ஆகஸ்ட் 25, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு போராளி ஹீடி எப்ஸ்டீன் அவர்கள்

Hedy Epstein
அமெரிக்க மிசௌரி மாநிலத்தில் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடியதால் கைது செய்யபட்டவர் போராளி ‘ஹீடி எப்ஸ்டீன்‘ (Hedy Epstein). தனது 90 ஆவது வயதிலும் துடிப்புடன்   அயர்வின்றி மனித உரிமைகளுக்காகப்  போராடி வரும்  மனித உரிமைப் போராளி ஹீடி எப்ஸ்டீன் அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

 

 

hedyepstein_collage
இவர் ஆகஸ்ட் 15, 1924 ஜெர்மனியில் பிறந்தவர்.  யூத மதத்தைச் சேர்ந்தவர்.  இவரது குடும்பத்தினர் பரம்பரைப் பரம்பரையாக அங்கு வணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.  பெற்றோருக்கு ஒரே குழந்தையான இவரது 8 ஆவது வயதில் ஜெர்மனியில் சர்வாதிகாரி  ஹிட்லர் பதவியேற்று இருக்கிறார்.  ஹிட்லரின் அடக்குமுறையால் பிற யூதர்களின் குடும்பம் அல்லலுற்றது போலவே இவர்களும் துன்பம் அடைந்திருக்கிறார்கள்.  குடும்பமாக வெளியேற முயற்சித்தும் அகதிகளாக அவர்களுக்கு வேறு நாட்டிற்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.  கிண்டர் ட்ரான்ஸ்போர்ட்  என்ற மக்கள் நல நிறுவனம் ஆயிரக்கணக்கான சிறுவர்களை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்று அவர்களை அனாதைவிடுதிகள் போன்ற இடங்களில் தங்கவைத்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது.  இதை அறிந்த ஹீடி எப்ஸ்டீனின் பெற்றோர்கள் இவரிடம் பேசி நிலைமையை உணர்த்தி, இவரை மட்டும் அந்த தொண்டு  நிறுவனத்தின் உதவியுடன் இவரது 14 வயதில் தப்ப வைத்தனர்.  அதன் பிறகு அவருடைய பெற்றோர்களையும் மற்ற குடும்ப நண்பர்களையும் அவர் பார்த்ததில்லை.  அவர்கள் யாவரும் ஹோலோகாஸ்ட் முகாமில் உயரிழந்தனர் என்று நம்பப்படுகிறது.

அவ்வாறு ஜெர்மனி அரசால் முகாமில் அடைபட்டு இருந்த பொழுது அவரது அன்னை எழுதிய கடைசிக் கடிதமான அஞ்சல் அட்டையில் அவர் தங்களது துயரங்கள் எதையும் சொல்லி இவரை வருத்த விரும்பாமல், அன்பு மகளுக்கு நாங்கள் கிழக்கு நோக்கிப் பயணமாகிறோம், இறுதியாக விடைபெற்றுக் கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.  போர் முடிந்தவுடன் ஜெர்மனி திரும்பியும் அவர்களை இவரால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.  பிறகு ஹிட்லரின் கொடுஞ்செயலில் இறந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

ஜெர்மனியில் இவர் கொஞ்ச நாட்கள் பல பணிகளில் ஈடுபட்டாலும் அவையாவிலும் இவர்  நோக்கம் மனித உரிமைகளுக்காகப் போராடுவதை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கிறது.  பிறகு அமெரிக்காவிற்கு குடியேறி தற்பொழுது மிசௌரி மாநிலத்தில் வசிக்கிறார்.   தொடர்ந்து மனித உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவற்றில் சில சிறைக்கைதிகளின் அனுமதியின்றி அவர்கள் மீது மருத்துவ ஆராய்ச்சி நடத்திய வழக்கில் தகவல் சேகரிக்க உதவியது, வீட்டுவசதியில் இனவேறுபாடு என்ற பிரிவற்ற சமத்துவம், கருச்சிதைவு உரிமை, போர்களை எதிர்த்துப் போராடுவது போன்றவை ஆகும்.  தனது போராட்டங்களுக்கு ஆதரவாக உரை நிகழ்த்த, போரை எதிர்த்து அமைதி காக்கும் முயற்சி போன்றவற்றிற்காக கட்டமேலா, நிக்கராகுவா, கம்போடியா போன்ற நாடுகளுக்கு 1989 ஆம் ஆண்டில் பயணம் செய்தவர்.

யூத மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இஸ்ரேலின் நடவடிக்கையை எதிர்ப்பவர்.  பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் அநீதிகளுக்ககாக 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் வெஸ்ட் பேங்க் பகுதிக்குச் சென்று அங்கு அமைதியான  போராட்டம் செய்பவர், உண்ணாவிரதம் இருப்பவர்.  யூதராக இருந்தும் இஸ்ரேலுக்கு இவர் ஆதரவு தராத காரணத்தினால் யூத மக்கள் இவர் மீது கோபம் கொண்டு அவரது சொற்பொழிவுகளை நடத்த விடாமல் இடையூறு செய்வதுண்டு.  இவ்வாறு உலக நாடுகளுக்குப் பயணம் செய்து அமைதிக்காகப் போராடும் இவருக்கு இவர் வசிக்கும் ஊரிலேயே அமைதி குலையும் நிலையும் அதற்காகப் போராடும் தேவையும் ஏற்பட்டது.

ஆகஸ்ட் 9, 2014 முதல், கடந்த அரை மாதமாக அமெரிக்க மக்களின் விவாதத்திற்குரியதாக, தொடர்ந்து ஊடகச் செய்திகளில் அலசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சி மிசௌரி மாநிலத்தைச் சேர்ந்த ‘மைக்கேல் பிரவுன்’ என்ற  18 வயது  இளைஞர் காவல்துறை அதிகாரி ‘டேரன் வில்சன்’ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி.  சுடப்பட்டவர் ஆயுதம் எதையும் வைத்திராத ஒரு கறுப்பின இளைஞர் என்பதும், அவரை சரமாரியாக ஆறுமுறை சுட்டுக் கொன்றவர்  வெள்ளையர்  என்பதால்  அந்த நிகழ்ச்சி நடந்த ஃபெர்குசான் நகர மக்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து காவல் துறையினரால் கறுப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, அதிலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த அதிகாரியால் உயிரிழக்க நேரிடுவது ஒடுக்கப்படிருந்த சிறுபான்மையினர் மீது இன்றும் தொடர்ந்து நிகழ்ந்தப்படும் அடக்குமுறை  என்ற கோணத்திலேயே பார்க்கப்படுகிறது.   இது ஒரு பெரும் போராட்டமாக வெடித்து மக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது, அத்துமீறிய நிகழ்வுகள் நடந்தால் காவல்துறை அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தாக்குவதும் தொடர்ந்து வருகிறது. இரவில் ஊரடங்கு உத்தரவு, போராளிகளைக் கலைக்க கண்ணீர்ப்புகை போன்ற வழியில் கலவரம் முற்றும் நிலைக்கும் போனது.  நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பல தரப்புகளில் இருந்தும்  ஃபெர்குசான் நகரக் காவல்துறை கண்டனதிற்கு உள்ளானது.

நகரக்காவல்துறை நிலைமையைக் கையாள்வதை நிறுத்தச் சொல்லி மாநில ஆளுநர் நெடுஞ்சாலை காவல்துறையிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அதுவும் பலனளிக்காமல் போன பிறகு இராணுவத்தை வரவழைக்க ஏற்பாடு செய்தார்.  ஏற்கனவே போராடுபவர்களை தீவிரவாதிகளைப்  போல நடத்திப் போர்க்கால ஆயுதங்கள் கொண்டு அடக்கப்பட்டதில் கொதித்திருந்த போராளிகள், இராணுவத்தை  ஆளுநர் வரவழைக்கிறார் எனத் தெரிந்ததும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஒருவருடன் ஒருவர் கை கோர்த்து அரசு அலுவலகம் முன் நின்று வாசலை வழிமறித்து முற்றுகை இட்டனர்.

இவ்வாறு சென்ற திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2014) அன்று முற்றுகை இட்டவர்களில் மனித உரிமைப் போராளி  ஹீடி எப்ஸ்டீனும் ஒருவர்.  காவல்துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் சொன்னதையும் பொருட்படுத்தாது முற்றுகையிட்டோர் தொடர்ந்து போராடவும் அவர்களில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் (ஒருவரைத் தவிர மற்றவர்களை சிலமணி நேரத்திற்குப் பின்னர்  விடுதலை செய்துவிட்டனர்).  வரும் அக்டோபர் 21, 2014 அன்று நீதிமன்றதிக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையில்  ஹீடி எப்ஸ்டீனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஹீடி எப்ஸ்டீனைக் கைது செய்த பொழுது அவர் காவல்துறையிடம் சொன்னது மக்களைக் கவர அது “டுவிட்டர்” சமூகவலைதளத்தில் பலரால் பரப்பப்பட்டது. வியந்து பாராட்டப்பட்டது.

ferguson arrest
“நான் என் பதின்ம வயதிலிருந்து மனித உரிமைகளுக்காகப் போராடி வருகிறேன், எனது 90 வயதிலும் நான் போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்த்ததில்லை…. நாம் இப்பொழுது அநீதிகளை எதிர்த்தால்தான்  பிற்காலத்தில் மக்களும் தங்களது 90 வயதுகளில் போராடவேண்டிய நிலை வராமலிருக்கும்”

ஹீடி எப்ஸ்டீன் அம்மையார் கைதாகும் நிகழ்ச்சியைப் பற்றிய தொலைகாட்சி செய்தி வழங்கிய காணொளி:
http://youtu.be/cS3wGvsYik8

தன்னைவிட வேறுபட்டு இருப்பவர்களின் மீது நிகழ்த்தும் அடக்குமுறையும், அவர்களை தங்களைவிடத் தகுதியில் குறைந்தவர் என்ற எண்ணம் கொண்டு ஏளனப்படுத்துவதும், அவர்களை மதிக்காது நம்பிக்கையற்று நோக்குவதும், கண்காணிப்பதும் இன்றுவரை நிகழும் ஒரு மனிதாபிமானம் அற்ற செயல்.  ஒருவரது இனத்தின் பின்புலம் காரணமாக இன்றும் அடக்குமுறை அமெரிக்காவில் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இது போன்ற அநீதிகள் என்னை மிகவும் பாதிக்கிறது என்று கூறுகிறார் ஹீடி எப்ஸ்டீன்.

மனித உரிமைகளுக்காகத் தனது தள்ளாத வயதிலும் போராட்டத்தில் இறங்கும் ஹீடி எப்ஸ்டீன்அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

அவருடைய போராட்டத்தையும் கைதான செய்தியையும் அறிந்து  தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் அவருக்குப்  பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  காலை ஆறுமணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து அழைத்து பாராட்டுபவர்களுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.  அவரைப்பாராட்ட விரும்புவோருக்காக கீழே அவரைத் தொடர்பு கொள்ள உதவும்  தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளது.

 

 

மேலதிகத் தகவல்கள்:
Hedy Epstein
Wikipedia Link: http://en.wikipedia.org/wiki/Hedy_Epstein
Personal Website: http://www.hedyepstein.com/
Mail: 5547 Waterman, #1E , St. Louis, MO 63112, USA
Phone: (314) 361-6820
Email: hedy@hedyepstein.com

 

 

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. அரிய பல தகவல்களை அறியத்தரும் வல்லமை…  வல்லமையாளர் என தேர்ந்தெடுக்கும் விதமும் அருமை.

    இத்தகு சேவைகள் புரிந்து தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து வாழும் மனித உரிமைப் போராளி ஹீடி எப்ஸ்டீன் அவர்கள் பற்றி அறியத் தந்ததுடன் 

    உரிய முறையில் அவருக்கு வல்லமையாளர் விருதும் அளித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.  

    உள்ளத்தின் உறுதியை உயர்த்திப் பிடித்தபடி.. மக்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் அவரை மனதாரப் பாராட்டுவோம்.

    நல்லோரை.. நாடி அவர்தம்மைப் பற்றி நாம் அனைவரும் அறியச் செய்து வரும் தேமொழி அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்!!

    அன்புடன் 

    காவிரிமைந்தன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *