எம்.ஜெயராமசர்மா

பாட்டிகளும் தாத்தாக்களும் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று எண்ணிவிடுதல் ஏற்றதல்ல. பகுத்து அறிந்து இருந்தபடியால் தான் அவர்கள் புத்தி சொல்ல வருகிறார்கள். இளமையில் உள்ளோர் அதனை ஏற்றுவிட மறுக்கிறார்கள். காரணம் பகுத்து அறிவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதனை அவசியமானது என்றும் எண்ணுவதும் இல்லை. இளமையின் வேகம் எதையும் ஏற்க விரும்புவதில்லை. இந்த நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனைப் பற்றி கட்டாயம் சிந்தித்துப் பார்க்கவே வேண்டும்.

இளமையும் — முதுமையும் மோதக்கூடாது. இளமையென்பதும் தேவை. அதே வேளை முதுமையும் தேவையானதே. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இவை இரண்டும் இணைந்து இருப்பதைக் காணமுடியும். அனுபவமும் வேகமும் தான் அவைகள்.

எங்களது சைவசமய வரலாற்றை எடுத்துக்கொண்டால் இது நன்கு புலப்படும். சம்பந்தர் இளமையில் இருக்கிறார். அப்பர் பெருமானோ முதுமையில் இருக்கிறார். இவர்கள் இருவரும் எந்தப் பிணக்குமின்றி இணைந்த காரணத்தால்தான் சைவம் என்பது பேரெழுச்சி பெற்றது எனலாம். சம்பந்தர் இறைவனது அருளை இளம் வயதிலேயே பெற்றுக் கொண்டவர். உயர் வகுப்பைச் சேர்ந்தவர். அப்பரோ சமயம் விட்டுச் சமயம் வந்தவர். ஆனால் சம்பந்தரின் பல்லாக்கை சுமந்துவந்த வேளை சம்பந்தர் அதனை அறிந்து ” அப்பரே ” என அழைத்து உயர்ந்த கெளரவத்தை வழங்கினார் என்று வரலாற்றின் வாயிலாக அறிகின்றோம்.

அப்பரோடு சம்பந்தர் இணையாவிட்டால் இன்று சைவசமயமே கேள்விக் குறியாகத் தானிருந்திருக்கும். ஆனால் இங்கே இளமையான சம்பந்தர் அப்பரை மதிக்கின்றார். அதேவேளை அனுபவத்தில் முதிர்ந்த அப்பரோ சம்பந்தர் சொல்லைப் பெரிதும் போற்றுகின்றார். இருவரும் இணைய அவர்களுடன் மக்களும் இணைய சைவ பக்தி இயக்கம் வீறுகொண்டு எழுந்து வருகிறது.

இது சமய எழுச்சி. இதே மாதிரி சமூக எழுச்சியிலும் இளமையும் முதுமையும் இணைந்து நின்றதையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்திய சுதந்திரப் போரில் மகாத்மா முதுமையானவர். அவருடன் நேரு என்னும் இளமை கைகோர்க்கிறது. அங்கே சுதந்திரப் போராட்டம் முன்னேறுகின்றது. காந்தி என்னும் முதுமையுள் பல லட்சக்கணக்கான இளமைகள் இணைகின்றன. சில வேளைகளில் முரண்பாடுகள் தென்பட்டாலும் காந்தி என்னும் முதுமை தனது பொறுமை என்னும் குணத்தைக் கடைப்பிடித்து முரண்பட்ட இளமைகளையும் தன்னோடு இழுத்தணைத்து நின்றுவிடுகின்ற பக்குவத்தைக் காண்கிறோமல்லவா? காந்தியுடன் பல முதுமைகளும், இளமைகளும் இணைந்த காரணத்தால் அன்னிய ஆதிக்கம் அகன்றுவிடுவதைக் கண்டோமல்லவா?

ஸ்ரீ ராமகிருஷ்ணர் முதுமை. நரேந்திரன் என்னும் இளமை அங்கே இணையும் வேளை அற்புதமான சிருஷ்டி ஏற்படுகிறதல்லவா? நரேந்திரன் என்னும் இளமை ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் புறந்தள்ளி விடவில்லை. உதாசீனப் படுத்தவில்லை. மூலையில் படுக்க வைக்க எண்ணவில்லை. விவேகத்துடன் செயலாற்றி விவேகானந்தராக வீறுகொண்டு எழுந்து நிற்பதைக் காண்கிறோம் அல்லவா?

ஞானானந்தர் என்னும் மகானால் உருவாக்கப் பட்ட ஆன்மீக அமைப்புத்தான் ஞானானந்த சமாஜம். ஞானானந்தர் என்னும் முதுமையுடன் ஆங்கிலம் படித்த விஞ்ஞானச் சிந்தனைமிக்க ஹரிதாஸ் என்னும் இளமை இணைகின்றது. குரு முதுமையானவர் என் அந்த இளமை நினைக்கவில்லை. குருவின் பாதத்தைப் பற்றிக்கோண்டு சுவாமி ஹரிதாஸ் என்னும் பெயருடன் நாம சங்கீர்த்தத்தால் உலகம் முழுவதும் சென்று ஆன்மீகம் தழைக்கச் செய்ததை நாடே அறியும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *