரிடையே இருந்தாலும் இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அது வெகுவாக வலுப்பெற்றிருக்கிறது.  சௌதி அரேபியாவில் அமெரிக்கப் படை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது பின் லாடனுக்கு அமெரிக்காவின் மேல் ஏற்பட்ட கோபத்திற்கு முதல் காரணம்.  பின் லாடனின் கோபம் நியாயமானதுதான் என்று நினைத்து வேறு சிலரும் அவன் செய்த செயல்களில் அவனுக்குத் துணைபுரிந்தனர்.

ஒரு சிலர் செய்த சில கொடிய செயல்களுக்காக உலகம் முழுவதும், குறிப்பாக மேலைநாடுகள், முஸ்லீம்கள் மீது வெறுப்பைக் கொட்டி அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்ற பட்டத்தையும் சூட்டின.  உலகில் மோதல்கள் எங்கு நடந்தாலும் அவற்றில் முஸ்லீம்கள் கலந்துகொண்டிருந்தால் தவறு அவர்கள் மீதுதான் என்பது போன்ற படிமத்தை மீடியாக்கள் ஏற்படுத்தின.

இந்தியாவிலும் சுதந்திரத்திற்குப் பிறகு நிறைய இந்து-முஸ்லீம் கலவரங்கள் ஏற்பட்டன.  இந்துக்கள் பெரும்பான்மையராக இருந்ததினால் கலவரங்களுக்குக் காரணம் முஸ்லீம்கள்தான் என்பது போல் பேசப்பட்டது.  இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் பிரிட்டனால் உருவாக்கப்பட்டபோது முஸ்லீம்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர வேண்டும் என்று கூட சில இந்தியர்கள் விரும்பினர்.  இந்தியாவின்மீது முஸ்லீம்களுக்குள்ள நாட்டுப்பற்றையும்  சிலர் சந்தேகித்தனர்.

காந்திஜியின் கொள்கைகளை அப்படியே பின்பற்றும் எங்கள் அபிமானத்திற்குரிய பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு கன்னட எழுத்தாளரே ஒரு முறை அவரிடம் நான் ஆட்டோவில் சாதாரணமாகப் போவதில்லை என்று கூறியபோது, ‘முஸ்லீம் அல்லாத ஒரு ஓட்டுநரின் ஆட்டோவில் போவதில் அவ்வளவு பயம் இல்லை’ என்றார்.  அதுவரை நான் அவர் மீது வைத்திருந்த என் மதிப்புக் கொஞ்சம் குறைந்தது என்று கூறலாம்.

மெத்தப் படித்த சட்ட வல்லுனரான ஒரு வழக்கறிஞர் வீடு கட்ட நிலம் வாங்கும்போது பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரர் ஒரு முஸ்லீம் அல்ல என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குங்கள் என்று எங்களுக்கு அறிவுரை கூறினார்.

சில நாட்களுக்கு முன் இன்னொரு நண்பரோடு (இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்) பேசிக்கொண்டிருந்தபோது காஸாவில் இஸ்ரேல் இப்படிப்பட்ட கொடுமைகள் புரிந்துவருகிறதே என்று ஆதங்கப்பட்டேன்.  எனக்கு ஆறுதலாக அவர் ஏதாவது கூறுவார் என்று நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ‘இஸ்ரேல் அரேபியர்களை அப்படி அடக்கிவைக்கத்தான் வேண்டும்’ என்றார்.  இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை பற்றி முழுவதும் புரியாமல் இவர் பேசுகிறார் என்பதோடு முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், அவர்கள் மற்றவர்கள் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும் என்பது போல் பேசுகிறாரே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

இப்போது இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவோடு காஸாவைத் தரைமட்டமாக்கிக்- கொண்டிருக்கிறது.  இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹு என்ற ஈவு, இரக்கமற்ற பயங்கரவாதி வெஸ்ட் பேங்கையும் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.  பாலஸ்தீனத்திலிருந்த பாதிப் பேரை யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வந்திருக்கின்றனர்.  இப்போது எல்லாப் பாலஸ்தீனர்களையும் வெளியேற்றுவதோடு மிஞ்சியிருப்பவர்களைக் கொன்றுகுவிக்கவும் நேத்தன்யாஹு திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது.  இந்த மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. என்னவோ செய்துகொண்டிருக்கிறது.  அதை எல்லாம் இஸ்ரேல் சட்டைசெய்வதாகத் தெரியவில்லை.  அமெரிக்கா இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவருவதின் மூலம்தான் இஸ்ரேலின் வன்கொலையை நிறுத்த முடியும்.  ஈரானின் மீதோ சிரியாவின் மீதோ தடைகள் கொண்டுவர வேகமாக முன்வரும் அமெரிக்கா இஸ்ரேலின் மீது ஏன் அப்படிப்பட்ட தடைகளைக் கொண்டுவரவில்லை?  ஏனென்றால் ஈரானும் சிரியாவும் இஸ்லாம் நாடுகள்.

வல்லமையில் நான் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தது பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது வாசகர் ஒருவர் ‘நீங்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள்’ என்று என் மேல் குற்றம் சுமத்தினார்.  நான் பதிலுக்கு, ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  நான சரித்திர நிகழவுகள் எதையாவது திரித்துக் கூறியிருக்கிறேனா என்று கூறுங்கள்’ என்றேன்.  அவரிடமிருந்து பதிலே இல்லை.

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் மீது ஒரு எதிர்மறையான படிமம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் முஸ்லீம்கள் ஏன் இன்னும் குரானில் கூறியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு பழமைவாதத்தை விட மறுக்கிறார்கள்?  சமீபத்தில் சிரியாவில் தவறாக நடந்துகொண்டதற்காக  ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகச் சொல்லி ஒரு திருமணமான பெண்ணை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.  எவ்வளவு பெரிய மிருகத்தனம்!  அவள் செய்தது தவறே என்றாலும் இப்படித் தண்டனை கொடுக்க வேண்டுமா? இறக்கும் வரை அவளைக் கல்லால் அடித்தபோது அவள் எத்தனை வேதனை அனுபவித்திருக்க வேண்டும்?

அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துகிறார்கள்.  அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு எவ்வளவு வேதனை குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறார்கள்.  அவர்களால் இம்சிக்கப்பட்டவர்கள், கொலைசெய்யப்பட்டவர்கள் எத்தனை துன்பத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகி இருந்தாலும் தண்டனை பெற்றவர்கள் அதே வேதனையையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதி நினைப்பதில்லை.  அவர்கள் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள்தான், ஆனால் அதற்காக அவர்கள் வேதனை அனுபவித்து இறக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறது அமெரிக்க நீதி.  இதுவல்லவா மனித இனம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளம்.

ஒரு முறை அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது குற்றவாளிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டபோது அது சரியாக வேலைசெய்யாமல் அவன் ஐம்பது நிமிடங்கள் வலியால் துடித்து இறந்த சம்பவம் அமெரிக்காவில் பெரிய விவாதங்களை எழுப்பியது.  இனி ஒரு போதும் இப்படி நடக்கவிடக் கூடாது என்று பலர் குரல் எழுப்பினார்கள்.  இப்படி மனித இனம் ‘வளர்ச்சி’ அடைந்துகொண்டிருக்கும்போது உயிர் போகும் வரை கல்லால் அடிப்பதையே ஒரு பெண்ணுக்குத் தணடனையாக வழங்கவேண்டுமா?

ரம்ஜான் நோன்பின்போது ஒருவன் தாகம் தாங்க முடியாமல் தண்ணீரைக் குடித்ததற்காக அவனுக்குச் சவுக்கடி வழங்கப்பட்டிருக்கிறது ஈரானில்.  இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செய்கைகளில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சமூகங்கள் ஈடுபடலாமா?  அவன் நோன்பைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன்தானே நரகத்திற்குப் போவான்?  அதைப் பற்றி ஏன் சமூகம் கவலைப்பட வேண்டும்?  மேலும் இப்படி நோன்பு மூலம்தான் இறைவனை அடையலாம் என்ற மூட நம்பிக்கையை இன்னுமா வைத்திருக்க வேண்டும்?  பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துபவர்களை இறைவன் எப்போதும் தன் பக்கம் சேர்த்துக்கொள்வான் என்பதை இந்தக் காலத்தில் கூட ஒரு சமூகம் உணரவில்லையா?

உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்களே, உலகத்தில் உங்கள் படிமத்தை உயர்த்திக்கொள்வதற்கு இது போன்ற  செயல்களை விட்டு நீங்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து உணருங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முஸ்லீம்கள் கவனிப்பார்களா?

  1. இன்று தான் இதனை படிக்க முடிந்தது. கட்டுரையின் நோக்கம் குற்றம் செய்தவரையும் கொடுமை படுத்தாமல் சமூகத்தை விட்டு விலக்க சொல்கிறது.என்ற இந்த உங்களின் கருத்து உங்களை உயர்த்தி காட்டுகிறது.என்னில் பெரு மதிப்பை உங்களைப்பற்றி உண்டாக்குகிறது.இஸ்லாமியரைப்பற்றி உலகம் சொல்வதை மிக சரியாக கட்டுரையின் முதல் பாதி சொல்கிறது.

    ஒரு சிறு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.

    நோன்பு நோற்க இஸ்லாம் சொல்கிறது. தொழுகை செய்ய இஸ்லாம் சொல்கிறது.ஆனால் இவை இரண்டையும் செய்யாதவரை சவுக்கால் அடியுங்ககள் என்று நான் சொல்கிறேன் . இதை சொல்ல நான் யார் என்றால் என்னிடம் அதிகாரம் இருக்கிறது நான் ஆட்சியில் இருக்கிறேன். இது தான் சிரியாவிலும் ஈரானிலும் நடந்திருக்கிறது.

    குர்ஆனில் நோன்பை பற்றி குறிப்பிடும் போது நோன்பின் காரணமாக நீங்கள் தாங்க முடியா தாகத்திற்கு ஆளானால் சிறிது தண்ணீர் குடியுங்கள் அதனால் அந்த நோன்பு முறியாது என்றே கூறுகிறது.

    குர்ஆனில் வழிமுறைகள் தான் சொல்லப்பட்டுள்ளது தவிர தண்டனைகள் சொல்லப்படவில்லை.அந்த வழிமுறைகளும் இறைவனை அடைவமற்காகவே.

    இஸ்லாத்தில் ஐ பெரும் கடமைகள் ஒவ்வொருவரின் மீதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இறைவனின் பெயரை உச்சரித்தல், இறைவனை வணங்குதல், நோன்பு நோற்றல், தர்மம் செய்தல்,புனித யாத்திரை செய்தல்.குர்ஆன் இதைதான் சொல்கிறது.தண்டனை கொடுக்க சொல்லி அதில் எந்த குறிப்பும் இல்லை. இஸ்லாத்தின் பெயரை சொல்லி சிலர் தங்களை ஸ்திரமாக்கிக்கவே மேல் கண்ட தண்டனை முறைகளை கையாள்கிறார்கள்.

    மற்ற மதங்களைப்போலவே இஸ்லாமும் உயிர்களிடத்தில் அன்பு காட்டுங்கள் என்றே சொல்கிறது.

    மதத்தின் பெயரால் தவறு செய்யுங்கள் என்று எந்த மதக்கடவுளும், எந்த மத நூலும் சொல்லவில்லை.

    அதே நேரம் மதத்தின் பெயரை பயன்படுத்தி சக மணிதரை இம்சிப்பது இஸ்லாத்தில் மட்டும் நடக்கவில்லை மற்ற மதங்களிலும் நடக்கிறது. 8 மாதங்களுக்கு முன்பு எனக்கே ஏற்பட்டது.

    சிதம்பரம்-திருச்சி மிக பிரதான சாலையில் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய இடத்தில் வேலி கட்டி வைத்திருந்தேன்.அந்த இடத்தில் ஒரு பக்கத்தில் புற்று கிளம்ப அந்த இடத்தில் பால் பழம் பூ சந்தனம் வைத்து சிலர் வழிபட நானும் குறிப்பிட்ட அந்த பகுதியை மட்டும் வழி பாட்டுக்கென்று தந்து விட்டேன்.பக்தியேடு வந்தவர்கள்எப்போதும் போல் வந்து போக சில கட்டபஞ்சாயத்து ஆசாமிகள் மதம் கடவுள் பெயரில் அந்த இடம் முழுக்க வசப்படுத்திவிட்டார்கள். பற்றாக்குறைக்கு மத பெரியோர்களை சேர்த்துக்கொண்டு இவன் இஸ்லாமியன் தன் பெயரை தனுசு என மாற்றிக்கொண்டு கவிதைகள் எழுதுகிறான் இப்போது இப்படி செய்கிறான் இவன் நம் மதத்தில் குழப்படி செய்யவே பெயர் மாற்றி வைத்திருக்கிறான் என்று சொல்லி வேறு திசைகுகு பிரச்சினையை திருப்பினார்கள்.பிறகு ஆட்களை வைத்து பேசி இடத்தோடு கொஞ்சம் பணமும் தந்து பிரச்சினையை தீர்த்தேன்.

    இதை எதற்காக சொல்கிறேன் என்றால் மதத்தின் பெயரால் மற்ற மதங்களிலும் இந்த அநியாங்கள் நடக்கிறது என்பதற்காகவே.

    மனிதரை நேசிக்க சொல்லும் தாங்களின் மனதாபிமான கட்டுரைக்கு என் பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *