-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

ambaal

 

 

 

 

 

 

 

 

கல்வியொடு செல்வம் வீரம்
கருணை நிறை கொண்டவுள்ளம்
நல்லதெலாம் செய்யும் ஆற்றல்
நாளும் எனக் கீந்திடம்மா!

வல்லவளே நல்லவளே
வாழ்வளிக்க வந்தவளே
தொல்லுலகில் என்னாளும்
துயர்போக்கச் செய்திடுவாய்!

உள்ளமெலாம் உன் நினைப்பே
ஊற்றெடுக்க வேண்டு மம்மா
கள்ளமெலாம் என்னை விட்டுக்
கழன்றோடச் செய்திடம்மா!

பள்ளமதில் வீழாமல்
பத்திரமாய்க் காத்திடுவாய்
அள்ளஅள்ளக் குறையாத
அருளமுதின் நாயகியே!

தெள்ளுதமிழ்க் கொண்டுன்னை
சிறியேனும் பாடுகிறேன்
சினமகன்று வாழ்ந்திடவே
சீக்கிரமே வரமருள்வாய்!

அன்றலர்ந்த மலர்கொண்டு
அன்னையுனைப் பணிகின்றேன்
ஆணவத்தை அறுத்துவிட்டு
ஆசியெனக் கருளிடம்மா!

நாட்டிலுள்ளோர் மனமெல்லாம்
நல்ல எண்ணமுருவாக
பாட்டாலே கேட்கின்றேன்
பராசக்தி அருளிடுவாய்!

வீரத்தை விரயமாக்கும்
வீணர்தமைத் திருத்திடுவாய்
கோரத்தைப் புரியுமவர்
கொடுமைகளை அடக்கிடுவாய்!

பாருக்குள் அவர்திருந்த
பக்குவத்தைக் கொடுத்திடுவாய்
ஈரமன முடையவளே
எங்கள்பரா சக்தியம்மா!

செல்வத்தைச் சேர்ப்பதிலே
சீரழிவை நாடுகிறார்
உள்ளமெலாம் நோகடித்து
ஊரினையே சுருட்டுகிறார்!

கள்ளமுடன் சேர்த்துநிற்கும்
காசுநகை பயன்படவே
நல்லவழி காட்டிடுவாய்
நவராத்ரி நாயகியே!

கல்விதனைக் காசாக்கும்
கயவரெலாம் மனம்மாற
கடைக்கண்ணால் பார்த்துவிடு
கருணைநிறை நாயகியே!

தனம்வரும் கல்விவரும்
தளர்வறியா மனமும்வரும்
நலம்வரும் நாளெல்லாம்
நற்கருணை நாயகியால்!

இனம்வரும் இன்பம்வரும்
ஈடில்லா வாழ்வும்வரும்
எமையாளும் நாயகியை
ஏற்றியென்றும் வழிபடுவோம்!

அகிலமுனைப் போற்றுதம்மா
ஆதிபரா சக்தியென
அரக்ககுணம் அழிவதற்கு
அம்மாநீ அருளிடுவாய்!

வேருக்கு நீராக
விரைந்துநீ அருளிவிடு
வினையகன்று நிற்கின்ற
விடியலைநாம் தேடுகிறோம்!

நவசக்தி நாயகியே
நலமருள வேண்டுமம்மா
நாட்டிலுள்ள மக்களெலாம்
நாளுமுனைப் போற்றுகின்றார்!

வீடெங்கும் விளக்கேற்றி
விரதமுடன் தொழுதுநிதம்
காதலுடன் நிற்பாரைக்
கடைத்தேற்றி விட்டிடம்மா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *