அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (36)

0

யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் (3), வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

சுபாஷிணி ட்ரெம்மல்​

I much prefer the sharpest criticism of a single intelligent man to the thoughtless approval of the masses.
-Johannes Kepler

கெப்லரின் சமகாலத்தவர் கலிலியோ. இருவரது ஆய்வுகளும் விண்வெளி ஆய்வுத் துறையில் அளப்பரிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்கின. ஐசேக் நியூட்டனின் கோளங்களின் அசைவு தொடர்பான கண்டுபிடிப்புக்களுக்கு அடிப்படையை அமைத்து தந்தவையும் கெப்லரின் ஆய்வுத்தரவுகள் தாம். இன்று வரை தொடர்ந்து நிகழும் விண்வெளித்துறை ஆய்வுகள் கெப்லர் அமைத்துக் கொடுத்த ஆதாரங்களை மையமாகக் கொண்டே தொடர்கின்றன என்பது விண்வெளி ஆய்வுத் துறையில் கெப்லரின் பங்கை நாம் நன்கு உணர உதவும்.

jk7

கெப்லரின் ப்ளாடோனிக் சோலிட் மாடல் (Platonic solid model of the Solar system from Mysterium Cosmographicum) (1596)

1591ம் ஆண்டில் டுயூபிங்கன் பல்கலைகழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்தார் கெப்லர். தத்துவமும் கணிதமும் படித்த அவருக்கு அக்கால கட்டத்தில் வானியல் ஆய்வுகளில் ஆர்வம் ஈடுபட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக இந்த பூமி உருண்டையானது, சூரியனை சுற்றி வருகின்றது என்ற நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸின் (1473- 1543) கருத்துக்கள் இவரது கவனத்தை ஈர்த்தன. டியூபிங்கன் பல்கலைக்கழகம் அப்போது யொஹான்னஸ் கெப்லருக்கு ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ராஸ் பகுதியில் கணித ஆய்வாளர் பணி ஒன்றினை அமைத்துக் கொடுத்தது. 1954ல் இப்பணியை மேற்கொள்ள இவர் க்ராஸ் சென்றடைந்தார். இங்கிருந்த போது தமது ஆய்வுகளில் கவனத்தைச் செலுத்தி மிகக் கடுமையாக உழைத்து வந்தார். அக்கால கட்டத்தில் தான் இவர் பார்பரா மூலெக் என்ற மங்கையை மணந்தார். இது 1597ல் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தாலும் இறுதியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தனர்.

தைக்கோ ப்ராஹா என்ற ஜோதிட வானியல் ஆய்வாளர் ஒருவரிடம் பணி புரிய கெப்லருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தைக்கோ டென்மார்க்கின் ஒரு முழு தீவையுமே வாங்கி அங்கே குடிபெயர்ந்து தனது ஆய்வுகளை அத்தீவில் செய்து வந்தார். அதோடு அவர் ப்ராக், அதாவது இப்போதைய செக் நாட்டில் மன்னர் இரண்டாம் ரூடோல்ஃபுக்கு கணிதமேதையாக அமைந்திருந்தார் என்பதும் அவரது தகுதியை நாம் அறிந்து கொள்ள உதவும்.

jk6

​ஹ்வென் தீவு வரைபடம் – இங்கு தான் தைக்கோ ப்ராஹா தமது ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார்

அவரிடம் உதவியாளராக விரும்பி, வின்ணப்பித்து 1600ம் ஆண்டு அப்பணியில் அமர்ந்தார் கெப்லர். 1601ம் ஆண்டு ப்ராஹா தற்செயலாக இறந்து போக அப்பதவி கெப்லருக்கு வழங்கப்பட்டது. 1611ம் ஆண்டில் மன்னர் ரூடோல்ப் பதவியிறங்க வேண்டிய நிலையில் கெப்லர் தாமும் அப்பதவியைத் துறந்து வேறொரு பகுதியில் பணியாற்ற நாட்டம் கொண்டார். தனக்கு பொருத்தமான ஒரு பணியை தேடும் வேலையிலும் ஈடுபட்டார். அப்போது ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் ஒரு தேவை இருக்கவே அங்கே தமது குடும்பத்தாருடன் சென்று சேர்ந்து தமது புதிய பணியை 1612ம் ஆண்டில் தொடங்கினார். லின் நகரில் தான் கெப்லர் அதிக ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றார், அதாவது 14 ஆண்டுகள். இக்கால கட்டத்தில் இவரது மனைவி பார்பரா இறக்கவே, சில காலங்களுக்குப் பிறகு இவர் சூசன் ரோய்ட்டிங்கர் என்ற மாதுவை மணந்து கொண்டார் என்ற தகவல்களையும் அறிகின்றோம்.

கெப்லர் அறிவியல் நம்பிக்கையோடு ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் தமது ஆய்வுகள் அனைத்துமே தாம் ஒரு கிறிஸ்துவர் என்ற அடிப்படையில் தமது பிறப்பின் கடமையைச் சரியாகச் செய்ய வந்ததாக நினைத்தே செய்வதாக தமது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். கடவுள் உருவாக்கிய இந்த அண்ட கோளங்களை புரிந்து கொள்ள தாம் முயல்வதாக இவர் தமது எழுத்துக்களில் தன் கருத்தை பதிந்து வைக்கின்றார்.

யொஹான்னஸ் கெப்லர் ஐரோப்பாவின் சில நகரங்களுக்கு தொழில் நிமித்தம் பயணித்து தமது ஆய்வு தொடர்பான உரைகளை நிகழ்த்தியும் வாதங்களில் ஈடுபட்டும் வந்தவர். அதிலும் குறிப்பாக தனது இறுதி காலகட்டங்களில் இவரது வாழ்க்கை இப்படியே அமைந்திருந்தது. நவம்பர் மாதம் 15ம் தேதி 1630ம் ஆண்டில் இந்த அறிவியல் வல்லுநர் இவ்வுலகை விட்டு மறைந்தார். அப்போது அவர் ரேகன்ஸ்புர்க் நகரத்தில் வசித்து வந்தார். ஜெர்மனியின் ரேகன்ஸ்புர்க் நகரின் தேவாலயத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த 30 ஆண்டுகள் தொடர் போரின் போது இந்த தேவாலயப் பகுதி அழித்து சேதமாக்கப்பட்ட நிலையில் இந்த நினைவுச்சின்னமும் அவர் சமாதியும் முற்றாக அழிந்தன.

ஒரு தனி மனிதராக யொஹான்னஸ் கெப்லர் உலகுக்கு வழங்கிய ஆய்வுக் கொடைகள் தொடர்ந்து இவரை நம்மிடையே மறக்காமல் நிலைத்திருக்கச் செய்திருக்கின்றன. இத்தகைய பல அறிய தகவல்களை நமக்கு வழங்கும் இந்த யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்துக்கு ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் வருவோர் வந்து இங்குள்ள தகவல்களையும், இவர் பயன்படுத்திய, உருவாக்கிய கருவிகளையும், இவரது எழுத்தில் அமைந்த நூல்களையும், ஆவணங்களையும் நேரில் பார்த்துச் செல்லலாம்.

 jk5

​அருங்காட்சியகத்தின் வாசல் பகுதியில்

​Truth is the daughter of time, and I feel no shame in being her midwife.
-Johannes Kepler​

உதவிய குறிப்புக்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *