— ரஞ்சனி நாராயணன்.

மஹாளய அமாவாசைநன்றிக் கடன்!

புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே.

பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்றைக்கு நாம் பேசும் மொழி, நாம் உடுத்தும் உடை, நாம் வசிக்கும் வீடுகள், நமது நடை என்று எல்லாமே அவர்களிடமிருந்து நாம் கற்றவைதான். நாம் பெற்றவைதான், இல்லையா?

இந்தப் பூமியில் விலங்குகள் மட்டுமே இருந்துவந்த காலத்தில் உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் இவற்றினூடே தங்களைக் கொல்லவரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது இவையே முக்கியமானவைகளாக இருந்தன. பின் மெதுமெதுவே  விலங்குகள் பரிணாமம் பெறத் தொடங்கின. அகலமாக வளர்ந்தவைகள் எழுந்து நிற்கத் தொடங்கின.  மூளை, வளர்ச்சி பெறத் தொடங்கியவுடன், பல்வேறு திறன்களும் வளரத் தொடங்கின… ஒரு செல் பிறவியாக இருந்த உயிரினம் பல செல் பிறவியாக, மனிதனாக பரிணாமம் பெற்றது. மனித இனத்தின் மிக முக்கியமான பரிணாமம் தன்னைச்  சுற்றியிருக்கும் பொருள்களை பல்வேறு வகைகளில் அவன்  பயன்படுத்தத் தொடங்கியது தான். இந்த எளிமையான திறன் தான் பிற்காலத்திய தொழில் நுட்பங்களுக்கு அடிகோலியது. தன் கைகளை மட்டுமே நம்பியிருந்தவன் மரக்கிளைகளை ஆயுதமாகக் கொண்டு தன்னை எதிர்த்து வந்த எதிரியுடன் போரிட்டபோது நுட்பவியலின் கதவுகள் திறந்தன. தன்னைச் சுற்றியுள்ள பல பொருட்களையும் கொண்டு தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் மனிதன். இதுவே மனித இனத்தின் நீடித்த வாழ்வின் ஆரம்பம் எனலாம்.

விலங்குகளைப் போல இருந்த மனிதன் மெதுமெதுவே தன் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள ஆரம்பித்தான். இதனால் விலங்குகளைவிட சிறந்த வாழ்வு அவனுக்குக் கிடைத்தது. தனக்கென தங்குமிடம் வேண்டுமென விரும்பியதால் கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. கட்டடக்கலை இப்போது வானுயர வளர்ந்திருப்பதற்கு என்றோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய ‘தனக்கென ஒரு இடம் வேண்டும்’ என்ற எண்ணம். குளிர், வெயில், மழை இவற்றிலிருந்து உடலை காக்க விரும்பியதால் உடைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த உலகத்தில் மனிதனாலேயே பலவும் நிகழ்த்தப்பட்டன. இரண்டு கற்கள் உரசும்போது ஏற்பட்ட தீப்பொறியால்  அதுவரை பச்சையாகத் தின்னப்பட்ட உணவு சமைக்கப்பட்ட உணவானது. காலங்கள் செல்லச்செல்ல சமைக்காத உணவை பதப்படுத்தவும், சமைத்த உணவை பாதுகாக்கவும் மனிதன் கற்றான். அதுவே இப்போது நமக்குக் கிடைக்கும் தயார் நிலை உணவிற்கு முன்னோடி.

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’
‘எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்’

கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; அவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் நவீனப்படுத்தப்பட்டன; மேம்படுத்தப்பட்டன.  இன்னும் மேம்படுத்தலுக்கு இடமும் அளித்தன. என்னைப்போல தையல் கலையை அறியாத தையல்களும் இன்று தைத்த உடைகளை அணிவதற்கு எப்போதோ ஒரு தலைமுறையில் தைத்து உடுத்த வேண்டும் என்ற உந்துதலுடன் பிறந்த ஒரு மனிதனோ மனுஷியோ தானே காரணம். தான் தைத்து உடை உடுத்தியதுடன் தையற்காரர் என்ற ஒரு தலைமுறையையும் உருவாக்கிய தலைமுறைக்கு நாம் எல்லோருமே கடன்பட்டிருக்கிறோமே! தயார் நிலை ஆடைகளை தைக்கும் தொழிற்சாலை நடத்தும் வியாபாரிகளும், அங்கு தைக்கும் பெண்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் யாரோ ஒரு புண்ணியவானுக்கு / புண்ணியவதிக்கு பட்ட கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள்!

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால் அல்லவா இன்று போக்குவரத்து நெருக்கடியில் நாம் சிக்கித் தவிப்பது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது! எண்களில் ஜீரோவைக் கண்டுபிடித்து எண்ணற்ற கணித மேதைகளை உருவாக்கியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். என்னைப் போன்ற கணித வெறுப்பாளர்களையும் உருவாக்கியதும் அவர்களே. மருத்துவ உலகில் எத்தனை எத்தனை அரிய கண்டுபிடிப்புகள்! நமது வாழ்நாளின் அளவு நீண்டிருப்பதற்கு எத்தனையெத்தனை முன்னோர்கள் காரணம்!

இன்றைக்கும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன; நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இவை நிச்சயம் பயன்படும். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. நம்மிடையே யாருக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று ஒரு அலட்சியம். இருக்கும் வளத்தையெல்லாம் நாமே பயன்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற ஒரு சுயநலம் பிறந்துள்ளது.

‘உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

எல்லா இயற்கை வளங்களும் நமக்காகவே இறைவனால் படைக்கப்பட்டன என்பது உண்மை.  ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நதி நீர் மாசு படிந்துவிட்டது; காற்று அசுத்தமாகிவிட்டது; பல நதிகள் இருந்த இடமே தெரியாமல் வறண்டு போய்விட்டன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீர் வேண்டாமா? நமது பேரக்குழந்தைகள், அவர்களது பேரக்குழந்தைகள் நல்ல நீர் குடிக்க வேண்டாமா? நல்ல காற்றை சுவாசிக்க வேண்டாமா? ‘இருக்கும் நல்லவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு அழுக்கு நீரையும் அசுத்தக் காற்றையும் விட்டுவிட்டுச் செல்லுகிறீர்களே’ என்று நம் இளைய தலைமுறைகள் கேட்கும் முன் விழித்துக் கொள்வோம்.

நாம் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நன்றி சொல்லும் இந்த மஹாளய பட்ச தினத்தில் நம் வருங்கால சந்ததியினரையும் மனதில் கொள்வோம். அவர்களது நலன்களையும் பாதுகாக்க உறுதி பூணுவோம். அவர்களும் நாளை இன்று நாம் செய்வதுபோல நமக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள் முழு மனதுடன்.

படம் உதவிக்கு நன்றி: http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_6.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *