-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

தமிழிலே கவிதை தந்த
தரமுடைக் கவிஞரே நீர்
உரமுடைக் கவிதை தந்து
உள்ளத்தில் இருந்து விட்டீர்!                        kavimani

தெளிவொடு கவிதை சொன்னீர்
சிந்தைக்கு மருந்தும் சொன்னீர்
அழிவிலாக் கவிதை தந்தீர்
ஆதலால் உயர்ந்தே விட்டீர்!

புனிதராம் புத்தர் வாழ்க்கை
புவிதனில் உள்ளார் காணச்
செவிதனில் நுழையும் வண்ணம்
சீர்மிகு கவிதை தந்தீர்!

ஆசிய ஜோதி என்று
அதற்கு நீர் பெயரைச்சூட்டி
மேதகு உண்மை யாவும்
விரித்துமே சொல்லி நின்றீர்!

சாதியைச் சாடி நின்றீர்
சமத்துவம் காட்டி நின்றீர்
பூமியில் மனிதர் வாழப்
பொறுப்புடன் இருங்கள் என்றீர்!

நாட்டையும் பாடி நின்றீர்
வீட்டையும் பாடி நின்றீர்
ஊட்டமாய் நிற்கும் வண்ணம்
உண்மையும் பாடி நின்றீர்!

தமிழ்மணி ஆகி நின்ற
கவிமணி தானே நீங்கள்!
செவிகளில் தேனைப் பாய்ச்சும்
கவிமணி நீங்கள் அன்றோ!

மாசிலாக் கவிதை தந்த
மாமணி நீங்கள் தானே
மனதிலே நிற்கும் வண்ணம்
வளம்நிறை கவிதை தந்தீர்!

கவிதையில் எளிமை காட்டி
கற்பவர் நினைவில் வைக்கப்
புவிதனில் கவிதை சொன்னக்
கவிமணி நாமம் வாழ்க!

கவிமணி ஐயா உங்கள்
கவிதைகள் கேட்க வேண்டும்
புதுமைகள் செய்ய நீங்கள்
புவிதனில் பிறக்க வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவிதைகள் கேட்கவேண்டும்!

  1. “வெய்யிற் கேற்ற நிழலுண்டு
    வீசும் தென்றல் காற்றுண்டு
    கையில் கம்பன் கவியுண்டு
    கலசம் நிறைய மதுவுண்டு
    தெய்வ கீதம் பலவுண்டு
    தெரிந்து பாட நீயுண்டு
    வையந் தருமிவ் வனமன்றி
    வாழும் சொர்க்கம் வேறுண்டோ”
    இப்படிப் பாடிய கவிமணியை நினவு படுத்திய ஜயராமசர்மாவுக்கு நன்றி.
    நட்சத்திரங்களைப் பார்த்து வானத்துக்குச் சொறிபிடித்து விட்டது என்று பாடும் அளவுக்கு அழகுணர்ச்சி குன்றிப்போய் வக்கிரம் மேலோங்கியிருக்கும் இக்காலத்தில் இளைஞர்கள், குறிப்பாகக் கவிதை எழுத முன்வருவோர், கவிமணியின் ஒரு வெண்பாவைப் படித்துணர வேண்டும். தமக்கு உடலில் புண்கள் ஏற்பட்ட போது, அதைக் கவிமணி பாடியுள்ள நயம் வியக்கத் தக்கது:
    “முத்து பவளம் முழுவயிர மாணிக்கம்
    பத்தியொளி வீசும் பதக்கமெலாம் – சித்தன்
    சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
    தரங்கண்டு தந்த தனம்.” 
    கவிமணி எவ்வளவு சுவைபட, முகம்சுளிக்க வைக்காமல், நோய்பற்றிப் பாடியுள்ளார்  என்பது கவனிக்கத் தக்கது.
    “உள்ளத் துள்ளது கவிதை!” – கே.ரவி

Leave a Reply to கே.ரவி

Your email address will not be published. Required fields are marked *