கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு சான்றோர் இலக்கிய விருது

1

avennila

வந்தவாசி.செப்.10. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் அ.வெண்ணிலாவின் இலக்கியப் பணியைப் பாராட்டி, முன்னாள் தமிழக அமைச்சரும் சென்னை கம்பன் கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனின் 89-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையிலுள்ள இராணி சீதை மன்றத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் நடத்திய இலக்கிய விழாவில் ‘சான்றோர் இலக்கிய விருது’ வழங்கப்பட்டது.
     இவ்விழாவிற்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தலைமையேற்றார்.முன்னாள் மத்திய அமைச்சரும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் செயலாளருமான டாக்டர் சா.ஜெகத்ரட்சகன் வரவேற்புரையாற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அவ்வை நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
  இலக்கியத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு ரூபாய்.பத்தாயிரம் பரிசுத் தொகையும், ‘சான்றோர் இலக்கிய விருதினையும்’  ஆர்.எம்.வீரப்பன் வழங்கி, பாராட்டிப் பேசினார்.
   கவிஞர் அ.வெண்ணிலா இதுவரை ஆறு கவிதை நூல்களையும்,  இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், கட்டுரைகள், கடித நூலொன்றும் எழுதியுள்ளார்.சாகித்திய அகாதெமிக்காக உலகமெங்குமுள்ள தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும், என்.சி.பி.ஹெச். பதிப்பகம் வெளியிட்டுள்ள 75 ஆண்டுகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் தொகுத்துள்ளார். மத்திய அரசின் அழைப்பின் பேரில்,சார்க் நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் மாநாட்டிலும், காமன்வெல்த் எழுத்தாளர்கள் மாநாட்டிலும் தமிழகப் பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார்.
    இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக பாடத் திட்டத்திலும் பாடநூல்களாக இடம் பெற்றுள்ளன.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு சான்றோர் இலக்கிய விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *