அதிர்ச்சியூட்டும் தீர்ப்பும் திடுக்கிட வைக்கும் கருத்துக்களும்

0

எஸ் வி வேணுகோபாலன்

ஒரே மாதத்தில் இரண்டு வழக்குகளில் எதிரெதிர் தீர்ப்புகளை வழங்கியுள்ளது தில்லி உயர்நீதி மன்றம். இரண்டுமே மேல் முறையீட்டு வழக்குகள். இரண்டுமே பாலியல் வன்முறை தொடர்பானவை. ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண், மூன்று வயது சிறுமி. மற்றொன்றில், 65 வயது பெண்மணி. இரண்டிலுமே விசாரணை நீதிமன்றத் தீர்ப்புகளை நிராகரித்து அதற்கு நேர்மாறாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் இவை. ஒன்றில் குற்றவாளியை விடுவித்திருந்தது விசாரணை நீதிமன்றம். அவனைத் தண்டித்திருக்கிறது உயர் நீதி மன்றம். மற்றதில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியை இப்போது குற்றச் சாட்டுக்களில் இருந்து முழுமையாக விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டு விட்டது உயர்நீதி மன்றம்.

மூன்று வயது குழந்தை விஷயத்தில் விசாரணை நீதிமன்றம் அந்தச் சிறுமியை குறுக்கு விசாரணை செய்வதில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அவளால் கோவையாக பதில் சொல்ல முடியவில்லை என்பதை வைத்துத் தீர்மானித்த விதத்தையும் உயர்நீதி மன்றம் கடுமையாகச் சாடி இருக்கிறது. தற்போது 5 வயதாகி, இன்னமும் தனக்கு நேர்ந்த குரூர பாலியல் தாக்குதலுக்குப் பின்னான அறுவை சிகிச்சைகள் மேலும் தொடர வேண்டிய நிலையில் இருக்கும் அந்தக் குழந்தையை உயர்நீதி மன்றம் நேரில் வரக் கூட தேவையில்லை என்று நியாயமாகச் சொல்லியிருக்கிறது. கணவனால் புறக்கணிக்கப் பட்ட 25 வயது பெண்ணின் மகளுக்குத் தான் இந்த பாலியல் கொடுமை நேர்ந்திருக்கிறது. அன்றாடம் ரூ 200 ஈட்டி எப்படியாவது குழந்தையை வளர்த்தெடுக்கக் கடுமையாக உழைக்கும் அந்த இளம் தாய்க்கு இப்போது கிடைத்திருக்கும் நீதி ஆறுதல் வழங்கி இருக்கிறது.

தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கயவனை இந்தக் குழந்தை அடையாளம் காட்டியது, காட்டுப் புதரிலிருந்து அவன் துணிமணிகளை அடையாள படுத்தியது எல்லாம் நடந்தும், விசாரணை நீதிமன்றம், “நீ பொய்தானே சொல்கிறாய்?” என்ற குறுக்கு விசாரணை கேள்வியை அனுமதித்திருக்கிறது. அப்போது தாய், சான்றாதாரங்களைப் பாருங்களேன் என்று சொன்னபோது, நீ குறுக்கே பேசாதே என்று அவரை எச்சரித்திருக்கிறது. இதை மேல்முறையீட்டுக்கு எடுத்துக் கொண்ட தில்லி உயர்நீதி மன்றம் குற்றவாளியை இப்போது தண்டித்திருக்கிறது. விசாரணை நீதிமன்றத்தின் தலையில் குட்டியிருக்கிறது.

ஆனால், இதே உயர்நீதி மன்றத்தில் அக்டோபர் 31ம் தேதி வழங்கப் பட்டிருக்கும் தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

65 வயது பெண்மணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் அவரைக் கொலை செய்ததான வழக்கில், குற்றவாளி அச்சே லால் என்பவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உயர்நீதி மன்றம் புரட்டிப் போட்டு விட்டது.

2010ம் ஆண்டு தனது இல்லத்தில் இறந்து கிடந்த இந்தப் பெண்மணியை நேரடியாகப் பார்த்த ஒரு சாட்சி காவல்துறைக்கு தகவல் கொடுத்தபோது வீட்டினுள் இருந்த குற்றவாளி அச்சே லால் பிடிபட்டான். பிரேத பரிசோதனையில் அந்தப் பெண்மணி பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப் பட்டிருந்தது தெரியவந்தது. இந்த அடிப்படையில் இரண்டு குற்றங்களுக்குமான தண்டனையை விசாரணை நீதிமன்றம் வழங்கி இருந்தது.

அச்சே லால் தரப்பில் மேல்முறையீடு செய்து வாதாடியவர்கள் முன்வைத்த வாதங்கள் மிகவும் வீச்சாக இருந்ததாகச் சொன்ன உயர்நீதி மன்ற நீதிபதிகள் பிரதீப் நந்திரஜோக் மற்றும் முக்தா குப்தா இருவரும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பவை மிகவும் அதிர்ச்சி தரத் தக்கவை.

‘இறந்த பெண்மணியின் பிறப்புறுப்பில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், மூர்க்கமான முறையில் பாலுறவு நடந்ததை உறுதி செய்தாலும், அந்தப் பெண் அதை எதிர்த்துப் போராடியதற்கான சான்றாக வேறு எந்தக் காயங்களும் அவர் உடலில் காணப்படவில்லை. மறைந்த பெண்மணி, மாதவிடாய் சுழற்சி முற்றுப் பெற்றுவிட்ட வயதைக் கடந்துவிட்டவர். எனவே, அவர் இந்தச் செய்கையை எதிர்த்ததாகச் சொன்னாலும் அதைப் பாலியல் வல்லுறவு (‘ரேப்’) என்று கருத முடியாது. அதனால் அச்சே லால் பாலியல் பலாத்காரம் செய்ததான குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

பாலுறவு நிகழ்கையில் அச்சே லால் மட்டுமின்றி, அந்தப் பெண்மணியும் மது அருந்தி இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் மூர்க்கமான பாலுறவில் அச்சே லால் ஈடுபட்டதன் காரணமாக, அந்தப் பெண்மணி உட்கொண்டிருந்த உணவு (புரைக்கேறி) மூச்சுக் குழலில் அடைப்பு ஏற்படுத்தியதன் காரணமாக அவர் மரணமடைந்திருக்கலாம் என்று மருத்துவ பரிசோதனை அறிக்கை சொல்கிறது. என்றாலும், தனது பாலியல் செய்கையால் மரணம் நேரக்கூடும் என்ற உடலியல் அறிவு அச்சே லாலுக்கு இருந்திருக்கவில்லை. கொலை செய்வது அவரது நோக்கமும் இல்லை. எனவே கொலைக் குற்றச் சாட்டையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது.’

உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் வழங்கி இருந்த நியாயமான தீர்ப்பை இப்படி மாற்றி இருப்பது மிகப் பெரிய நெருடுதலை ஏற்படுத்துகிறது.

மறைந்த பெண்மணி, அண்டை அயலில் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வந்தவர். கீழ்த்தட்டு மக்களது வாழ்க்கை முறை, நடத்தை குறித்து மேல்தட்டு சிந்தனைகள் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திக்கும். பெரிய அநியாயம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை, அவள் முடிவை அவளே தேடிக் கொண்டாள் என்பது மாதிரியான சிந்தனையைத் தான் இந்தத் தீர்ப்பின் வாசகங்கள் பிரதிபலிக்கிறதோ என்று அச்சம் ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து பாலியல் பலாத்காரத்தை முடிவு செய்யக் கூடாது என்பது ஏற்கெனவே திருத்தம் செய்யப்பட விஷயம். மீண்டும் அதன்மீது சார்ந்து பார்க்கப்படுவது துரதிருஷ்டமானது. மாதவிடாய் சுழற்சி முற்றுப் பெற்றது (மெனோபாஸ்) என்கிற அம்சம் எதற்காக பேசப்படுகிறது என்பது கேள்வியை எழுப்புகிறது. அப்படியானால், பூப்பெய்தாத பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் செய்தவர்கள் தாங்களும் குற்றவாளிகள் அல்ல என்று வாதாட இடம் கொடுப்பதாகாதா அந்த விவாதம்?

தனது தரப்பில் நடந்து என்ன என்று பேச முடியாமல் மரித்துப் போய்விட்ட அந்தப் பெண்மணிக்கு இறப்பின் பிறகும் நிகழும் அவமதிப்பு ஆகிவிடாதா இந்தக் கண்ணோட்டம்?

குற்றமற்றவர் எவரையும் விடுவிப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் குற்றம் செய்தவர் அந்த இடத்திலேயே பிடிபட்டபின்னும், அவர் இழைத்த கொடுமைகள் உறுதி செய்யப்பட பின்னும், அவர் செய்தவை குற்றங்களாகாது என்று சொல்லப்பட்டிருக்கும் தீர்ப்பு ஏராளமான கேள்விகளையும், கவலையையும் எழுப்புகிறது.

பெண் குழந்தைகளது பாதுகாப்பு சம காலத்தில் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கும் நிலையில், இந்த வழக்கைத் தனிப்பட்ட ஒன்றாகப் பார்க்க முடியாது. இதன் முடிவிலிருந்து சமூகத்திற்கு என்ன செய்தி சென்று சேர்க்கிறது என்பது மிகவும் முக்கியமானது. பள்ளிகளில், பொதுவிடத்தில் பெண் குழந்தைகள் குறித்த பதட்டம் கூடியுள்ள காலம் இது. வீடுகளில் வயதான பெண்மணிகள் தனியே காலம் கழிக்க நேரும் காலமும் இது. குற்றங்களைக் குறைக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் எத்தனை முக்கியமோ, அதே அளவு முக்கியம், குற்றம் இழைத்தவருக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வது.

அந்த நோக்கில் சிந்திக்கையில், இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணுடல் குறித்த பார்வை சமூகத்தில் என்னவாயிருக்கிறது என்பதை வலிக்க வலிக்க மீண்டும் அறியவைக்கிறது.

****************
நன்றி: தீக்கதிர்: 07 11 2014

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *