— சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
புதியதோர் மடல், புதியதோர் வாரம், புதியதோர் கருத்து.

மேலைநாடுகள் மிகவும் செழிப்பானவை. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை வசதிகள் நிறைந்தது. அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வசதிகள் இங்கே காணப்படுகின்றன. இதுவே பொதுவாக மேலைநாடுகளைப்ப் பற்றி கீழைத்தேச நாடுகளின் அபிப்பிராயமாகும்.

இது ஒருவகையில் சரியான அபிப்பிராயமாக இருந்தாலும் முற்றிலும் உண்மையான கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியாது.

சாதரணக் குடிமக்களுக்கிடையில் எந்த வித பாரபட்சமுமின்றிக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலும் அனைத்தும் அனைவர்க்கும் பொதுவாகக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது.

நான் முதன் முதலில் இங்கிலாந்தில் கால் எடுத்து வைத்த போது கொண்ட அபிப்பிராயத்திற்கும், நாற்பது வருடங்களின் பின் கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கும் பல இடைவெளி உண்டு.

அதற்கான காரணங்கள் பல. அப்போதைய எனது தேவைகளும் இப்போதைய எனது தேவைகளும் அதிக அளவில் வித்தியாசப்படுவது ஒரு காரணம்.

அன்று நான் பிறந்து வளர்ந்த எனது தாய்மண்ணின் வளர்ச்சிக்கும் இன்றைய வளர்ச்சிக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமும் மற்றொரு காரணம்.

மாணவனாக அன்று எனக்கிருந்த உடனடித் தேவை எனது எதிர்கால வாழ்வின் உத்தரவாதத்திற்கான கல்வித்தகமை மட்டுமே. கல்வித்தகமையை அடைந்ததும் நான் வாழ்ப்போவது இங்கிலாந்திலா? அன்றி எனது தாய்மண்ணிலா என்று முடிவு எடுத்திராத ஒரு நிலையில் இங்கிலாந்து வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளோடு எனது அடிப்படைத் தேவைகள் ஒன்றிப்போகாத ஒரு நிலை.

தேசியச் சுகாதாரச் சேவை பற்றியப் பூரண புரிந்துணர்வோ அன்றி வேலை வாய்ப்புகள் பற்றிய அறிதலோ எனக்குத் தேவைப்படாத ஒரு காலமாக அது இருந்தது.

ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் மாறுபட்டது. கல்வியை முடித்து ஏறத்தாழ 35 வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் பணிபுரிந்து ஒரு இங்கிலாந்து குடியுரிமை பெற்றவனாக வாழும் போது வாழ்வின் மற்றைய அனைத்துத் தேவைகளும் அத்தியாவசியமாகிறது.

என்னடா இந்த மடல் எங்கே எம்மை இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் உங்களுக்கு எழுவது இயற்கை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.பி.ஸி தொலைக்காட்ச்சிச் சேவையில் ஒரு நிகழ்ச்சியை காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அதில் கண்ணுற்ற ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

இதற்கான முக்கியக் காரணம் எமது பின்புல நாடுகளில் மட்டும் தான் வாழ்க்கை வசதிக்குறைவுகள் உண்டு எனும் கருத்துக்குப் புறம்பாக இங்கிலாந்து போன்ற முன்னேற்றமடைந்த நாடுகள் என்று கருதப்படும் நாடுகளில் கூட அவைகளின் அளவுகளிலும் மக்களின் வாழ்க்கை வசதிகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன எனும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதே !

126.2உங்களில் பலர் “அல்சைமர்ஸ்” (Alzheimer’s) எனும் ஒரு நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இது ஒருவகையில் ஞாபகமறதியோடு சம்மந்தப்பட்ட ஒரு வியாதியாகும். ஆனால் சரியான சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவகையில் பாதுகாக்கப்படாவிட்டால் மிகவும் மோசமான நிலையை நோயாளிகள் விரைவில் அடைந்து விடுவார்கள்.

இதனைப் பூரணமாக குணமாக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் இது தீவிரமாகும் துரிதத்தை மட்டுப்படுத்தவே உபயோகிக்கப்படுகின்றன.

இங்கிலாந்து அரசினால் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பீட்டின் படி 2015ம் ஆண்டில் இங்கிலாந்தில் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 520,000 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

126.1இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வியாதியில் பீடிக்கப்பட்ட இருவரை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டார்கள். ஒருவர் இங்கிலாந்தின் ஒரு பகுதியிலும், மற்றொருவர் இங்கிலாந்தின் மற்றொரு பகுதியிலும் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இந்நோய் இருப்பது விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் மற்றவருக்கோ இவ்வியாதி இருப்பதைக் கண்டுப்பிடிப்பதற்கே மூன்று அண்டுகள் பிடித்தது. அதன் காரணமாக அவரது நோய் மேலும் மூன்று ஆண்டுகளுக்குண்டான தீவிரத்தை எட்டி விட்டது.

சரி இங்கே எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி என்ன ?

ஒரே நாடு, ஒரே அரசாங்கத்தின் கீழே இயங்கும் நாடு, வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களின் தேசிய சுகாதரச் சேவையின் நிர்வாகங்களின் கீழ் ஒரே வியாதிக்கான நிவாரணங்கள் மட்டும் ஏன் வித்தியாசப்படுகின்றன ?

126.3அப்படிப்பார்க்கும் போது, அவர்களது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளின் தாக்கம் வித்தியாசப்படுவது இத்தகைய முன்னேற்றமடைந்த , ஜனநாயகத்தின் உச்சம் என்று கருதப்படும் பாராளுமன்ற முறையக் கொண்ட நாட்டில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கக் கூட முடிகிறதா ?

ஒரு மனிதன் ஒரு நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்கிறான் என்பது அவனது வாழ்க்கைக் காலத்தை நிர்ணயிக்கிறதா ? எனும் கேள்வி எழுகிறது.

இப்படியான நிகழ்வுகள் எமது பின்புல நாடுகளுக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் வசதிகள் நிறைந்த நாடு என்று கருதப்படும் நாடுகளிலும் நடைபெறுகிறது என்பதுவே யதார்த்தம்.

ஏன் இதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறேன் ? ஓ …நானும் ஐம்பதுகளின் முடிவில் நிற்கிறேனோ ?

மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை…
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *