கே.ரவி

1959363_1524648954434992_6619161968674812884_n

இந்தியச் சுதந்திரம் வீர சுதந்திரம். பலருடைய உயிர்த்தியாகத்தில் வளர்ந்தது நம் சுதந்திரப் போராட்ட வேள்வி. அவர்களுடைய தியாகத்தைக் குறைத்து மதிப்பிடுவது சரியில்லை.

கத்தியின்றி ரத்தமின்றி வந்த சுதந்திரம் என்பது ஒரு நோக்கில் சரிதான். நாம் ஆயுதப் புரட்சியால் விடுதலை பெறவில்லை. நம்மை அடக்கியாண்ட வெள்ளைப் பரங்கியரின் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடச்செய்து சுதந்திரம் வாங்கவில்லை. ஆனால் நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் ரத்தத்தைச் சிந்திப்பெற்ற சுதந்திரம் இது என்பதை மறந்து விடக் கூடாது. மீண்டும் பாரதி வரியை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்:

“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்பு

வேறொன்று கொள்வாரோ”

இது வீர சுதந்திரம். விண்ணப்பச் சுதந்திரம் இல்லை. மிதவாதிகளைப் பெட்டிஷன் காங்கிரஸ், அதாவது, வெள்ளைக்காரனிடம் விண்ணப்பம் போட்டே சுதந்திரம் வாங்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் நிதானக் கட்சியினர் என்று பாரதி கடுமையாக விமர்சித்தான்.

எனவே, வாங்கிய சுதந்திரத்தின் மதிப்பைக் குறைக்கும் எதையும் நாம் சொல்லத் தேவையில்லை; சொல்லத் தேவையில்லை. ஆனால், என் இனிய கவிதைச் சகோதரர்களே அப்படிச் சொல்லும் போது என் மனத்தில் ஒரு வலி உண்டாகிறது.

“நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” என்ற வரி மேடைகள்தோறும் முழங்கப் படும் வரி. இன்னும் வாழ்க்கையில் வளம் பெற முடியாத ஏழைகளின் இதயத் துடிப்பை அந்த வரி எதிரொலித்தாலும், சுதந்திரத்துக்குப் பிறகு நம் நாடு எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை நாம் ஒரேயடியாக மறுக்க முடியாது. பல முட்டுக்கட்டைகளைக் கடந்து, சோதனைகளை எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டபடி நாம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம். நம்பிக்கை இழக்கத் தேவையே இல்லை.

பொருளாதார மேடு பள்ளங்கள் பெருமளவில் சமன் செய்யப் படுகின்றன. ஜாதி, மத துவேஷங்கள் பெருமளவு குறைந்துள்ளன. அன்றாட வாழ்க்கையில் இந்தக் கூற்றுகளை நிரூபிக்கும் சான்றுகள் ஏராளம்.

இன்று அன்னதானம் என்று உணவு வழங்கினால், அடிதடியாகக் கூட்டம் அலைமோதுவதில்லை. அழைத்து அழைத்துக் கொடுக்க வேண்டும். பட்டினிச் சாவுகள் இல்லை. என் வீட்டில், என் பாட்டிக்கு நடந்த திவசம் என்ற திதி விருந்தில், தலித் வகுப்பைச் சேர்ந்த என் சக வழக்கறிஞர் என்னோடு அமர்ந்து விருந்து அருந்திய நிகழ்ச்சி முப்பது ஆண்டுகளுக்கு முன்பே எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடந்தது. என் ஒரு மறுமகன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன்.

இப்படியெல்லாம் சொல்வதால், நம் பொருளாதாரம் மிகச் சிறந்த நிலை அடைந்து விட்டதென்றோ, நம் நாடு ஒரு சமத்துவச் சமதர்மப் பூங்கா என்றோ, இங்கே ஜாதி, மத பேதங்களே இல்லை என்றோ நான் சொல்ல வரவில்லை. சுதந்திரத்துக்கு முன் இருந்ததைக் காட்டிலும் நாம் எவ்வளவோ மேம்பட்டிருக்கிறோம் என்பதுதான் என் கருத்து. நம் வளர்ச்சியை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டியதில்லை.

பொதுவாக மனிதர்களுக்கு, எல்லா நாட்டினர்க்கும், இருக்கும் சில மனோபாவங்கள், சில சுயநலங்கள் நம் மக்களுக்கும் இருக்கின்றன என்பதை நாம் பெரிது படுத்தத் தேவையில்லை. நாம் பார்க்க உலகின் முக்கால் பங்கை ஒருகுடைக்கீழ் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இன்றைய நிலையென்ன? அவர்களுடைய பொருளாதாரம் சரிந்த நிலையில்தான் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் வரை எதற்கெடுத்தாலும், ‘ஜப்பானைப் பார்’ என்று சொல்லி வந்தோம். இன்று ஜப்பானின் பொருளாதார நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. ஆனால், நாம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம்.

இன்று இஸ்ரேல், பாலஸ்தீனம் இடைப்பட்ட காஜா முனையில் ஆயிரக்கணக்கானவர்கள் குண்டுமழையில் கொன்று குவிக்கப் படுகின்றனர். நம் நாட்டில், அல்லது நம் எல்லையில் அப்படி நடக்கவில்லையே!

பொருளாதாரம் அவ்வப்போது பின்னடைவு கொள்வதும், பிறகு சீராவதும் எல்லா நாடுகளிலும் நடக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவில் கூடச் சென்ற நூற்றாண்டின் முதற் பகுதிய்ல் ‘த கிரேட் டிப்ரஷ்ன்’ எனப்படும் பொருளாதார பாதாளநிலை ஏற்பட்டது. உண்பதற்கு உணவின்றி மக்கள் தெருக்களில் அடித்துக் கொண்ட நிலை அங்கே ஏற்பட்டது. சில ஆண்டுகளில் நிலைமை சீர்படவில்லையா? இப்பொழுது அமெரிக்கா மீண்டும் பாதாள நிலைக்குப் போய்க் கொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதெல்லாம் சகஜம். எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் உண்டோ அப்படித்தான் ஒவ்வொரு நாட்டுக்கும்.

பொதுவாழ்வில், குறிப்பாக நிர்வாக மேலாண்மையில் ஊழல் அதிகரித்து விட்டது என்ற குற்றச் சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறது. எப்போதுமே, மேல் பதவிகளில் இருந்தவர்கள் ஊழல் புரிந்திருக்கிறார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தும் சாதனங்கள் இப்போது இருப்பது போல் அப்பொதெல்லாம் இல்லை. மேலும் ஆயிரங்களாக இருந்த ஊழல் மதிப்பு இப்பொழுது நினைத்துப் பார்க்க முடியாத அளவு பல பூஜ்யங்களைச் சேர்த்துக் கொண்டு லட்சோப லட்சம் கோடிகளாக மாறியதற்கு ஒரு காரணம், பணத்தின் மதிப்புக் குறைந்து விட்டது; இன்னொரு காரணம், ஊழலுக்கு ஏற்ற களங்களின் சந்தை மதிப்பு மிகவும் அதிகரித்து விட்டது. ஒரு பொது காண்டிராக்ட், ஒப்பந்தம் முன்பெல்லாம் லட்சங்களில் இருந்தது. இப்போது பல்லாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டது. 2 ஜி ஊழலே சாட்சி.

ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால், இன்னும் இருக்கும் ஜாதி, மத துவேஷங்களை அழிக்க வேண்டுமென்றால், நாடு மேலும் வளம் பெற்று உயர வேண்டும் என்றால் இன்னின்ன செய்ய வேண்டும் என்று பல பட்டியல்கள் பலர் கொடுக்கலாம். எனக்குத் தெரிந்தவரை ஒரு முக்கியமான மனமாற்றம் மக்களுக்கு, அதுவும், கல்வியில் பின்தங்கியுள்ள மக்களுக்கு, ஏற்பட்டால் அது ஓரளவுக்கு ஊழல் குறையவும், ஜாதி, மத, இன பேதங்களால் ஏற்படும் பூசல்கள் குறையவும், வளம் பெருகவும் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.

அது என்ன மனமாற்றம்? பாரதி சொன்ன, “நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற தாரக மந்திரத்தின் முழுப் பொருளையும் நன்கு உணர்வதே அந்த மனமாற்றம். நாம் இன்னும் தலைவர்கள் என்றொரு தனி ஜாதியை வைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் ‘நிரந்தரத் தலைவனே/தலைவியே’ என்று வேறு புகழாரம் சூட்டுகிறோம்.

இந்த மனோபாவம் மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதம மந்திரி எல்லாருமே மக்களுடைய பணியாளர்கள். அவர்கள் யாருமே தலைவர்கள் இல்லை; நம்மால் பணியில் அமர்த்தப்பட்ட நம் வேலைக்காரர்கள். அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று தட்டிக் கேட்கும் உரிமை பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. தேர்தலில் வாக்குக் கேட்டு வரும் வாக்காளர்களிடம், உங்கள் தலைவர்கள் மக்களே, உங்கள் கட்சியின் நிர்வாகிகள் தலைவர்கள் இல்லை என்பதைச் சொல்லி அதை வெளிப்படையாகவும், தேவைப்பட்டால் எழுத்து மூலமான உறுதிமொழியாகவும் அவர்களிடம் பெற வேண்டும் இந்த விழிப்புணர்ச்சி எல்லா மக்களுக்கும் வந்துவிட்டால் அதுவே பெருமளவு பொதுவாழ்க்கைத் தூய்மைக்கு வழிகோலும் என்பது என் நம்பிக்கை.

காங்கிரஸிலோ, திரினாமூல் காங்கிரஸிலோ, மாயாவதி கட்சியிலோ, தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகளிலோ, தே.மு.தி.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளிலோ, தலைமையை எதிர்த்துக் குரல் கொடுத்துவிட்டு யாரும் கட்சியில் நீடிக்க முடியாது. தலைமைக்கு எதிராகக் கருத்துச் சொல்லும் சுதந்திரம் இந்தக் கட்சிகளில் இல்லை. தன் கட்சித் தலைவர்/தலைவி எதிரில் தைரியமாக உட்காரும் சுதந்திரம் கூட இந்தக் கட்சிக்காரர்களுக்குக் கிடையாது. இவர்களையெல்லாம் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு நாம் சுதந்திரம் பற்றிப் பேசுவதே தவறு.

எனக்குத் தெரிந்தவரை இந்தக் குறைபாடு இல்லாத கட்சிகள் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, இன்னொன்று பாரதிய ஜனதா கட்சி. சாதாரண நிலையில் இருந்து எந்தப் மரபுப் பின்னணியும் இல்லாத நரேந்திர மோடி, அந்தக் கட்சியின் பழம்பெறும் தலைவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டுத் தலைமை நிலைக்கு வரமுடிந்ததே அந்தக் கட்சியின் வலிமை என்று கருதுகிறேன். ஆனால், இதே நிலை நீடிக்குமாற மோடி அவர்கள் செயல்பட வேண்டும். அதாவது, தம்முடன் கருத்து வேறுபடும் நபர்களைத் தள்ளிவிடாமல், கட்சிக்குள் கருத்துப்போர் நடத்திக் கருத்துத் தெளிவு ஏற்படும் சூழலைப் பாதுகாக்க வேண்டும். மாற்றுக் கருத்தைக் கருத்து வலிமையால் மட்டுமே சந்திக்க வேண்டும். தேவைப்பட்டால் தன் கருத்தை மாற்றித் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை வலிமையாலும், பண, அதிகார வலிமையாலும் மாற்றூக் கருத்துகளை அடக்க நினைக்கும் சரிவுக்கு அந்தக் கட்சி ஆளாகாமல் இருக்கும் வரை, கட்சியின் உள்கட்சி ஜனநாயகம் சிதையாமல் இருக்கும் வரை நாட்டுக்கு நல்லது.

நம்பிக்கை இழக்க வேண்டாம், சகோதர, சகோதரிகளே. நம் முன்னோர்கள் நமக்கு நல்ல நாட்டைத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் மேலும் நல்ல நாடாக நம் பிள்ளைகளுக்கு இதை விட்டுச் செல்வோம் என்பது உறுதி. பாரதி நம் நாட்டைப் பற்றிச் சொன்னதை மறக்கவே வேண்டாம்:

“பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு.”

எப்பொழுதும் நல்ல நாடாகவே இருப்போம்.

வந்தே மாதரம்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுதந்திரம்!

  1. Very true. We are on the progressive path. We should move up with self confidence and firm commitment.
    Well written dear Ravi.

    Su.Ra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *