சு.கோதண்டராமன்.

அசுரர்கள்

 

asura

இந்திரனால் கொல்லப்பட்ட விருத்திராசுரன், தசரதன் உதவியோடு அழிக்கப்பட்ட சம்பராசுரன் ஆகியோரது கதைகளை நாம் புராணங்களில் பார்த்திருக்கிறோம். தாரகாசுரன், சிங்க முகாசுரன், சூர பத்மன் முதலிய அசுரர்களை முருகன் கொன்றதைக் கந்த புராணம் விவரிக்கிறது.

அசுரர்கள் பட்டியலில் இந்திரன், அக்னி, வருணன், சூரியன் ஆகிய தேவர்களும் உண்டு என்பது தெரியுமா? ஆம், இவர்களையும் ரிக் வேதம் அசுரர் என்றே குறிப்பிடுகிறது. மேலும், த்யௌஸ் எனப்படும் ஆகாயம், மருத் எனப்படும் புயற்காற்று, வேள்வி நடத்துவோர், த்வஷ்டா என்னும் தேவத் தச்சர் இவர்களும் அசுரர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

அது மட்டுமல்ல, சூரியன் முதலானவற்றைப் படைத்த முழு முதற் கடவுளையே, பரம்பொருளையே வேதம் அசுரர் என்ற அடைமொழியால் சிறப்பிக்கிறது.

அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

ஆனால் உண்மை இதுதான். அசுரர் என்று ஒரு இனம் இல்லை. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திரன் முதலான தேவர்களை அசுரா என்று வேதம் விளிக்கும் போது அது அவர்களது வலிமையைக் குறிக்கும் சிறப்புப் பெயராகத்தான் வருகிறது.

ஏதோ ஓரிரண்டு இடங்களில் மட்டும் அல்ல. ரிக் வேதத்தில் அஸுரர் என்ற சொல் வரும் 90 இடங்களிலும், அதிலிருந்து கிளைத்த அஸுர்ய போன்ற சொற்கள் வரும் 36 இடங்களிலும் இதே பொருள்தான். ரிக் 3.55 என்ற சூக்தத்தில் 22 மந்திரங்கள் உள்ளன. தேவர்களின் சிறப்புகளைப் போற்றும் இவை ஒவ்வொன்றும் “மஹத் தேவானாம் அசுரத்வம் ஏகம்” என்ற ஈற்றடியைக் கொண்டவை. இது “தேவர்களின் வலிமை பெரியது, தனித்துவம் வாய்ந்தது” என்று பொருள்படும்.

பொதுவாக, ஒரு சொல்லுக்கு முன்னால் ‘அ’ என்ற முன்னொட்டைச் சேர்த்து எதிர்ச் சொல் உருவாக்குவது வழக்கம். ஆனால் அசுரர் என்ற சொல் சுரர் என்ற சொல்லிலிருந்து வந்ததல்ல. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.

தீயவர்களைக் குறிக்க, அசுர என்ற சொல் வேதத்தில் ஆளப்பட்டிருக்கிறதா? இருக்கிறது. தேவர்களின் எதிரிகளான விருகத்வரஸ், வர்ச்சின், பிப்ரு என்ற மூவருக்கு அசுரர் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வலிமை கருதி அவ்வாறு அழைக்கப்படுகின்றனரே அன்றி அவர்களது இனத்தினாலோ குணத்தினாலோ அசுரர் என்ற பெயர் வரவில்லை.

இந்திரனும் அக்னியும் வலிமையான பகைவர்களை அழித்ததனால் அசுரக்ன- அசுரர்களை அழித்தவர்- என்ற பெயர் பெறுகிறார்கள். மற்றபடி எல்லா அசுரர்களும் தேவர்களின் பகைவர்கள் என்ற கருத்தை அங்கு காண முடியவில்லை.

வேதத்திற்கு உரை எழுதிய சாயணர் அசுரர் என்ற சொல்லுக்கு பெரும்பாலான இடங்களில் வலிமையானவர் என்ற பொருளைத் தருகிறார். சில இடங்களில் அதே சொல்லுக்கு, விரும்பத் தகாதவற்றை வெளியேற்றுபவர், எதிரிகளை அழிப்பவர், உயிர் கொடுப்பவர், மழை அனுப்புபவர், அசுரர்களை அழிப்பவர், உயிரும் உணர்வும் கொண்டவர், இருட்டை விரட்டி அடிப்பவர், ஊக்கம் தருபவர் என்று பல வகையாக விளக்கம் அளித்தாலும் அவை யாவும் வலிமையான என்ற பொருளின் விரிவாக்கமாகவே காணப்படுகின்றன. இந்த எல்லா இடங்களிலும் வலிமையான என்ற பொருள் மிகப் பொருத்தமாக இருக்கும்போது, சாயணர் ஏன் வலுக்கட்டாயமாக சொல்லின் உற்பத்தி வேரை மாற்றி விநோதப் பொருள் சொன்னார் என்பது புரியவில்லை.

அசுரரும் ராட்சசரும் ஒன்றா? அல்ல. இன்று அவை இரண்டும் ஒரு பொருட் சொற்களாக இருந்தாலும் வேதத்தைப் பொறுத்த வரை அவை வேறு வேறுதான். அரக்கர் என்று தமிழில் குறிப்பிடப்படும் தீய பண்புள்ளோர் வேதத்தில் ரக்ஷஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் வலிமை மிகுந்தவராக இருந்ததால் அசுரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் பிறரைத் துன்புறுத்தும் தம் பண்பினால் ராட்சசர் எனப்பட்டனர். தன் வலிமையைப் பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் அசுரர்களை தேவர் என்றும் பிறரைத் துன்புறுத்தும் அசுரர்களை ராட்சசர் என்றும் வேதம் அழைக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *