காலம் மாறிப் போச்சு

11

திவாகர்


என்ன சொல்லி எப்படிப் புரிய வைத்தால் இவளுக்குப் புரியவைக்கமுடியும் என்பது புரியாமல் முழிக்கிறேன்.. யார் மூலமாவது இவளுக்கு விளக்கிச்  சொல்லமுடியுமா என்றால்.. யார் மூலம் சொல்வது.. அப்படியே யாராவது போய் சொன்னாலும், சொன்னவர்களை வெகு எளிதாக தன் வழிக்குக் கொண்டுவந்து விடும் சாமர்த்தியம் உள்ளவள் மாதுரி.

இத்தனை புத்திசாலி இப்படி ஒரு முடிவு எடுப்பாளா.. யானைக்கும் அடி சறுக்கும்  என்பார்களே.. அது இதுதானோ.. இருக்கலாம். இல்லாவிட்டால் இப்படியே ஒரு வாரகாலமாக சொல்லிக் கொண்டே இருப்பாளா.. ‘நீங்க எல்லாரும் சேர்ந்து இப்ப பாத்திருக்கற சம்பந்தம் எனக்குப் பிடிக்கலே.. இதோ பாருங்க! கல்யாணம்னு பண்ணிண்டா உங்களைத்தான் பண்ணிக்குவேன்.. இதுக்கு நீங்க ஒத்துக்கணும். என்ன அய்யரே! இதுக்கு நீங்க சம்மதிக்கலேன்னா.. அவ்வளவுதான்.. நான் என்ன முடிவு எடுப்பேன்னு எனக்கே தெரியாது.. ஏன்னா நான் ரொம்ப கன்வின்ஸ்டா இருக்கேன். காதல்னா விளையாட்டுல்ல.. இப்படியே போகறதுக்கு.. ஒரு முடிவு வேணுமில்ல”

”மாதுரி, வேண்டாம்.. உனக்கு நான் சரியான ஜோடி இல்லே.. என்னோட வேலை வேற, உன்னோட வேலை வேற..”

“:உன்னோட ஜாதி வேற.. என்னோட ஜாதி வேறே ந்னுதானே வசனம் பேசப் போறீங்க?. ஆகா.. ஊருக்குதான் உங்க உபதேசமா.. எங்க வீட்ல பேசறச்சே இந்த ஜாதியெல்லாம் வேலையைப் பொறுத்துதான் ஆதியிலேயே வந்துதுன்னு ரொம்ப சீரியஸ்ஸா பேசுவீங்களே.. இதெல்லாம் வாய்ப்பேச்சா?”

”ஐய்யோ.. ஜாதி இங்கே விஷயமே இல்லே மாதுரி! பிரச்னை என்னோட வேலை.. உனக்குத் தெரியுமோ,, எங்க ஜாதியிலேயே சாஸ்திரிகள் பையன், அதுவும் வாத்தி வேலை பாக்கறான்னா பொண்ணு கொடுக்கமாட்டேங்கிறாங்க.. காரணம் இந்த வேலை அப்படிப்பட்டது. ஒரு நாள் கலியாணம், இன்னொரு நாள் கருமாதி.. இன்னொரு நாள் கிரஹப்பிரவேசம்னு சலிப்பான வேலையா நினைக்கிறாங்க. ஒவ்வொரு சமயத்துல வீட்டுல பேசறதுக்குக் கூட நேரம் கிடைக்காது. சாப்பாடு சேர்ந்து சாப்பிடமுடியாது.. சினிமா, பீச், வெளியே சுத்தறதுல்லாம் முடியவே முடியாது. அத்தோட பெண்ணைப் பெத்தவங்களும் மாறிப் போய்விட்ட இந்தக் காலத்துக்கேத்தமாதிரி அவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை அமையணும்னு எதிர்பார்க்கிறாங்க.. உன்னோட தகுதிக்கும் எனக்கும்  சரிப்பட்டு வரவே வராது”

“இதோ பாருங்க  மிஸ்டர் சாஸ்திரி, நான் ரொம்பநாளா  யோசிச்சாச்சு. நான் சின்னப் பொண்ணு இல்லே.. ரெண்டு வருஷமா வேலைக்குப் போறேன். நிறைய பேரைப் பாக்கறேன். மனுஷங்க படற அவதிகள், இன்பங்கள் எல்லாம் பார்த்துண்டுதான் இருக்கேன். எனக்கு எல்லாத்தையும் விட உங்க மனசு பிடிச்சிருக்கு. என் மனசுக்குப் பிடிச்சுருக்கற புருஷன் தான் எனக்கு வேணும். இதனால வர கஷ்டநஷ்டமெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி அட்டவணையே போட்டுப் பாத்துட்டேன். ஒருவேளை உங்கம்மா ஆசாரம்னு நினைச்சா, எனக்குக் கூட இப்படி மடி விஷயங்களையெல்லாம் சொல்லிக் குடித்துட்டிங்கன்னா, நான் அப்படியே இருக்கேன். வேலைக்குப் போகறச்சே மாறிண்டா போச்சு..:”

“இரு.. இரு.. மாதுரி!. உங்க அப்பா, அம்மாவெல்லாம் எவ்வளோ அழகா உனக்கு சம்பந்தம் பார்த்து முடிச்சிருக்காங்க.. அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்கன்னு நீ யோசிக்கவே இல்லையே..”

“ஏன் காதல்  கல்யாணம்லாம் இந்தக் காலத்துல சர்வ சகஜம்தானே.. இதுல என்ன தப்பு இருக்கு, சரி! நேரடியாக கேக்கறேன்.. என்னை உங்களுக்குப் பிடிச்சுருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும்.. ஆனா கல்யாணம் செஞ்சுக்கணும்னா பயமா அய்யர்? யார்கிட்டே பயம்னு சொல்லுங்க.. நானே பேசறேன்”

நான் அவளை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை. தலை குனிந்து கொண்டேன். நேரடியாகப் பார்த்தேனால் என்னால் என்ன பேசமுடியும்.. அவளைப் பார்த்துக் கொண்டேதான் இருக்க முடியும். மாதுரி அழகானவள்., துறு துறுவெனப் பேசுவாள். அவள் கண்கள், ஒவ்வொரு சமயம் அவளது பார்வை எனக்கு சங்கடங்கள் தரும் என்றாலும் என் நிலைமை எனக்குத் தெரிந்து அடக்கிக் கொள்வேன். ஆனந்தம் வரும்போதெல்லாம் அவள் குதிக்கும் அழகு ஒவ்வொருமுறை மனதை அள்ளும். ஏறத்தாழ ஆறு வருடங்களாகவே என்னிடம் பாசத்துடன் பழகுகிறாள்.

“மாதுரி, நீ என்னை அப்பப்போ பார்க்கறே.. என்னோட குணம் பிடிச்சிருக்கு. ஆனா என்னோடயே சேர்ந்து வாழறச்சே அந்த வாழ்க்கை வேற.. நான் பண்ற வேலைக்கும் நம்ம லௌகீக வாழ்க்கைக்கும் சரிப்பட்டு வரவே வராது உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  உன்னைக் கல்யாணம் பண்ணிக்க பூர்வஜென்மத்துல நான் புண்ணியம் செஞ்சிருக்கணும்.. ஆனா அந்த புண்ணியம் அப்ப செய்யலேன்னு நினைக்கிறேன்.. அதனால மறந்து விடு இந்த விஷயத்தை”.

அவள் சிரித்தாள். அழகாக என் காதில் ஒலித்ததால் நிமிர்ந்து பார்த்தேன்.

“அய்யரே! நீங்க  ரொம்ப நல்லா பேசறிங்க.. இந்த வேலைதான் நம்ம கல்யாணத்துக்கும், உங்களுக்கும் எனக்கும் இடைஞ்சல்னு நினைச்சா இந்த வேலையே வேண்டாமே ப்ளீஸ்!.. நான் உங்களுக்கு, உங்க படிப்புக்கு நல்ல வேலையைப் பார்த்துத் தர பொறுப்பை எடுத்துக்கறேன்..”

”வேண்டாம் மாதுரி! உன்னைக் கல்யாணம் பண்ணிண்டு, இப்போ சந்தோஷமா இருக்கற ஒரு குடும்பத்துல என்னால ஒரு குழப்பம் வர சந்தர்ப்பம் கொடுக்கமாட்டேன்”.

“இதோ பாருங்க.. வாழப்போறது நான். அவங்க சந்தோஷத்துல  எந்தக் குறையும் வெக்கலியே.. உங்களை மாதிரி மாப்பிள்ளை அமைய அவங்க இல்லே திருப்திப் படணும்..”

“நீ நினைக்கிறது  தப்பு மாதுரி” என்று சொல்லும்போதே என்னைத் தடை போட்டு நிறுத்திவிட்டாள்.

“நான் செய்யறது என் மனசாட்சிக்கு சரின்னு படறது. உங்க மனசாட்சிக்கும் அது சரிதான்னு படறதும் எனக்கும் புரியும். உங்க தயக்கம் எல்லாம் உங்களோட வேலை, அத்தோட எங்க அப்பா அம்மா எப்படி எடுத்துப்பாங்களோ’ ன்னுதானே.. ஆனா, என் மனசுல ஒரு முடிவு வந்தப்புறம் நான் மாத்திக்கமாட்டேன். எனக்கு உங்களைப் பிடிச்சுப் போச்சு. எனக்குப் பிடிச்சவரைக் கல்யாணம் செய்துக்கப் போறேன்.. அவ்வளவுதான்.. எங்கப்பா அம்மா சம்பந்தப்பட்ட விஷயத்தை நான் பார்த்துக்கறேன். உங்க வேலை சம்பந்தப்பட்ட விஷயத்துல நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்காம இருங்க.. முடிவு உங்க கையிலேதான்.. அவ்வளவுதான்.”

மாதுரிக்கும்  எனக்கும் ஆறு வருடப் பழக்கம்தான் என்றாலும் என்னைக் கனவிலும் நினைவிலும் கடந்த ஒரு வருடமாகத்தான் வாட்டி வதைக்கிறாள். கல்லூரிப் படிப்பு முடிந்த புதிதில் அப்பாவால் உடம்பு முடியாத நிலையில் செல்லமுடியாத இவள் வீட்டுக் காரியத்துக்கு, அதுவும் இவள் தாத்தா இறந்து போன காரியத்துக்கு நான் சென்று செய்து வைக்கவேண்டிய நிலையில்தான் இவள் பழக்கம் ஏற்பட்டது. இவள் அப்பாதான், பையன் கணக்கில் முதுகலை பட்டம் வாங்கியவன் ஆயிற்றே..  கல்லூரியில் படிக்கும் மாதுரிக்கு கணக்குப் பாடம் சரியாகச் சொல்லித்தருவான் என்று என்னை முழுமனதோடு அவளிடம் பழகவிட்டவர். இவள் வீடு நாளடைவில் என் சொந்த வீடு போலத்தான் ஆயிற்று.. வேலை நிமித்தம் ஒரு நாள் போக முடியா விட்டால் கூட போன் செய்து துளைத்து எடுத்து விடுவார்கள்.

சின்ன வயதிலிருந்து கட்டுக்குடுமி வைத்திருந்தேன். கல்லூரியில் காலடி வைத்தபோதே என் அப்பாவே சொல்லிவிட்டார். குடுமி வேண்டுமானால் எடுத்துவிடேன் என்று. குடுமியை இழந்தாலும்  அந்தக் கால பாகவதர் ஸ்டைலில் நிறைய முடி வைத்திருப்பது எனக்குப் பிடிக்கும். சென்றவருடம்தான் மாதுரி அதற்கும் வேட்டு வைத்துவிட்டாள். “அய்யர், உங்கள் முகத்துக்கு ஒன்று குடுமி ரொம்ப அழகாக இருக்கும்.. அல்லது சுத்தமாக சின்னதாக மிலிடரி கிராப் இன்னும் அழகா இருக்கும்.. இப்படி பாகவதர் ஸ்டைலில் எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ..”

நான் முழித்தேன் பரிதாபமாய். “ஏன்.. உனக்கு இது பிடிக்கவில்லையா?”

அவள் திடீரென  முன்னால் வந்து என் பரந்த  முடியை வேண்டுமென்றே தொட்டுக் கலைத்தாள். கொஞ்சம் கூச்சமாக இருந்தது. “போய்ப் பாருங்கள்.. கண்ணாடியில்.. பூச்சாண்டி போல இருக்கிறது..”

கலைந்த தலையுடன் என்னை நான் பார்த்தேன். அட, ஆமாம்.. நமக்கே நம்மைப் பார்த்தால் பயமாக இருக்கிறதே.. இப்படிப்பட்ட பரட்டைத் தலையுடன் எப்படி இத்தனை நாள் இருந்தேன்.. ஒருவேளை மாதுரி சொன்னதால் இப்படி எண்ணம் வருகிறதோ..

இருந்தாலும் அடுத்தநாள் அவள் சொன்னபடிதான் செய்தேன்.. முடியைக் குறைத்த  நிலையில் முதலில் என்னைப்  பார்த்து விட்டு அப்படியே திடுக்கிட்டுப் போனாள். என்ன செய்யப் போகிறாள் என நான் நினைப்பதற்குள் சட்டென முன்னே வந்து என் கன்னத்தில் முத்தம் பதித்தாள். அடக் கடவுளே.. என்ன இது.. இந்த முதல் முத்தம் என்னை அன்றிலிருந்து மாற்றிவிட்டதே.. இப்படியெல்லாம் எனக்கு ஆகலாமோ..

மாதுரியின்  அப்பாவுக்கு என் மீது அதீத மரியாதை.. இரண்டு நாளைக்கொரு முறையாவது அவருக்கு என்னிடம் ஏதாவது பேசியே ஆகவேண்டும். அந்த அம்மாவோ கேட்கவே வேண்டாம். கடைக்குப் போவதற்குக் கூட நேரம் பார்த்துப் போகணும் என்கிற மாதிரி எல்லாவற்றையும் நேரம் காலம் பார்த்துக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஆனால் இந்த ஒரு வருடமாக விளையாட்டாக ஒரு முடியினால் ஆரம்பித்த பழக்கம் அவளிடம் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எனக்குத் தெரியாமல் போயிற்றே,

இந்த குடும்பத்தைப்  போல எனக்கு பத்து பன்னிரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்கள்  அத்தனை பேரும் என் மீது கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு நொடிக்குள் போக்கடிக்கும் மாய மந்திரத்தை என் மீது ஏவிவிட்ட மாதுரியை நான் எப்படி சொல்லித் திருத்துவது..

எங்கள் பழக்கம்  வரம்பு மீறாமல் போய்க்கொண்டிருந்த  நேரத்தில்தான் இவளுக்கு வீட்டுச் சொந்தத்திலேயே  மாப்பிள்ளையும் பார்த்தார்கள். எனக்கு ஏகப்பட்ட வருத்தம்தான். ஆனால் அவள் குடும்பத்துக்கேற்ற சூழலில் கல்யாணம் செய்து கொள்வதுதான் நல்லது என்று பட்டது. இது இயற்கை. அப்பா இறந்துபோகுமுன் சொன்னது நினைவுக்கு வந்தது. யார் யாருக்கு என்ன வாய்க்கும் என்று விதி எழுதியபடிதான் நடக்கும், என்றார். வேதன் விதித்த விதிப்படி போவதுதான் விதி. வேத சாஸ்திரங்களும் அப்படித்தானே சொல்லுகின்றன. எனக்கென்று தனியாக ஏதும் இல்லையே.. என் விதி இதுதானோ.

ஆனால் அவர்களின் இருவரின் ஜோடிப் பொருத்தம் மிக அழகாகக் கூட இருந்தது என்பதையும் பொறாமையில்லாமல் சொல்லிவிடுகிறேன். ’ஜாதகப் பொருத்தம் கூட ஒருமுறை பார்த்துவிடுங்களேன் அய்யரே..’ என்று அவள் அப்பாவும் அம்மாவும் என்னிடம் கேட்டபோது ’வேண்டாம்’ என்றேன்.. ஆச்சரியத்தோடு பார்த்த அவர்களிடம் அப்போது நான் சொன்னது என் நினைவில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

“ஒருவேளை  ஏதாவது வித்தியாஸம் ஜாதகத்தில் இருந்தால் அந்தக் குறைதான் நமக்குப் பெரிதாகத் தென்படுமே தவிர இந்த இருவரின் அழகான ஜோடிப் பொருத்தம் நம் கண்ணில் படவே படாது.. நம் மனதும் அந்தக் குறையையே பெரிதாகப் பார்த்துக் கொண்டிருக்கும். ஜாதகத்தால் நல்லதொரு சம்பந்தம் நின்று போயிற்றே என்று மனசு வருத்தப்படும். ஜாதகம் பார்க்காமல் கலியாணம் ஆன பிறகு ஏதாவது குறை தென்பட்டால் பெரியவர்கள்தான் ஏகப்பட்ட பரிகாரங்கள் வைத்திருக்கிறார்களே.. அதைச் செய்துவிட்டால் போயிற்று”

மாதுரி என்னை  கோபத்துடன் முறைத்துப் பார்த்தது  எனக்கு புரிந்தது.  ஆனால்  என்னுடைய இந்த பதில் பெரியவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துப் போயிற்று. ’ஆகா, இந்தக் காலத்தில் இப்படி ஒரு அய்யரா’ என்று ஏக சந்தோஷத்துடன் கூச்சலிட்டனர்தாம். அந்த அம்மா ஒரு படி மேலே போய் ‘இதற்குத்தான் நன்றாகப் படித்த அய்யர், நல்ல மனதுள்ள அய்யர், தன் குடும்பம் போல பாசத்துடம் பார்க்கும் அய்யர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவை என்று அடித்துச் சொல்வேன்’ என்று சொன்னதும், மாதுரி அப்பா “அய்யர், நீங்க சாதாரண சாஸ்திரி இல்ல, ஹ்யூமன் சைகலாஜி தெரிஞ்ச சாஸ்திரி, இந்தக் கல்யாணம் நல்லபடியாக நடத்திக் கொடுக்கவேண்டியது உங்க முழு பொறுப்பு’ என சிலாகித்ததும் காதுக்குள் இன்னமும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இவையெல்லாம்  இப்போது பழங்கதையாகி விடுமோ.. கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவந்து பெண்ணைக் கணக்கு பண்ணி விட்டாயா என்று இவர்கள் கேட்டால்? மாதுரி என்னைப் போல மனதுக்குள் ஆயிரம் ஆசைப்பட்டுக் கொள்ளட்டும், ஆனால் இவையெல்லாம் வெளியே அப்பட்டமாக அப்படியே சொல்லவேண்டுமோ.. யோசிக்கவேண்டாமோ.. கடவுளே!

வீட்டு வாசலில்  ஆச்சரியம் காத்திருந்தது. மாதுரியின் வருங்காலத்துக் கணவனாக நிச்சயிக்கப்பட்டவன். அழகான முகம் அவனுக்கு. அதைப் பார்த்துதானே நானே அவர்களிடம் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். இவன் ஏன் இங்கு வரவேண்டும். விஷயம் தெரிந்து கண்டிக்க வந்தானோ..

“அய்யர்! உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நல்ல காத்து வரும் போல தெரிகிறது.. கொஞ்சம் பேசலாம் வாருங்கள்” அவன் என் பதிலுக்குக் காத்திராமல் மாடி ஏறி முன்னால் செல்ல சற்று பயத்தோடுதான் பின்னால் ஏறினேன். மாதுரியின் விளையாட்டுப் புத்தியால் இன்னும் என்னென்னவெல்லாம் சந்திக்கவேண்டுமோ..

ஆனால் அவன் மிக மெதுவாக எனக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தான். கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் தமக்குள் செய்து கொள்ளும் உடன்படிக்கை என்பதுபோல பேசினான்.

“மாதுரி ரொம்ப  தைரியமானவள். அவள் என்னிடம் உங்கள் மேல் உள்ள காதலைச் சொல்லிவிட்டு என் உதவியையும் வெளிப்படையாகவே கேட்டாள். பார்த்தீர்களா அய்யர்! இவளை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. நல்லகாலம் கல்யாணம் நடந்தபிறகு சொல்லாமல் இப்போதாவது சொன்னாளே.. அதற்காக அவளை மனதாரப் பாராட்டுகிறேன்.. நீங்க மறு பேச்சு பேசாம அவளைக் கல்யாணம் பண்ணிக்குங்க..”

கொஞ்சநேரம்  போதனை செய்வது போல பேசிவிட்டு பிறகு அடுத்த விஷயத்தையும் சொன்னான். “இதோ பாருங்கள் அய்யர், நாளைக்கு உங்கள் அப்ளிகேஷன் ஒன்று தயார் செய்து வைத்திருங்கள். உங்கள் வேலைக்கு நான் கியாரண்டி!.. இன்னொன்று, மாதுரியின் அப்பாவிடமும் இன்று பேசப்போகிறேன். நல்ல வேலை, நல்ல மாப்பிள்ளை, அதுவும் தெரிந்த, மனசுக்குப் பிடிச்ச மாப்பிள்ளை, கசக்குமா என்ன.. அய்யர்.. நீங்கள் ஏதும் கவலைப் படவேண்டாம்.” அவன் போய்விட்டான்.

இரவு தூக்கம்  வரவில்லை. மாதுரி தொல்லைப் படுத்தினாள். என் தலையைக் கலைத்து அலைக்கழித்தாள் ‘அய்யரே.. எனக்காக பாகவதர் ஸ்டைலைத் துறந்தீர்களே.. உங்கள் வேலையையும் விட மாட்டீர்களா என்ன, அட, என்னைக் கண்டு ஓடுகிறீரா. பயமா.. அதுதான் பயத்தைப் போக்கும் மருந்தையே அனுப்பியிருந்தேனே..’ என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். இவள் சாதித்து விட்டாள். மாதுரி.. மாதுரி என மனசுக்குள் பிதற்றத்தான் என்னால் முடிந்தது.. இனி என்ன செய்வது, கண்காணாத இடத்துக்குப் போய் ஒரு நாலு நாள் இருந்துவரலாம்.. ’இனி இந்த மாதுரியை எந்தக் காரணம் கொண்டும் பார்க்கவோ அவளிடம் பேசவோ கூடாது. முடியுமா என்னால்? அப்படி முடிந்தால் போன வருஷமே அவளை விட்டு ஓடி வந்திருக்கவேண்டுமே.. ஏன் முடியவில்லை..

என் வீட்டு போன் ஒலித்துக் கொண்டே இருக்க அம்மாதான் எடுக்கப் போனாள். நான் தடுத்து விட்டேன்.

“அம்மா, போன் மாதுரி ஆத்துலேர்ந்துதான்.. எடுக்காதே.. அப்படியே அடிக்கட்டும்..”

அம்மா ஒரு  மாதிரியாக பார்த்தாள். “என்னடா  இது புதுப் பழக்கம்.. இவாவாத்துக்குன்னா  உடனே ஓடுவே.. இப்போ என்னவோ புதுசா சொல்லறே”

அம்மா வேடிக்கையாகப்  பார்த்தாள். அவள் கையைப் பிடித்துக் கொண்டேன். ”அம்மா.. நான் பண்ற வேலை உனக்குப் பிடிச்சுருக்காம்மா.. என்னிக்காவது இந்தப் பையன் நல்லா பேண்ட் ஷர்ட் டை கட்டிண்டு ஆபீஸ் போனா நல்லா இருக்கும்னு யோசிச்சு மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டிருக்கியா.. சொல்லு முதல்ல..”

“நல்லா இருக்கேடா.. வாத்தியார் வேலைங்கிறது சாதாரணமாடா.. எல்லாருக்கும் கிடைக்குமாடா.. வேதோபாத்யாயம் உங்கப்பா உனக்கு சின்னக் குழந்தைலேர்ந்து தினம் தினம் சொல்லிக் கொடுத்த ஆசீர்வாதம்டா.. யாராவது உன்னை குறை சொன்னாளா.. இல்லே தப்பா சொல்லிபிட்டியா.. நீ அப்படியெல்லாம் சொல்ல மாட்டியே.. உன் பாண்டித்யம் அபாரம்னு பெரியவா சொல்வாளேடா.. அது சரி, உனக்கு திடீர்னு ஏன் இப்படி சந்தேகம் வந்து அந்தம்மாவாத்து போனை எடுக்காதேங்கிறே?”

அம்மாவின் அதிர்ச்சியும் ஆதங்கமும் அவள் கைப்பிடியில் புரிந்தது. அவளுக்கு நிலைமையை விளக்கினேன். மாதுரி கடந்த ஒரு வாரமாக அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதையும், அதற்காக இந்த வேலையைக் கூட விடச் சொல்லியதையும், வேறு வேலை ஒன்றைப் பார்த்து வைத்திருப்பதையும் நிதானமாகச் சொன்னேன்.

“அம்மா.. மாதுரி ரொம்ப நல்ல பொண்ணம்மா.. ஆனால்  அவள் என்னைத் தேர்ந்தெடுத்ததுதான்  தவறு. எல்லா தகுதியும் அவள்கிட்ட இருந்தாலும் அவளோட பிடிவாதம் ரொம்ப தப்பும்மா.. எல்லாத்துக்கும் மேலே, நம்ம வேலை என்ன, நாம ஏதோ கௌரவமா நாலு வீட்ல நல்ல காரியத்துக்குத் துணை போயிண்டு இருக்கோம். அவா என்னைப் பத்தி என்ன நினைப்பா’ன்னு பார்க்கச் சொன்னா, சிரிக்கிறாம்மா.. யாரும் தப்பா நினைச்சுங்கமாட்டாங்கன்னு தைரியம் சொல்லறாம்மா.. அவங்களுகெல்லாம் நான் இல்லேனா இன்னொரு ஆள் கிடைப்பாங்க, இந்த வேலைதான் நம்ம கல்யாணத்துக்கு இடைஞ்சல்னா, வேலையை விட்டுடு’ன்னு உதறிட சொல்லிடறாம்மா. ரொம்ப சிம்பிளா சொல்லிட்டா.. அத்தோடு விட்டா பரவாயில்லே.. அவளுக்கு ஏற்கனவே பார்த்த பையன் மனசையும் மாத்தி, அவன் மூலமா எனக்கு வேலை கூட ஏற்பாடு பண்ணிட்டா..”

அம்மா என்னை  ஒருமாதிரியாகப் பார்த்தாள்.

‘ஏம்மா அப்படிப் பாக்கறே?”

“அந்தப் பொண்ணுக்கு இருக்கற தைரியம் கூட  உனக்கு இல்லையேன்னு நினைச்சேன்..”

”ஏம்மா நீயும் அவளை மாதிரிப் பேசறே? அவள்தான் எல்லா விஷயங்கள்லேயும் ரொம்ப தெளிவா இருக்கறா மாதிரி நினைச்சுண்டு பேசறா..”

“ஆமாண்டா.. அவ தெளிவாதான் இருக்கா.. நல்லாவும்  சொல்லியிருக்கா.. அவ சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையே?”

“அம்மா.. என்னம்மா இது.. நீ இப்படி தடம் புரண்டு பேசறே?”

என்னை அங்கே  உட்காரவைத்து தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தாள். “அவ சொல்றது சரிதான். காலத்துக்கு ஏத்தா மாதிரி நடந்துக்கோங்கிறா.. அந்தக் காலத்துலே நானும் சாஸ்திரியாத்துப் பொண்ணு, உங்கப்பாவும் அப்படியே வேத பாண்டிதயம் பண்றவா.. அப்படி நிறைய பேர் இருந்தா.. குடும்பங்கள்ளேயும் நமக்குத் துணையா நிறைய பேர் இருந்தா.. விட்டுக் கொடுக்கவும் மாட்டா,, ஒத்தருக்கொருத்தர் தோதா இருந்து பார்த்து கல்யாணத்தை முடிச்சு வெப்பா.. அந்தக் காலத்துல எங்களுக்கு அது நல்லா பொருந்திடுச்சே.. அது ஒண்ணும் தப்பா தோணல. ஆனா இந்தக் காலத்துல விஷயம் வேறடா.. இப்ப பிள்ளை நீயே இருக்கே.. உனக்கு ஒரு பொண்ணு கொடுக்கணும்னா நம்மளவா’ன்னு சொல்லிக்கிற பொண்ணைப் பெத்தாவாளே, வேண்டாமேன்னு’ ஓடறாடா.. எனக்கே ஒரு பெண்ணு புறந்திருந்தா, வாத்தியார் வேலை பாக்கற பிள்ளைக்குன்னா கொடுக்கமாட்டேண்டா.. நல்ல ஆபிஸ்’ல வேலை செய்யற பிள்ளை கிடைக்க மாட்டானான்னுதான் பார்ப்பேன். அவளுக்கு அண்ணனான நீயும் என்னை மாதிரிதான் யோசிப்பே.. நாளைக்கு உன் எதிர்காலம்’னு ஒண்ணு இருக்கு இல்லேடா.. நான் அதத்தான் பார்க்கிறேன்.. இதோ பாருடா.. மாதுரி மாதிரி ஒரு பொண்ணு அமையறதுக்கு நீதான் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கே.. அதுவும் அவளே வந்து சொல்றா’ன்னா அவ நல்லா யோசிச்சு சாதக பாதகம் எல்லாம் பார்த்துதான் சொல்லியிருப்பா.. எனக்கு பரிபூரண சம்மதம்.. நானே அவா ஆத்துக்குப் போய் உன் சார்பா பேசறேன்.. போதுமா?”

அம்மாவா பேசுகிறாள்.. கட்டுப்பெட்டியாக நினைத்துக் கொள்ளும் அம்மா கூட இப்படியா பேசுவது கடவுளே! காலம் மாறிப் போய்விட்டதா? நான் இப்போது என்னெதிரே தெரியும் நிகழ் காலத்தைப் பார்த்தால் இந்தப் பெண்கள் இதையும் மீறி எதிர்காலத்தை அல்லவா பார்க்கிறார்கள். அவர்கள் பார்வைதான் சரியோ.. காலம் எத்தனை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இவர்கள்தான் புத்திசாலித்தனமாக காலத்துக்கேற்றவாறு எத்தனை முன்னேற்றமாகப் போகிறார்கள்…

மறுபடியும்  போன் அடித்தது. “நீ ஒண்ணும்  மனசுல போட்டுக் குழப்பிக்காதே, அவாகிட்டே நானே பேசறேன்..” சொல்லியவள் போனை எடுத்துப் பேசினாள்.

“ஓஹோ… ஒரு  நிமிஷம்” என்றவள் போனை கையில் மூடிக்கொண்டு “நான் மாதுரி ஆத்துலேர்ந்து பேசறாளோன்னு நினைச்சுண்டேன். இல்லே.. இது வேளச்சேரி கமலாம்பா ஆத்துலேர்ந்து.. அவா பிள்ளை பேசறான்.. கமலாம்பா ஆத்துக்காரர் காலைல ஹார்ட் அட்டாக் லே போயிட்டார். காரியத்துக்குக் கூப்பிடறா..” என்றவள் பிறகு அவர்களிடம் போனில் வருத்தம் சொல்லிவிட்டு தன் பிள்ளை வர முடியாத நிலையில் இருப்பதாகவும் வேறு யாராவது சாஸ்திரிகளை அனுப்பச் சொல்வதாகவும் சொன்னாள்.

அவர்கள் கேட்கவில்லை  போலும். என்னைக் கூப்பிடவே  நானே சென்று போனை எடுத்தேன். அந்த மகன் அழுதுகொண்டே சொன்னான். “நேத்து ராத்திரிதான் விளையாட்டா அப்பா சொன்னார்.. எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நல்லபடியா, ஆத்மாவுக்கு திருப்தியா காரியம் பணறதுக்கு நல்ல வாத்தியார் நீங்க இருக்கீங்க.. அது போதும்னு, ஆனா காலைல இப்படி ஆகும்’னு நினைக்கவே இல்லை.. நீங்க வரணும் வாத்தியார்.. அப்பாவோட ஆத்மா அப்பதான் நிச்சய்ம் சாந்தி அடையும்..:”.

எனக்கு என்னவோ போல ஆயிற்று, ஒரு கணம்தான் யோசித்தேன். அவர் போனதுக்கு வருத்தம் சொன்னதோடு செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டுக் கொடுத்தேன். அடுத்த ஒரு மணியில் அங்கு இருப்பதாகவும் சொல்லிவிட்டு போனை வைத்தவன் அம்மாவை அமைதியோடு பார்த்தேன்.

“அம்மா! இந்த வேலைதான் என் மனசுக்கு பிடிச்சுருக்கு. இந்த வேலையாலே இன்னொரு மனுசருக்கு செத்த பின்னும் சந்தோஷம் கொடுக்கற நிம்மதி இருக்கு. என்னைப் பத்திக் கவலையை விடு. என்ன என் தலைல எழுதியிருக்கோ அதை மாத்த முடியாது.. ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோம்மா.. நான் இந்த வேலையை விடறதா இல்லே.. நானும் ரொம்ப தெளிவா இருக்கேன்”

கொஞ்சம் அழுத்தமாகவே  சொல்லிவிட்டுக் கிளம்பினேன். சாவு காரியத்துக்குதான் செல்கிறேன் என்றாலும் என் மனது என்னவோ நிம்மதியாக இருந்ததாக உணர்ந்தேன்.

**************************************************************

 

படங்களுக்கு நன்றி

 

இளம் சோடி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.