இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (26)

 

ஒரு ரயில் பயணத்தில்….

{கேட்டு மகிழ}

10301055_285979498239973_6877421676757917975_n

தூசு, சத்தம், துர்நாற்றம்
கூட்டம், குப்பை, தள்ளாட்டம்
ஈசல் பறக்கும் நெஞ்சங்கள்
ஈக்கள் மொய்க்கும் வியாபாரம்

ஓசை மிகுந்த குலுக்கலிலே
தூளிக் குழந்தை அயர்கிறது
நேசம் நெருக்கம் இவையெல்லாம்
பேசும் குரலில் மிளிர்கிறது

இறங்குவ தொன்றே நினைத்தபடி
இதையும் அதையும் செய்கின்றார்
இறங்கி விடாத பண்டத்தை
ஏனோ விரும்பித் தின்கின்றார்

இடிக்கக் கூட முடியாமல்
இத்தனை நெரிசல் ரயிலில்தான்
புழுதி விசிறும் வெய்யிலிலும்
பொறுமை காப்பது இந்தியர்தான்

இத்தனை நெருக்கடி மத்தியிலும்
இருக்கையில் எழுந்து நின்றபடி
சித்திர நடனம் செய்கின்ற
சிறுமியை வியந்து பார்க்கின்றேன்!

வேரில்லாத பேச்சுக்கள்
வேடங் காட்டும் வீச்சுக்கள்
யாரென் றிலக்கே இல்லாமல்
வீசப் படுகிற ஏச்சுக்கள்

சாமியாடும் சில தலைகள்
சதா பேசும் சில தலைகள்
சாமரம் போடும் சில தலைகள்
தளைகள் மண்டிக் கிடக்கும் தலைகள்…

சுமையை
இறக்கி வைப்பார் சிலர்
ஏற்றி வைப்பார் சிலர்
ஏற்றவும் இறக்கவும் மனமின்றி
சுமந்து சுமையாய்ச் சிலர்…

நாற்றம் பிடித்த கழிவறைகளுக்கு
நடுவே
டோக்கன் போடும் பக்தனாக
நின்றபடி
துப்பல் தேசத்தின் தொண்டர் குழாத்தின்
தூரிகை லாகவம் பார்த்தபடி
அத்தனை கூட்டத்திலும் நாற்றத்திலும்
அவசரத்திலும்
அவுக் அவுக்கென்று பிரியாணியை
அள்ளிப் போட்டுக் கொள்பவரையும்
ரசித்தபடி

பொருள்களோடு பொருட்டின்றி
நின்று கொண்டிருக்கின்றேன்…

எப்படி என்னால் முடிந்தது?

இப்போது
உன் பத்து விரல்களும்
என் கன்னத்தைப்
பற்றிக்கொண்டால்
எப்படி இருக்குமென்று பாவித்தேன்

நனவின் நடப்பை
கனவுத் துடுப்பால்தானே
கடக்க வேண்டும்?!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *