செப்டெம்பர் 1, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்

 

vaidaehi herbert

சங்கத்தமிழின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அமெரிக்கத் தமிழரான வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் அனைத்து சங்கத்தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். சென்ற ஜூலை 2014 இல் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் மாநகரத்தில் நடைபெற்ற வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில் பங்கேற்ற வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், அனைத்து மக்களும் சங்கத்தமிழ் படித்து இன்புற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.   பல்கலைக்கழகங்களில்  பல பேர் செய்ய வேண்டிய வேலையை, தனி ஒருவராக தனது கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியாலும்  பெரும் மொழிபெயர்ப்புப் பணி ஒன்றை நிகழ்த்திக்காட்டிய வைதேகி ஹெர்பர்ட்  அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.  இவரது தமிழ்ப்பணியால் கவரப்பட்டு   இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் முனைவர் ராஜம் அவர்கள்.

தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் 33 ஆண்டுகளாகவும், குறிப்பாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 14 ஆண்டுகளாகவும் வாழ்ந்து வருபவர்  வைதேகி ஹெர்பர்ட்.  தமிழை  இரண்டாவது மொழியாகக் கொண்ட வைதேகி, சங்க இலக்கியங்களின் அழகால்  ஈர்க்கப்பட்டார். ஆர்வம் காரணமாக ராணிமேரிக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ருக்மணி ராமச்சந்திரனிடம்  முல்லைப்பாட்டு பயிலத் தொடங்கினார். பிறகு சங்க இலக்கியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டார்.

வைதேகியின் சங்க இலக்கிய ஆர்வத்திற்கு எல்லையே இல்லை, இவரைப்போல இந்த அளவிற்குத் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தமிழகத்திலும் இல்லை, உலகில் வேறு எங்கும் இல்லை” என்று இவரது தமிழாசிரியரான ருக்மணி ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2,381 பாடல்கள் உள்ளன.

தமிழின் அடிப்படை இலக்கியமான சங்க இலக்கியத்தில் இன்றைக்குப் புழக்கத்தில் இல்லாத பல தமிழ்ச் சொற்கள் நிறைந்துள்ளதால், மற்ற இலக்கிய மொழி பெயர்ப்புகளை விட இது அதிக சவாலை முன் வைக்கும் பணியாகும்.  உதாரணமாக ‘விறலி’ எனும் சொல்லுக்கு நேரடிப் பொருள் தரும்  ஆங்கிலச் சொல் இல்லாததால், தக்க சொல்லைத் தேடுவது சிரமம் தருவது   என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி ஒன்றில் வைதேகி ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார்.

இவருடைய முல்லைப்பாட்டு மற்றும் நெடுநெல்வாடை ஆகிய இரு நூல்களின் மொழிபெயர்ப்பையும் அமெரிக்க வாழ் தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டும், பதிற்றுப்பத்தை டோக்கியோ பல்கலைகழகப் பேராசிரியர் டாக்கநோபு டாக்காஹாஷியும் மேற்பார்வை செய்து சான்று வழங்கியுள்ளார்கள்.

           vaidehi_tamil_scholar_with_her_books          books of vaidaehi

சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து இவரால்தான் முதன் முதலாக  மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதும், இதுவரை சங்க இலக்கியத்தை மொழி பெயர்த்தவர்கள் ஒரு நூலிற்கு மேல் மொழி பெயர்க்க முயலவில்லை என்பதும், அரசு மானியம், ஆதரவு போன்ற எதையும் எதிர்பார்க்காது சொந்த முயற்சியில் வைதேகி ஹெர்பர்ட் மொழி பெயர்த்துள்ளார் என்பதுவும்  இவரது பணியின் சிறப்பைக் கூறும்.

மேலும், சங்க இலக்கிய அகராதி ஒன்றும் உருவாக்கியுள்ளார்.
தனது காதலியை அடைய  “மடல் ஏறுதல்” என்ற  வழக்கத்தை  மேற்கொள்ளும்  சங்ககாலக் காதலனின் செய்கை இடம்பெறுவது எந்த சங்க இலக்கியங்களில் என்ற பட்டியல் கீழே:
குறுந்தொகை –  (5 முறை) 14, 17, 32, 173, 182
நற்றிணை –  (5 முறை) 146, 152, 220, 342, 377
கலித்தொகை  – (6 முறை) 58, 61, 138, 139, 140, 141
என்பது போன்ற தகவல்களும் வழங்கியுள்ளார்.

மொழிபெயர்ப்பில் முதலில் தமிழ்ப்பாடலை வழங்கி, பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பையும், பிறகு பதம் பிரித்து பொருள் தரும் முறையைக் கையாண்டுள்ளார்.  இவரது மொழிபெயர்ப்புகளை அவரது வலைத்தளத்தில்  (http://sangamtranslationsbyvaidehi.com/)  படிக்கலாம்.  சான்றாக ஒரு பாடலுக்கு இவர் வழங்கிய  மொழிபெயர்ப்பொன்று  இங்கு வழங்கப்பட்டுள்ளது…

__________________________

குறுந்தொகை 40
செம்புலப் பெயனீரார், குறிஞ்சித் திணை  – தலைவன் தலைவியிடம் சொன்னது:

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

Kurunthokai 40
Sempulapēyaneerār, Kurinji Thinai – What the hero said to the heroine, about their love:

My mother and your mother,
what are they to each other?
My father and your father,
how are they related?
You and I,
how did we know each other?

Like rainwater that falls and
merges with the red earth, our
loving hearts have become one.

Notes:     This is the only poem that this poet wrote.  The poet’s name is a pseudonym taken from the key words in the poem.  The hero reassures the heroine that everything will be good for them.  He explains to her that their love is eternal, despite their families not knowing each other. The red earth and water are muthal.

Meanings:  யாயும் – (my) mother, ஞாயும் – your mother, யார் ஆகியரோ – who are they to each other, எந்தையும் – my father, நுந்தையும் – your father, எம்முறை – in what way, கேளிர் – relatives, யானும் நீயும் – myself and you, எவ்வழி – in what way, அறிதும் – knew, செம்புலப் பெயல் நீர் போல – like rain falling on the red earth, அன்புடை நெஞ்சம் – loving hearts, தாம் கலந்தனவே – have merged
________________________________

இம்மொழி பெயர்ப்புகளை நூலாக வெளியிட்டால் வர்த்தக ரீதியில் ஆதாயம் தராது  என்பது தெளிவாகத் தெரிந்தும் அவற்றை அச்சு நூல்களாகவும்  வெளியிட்டுள்ளார்.  இவருடைய நூல்கள் சிலவற்றை முதலில் முனைவர் ருக்மணி வெளியிட்டார்.  இப்பொழுது அனைத்து  நூல்களும் Digital Maxim என்ற பதிப்பகத்தால், (அமெரிக்காவில் இருக்கும்) திருமூர்த்தி ரங்கநாதன் என்பவரால் வெளியிடப்படுகின்றது. வர்த்தக மனப்பான்மை இவருக்கு இல்லை என்பதும் தமிழ்த்தொண்டு மட்டுமே இவரது முதன்மை நோக்கம் என்பதும் இவர்  வலைத்தமிழ்.காம் (http://www.valaitamil.com/) தளத்திற்கு வழங்கிய பேட்டியின் வழியாகத் தெரிகிறது.  நான்கு நிமிடமே உள்ள பேட்டியில்  இவையெல்லாம் எனது வலைத்தளத்தில் உள்ளது, என் நூலை வாங்க வேண்டியத் தேவை இல்லை(?!) வலைப்பதிவிலும் படிக்கலாம் என ஒருமுறைக்கும் மேல் வலியுறுத்துவதில் இருந்து இவரது தமிழ்ப்பணியின் நோக்கம் தெளிவாகிறது (https://www.youtube.com/watch?v=cItNOQHzfGs).  தமிழிலக்கிய மொழிபெயர்ப்பு பலரை சென்றடைய வேண்டும் என்ற இவரது சிந்தனையும், தொண்டு நோக்கில் மட்டுமே இவர் கருத்தாக இருப்பதும் புலனாகிறது.

https://www.youtube.com/watch?v=cItNOQHzfGs

இவரது நூல்கள் மின்நூலாகவும், அச்சு நூல்களாகவும் கிடைக்கின்றன. மின்நூலாக “ஆப்பிள் ஐ டியூன்” தளத்தில் பெறலாம் (https://itunes.apple.com/br/artist/vaidehi-herbert/id788436153?l=en&mt=11).

சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக வைதேகி ஹெர்பர்ட்  அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் (2012 ஆம் ஆண்டில்) விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளன.

vaidehi_tamil_scholar
இலக்கியத் தோட்டம் விருது. படம் உதவி: BBC NEWS

நல்லி திசையெட்டும் நடத்திய ஆகஸ்ட் 2013 மொழி பெயர்ப்பாளர்களை சிறப்பிக்கும் விழாவில் “பாஷா பூஷன்” விருதும் வழங்கப் பட்டு  இவர் சிறப்பிக்கப் பட்டார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில், படம் உதவி: siragu.com
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில், படம் உதவி: siragu.com

வட கரொலினா மாநிலத்தின் தமிழ்ச் சங்கத்திற்காக  மூன்றுநாட்கள் நடைபெறும் சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஒன்றையும்  சென்ற  ஆகஸ்ட்  2013 இல் நிகழ்த்தினார். சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனத் தொடங்கி சங்க இலக்கிய  நூல்கள் பற்றிய முன்னுரை அறிமுகத்தில் தொடர்ந்து, அகப்பாடல்களில் இருக்கும் முதல், கரு, உரி என்பவை பற்றிய விளக்கம் என விரிவுரையாகத் தனது இலக்கியப் பயிற்சிப் பட்டறையை தொகுத்து வழங்கி அமெரிக்கத் தமிழர்களின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.

தனது தமிழ்ப்பணியின் மற்றொரு பகுதியாக குழந்தைகளுக்குச் சூட்ட சங்கத் தமிழ்ப் பெயர்களையும் திரட்டி அதற்காக ஒரு வலைத்தளமும் உருவாக்கியுள்ளார் (http://puretamilbabynames.wordpress.com/).  தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்காது இருப்பது வருந்தத்தக்கது  என்று அத்தளத்தின் அறிமுகப் பகுதியில்  குறிப்பிடும் வைதேகி, அவர் வசிக்கும் ஹவாய் மாநில மக்களுடன் ஒப்பிடுகிறார்.   நூறாண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துவ மதத்தைத் தழுவினாலும் ஹவாய் மக்கள் அவர்கள் மொழியில், அவர்கள் மரபுப் பெயர்களை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதையும் அதைப் பற்றி பெருமிதம் கொள்வதையும் சுட்டிக் காட்டுகிறார்.

தனது கணவருடன் இணைந்து ஆண்டுக்கொருமுறை தமிழகச்சுற்றுலா ஒன்றினை (‘Tamil Heritage Tour’) ஏற்பாடு செய்து, மகாபலிபுரம், புதுச்சேரி, பிச்சாவரம், தரங்கம்பாடி, தஞ்சை, மதுரை, காஞ்சீபுரம், சென்னை போன்ற ஊர்களுக்கும், யானைகள், புலிகள் சரணாலயம் புராதன சமணக்கோயில்கள், போன்றவற்றையும் இவரது  சுற்றுலா (Herbert’s Tamil Heritage Tour, http://www.nivalink.com/corporate-groups/inbound/tamilnadu-vaidehi) அறிமுகப்படுத்துகிறது.

சிறந்த தமிழ்த் தொண்டாற்றி வரும் வைதேகி ஹெர்பர்ட் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவரை பாராட்ட விரும்புவோருக்காக இவரது மின்னஞ்சல் முகவரி: kavini100@gmail.com

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளர் வைதேகி அவர்களுக்கு பாராட்டுக்கள் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது அவரது செயல்.

    தமிழ் உள்ளவரை நிலைக்கும் படியாக அவர் செய்திருக்கும் இந்த அரிய பணி அவரின் பெயரையும் நிலைக்க வைக்கும்.  

    காசு பணத்தை விடுங்கள், கால நேரத்தை அவர் இதற்காக செலவழித்திருப்பதை  பார்க்கும் போது அபரிதமான மரியாதை வருகிறது.

    தமிழ் தொண்டாற்றும் மதிப்பிற்குரிய வைதேகி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  2. வைதேஹியிடம் என்னைக் கவர்ந்த மிகச் சிறந்த பண்பு — எந்த வகைப் பகட்டும் ஆடம்பரமும் ‘டாம் டாம், தாட் பூட்’ என்ற தண்டோராவும் இல்லாமல் மிகவும் அமைதியாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்துக்கொண்டு அவற்றை மொழிபெயர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பதே.

    அதோடு, தன் உதவிக்கையை நீட்டிப் பலருக்கு உதவி செய்திருக்கிறார். 10-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் தன் வீட்டில் சமையல் செய்து விற்றுக் கிடைத்த பணத்தைத் தமிழகத்துப் பள்ளிக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். தூண்டித் துருவிக் கேட்டாலொழிய இவரது தொண்டு பற்றி வெளியே தெரிய வருவது மிகவும் அருமை. இவரது நட்பு எனக்குக் கிடைத்தது என் பெரும் பேறு. 

    இவருடைய மொழிபெயர்ப்பு முயற்சியைத் தமிழக அரசும், செம்மொழி நிறுவனம் போன்ற இடங்களும், நல்ல பணம் படைத்துப் பலருக்கும் விருது வழங்கும் பிற நிறுவனங்களும் கண் திறந்து பாராதது ஏனோ? இந்திய/தமிழகப் பெண்? சாதி? கருப்புத் தோல்?

    வாழ்த்துடன்,
    ராஜம்
    http://www.letsgrammar.org
    http://viruntu.blogspot.com
    http://mytamil-rasikai.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *