டிசம்பர் 22, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு எழுத்தாளர் வையவன் அவர்கள் 

வையவன் படம்

 

வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் வல்லமையின் நலம்விரும்பிகளில் ஒருவரும், இந்த வாரம் தனது பவளவிழாவைக் கொண்டாடவிருக்கும் எழுத்தாளர் திரு.வையவன் அவர்கள். இவரை வல்லமை விருது தேர்வுக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் அறிவியல், இலக்கிய எழுத்தாளரான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

எழுத்தாளர் வையவன் என்ற பெயரில் அறியப்படும் திரு. எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். இவரது முத்தாத்தா முருகையா அவர்களின் பெயரை வைக்குமாறு அவரே ஆசீர்வதித்ததன் காரணமாக ‘முருகேசன்’ என்று அழைக்கப்பட்டார். எழுத்துலகில் இவர் நுழையும்பொழுது இவர் தானே விரும்பிச் சூட்டிக்கொண்ட வையவன் என்ற பெயரில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது தந்தையிடம் இருந்து படிக்கும் பழக்கத்தையும், தாயிடம் இருந்து கதை சொல்லும் கற்பனைத் திறத்தையும் பெற்றார்.

பள்ளி நாட்களில் “தமிழொளி” என்ற இதழின் ஆசிரியப்பொறுப்புகளை ஏற்று அந்த இதழில் கட்டுரைகளும், சிறுகதைகளும், தலையங்கங்களும் எழுதினார், தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இவரது முதல் சிறுகதை 1956 ஆம் ஆண்டு ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பதில் தொடங்கி, ஜமுனா, ஜங்க்ஷனிலே ஒரு மேம்பாலம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி என்று தொடர்ந்து பத்து புதினங்களையும், பத்து குறும்புதினங்களையும், வெளியிட்டுள்ளார். அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலான அவரது படைப்புகளின் மையக் கருத்தாகக் கொண்டு எழுதியும் வந்துள்ளார். இவரது படைப்புகளில் இவர் கையாண்ட சமுதாயக் கண்ணோட்டதிற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டவருமாவார். இவரது ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற முதல் புதினம் தமிழக அரசின் பரிசையும், இரண்டாவது புதினம் ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருதையும் வென்றன.

தனது பதின்ம வயதில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து சற்றொப்ப 60 ஆண்டுகளாக எழுதுவதை தனது கடமையாகக் கொண்டு வருகிறார். இதுவரை 1000 த்திற்கும் அதிகமாக படைப்புகளை சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களிலும் உருவாக்கியுள்ள வையவன் அவற்றில் நூறு படைப்புகளை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இவருடைய படைப்புகள் தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளான குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் படைப்புகளில் மாணவர்களுக்காக இவரெழுதிய நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும், கவிதைகளும் அடங்கும்.

பற்பல தொழிலில் அறிமுகம் கிடைத்து பற்பல வேலைகளைச் செய்தாலும், மலேரியா ஒழிப்பு திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, இவரது மேலாளர் இவரது எழுத்துப்பணிக்கு கண்டனம் தெரிவித்த பொழுது, தனது எழுத்தார்வத்திற்கு ஆசிரியத் தொழிலே ஆக்கபூர்வமாக உதவும் என்று எண்ணி ஆசிரியப்பணியில் சேர்ந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு முதுகலை பட்டங்கள் பெற்றுள்ள வையவன், ஆசிரியப்பணிக்கான பட்டங்களும் பெற்று சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் 33 ஆண்டுகள் ஆசிரியப்பணியாற்றினார். பணி ஓய்விற்குப் பிறகு தனது முழு நேரத்தையும் இலக்கியப்பணிக்காக அர்ப்பணித்துள்ளார். மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளும் நன்கறிந்த வையவன் அவர்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலை ‘ஒரு காதல் டைரி’ (2001) என்றும், பிற மலையாள எழுத்தாளர் படைப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய “மகாபலியின் மக்கள்”(1982) என்ற கேரளாவையும், கேரளமக்களையும் பற்றிய கட்டுரைத்திரட்டு நூல், பிற மாநிலம் பற்றி எழுதப்பட்ட சிறந்த நூல் என்ற பிரிவில் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.

வையவன் படம்0

சிறந்த இலக்கிய விமர்சகரான வையவன் அவர்கள் ‘ஜெகசிற்பியன் ஒரு பார்வை’ (1987), ‘மகாகவி’ (1993) என்ற இலக்கிய விமர்சக நூல்களையும் எழுதியுள்ளார். இவரது மகாகவி நூல், பாரதியைப் பற்றிய பல புதிய பரிமாணங்களை முன் வைத்ததால் ஒரு சிறந்த நூல் என்று தேர்வு செய்யப்பட்டு அமுதசுரபி-ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதியின் மீது எழுதப்பட்ட சிறந்த நூல் என்று ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் பாரதி பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து வழங்கிய விருதையும் பெற்றது. இவரது “Nation builder Nehru” மற்றும் “Loving Animals” ஆகிய ஆங்கிலநூல்கள் ‘இந்திய அரசின் கரும்பலகைத் திட்டம்’ (Blackboard Scheme of Government of India) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. லவ்விங் அனிமல் நூல் விலங்குகளின் நலத்தினைப் பேணும் முக்கியத்துவத்தை முன்வைத்ததால் அத்துறை அமைச்சரின் பாராட்டையும் பெற்றது. “நிசப்த கோபுரம்”(1995), “வெடி வாழைப்பூ”(1999) என்ற கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

வையவன் படம் 01

‘ஆனந்த பவன்'(1998) , ‘இடிபாடுகள்'(2001) என்ற நாடங்களையும் இவர் எழுதியுள்ளார். ஆனந்தபவன் நாடகம் ஸ்டேட் வங்கியின் சிறந்த நாடகம் என்றப் பரிசினைப் பெற்றது. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்று சோழா கிரியேஷன் தயாரித்த ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற குறும்படத்திற்கு கதை வசனத்தையும் எழுதியுள்ளார் வைரவன். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், பிறமொழிகளின் மொழிபெயர்ப்பு, கவிதை, கதை, கட்டுரைகள், புதினங்கள், பல இணையதளங்களில் வலைப்பூ கட்டுரைகள் என எழுதி வரும் வையவன் அவர்களின் எழுத்துக்களில் சிலவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு,  இளநிலை, முதுநிலை ஆய்வுக்கட்டுரைகளும், முனைவர் ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தனது பணியைப் பற்றிய பெருமைகளையும் விருதுகளையும் பொருட்படுத்தாத வையவன் அவர்களின் கருத்து:

‘Fruits I prefer; not fanfare and fireworks. When compared to the pioneers and literary personalities I am nothing; just another beginning. That’s all.’

Manavaalan.pmd

அரசின் “அறிவொளி” திட்டத்தின் செயல்பாடான மாற்றுக்கல்வி வளர்ச்சியில் பங்குபெற்று பலமாநிலங்களுக்கும் சென்று மாற்றுவழிக்கல்வி பற்றிய நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் தன்னை உட்படுத்திக் கொண்டமைக்காக “மால்கம் ஆதிசேஷய்யா” விருது பெற்றுள்ளார். கல்விப் பணிக்காக ‘ஐக்கியா டிரஸ்ட்’ (‘Aikya’ – Amalgamaetion of Indigenous Knowledge for Youtful Action) என்ற அறக்கட்டளையை உருவாக்கி பள்ளிப்படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதில் உதவி வருகிறார். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகளை அறிமுகப்படுத்தியும், பணிகளும் செய்து வருகிறார். அவரது மகளின் பெயரில் துவக்கப்பட்ட “தாரிணிப் பதிப்பகம்” என்ற பதிப்பகம் மூலம் நூல்களை வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

நமது வல்லமை மின்நிதழுடன் இணைந்து சிறுகதைகள் போட்டியொன்றை 2013 ஆண்டு நடத்தி, வெற்றிபெற்ற சிறுகதைகளை “வல்லமைச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் அவரது தாரிணிப் பதிப்பகம் மூலம் நூலாக வெளியிட்டு, வல்லமையாளர்களுக்குப் புத்தகப் பரிசுகள் அனுப்பி வளரும் பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.

பொதுத்தொண்டில் உள்ள ஆர்வம் காரணமாக கவிஞர் ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அவர்கள் துவக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் “ஹார்ட் பீட் டிரஸ்ட் அறக்கட்டளை” வளரவும் உதவி வருகிறார். அந்த அறக்கட்டளையின் “இதயத்துடிப்பு” என்ற செய்தி மடலை அறக்கட்டளையின் சார்பாக வெளியிடவும் உதவி வருகிறார்.

இடையீடின்றித் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் திரு. வையவன் அவர்களின் பணிகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்திப் பாராட்டி, பவளவிழா கொண்டாடும் இவ்வார வல்லமையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறோம்.

வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள தகவல் …
திரு. வையவன்
தாரிணி பதிப்பகம்
பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்
32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை
அடையாறு, சென்னை – 600020
மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com
தொலைபேசி: 9940120341
வலைப்பூ “இணையவெளி “: http://innaiyaveli.blogspot.com/
கூகுல் ப்ளஸ்: https://plus.google.com/102825432314914852934/about

தகவல்கள் வையவன் அவர்கள் பற்றிய சாகித்திய அகாடமி வெளியிட்ட ஆங்கிலக்குறிப்புகள் கொண்ட வலைப்பூவிலிருந்தும், வையவன் அவர்களின் வலைத்தளப் பதிவுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டன.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. பவள விழா நாயகர், வல்லமையாளர் வையவன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள். அவரது புகழும் பணிகளும் மேன்மேலும் சிறக்கட்டும். வையவன், நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.

  2. அகவை அறுபதை அடையும் மனிதர்..
    ஆற்றிய பணிகள் ஆயிரம்.. ஆயிரம்..
    எதையும் எண்ணிச் செய்யும் இதயம் 
    ஏற்றம் பெறுவது உறுதியாகும் ..
    மொழியில் கனிந்த ஆர்வம்..
    படைப்புகளாக மாறும்…
    தொடரும் சேவைகள் கண்டு..
    வியத்தலே இங்கு உண்டு..
    நாட்டுக்காக உழைக்கும் 
    நல்லோருக்காக குரல்கொடுத்து 
    நாளும் பொழுதும் இவரின் 
    பேனா புரண்டதைக் காணின் 
    வையவன் வாழ்க்கை முழுமை 
    வையகத்திலே அமைய..
    பவள விழாவும் வருகிறது 
    பாராட்டுகள் பலவும் குவிகிறது 
    வல்லமையின் சார்பில் இன்று 
    வல்லமையாளர் விருதும் 
    வழங்கிச் சிறப்பித்தல்..
    வாழ்க.. வளர்க.. வெல்க..
    என்றே வாழ்த்திட வைக்கிறது.. பாரீர்…

    அன்புடன்..
    காவிரிமைந்தன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *