-எம். ஜெயராமசர்மா- மெல்பேண்

teresa

முன்னம் அவருடைய நாமம் கேட்டேன்
முழுதுமாய் அவர்பணியை மனதில் கொண்டேன்
பின்னை அவருடை ஆரூர் கேட்டேன்
பிரமித்தேன் பிரமித்தேன் பிரமித் தேனே!

அல்பேணியா ஈன்றெடுத்த அன்னை அவராவார்
அனைவர்க்கும் தொண்டுசெய அவதரித்த அன்னை!
சொல்லியவர் பணியாற்ற வந்து விடவில்லை
தூயமனம் கொண்டு அவர் தொண்டாற்றிநின்றார்!

எள்ளளவும் இரக்கமின்றி எச்சில்  உமிழ்ந்தார்கள்
இன்முறுவல் கொண்டுமவர் ஏந்தியதைப் பெற்றார்
கள்ளமிலா உள்ளம் அவர் கொண்டிருந்ததாலே
காறி உமிழ்ந்தவரே கைநிறையக் கொடுத்தார்!

தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்தார்
தனக்குவமை இல்லாமல் தானுவமை ஆனார்
மனக்குறையைப் போக்குதற்கு மாமருந்துமானார்
தனித்துநின்று தொண்டுசெயும்  தற்துணிவுபெற்றார்!

கைகொண்டு மெய்கொண்டு கருணைமழை பொழிந்தார்
கலியுகத்தில் கண்ணனெனக் கைகொடுத்து நின்றார்
ஊரிலுள்ள சேரியெலாம் உவப்புடனே சென்று
யாருமிலை என்பார்க்கு நல்மருந்தும் ஆனார்!

சாதிமதம் பாராமல் சமத்துவமாய் நின்றார்
சாதனைகள் செய்தாலும் தலைகனக்கா நின்றார்
போதிமரம் ஆகிநின்று போதனைகள் செய்தார்
நாதியற்ற மக்களுடன் நட்புரிமை கொண்டார்!

வெள்ளுடையில் நீலக்கோடு விரும்பியவர் ஏற்றார்
அள்ள அள்ளக் குறையாமல் அருந்தொண்டு புரிந்தார்
உள்ளஎலாம் உவகையொடு உழைத்துமவர் நின்றார்
உலகிடையே அன்னையாய் என்றுமவர் உள்ளார்!       

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *