-செண்பக ஜெகதீசன்

மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (திருக்குறள்-217: ஒப்புரவறிதல்)

புதுக் கவிதையில்…

பிறர்க்குதவும் பெருந்தன்மையாளன்
பெற்ற செல்வம்,
வேர் முதலாயுள்ள
உடல் உறுப்புக்களால்                                      Medicinal_tree
உயிர்காக்கும்
மருந்து மரம் போன்றதே…!

குறும்பாவில்…

நல்லவன் பெற்ற செல்வமும்,
பிணி தீர்த்திடும்
மருந்து மரமும் ஒன்றே…!

மரபுக் கவிதையில்…

உறுதியாய் வேருடன் கிளையும்
உடனதாய் இலைபூ காய்கனி,
உறுபிணி யகற்றும் மருந்தாய்
உதவுமே மருந்து மரத்தில்,
பெறும்தனம் சேர்த்து வைத்தே
பிறர்நலம் பேணிக் காக்க
உறுபொருள் கொடுக்கும் செல்வரும்
உருவிலம் மருந்து மரமே…!

லிமரைக்கூ…

உடல்நலம்பெற உதவியாயிருக்கும் மருந்து மரம்,
அத்தகையதே நல்ல மனத்தொடு
பிறர்க்குதவும் செல்வத்தை வைத்திருப்பவன் கரம்…!

கிராமிய பாணியில்…

மருந்துமரம் மருந்துமரம்
மனம்போல ஒதவும் மருந்துமரம்,
எலபூவு காயோட
எல்லாமே ஒதவும் மருந்துமரம்
எல்லார்க்கும் ஒதவும் மருந்துமரம்…

இதுபோல,
அடுத்தவுனுக்கு ஒதவணுண்ண
ஒயந்தகொணம் உள்ளவங்கிட்ட
உள்ளபணம் மருந்துமரம்…

மருந்துமரம் மருந்துமரம்
மனம்போல ஒதவும் மருந்துமரம்…!


பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “குறளின் கதிர்களாய்…(49)

  1. அருமை.அதிலும் குறும்பாவும் . லிமரக்கூவும் மிக மிக அருமை.

  2. குறளின் கதிர்களுக்குக் கருத்துரை வழங்கிச் சிறப்பித்த 
    நண்பர் அமீர் அவர்களுக்கு,
    மிக்க நன்றி…!

  3. மருந்துமரம் மருந்துமரம்
    மனம்போல ஒதவும் மரம்…. மனம் வருடும் வரிகள். வாழ்த்துக்கள் நண்பரே…..

  4. கருத்துரை வழங்கி வாழ்த்திய நண்பர்,
    சச்சிதானந்தம் அவர்களுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *