பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்!

1

-எம். ஜெயராம சர்மாமெல்பேண்

இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்           muruga
காட்சிதர மறுப்பதுமில்லை!

ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்
அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்
நாணயமாய் நடந்துபாருங்கள் – அவன்
நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்!

உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்
உள்ளமதில் வந்துநின்றிடுவான்
தெளிவுடனே தினமும்தேடுங்கள்  – அவன்
சீக்கிரமாய் உதவவந்திடுவான்!

ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்
எங்களுடன் இணைந்துநின்றிடுவான்
தோழமையாய் இருந்துபாருங்கள் – அவன்
துயர்துடைக்க வந்துநின்றுடுவான்!

கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்
கருணைமழை பொழிந்துநின்றிடுவான்
கண்ணீரால் நனைத்துப்பாருங்கள் – அவன்
காலமெலாம் உதவிநின்றிடுவான்!

சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்
தனைமறந்து பக்கம்வந்திடுவான்
தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்
இனிமையெலாம் தந்துநின்றிடுவான்!

காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்
கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்
சோதியென நினைத்துப்பாடுங்கள் – அவன்
சுகமனைத்தும் தந்துநின்றிடுவான்!

நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்
நீதிதர மறுப்பதுமில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
பூரணமாய்த் தந்துநின்றிடுவான்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்!

  1. இறைவனின் திருப்பெயரை எவ்வாறு அழைத்தாலும் 
    இரங்கும் மனம் கொண்டவனே நமைநோக்கி வந்திடுவான் 
    இதயமதில் இறையுணர்வு நிறைத்திடும்பொழுதினில் 
    இவ்வுலக வாழ்வுனக்கு இன்ப மயமாகுமே!!

    ஒருபொழுது இன்பம்வரும்.. மறுபொழுது துன்பம்வரும்..
    இரண்டையும் கலந்துதான் காலம் உனக்களிக்கும்…
    இன்பத்திலே மகிழ்ச்சியுற்று.. துன்பத்திலே துடித்தெழுந்து 
    இருபக்க மத்தளமாய் ஒலியெழுப்பும் மானுடமே!!

    எல்லோரும் வாழ்ந்திருக்க எண்ணுகின்ற மனம்படைப்பாய்…
    ஏகமாய் நிறைந்திருக்கும் ஆண்டவனின் தாள்தொழுவாய்..
    உள்ளமதில் நல்லொழுக்கம் சொல்வதிலும் கடைப்பிடிப்பாய் 
    நல்லிணக்கம் நம்வழியாய் என்றுமே தொடர்ந்திடுவாய்…

    பிரபல பாடல் ஒன்றின் அடிதொட்டு எழுதுவதும் 
    அதிலுள்ள பொருளெடுத்து கவிமழை பொழிவதும் 
    புதுமையின் பூக்கள்போல விரிந்திருக்கும் அழகைத்தான் 
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் இங்கே சொல்கிறது!

    அன்புடன்..
    காவிரிமைந்தன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *