-மலர் சபா

மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

வையையைக் கடந்து, மூவரும் தென்கரை சேர்தல்

“இந்த வைகை ஆறு நீர் நிறைந்த ஆறு அன்று;
பூக்கள் நிறைந்த ஆறு” என்று
அன்னம் போன்ற நடைகொண்ட கண்ணகியும்
அவள் தலைவன் கோவலனும் வணங்கி,
மாதவப் பிராட்டியாம் கவுந்தியடிகளுடன்

அந்த அருந்துறையில் செலுத்தப்படும்
குதிரைமுக ஓடம் யானைமுக ஓடம்     flag
சிங்கமுக ஓடம் – இவற்றில் ஏறிப்
பலரும் செல்லும் பெருந்துறைப்பக்கம் செல்லாது,
தேன்மலர்கள் நிறைந்த சோலையுடைய
தெற்குக் கரையை அடைந்தனர்.

மதுரை மாநகரின் புறஞ்சேரியை அடைதல்

தேவர்கள் வசிக்கும்
மதுரை நகரை வலம் வந்தால்

மிகச் சிறப்புண்டாகும் என்று கருதி
அவ்விடத்தில் அழிப்பதற்கு இயலாத காடு
காவலாய்ச் சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்றனர்.

அந்த அகழியில் பூத்த
கரிய நெடிய குவளைமலரும்
அல்லிமலரும் தாமரை மலரும்
கண்ணகியும் கோவலனும்
பிரிவால் அடையும் துயர்தனை
ஐயம் ஏதுமின்றி அறிந்தனபோல,
தம்மிடம் வந்து தேன் உண்ணும் வண்டுகள்
வாயாலே தாமும் அழுது
தேன் எனும் கண்ணீரைச் சொரிந்து
கால் பூமியில் நிலைத்து நிற்க இயலாமல் நடுங்கின.

பகைவர் வருந்தப் போர் தொடுத்து வென்று
அவ்வெற்றிக்கு அறிகுறியாகக்
கோட்டையின் உச்சியில் பறந்த கொடி,
“இம்மதுரை நகருக்கு நீங்கள் வராதீர்கள்”
என்று கூறுவது போல் மறித்துக் கைகாட்டி நின்றது.

பறவைகள் அழகு சேர்க்கும்
வயல்களும் சோலைகளும் விளங்கப் பெற்று
அதிகமான நீரையுடைய பண்ணைகளும்
பரந்த நீர் கொண்ட ஏரிகளும்
குலைகுலையாய்க் காய்களுடன் காணப்படும்
தெங்கும் கமுகும் வாழையும்
திரண்டிருந்த மூங்கிலால்
ஏயப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தலும்
ஆகிய இவையனைத்தும் அமையப்பெற்ற
இருப்பிடங்களை உடையதாய்,
அறத்தினை விரும்பும் முனிவர் தவிரப்
பிறர் யாரும் புகுந்திடமுடியாத
மதுரைக்குப் புறத்தேயுள்ள சேரியை
அவர்கள் மனம் விரும்பியபடியே
மூவரும் அடைந்தனர்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

படத்துக்கு நன்றி:
http://kundavairajeam.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *