இந்த வார வல்லமையாளர்!

ஆகஸ்ட் 18, 2014

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் அவர்கள்

Mohanarangan Srirangam

 

ஆன்மிக சிந்தனையாளர் திரு. மோகனரங்கன் அவர்கள் பரந்துபட்ட பல ஆன்மிக நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவர்.  அவ்வாறு தான் படித்ததைப்  படித்தவாறே ஏற்றுக் கொள்ளாது அவற்றை  வெவ்வேறு கோணங்களில் ஆராய்பவரும் கூட. சிந்தனையின்  முடிவில் அவர்கொண்ட கருத்துகள் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு  மாறுபட்ட கோணத்தில் இருந்தாலும் அவற்றைப் பிரதிபலிப்பதில் சற்றும் தயக்கம் காட்டாதவர்.  இந்தப் பிரதிபலிப்பின் நீட்சியாக, தொடர்ந்து இவரது எழுத்தைப் படிப்பவர்களும் சிந்திக்கத் தூண்டப் படுகிறார்கள்.  தனது எழுத்தின் மூலம் வாசகர்களின் ஆன்மிக சிந்தனைக்கு வினையூக்கியாக இருக்கும் மோகனரங்கன் அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார். இவரது ஆன்மிக சிந்தனைகளின் பிரதிபலிப்பை வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் முனைவர் ராஜம் அவர்கள்.

சென்னை வங்கி ஒன்றில்  பணிபுரியும்  திரு. மோகனரங்கன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். மிக இளம் வயதிலேயே இலக்கியம், தத்துவம், இறையியல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர், அத்துடன்  வரம்பற்ற வாசிக்கும் பழக்கமும் கொண்டவர்.  ஆன்மிக சிந்தனையாளர்கள் ராமகிருஷ்ணர், ரமணர், விவேகானந்தர் என்று ஒரு பக்கமும், நாத்திக சிந்தனையாளர் அயன் ரேண்ட் பற்றியும் தத்துவ மேதை அரிஸ்டாட்டில் பற்றி மறுபக்கமும் ஆர்வத்துடன் படிப்பவர்.  அதேபோலத்தான் இலக்கியத்திலும் இவரது ஆர்வம் பல துறைகளையும் தொட்டுச் செல்லும்.  தமிழிலக்கியத்தில் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள்  என்ற வைணவ இலக்கியங்களையும், பெரிய புராணம் போன்ற  சைவ இலக்கியங்களையும் ஒரு சேர படிப்பவர்.  விக்டர் ஹ்யூகோ பற்றியும் விளக்கம் தருகிறாரே இவர் என்று வியந்தால்  அக்கால ஸ்ரீ  ராமானுஜர் தத்துவங்களைப் பற்றியும்  இக்கால அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாதாசாரியார் பற்றியும் விரிவுரை வழங்குவார்.  பொருளாதாரக் கொள்கை , கம்யூனிசக் கொள்கை  …இல்லை…இல்லை இவற்றையும் இவர் விட்டு வைத்ததில்லை. பலநூல் படிப்பும் அவற்றை ஒப்பிட்டு ஆராயும் பாங்கும் இவரது சிந்தனையை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் குடத்திலிட்ட விளக்காக தான் அறிந்து கொண்டதை மறைத்துவிடாமல் குன்றிலிட்ட விளக்கொளி போல பலர் பயன்பெற தனது பதிவுகள் மூலம் பகிர்ந்து கொள்வது இவரது சிறப்பு.

இதற்குக் காரணம் “படிப்புதான் உண்மையான யோகம்”என்று இவர் கொண்டுள்ள கருத்தாகும்.  அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே …

“நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?

இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் – எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் – படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.

எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.”  

குறிப்பாக ஆன்மிக நூல்களைப் படிப்பவர்களுக்கு இவரது சிந்தனை மற்றொரு கோணத்தைக் காட்டும் என்பதை கீழ்வரும் கட்டுரையின் பகுதி வெளிப்படுத்துகிறது …

“கற்றலும் நம்பிக்கையும்
பழைய மரபுகளைப் பற்றி ஆர்வம் கொண்டு அதைக் கற்பவர்கள் கட்டாயமாக அந்த மரபுகளைத் தம் வாழ்நெறியாகத்தான் கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை.பண்டைய நெறிகளைக் கற்று அறியும் ஆர்வம்தான் போதிய காரணம். ஆனால் பழம் மரபுகளில் பெரும் நம்பிக்கை கொண்டு அவற்றைத் தம் வாழ் நெறியாகவே கொள்பவர்கள் அறிவதற்காக மட்டும் அந்த மரபுகளில் தோய்வது இல்லை. அந்த மரபு சார்ந்த நெறிகள் சொல்லும் உலகம் அப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு இன்றும் உண்மையான ஓர் உலகமாக ஒரே உலகமாகப் போய் விடுகிறது. அந்த மரபு சொல்லும் உலகக் கோட்பாடுதான் ‘தி உண்மை’ என்ற கடும் கருதல் விரதத்திற்குத் தங்களை ஈடு கொடுத்துவிடுகின்றனர். அப்படி, சொல் செயல், மனம் எல்லாவற்றையும் ஒரு நெறியில் காவு கொடுத்து, அதில் தன்னையே இழக்கும் வெறியான மனப்பான்மைக்குத்தான் பண்டைய நெறிகள் பெரும்பான்மையும் நம்பிக்கையாளர்களை மறைமுகமாகவோ நேரடியான ஆணைகள் மூலமாகவோ ஊக்குவிக்கின்றன. எனவே ஒரு நம்பிக்கையாளராக மத மரபுக் கருத்துகளைப் பயில்வோர் ஒரு விதத்தில் Probation for religious exclusivism if not fanaticism என்ற நிலையில் தம்மைப் பெய்து விடுகின்றனர்.

விவேகாநந்தரின் கருத்துகள் பற்றிய விமரிசனம்சத்சங்க மஹிமை, சமய நெறிகளும் சமரஸ வாதமும், எது பக்தி? தற்கால ஆன்மிகம், நாத்திகம் பரவ வேண்டும் என்று ஆன்மிக சிந்தனையைப் பல கோணங்களில் ஆராயும் இவர் தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் வலியுறுத்துவது  “சிந்தனை செய்ய…”

“அகல்யா கற்பிழந்தாள் என்ற அபத்தக் கதை” என்ற பதிவில்…

அகல்யாவின் கற்பிழத்தலைப் பற்றி காலம் நெடுக பேசுகிறார்கள். யாராவது காட்டில் இருந்த வேறொரு முனிவரிடமோ, அல்லது அரசன் ஒருவனிடமோ, அல்லது ரிஷி குமாரன் ஒருவரிடமோ உறவு கொண்டிருந்து அதனால் அவளுக்கு இந்தப் பெயர் என்றாலும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கு இந்திரனிடம் கற்பு இழந்தாள் என்று கூறப்படுகிறது.

அதையே தாருக வனத்தில் நிர்வாணமாகச் சிவபெருமான் சென்று ரிஷி பத்தினிகளை மயங்கச் செய்தது உயர்ந்த தத்வார்த்தமான ஒன்றின் ஸிம்பாலிஸமாகப் பார்க்கப் படுகிறது.

கோபியரின் காதலும் கண்ணனிடத்தில் ஈடுபாடும் உயர்ந்த பக்திநிலையைக் குறிக்கும் அவஸ்தைகளாகப் பார்க்கப் படுகிறது.

அனைவரும் தேவர்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களே.

ஆனால் அகல்யாவின் விஷயத்தில் ஏன் அது ‘கற்பிழந்தாள்’ என்று பெரும் மானக்கேடாகச் சித்திரிக்கப்பட வேண்டும்?

அரசனிடமோ, முனிவனிடமோ, வேறு மானிடர் யாரிடமோ உறவு என்றால் இந்தக் களங்கக் குற்றம் புரிந்துகொள்ள முடியும்.

 “இங்கு உறவு என்பது அந்தக் காலத்தில் கடவுள் என்று கருதப்பட்ட, மானிட மெய்மை அல்லாத ஒரு தத்துவ வடிவினால் ஆய உருவத்திடம்தானே!”

மற்ற உதாரணங்களில் எல்லாம், தத்வார்த்தமாக ஸிம்பாலிஸம் என்றால் அகல்யா விஷயத்தில் மட்டும் அது அப்படியே காமத்தனமான நடவடிக்கை ஆகிவிடுகிறதா?

சிந்தனை செய் மனமே!

[…]

இந்த அபத்தக் கதைகளின் ஆரம்பகால நோக்கமே ஒரு பக்தி நெறி தலைதூக்கி முன்னிருந்த பக்தி நெறியொன்றை வழ்க்கத்திலிருது நீக்கியிருக்கிறது என்பதில்தான் நிறைவேறியிருக்கிறது.

எவ்வளவு காலம்! காலம் காலமாக நம் நாட்டுப் பண்டிதர்களும், அறிவு ஜீவிகளும், தற்கால எழுத்தாளர் பிரம்மாக்களும் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களோ!

“நாத்திகம் பரவ வேண்டும்” என்ற சிந்தனை நோக்கில் இவர் முன்னிறுத்தும் கருத்துக்கள்,  மதங்கள் மக்களின் சிந்தனையை முடக்குவதால் மாற்றுவழி தேவை என்ற நோக்கில் வைக்கப்படுகிறது…

மிகவும் ஆழ்ந்து நோக்கினால் மனிதர்களின் இயல்பான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் குந்தகமும் தடையும் விளைவிப்பனவாய் இருக்கின்றன மதங்கள். அதுவும் ஹிந்து மத சமுதாயத்தைப் புனரமைப்பது, சீர்திருத்துவது என்பதெல்லாம் ஒருவர் தம்மைத்தாமே தற்காலிகமாக ஏமாற்றிக் கொள்ளும் வேலை என்றுதான் படுகிறது. ஹிந்து மதத்தை விட்டுப் பிரிந்து தனி மதமாக ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய மார்க்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று சில காலங்களின் முன்பு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவியர் சிலர் முயற்சி செய்ததைப் பற்றிக் கடும் விமரிசன எண்ணத்தை முன்னரெல்லாம் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் விரும்பியதிலும் ஒரு காரணமும் நியாயமும் இருப்பதை இப்பொழுது உணர்கிறேன். அவர்களைப் பற்றிய விமரிசன எண்ணம் எனக்கு மாறிவிட்டது (Posted: August 9 at 11:43pm)
https://www.facebook.com/mohanarangan.srirangamv/posts/969343329749350

எப்படிப்பட்ட தன்மை உள்ள செய்கைகளையும், கருத்துகளையும் பற்றி, தம்மளவில் நல்ல மனிதர்கள் கூட, உள்ளத்தின் அதிர்வுகளுக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளத்த தகுந்த வழியில் மனசாட்சியை மழுங்க அடித்துவிடும் கலையை மத நம்பிக்கைகள் பயிற்றுவிக்கும் (August 9 at 10:57pm)
https://www.facebook.com/mohanarangan.srirangamv/posts/969328769750806

ஆன்மிகம் தவிர்த்து பொருளாதார  சித்தாந்தங்கள் பற்றியும் ‘உபரி மதிப்பு’ கட்டுரையில் இவர் சிந்திக்கும் கோணம்…

“இந்தியாவில்    ஒரு  மணி  நேரம்   ஒருவர்   உழைக்கிறார்.   அதற்கு    ஒரு  மதிப்பு  நிர்ணயமாகிறது.     அதே  நேரம்  அதே  உழைப்பு   அவர்    வேறு  ஒரு  நாட்டில்    செய்தால்     பலமடங்கு    மதிப்பு    பெற முடிகிறது.    அப்பொழுது     உழைப்புக்கான  உரிய  மதிப்பை    முடிவு  செய்வது   எது?     சந்தையின்    தேவை   என்பதுதானே      அனைத்து  மதிப்புகளையும்   நிணயிக்கும்     மூலம்.     சந்தையின்   தேவை    நிர்ணயித்துத்    தரும்    மதிப்பு    உழைப்புக்கு  வந்தடையாமல்    போக   இடைப்பட்ட    தடங்கல்கள்    ஏற்படலாம்.  அப்பொழுது    அந்தத்   தடங்கல்களை     சமாளித்து    உரிய  மதிப்பைப்  பெற்றுத்தரவும்,    எதிர்காலத்தில்   தடங்கல்கள்   ஏற்படாதவாறு   பார்த்துக்கொள்ளவும்     உழைப்பவரின்  ஒருங்கிணைந்த    அமைப்பு     அவசியம்  இல்லையா?”       

மோகனரங்கன்  ஒரு சிறந்த கவிஞரும் கூட.  உணர்வின் உயிர்ப்பு, காற்றுகளின் குரல் என்ற கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.  காற்றுகளின் குரல் கவிதை நூலில்    4000 கி மு விலிருந்து இன்றுவரை, சுமார் 25 நாடுகளிலிருந்து நூறு கவிதைகளை  மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

கட்டளைக் கலித்துறையில் பாடல்கள், சங்கத்தமிழ்  கவிதைகளை ஒத்த கவிதைகள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.

“If you have knowledge, let others light their candles in it” என்றும் “Sharing will enrich everyone with more knowledge” ஆங்கிலப் பொன்மொழிகளுண்டு.  அதற்கொப்ப தான் அறிந்து கொண்டதை, தான் சிந்தித்த ஆன்மிகத்தின் மாறுபட்ட கோணத்தை தனது பதிவுகளின் மூலம் வழங்கிவரும் மோகனரங்கன் அவரது சிந்தனையைத் தூண்டும் எழுத்துகளுக்காகப் பாரட்டப்பட வேண்டியவர். இவ்வாரத்தின் வல்லமையாளராக மோகனரங்கன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

மோகனரங்கனை “அரங்கனார்” என்றும் அன்புடன் சிலர் அழைப்பதுண்டு…வல்லமை மின்னிதழில் கட்டுரைகள் எழுதியுள்ள இவர் கூகிள் குழுமங்களில்; குறிப்பாக வல்லமை கூகிள் குழுமத்திலும், தனது பேஸ்புக் பக்கத்திலும் எழுதி வருகிறார்.  இவர் எழுத்துக்களை  படிக்க விரும்பினால் …

இடம் பிடிக்க வேண்டுமெனில்
வடம்பிடிக்க வாருங்கள்
“அரங்கன்” தேர் அசைகிறது …

(இவரது  “உணர்வின் உயிர்ப்பு”, என்ற கவிதை நூலில் உள்ள “கவி தைத் தேர்” என்ற கவிதையில் வரும் வரிகள் இவை.  தமிழினி, நவம்பர் 2002, பக்கம் 27 )

https://www.facebook.com/mohanarangan.srirangamv
http://thiruvarangan.blogspot.in/

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வண்ணமிகு எழில் கொஞ்சும் வளமான காவிரியின் 
    வற்றாத நீரோட்டம் வழிந்தோடும் அரங்கத்தில் 
    எண்ணரதம் தினம் இழுத்து இவர்தரும் படையல்களும் 
    ஏற்றமுற இருப்பதனை எவர் மறுப்பார் இங்கே?

    வல்லமையின் பக்கங்களை வாதம் பிரதி வாதம்செய்ய 
    சொல்லெடுத்து விளையாடும் சொக்கநாதர் இவரே…
    திண்ணமுற தன் கருத்தைத் திடமாக வைப்பதிலே 
    முன்னணியில் உள்ளவரே மோகனரங்கம் என்பேன்!

    ஆழ்ந்தெழுதும் ஆற்றல்பெற்றோர் அரியவரே எனும்நிலையில் 
    தோய்ந்தெழுதும் தூயவராய் காட்சி தருகின்றார் ..
    பாய்ந்துவரும் வெள்ளமென ஓடிவரும் இவரெழுத்தை 
    வாங்கித்தரும் வைபவமே வல்லமையில் உண்டு.. உண்டு!!

    சொல் புதிதாய் சுவை புதிதாய் சங்கமிக்கும் இவர் படைப்பும் 
    நல்லபல கருத்துக்களின் நயமான ஓர் சுரங்கம் 
    வல்லமையாளர் என்று விருது பெறும் இந்நாளில் 
    வாழ்த்திடவே வருகின்றேன் வாழ்கவே.. வாழ்க நீர்..  
    வாழிய பல்லாண்டே!

    அன்புடன்..
    காவிரிமைந்தன் 
    www,thamizhnadhi.com

  2. என் இனிய நண்பர் மோகனரங்கனுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். அவர் மிகச் சிறந்த கவிஞர். அமரர், கவிஞர் திருலோக சீதாராம் கவிதைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ரசிகர். தத்துவ நோக்குடன் கனமான கருப்பொருள்களை எடுத்துக் கொண்டு மிக லாவகமாக எழுதுபவர். உலகத்தின் பல்வேறு மொழிக் கவிதைகளை அழகாகத் தமிழில் தந்தவர். He deserves this and much more accolades. அவர் மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துகிறேன். கே.ரவி 

Leave a Reply to காவிரிமைந்தன்

Your email address will not be published. Required fields are marked *