-செண்பக ஜெகதீசன்

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார். (திருக்குறள்:650 – சொல்வன்மை)

புதுக் கவிதையில்…

விரிந்த இதழ்களுடன்
விதவித அழகாய் இருந்தாலும்,            flower
மலருக்கு மகிமை
மணம்தான்…

கற்றவர், கற்றதை
மற்றவர் அறிய
எடுத்துரைக்க இயலாதபோது
அவரும்
மணமில்லா மலர்போலத்தான்…!

குறும்பாவில்…

கற்றிருந்தும் பிறரறிய
எடுத்துரைக்க இயலாதவனும்,
மணமிலா மலர்தான்…!

மரபுக் கவிதையில்…

ஆர்வமாய்ப் பலநூல் கற்றேதான்
அறிவை அதிகம் பெற்றிடினும்,
தேர்வுகள் பலவும் வென்றிடினும்,
திறம்படப் பிறர்க்கே உரையாதார்
பேர்தான் கற்றவர் என்போரும்,
பற்பல வடிவில் பலநிறத்தில்
பார்க்க விரிந்த போதினிலும்
பழுதாம் மணமிலா மலரொப்பரே…!

லிமரைக்கூ…

கற்றவற்றை எடுத்துரைத்து அறியவேண்டும் பலர்,
விரித்துரைக்காதவர் ஆவார்
விரிந்திருந்தும் பயனில்லாத மணமில்லா மலர்…!

கிராமிய பாணியில்…

பூவுபூவு காட்டுப்பூவு
பெருசுசெறுசா பாக்கும்பூவு,
எதுக்கொமொதவா காட்டுப்பூவு
வாசமில்லா வெத்துப்பூவு…

பூவுண்ணா மணமிருக்கணும்
பக்கமெல்லாம் மணம்பரப்பணும்…

படிப்பு கதயும் இதுதானே,
தெரிஞ்சிருக்கணும் தெரிஞ்சிருக்கணும்
படிச்சதெல்லாந் தெரிஞ்சிருக்கணும்,

படிச்சிக்குடுக்கத் தெரிஞ்சிருக்கணும்
எடுத்துச்சொல்லத் தெரிஞ்சிருக்கணும்..

தெரியலண்ணா காட்டுப்பூவு
அவுனுமொரு காட்டுப்பூவு
தேவயில்லா காட்டுப்பூவு
வாசமில்லா காட்டுப்பூவு…

பூவுபூவு காட்டுப்பூவு
எதுக்கொமொதவா காட்டுப்பூவு…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *