-செண்பக ஜெகதீசன்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல். (திருக்குறள்-279: கூடாவொழுக்கம்)

புதுக் கவிதையில்…

நேரான அம்பு
நோகடிக்கும் புண்படுத்தி,
வளைந்திருந்தாலும் யாழ்தரும்                yazh_fish
இனிய இசை…

இதுபோல்தான் மாந்தர்கள்,
அவர்தம்
செயலின் தன்மையறிந்து
சேர்ந்திடு அவருடன்…!

குறும்பாவில்…

அம்பு நேரானதானாலும் ஆபத்து,
வளைந்திருந்தாலும் யாழ்தரும் இன்னிசை,
செயல்திறன் பார்த்து சேர்ந்திடு மனிதரிடம்…!

மரபுக் கவிதையில்…

நேராய் அம்பது இருந்தாலும்
நோவைத் தந்திடும் புண்படுத்தி,
ஏராய் வடிவில் வளைந்திருந்தும்
இனிய இசைதரும் யாழதுவே,
பாராய் மனிதரில் பலவகையே
பார்க்கும் உருவதை நம்பிடாதே,
ஆராய்ந் தறிந்திடு செயல்திறனை
அதன்பின் சேர்ந்திடு அவருடனே…!

லிமரைக்கூ…

புண்படுத்திடும், அம்பது இருந்திடினும் நேராய்,
வளைந்த யாழதும் இசைதரும்,
மாந்தருடன் சேருமுன்னவர் செயல்திறம் பாராய்…!

கிராமிய பாணியில்…

தெரியாது வெளிய தெரியாது
நல்லது கெட்டது தெரியாது…
நேராயிருக்க அம்புதானே
நெஞ்சக்குத்திக் கிழிச்சிப்புடும்,
வளஞ்சிருக்க யாழுலதான்
வருமே நல்ல சங்கீதம்…

இந்தக்கததான் மனுசங்கிட்ட,
உருவத்தப்பாத்து ஏமாறாத
ஆளப்பாத்து அசந்துடாத,
அவஞ்
செய்கயநல்லா ஆராஞ்சி
சேந்துக்கநீ அவங்கிட்ட…

தெரியாது வெளிய தெரியாது
நல்லது கெட்டது தெரியாது…!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(50)

  1. மரபுக்கவிதையில் வார்த்தைகள் விளையாடி இருக்கின்றன.அருமை.

  2. வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த 
    நண்பர் அமீர் அவர்களுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *