நவம்பர் 24, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்கள்

 

Geetha-Ilangovan-267x300

 

 

இந்தவார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால்  பாராட்டப்படுபவர் ஊடகவியலார் கீதா இளங்கோவன் அவர்கள். இயக்குநர் கீதா இளங்கோவன், பலராலும் பாராட்டப்பட்ட “மாதவிடாய்’’ என்ற ஆவணப்படத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னர் (டிசம்பர் 2012) வழங்கியவர். அந்தப் படம் பெற்ற வரவேற்பைக் கண்டு மேலும் பல சமுதாய நலன் கருத்துக்களைக் கொண்ட ஆவணப் படங்களை தொடர்ந்து வழங்குவதாக ஊக்கத்துடன் உறுதி அளித்தார். மாதவிடாய் படத்தைத் தொடர்ந்து அவர் உருவாக்கியிருக்கும் “நம்பிக்கை மனுஷிகள்’’ என்ற குறும்படம் சென்ற சனிக்கிழமையன்று (நவம்பர் 22, 2014) ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. இம்முறையும், ஒரு சமூக அக்கறை கொண்ட படமாக “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (தசைச்சிதைவு நோய்) என்றக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு சகோதரிகளின் தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வையும், நோயினால் துவண்டுவிடாது தங்களைப் போன்று பாதிக்கப்பட்டப் பிறருக்காக அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலம் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்து உதவும் அச்சகோதரிகளின் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை முறையைத் தொகுத்து குறும்படமாக்கியுள்ளார். இப்பட வெளியீட்டிற்காக கீதா இளங்கோவன் அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தில் ஊடகத் தகவல் அலுவலராகப் பணியாற்றும் கீதா இளங்கோவன் சமூகநல அக்கறை கொண்ட ஓர் இயக்குனர். இவரது புதிய வெளியீடான நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படமும், மற்ற இரு படங்கள் பற்றிய தகவல்களும் அவரது சமூக அக்கறையைத் தெளிவு படுத்துகின்றன.

கீதா இளங்கோவன் இயக்கிய சமூகச் சிந்தனைக் குறும்படங்கள்:
[1]
நம்பிக்கை மனுஷிகள் குறும்படம் (2014 வெளியீடு)
http://youtu.be/svH7fYOOnE4

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும் இரு சகோதரிகள் தசைச்சிதைவு என்ற கொடிய நோயினால் தாக்கப்படவர்கள். தசை செல்களின் புரதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மரபணுவில் ஏற்படும் கோளாறால் தசை நாளடைவில் தனது செயல்பாட்டை இழந்து விடும் நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய தசை செல்கள் உருவாக்கப்படாது இருக்கும் தசைகளும் அழியும் நிலை ஏற்பட்டு நோய் உடலை உருக்குலைக்கிறது. மனிதர்களின் தன்னிச்சை செயல்களான நடமாடுதல், தனது செயல்களைத் தானே செய்தல் போன்றவற்றை முதலில் பாதிக்கும் இந்த நோய், காலப்போக்கில் மோசமடைந்து உயிர்வாழ உதவும் அனிச்சை செயல்களான சுவாசிக்கும் நுரையீரல்கள், இரத்த ஓட்டத்திற்குக் காரணமான இதயத் தசைகளின் நிலையையும் பாதித்து உயிரிழப்பில் முடிவடைகிறது. மரபணுக் கோளாறால் உருவாகும் இந்நோய்க்கு இன்று வரை மருத்துவம் இல்லை. தொடர்ந்த உடற்பயிற்சியினால் சிறிது காலம் நடமாட்டத்தை நீட்டிக்கலாம் என்பதே இன்றுவரை இந்நோயின் நிலை.

மூத்த சகோதரி வானவன் மாதேவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது முதலில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளில் இளைய சகோதரி இயல் இசை வல்லபியும் பாதிக்கப்பட்டார். நடப்பதற்கே சிரமப்படும் நிலையை அடைந்த சகோதரிகளிடமும், இவர்களது பெற்றோர்களிடமும் மருத்துவர்கள் நோயின் நிலையையும், சிகிச்சையால் நோயைத் தீர்க்க வழியில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இருப்பினும், நோயினால் மனம் தளராது தங்கள் பெற்றோரைத் தேற்றியதுடன், பத்தாம் வகுப்புவரை பள்ளி சென்று கல்வியை முடித்துள்ளார்கள் இந்தச் சகோதரிகள். பிறகு தனிப்பட்ட முறையில் ப்ளஸ் டூ மற்றும் அஞ்சல் வழியில் டிசிஏ படித்திருக்கிறார்கள்.

the great sisters2the great sisters

கொடிய நோயினால் மனம் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் போராடும் இந்தச் சகோதரிகள், தங்களைப் போன்றே தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக “ஆதவ்” என்ற அறக்கட்டளையைத் துவக்கி அவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை அளித்து உதவி வருகிறார்கள். தற்பொழுது அவர்களது நோக்கம் தசைச்சிதைவு நோயாளிகளுக்காக மருத்துவமனை ஒன்றை அமைத்து சிகிச்சைக்கு வழி செய்வது. இந்த தளரா உள்ளம் கொண்ட சகோதரிகளின் தன்னம்பிக்கையையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் கீதா இளங்கோவன் “நம்பிக்கை மனுஷிகள்” என்ற குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படம் சகோதரிகளைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிகையுடன் வாழ்வை எதிர் கொள்ளவும், பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்து அதன் மூலம் இச்சகோதரிகளின் அறக்கட்டளைக்கும், மருத்துவமனை அமைக்கும் நோக்கத்திற்கும் உதவும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. அதற்கும் மேலாக, குறையற்ற ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்தாலும் வாழ்க்கையைப் போற்றத் தெரியாதவர்களின் அறிவுக் கண்களையும் இக்குறும்படம் திறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆதவ் அறக்கட்டளை பற்றிய தகவல்களை கட்டுரையின் இறுதிப் பகுதியில் காணலாம்.

[2]
மாதவிடாய் குறும்படம் (2012 வெளியீடு)
படத்தின் ஒரு சிறு பகுதி
http://youtu.be/9JI_G7NuUR8

பெண்களின் உடலின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக, பருவமடைந்த பிறகு இயற்கையாக அவர்கள் எதிர்கொள்ளும் `மாதவிடாய்’ எனப்படும் மாதாந்திர உதிரப்போக்கு என்பது பற்றிய ஒரு சரியான புரிதலின்றி, அதுவே பெண்களை ஒடுக்கி வைக்கும் செயலாக நம் நாட்டில் அமைந்துள்ளது. இந்த அறியாமையை, 40 மணித்துளிகளில் செய்தி தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் ஆவணப்படமாக கீதா இளங்கோவன் தயாரித்தார். “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்ற அறிமுகத்துடன் வெளியாகி மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. பல சமூக நிலைகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கருத்துக்களை அதில் பதிவு செய்தனர். மாதவிடாய் என்பது ஒரு விவாதத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தக்க வசதியை செய்துதராமல், அவர்களை கீழ்மைப்படுத்தும் தீண்டாமை செயலாக மட்டுமே மக்கள் எண்ணியிருப்பதை அப்படம் வெளிக்கொணர்ந்தது.

Geetha-Ilangovan-1Geetha-Ilangovan-11

மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் ஒழித்து பெண்கள் சுகாதார முறையில் மாதவிடாயை எதிர்கொள்ள பள்ளிகளில் பாலியல் கல்வி தேவை என்பது கீதா இளங்கோவன் அவர்களின் கருத்து. “பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி” என்று கீதா இளங்கோவன் வலியுறுத்துகிறார். மேலும், ”இந்த ஆவணப்படம், பெண் உலகின் சிரமங்களை, ஆண்கள் புரிந்துகொள்ள நிச்சயம் ஒரு கருவியாக இருக்கும்!” என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

[3]
லிட்டில் ஸ்பேஸ் (2011 வெளியீடு)
http://youtu.be/oiB6oeGb2t8

‘லிட்டில் ஸ்பேஸ்’ என்ற மிகச்சிறிய படம் ஓர் ஐந்து மணித்துளிகள் கால அளவில் தொடர்வண்டி பயணத்தில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவன் எதிர் கொள்ளும் நிகழ்வுகளைத் தொகுக்கிறது. இதில் கீதா இளங்கோவனும் நடித்துள்ளார். உரையாடல்களற்ற, இசைப் பின்னணியில் மாற்றுத்திறனாளிகளின் தேவையை எடுத்துரைக்கிறார். இப்படம் பல பரிசுகளையும், ஹைதராபாத்தில் நடந்த, உலக சிறுவர்களுக்கான படவிழாவிலும் திரையிடப்பட்ட சிறப்பையும் பெற்றது.

ஊடகங்களினால் சமுதாயப் போக்கையையே மாற்றியமைக்க முடியும் என்பது உலகறிந்த உண்மை. இதனை உணர்ந்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை, ஆனாலும் பெரும்பாலும் விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் செய்திகளை சிறப்பான குறும்படங்களாக உருவாக்கி மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடர்ந்துவரும் இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டி, வாழ்த்தி அவரது அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.

***

கீதா இளங்கோவன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி: geetaiis@gmail.com
வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி சகோதரிகளிடம் பேசுவதற்கான எண்: 99763 99403

ஆதவ் அறக்கட்டளை நிர்வாக அலுவலக முகவரி:
ஆதவ் அறக்கட்டளை
489-B, வங்கி அலுவலர் குடியிருப்பு
அஸ்தம் பட்டி, சேலம் -636007
தமிழ் நாடு, இந்தியா
தொடர்பு எண் :00919976399403

ஆதவ் ட்ரஸ்ட்

நன்கொடைகளை “Aadhav Trust” என்ற பெயருக்கு (Cheque / DD) அனுப்பலாம்.
Bank Name : Canara Bank
SB Account Name: Aadhav Trust
Branch : Suramangalam
Name : A/c No : 1219101036462
IFSC Code: CNRB0001219
MICR Code: 636015005
வழங்கும் நன்கொடைகளுக்கு வருமானவரி கணக்கு பிரிவு 80G ன் கீழ் வரிவிலக்கு உண்டு.

சகோதரிகள் வானவன் மாதேவி, இயலிசை வல்லபி ஆதவ் அறக்கட்டளை பற்றிய தகவல்கள் அறிய:
[1] http://www.aadhavtrust.org/
[2] https://www.facebook.com/pages/Aadhav-Trust/185118278177615?sk=photos_stream&ref=page_internal
[3] https://aadhavtrust.wordpress.com/2013/10/25/aadhav-trust-inauguration-of-home-computer-center-library/

கட்டுரைக்கான படங்கள் உதவி:
http://www.thehindu.com/
http://www.penniyam.com/

தகவல்கள் உதவி:
[1] http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/why-is-it-the-dirty-word/article4405543.ece
[2] http://www.thehindu.com/features/cinema/why-is-it-the-dirty-word/article4386137.ece
[3] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/uneasy-attitude-towards-menses/article4503438.ece
[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/documentary-that-brings-to-light-issues-faced-by-women/article4325003.ece
[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1121126
[6] http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=27656
[7] http://news.vikatan.com/article.php?module=news&aid=35198
[8] http://puthu.thinnai.com/?p=26556
[9] http://www.tamilnewstime.com/ta/content/4675
[10] http://www.penniyam.com/2014/04/blog-post.html
[11] http://tamilamudam.blogspot.in/2014/11/blog-post_22.html

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. “மாதவிடாய்’’ என்ற ஆவணப்படத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னர் (டிசம்பர் 2014) வழங்கியவர்”. 2012 என்று திருத்த வேண்டுகிறேன்.

  2. நம்பிக்கை மனுஷிகள் குறும்படம் பார்த்தேன்.  அரைமணி நேரத்துக்கு வேறு ஒன்றும் தோன்றாமல் மனம் அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது.  சாதாரண  சளிக் காய்ச்சல் வந்தாலே, உயிர் போவது போல் அரற்றும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில், இவ்வளவு கொடிய நோய்த் தாக்கிய பிறகும், தன்னம்பிக்கையோடு எதிர்நீச்சல் போட்டுப் போராடியதுடன் நில்லாமல், தங்களைப் போல் அல்லல்படும்  நோயாளிகளின் துயர் துடைக்க டிரஸ்ட்டும் அமைத்து உதவிக்கரம் நீட்டும் வானவன் மாதேவியையும் வல்லபியையும் நினைத்து மலைத்துப் போகிறேன்.    இவர்களைப் பற்றிப் படம் எடுத்து விழிப்புணர்வு ஊட்டிய கீதா இளங்கோவனுக்கு நன்றியுடன் கூடியப் பாராட்டுக்கள்!  லிட்டில் ஸ்பேஸ் படமும் பார்த்தேன்.  மனதைத் தொட்டது.  இவ்வார வல்லமையாளராக இவரைத் தேர்வு செய்த தேமொழிக்குப் பாராட்டுக்கள்! 

Leave a Reply to admin

Your email address will not be published. Required fields are marked *