-செண்பக ஜெகதீசன்

 

வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.  (திருக்குறள் -273: கூடாவொழுக்கம்)

10296559_377157615770382_5685531986509906235_n

புதுக் கவிதையில்…

தன்மனம் அடக்காமல்,
தவவேடம் பூண்டு
தவறு செய்தல்,
பசுவொன்று
புலித்தோல் போர்த்தி
பயிர்மேய்வதற்கு ஒப்பானதே…!

குறும்பாவில்…

புலித்தோல்போர்த்தி பசு பயிர்மேய்வதும்,
மனவடக்கமின்றித் தவவேடத்தில்
தவறுசெய்தலும் ஒன்றே…!

மரபுக் கவிதையில்…

புல்லைத் தின்னும் பசுவதுவும்
புலியின் தோலைப் போர்த்தியேதான்
நல்ல பயிரை மேய்ந்துவரும்
நாசச் செயலைப் போன்றதுதான்,
பொல்லா மனதை அடக்காமல்
பொய்யாய்க் கொண்டே தவவேடம்,
நல்லார் போல நடித்தாங்கே
நாச வேலை செய்வதுமே…!

லிமரைக்கூ…

பயிர்மேயும்பசு போர்த்தியிருக்கும் புலியின் தோலை,
பார்த்திடு கதையிதுதான்-
மனமடங்காது தவவேடத்தில் தவறிடுவோர் லீலை…!

கிராமிய பாணியில்…

பசுமாடு பசுமாடு
புல்லுமேயும் பசுமாடு,
பொல்லாத பசுமாடு
புலித்தோலப் போத்திக்கிட்டு
பயிர்மேயும் பசுமாடு…

இதுபோல,
தம்மனச அடக்காம
தவசிவேசம் போட்டுக்கிட்டு
தப்புசெயிற மனுசனுந்தான்,
பசுமாடு பசுமாடு
பொல்லாத பசுமாடு,
புலித்தோலப் போத்திக்கிட்டு
பயிர்மேயும் பசுமாடு…!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(37)

  1. ஆட்சி, அதிகாரம்,ஆன்மீகம் இவற்றில் கோலோச்சுபவர்பள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    இந்தவாரம் லிமரக்கூ அருமை.

  2. அன்பு நண்பர் அமீர் அவர்களின்
    கரு(ணி)த்துரைகளுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *