சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

வாரமொன்று ஓடியதால், காலைங்கு கரைந்ததினால் விரைந்து நானும் இங்கே வரைகின்றேன் இம்மடலை.

barathi41882ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி அரும்பாகி 1921ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மண்ணில் உதிர்ந்த தமிழன்னையின் தவப்புதல்வன் எமதினிய புரட்சிக் கவிஞன் பாரதியின் 132 வது பிறந்தநாளில் இம்மடலை இங்கிலாந்திலிருந்து வரைந்து கொண்டிருக்கிறேன்.

நான் ஈழத்தில் பள்ளி மாணவனாக பதின்ம வயதுகளில் வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ் என் இதயத்தில் ஒரு பெரும் இடத்தை பிடித்திருந்தாலும் அதன் உண்மையான தாக்கத்தின் விளைவை அறியா முடியாமல் வாலிபக் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

பாரதியின் பெருமைகளை என் தந்தை பட்டியலிட்டுக் கூறும்போது அதற்குரிய கனத்துடன் அவற்றைச் செவிமடுத்திருப்பேனா என்பது சந்தேகமே !

அவ்வயதுக்கேயுரிய காதல் உணர்வுகளில் அழுந்தி அவற்றை வரிகளாக்கித் தந்த கவிஞர்களின் பாடல்களை வாய் முணுமுணுக்கும் போதும் அக்கவிஞர்களின் கைகளில் விளையாடிய தமிழின் நர்த்தனத்தைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனது சிந்தனை விரிவடைந்திருக்கவில்லை.

காதலென்று கண்டதை கணக்கிட்டு கொண்டு மனதுக்குள் சிறகடித்துப் பறந்து விட்டு பின்பு அது காதலல்ல வெறும் கானலேயென்று உணர்ந்து கொண்டதும் அவ்வுணர்களின் வலி கொடுக்கும் சுகமான சுமைகளை சுவைக்கத் தொடங்கும் உள்ளத்தில் உறையத் தொடங்கின.

புலம்பெயர் தேசத்தில் தனிமையான வாழ்க்கை அதனுள் எமது வாழ்க்கையை ஒட்டிச் செல்ல வேண்டிய காலத்தின் கட்டாயம் இப்படியான சூழல்களில். பலரின் சந்திப்புகளும் அச்சந்திப்புகளின் வழி நான் எடுத்து வைத்த அடிகளும் எனக்குக் கொடுத்த அனுபவச் சவுக்கடிகள் தமிழின் ஆழத்தை அதன் அழகின் வரைவிலக்கணத்தை எனக்கு புரியவைக்கத் தொடங்கியது.

தமிழை நேசித்தேன், நேசிக்கிறேன். ஆனால் அந்நேசிப்புகளுக்காக நான் கொடுத்த விலைகள் ஏராளம். அத்தகைய ஒரு சூழலில் தான் என் தந்தை வழி என் சிந்தையில் ஏற்றப்பட்ட மகாகவி பாரதியின் பெருமைகளை ஏறெடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.

பாரதியார் எனும் மகாகவியின் உடலானது மறைந்து போயிருக்கலாம் ஆனால் அவரால் ஏற்படுத்தப்பட்ட கவிதைவழி உணர்ச்சிப்பேரூற்று என்றுமே காயாமல் வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியாகத் திகழ்கிறது .

barathi3

குற்றால அருவியில் வாழ்வின் சகல மட்டத்தில் வாழும் மனிதர்களும் நீராடி மகிழ்வது போல தமிழென்னும் அளவுகோலில் எத்தகைய அளவு அறிவுபடைத்தவர்களும் பாரதியின் படைப்புகள் எனும் அந்த தமிழ் ஊற்றில் நீராடி மகிழ்கிறார்கள்.

அன்னைத்தமிழ் அவருக்களித்த மாபெரும் ஆற்றலை தான் வாழ்ந்த அக்கால சமுதாய மேம்பாட்டுக்காக ஓர் அஹிம்சா ஆயுதமாக உபயோகித்த மகாகவி தன் சொந்த வாழ்வில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அளித்தது வறுமை எனும் மாறாத சோகமே !

தனது கருத்துக்கள் தனது சமூகத்தினரிடையே தனக்கு மாபெரும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று அறிந்திருந்திருந்தும் மனிதாபிமானமே மனிதனுக்குத் தேவையான முக்கியமான செல்வம் என்பதை வாழ்ந்து காட்டிய மகா மனிதராக மாறியவர் பாரதியார்

தமிழ்ப்பா எனும் ஆயுதம் கொண்டு

தரணியிலே தனித்தன்மை கொண்டு

பாரதி எனும் எம் தமிழ்ப்பாட்டன்

பாரதிர புதுயுகம் காணத்த துடித்தான்

பெண் என்றும் பேதையரல்லர் அவர்

புதுமைகள் புரிந்திடும் பூவையர் என்றே

புரட்சிக் கருத்துக்கள் சொல்லி பாரதி

பொங்கியதால் விழித்தது சமூகம்

ஏற்புடை கருத்துக்கள் கூறாததினால்

ஏற்றிட மறுத்திட்ட மூடர் நிறைந்ததினால்

சித்தம் இழந்தவன் என்றெம் பாரதியை

சிறுமதியர் விளித்ததும் அன்றேயன்றோ

தமிழை நேசித்தான் மகாகவி பாரதி

தமிழைச் சுவாசித்தான் எம் கவி

தனினும் என்றும் மொழிமேல்

தணியாத வெறி கொள்ளவில்லை

யாமறிந்த மொழிகள் என்றே அவனும்

அடுத்தவர் மொழியை அறிந்ததினால்

தாய்மொழியின் பெருமைகளை அழகாய்

தத்ரூபமாய் எடுத்தியம்பி கவிசொன்னான்

அரும்பெரும் புலவனவன் பெருமைகளை

அவந்தன் பிறந்தநாள் தனிலே

நினைந்திட்டு சிலவரிகள் வரைந்து

வணங்கிட்டேன் அவன் பாதங்களை

பெண்களை பேதையர் என்றே எம் சமுதாயம் அடுக்களையில் பூட்டிவைத்து அழகு பார்ப்பதை துணிச்சலுடன் தூளாக்கும் கவிதைகள் தந்தான்.

ஜாதி எனும் பெயரால் மனிதனை மனிதன் இழிவு செய்யும் நிலை மாற வேண்டும் என்று தான் பிறந்த சமூகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டினான் எம் தனிக்கவி.

வாழ்க்கை வறுமை எனும் பெயரால் அவன் மீது வீசிய சவால்களைத் தமிழ் எனும் தன் தாய்மொழியின் துணை கொண்டே தகர்த்தெறிந்தான்.

அவனுடைய கவிதைகள் ஒவ்வொன்றும் எம்மை நாமே புடம்போட்டுக் கொள்ள உதவும் என்பதே உண்மையாகும். பிறந்தோம், வாழ்ந்தோம்,மடிந்தோம் என்பது மட்டுமா எமது சரித்திரமாக வேண்டும்? எனும் கேள்விக்கணைகளினால் எம்மைத் துளைத்தெடுத்து சிந்திக்கத் தூண்டியவன்.

220px-Subramanya_Bharathi

இதோ,

தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் உழன்று கொண்டிருக்கும் என் மனதில் எண்ண அலைகளில் உற்பத்தியாகி அவற்றின் வழி என் தாய்மொழியாம் தமிழை சுவாசிக்கப் பண்ணிய அற்புதத் தமிழ்த் தலைமைந்தன் பாரதியாரின் பிறந்தாளில் உங்களோடு இணைந்து அவனை நினைந்து கொள்கிறேன்.

மலரட்டும் மகாகவியின் நினைவுகள்

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *