ஆனந்த விகடன் – நான் படித்த பள்ளிகளுள் ஒன்று

1

பி. சுவாமிநாதன்

abs

1987-ல் துவங்கி 2009 வரை 22 வருடங்கள் இங்கே பணி புரிந்தேன் என்பதை விட பயின்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். ப்ரூஃப் ரீடராக பணியைத் துவக்கி, இதழாசிரியர் வரை நான் இங்கே உயர்ந்தேன் என்றால், அதற்கு ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னை அடையாளம் கண்டு, என் உயர்வுக்கு வித்திட்டவர் அவர்.

அத்தகைய பள்ளியின் ஆசான் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் இறை ஜோதியில் கலந்து விட்டார்.

திறமை உள்ள பலரையும் கண்டுபிடித்து அவரை மென்மேலும் ஊக்குவிக்கும் குணம் கொண்டவர் திரு. பாலசுப்ரமணியன். அந்த வகையில் விகடன் பட்டறையில் ஜொலித்தவர்கள் அதிகம்.

விகடன் பவழ விழா மலர் (1926-2002), விகடன் தீபாவளி மலர் 2003, அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் போன்ற சவால் நிறைந்த மலர்களைத் தயாரிக்கும் மாபெரும் பொறுப்பை ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் எனக்கு வழங்கினார். இந்த மூன்று மலர்களையும் அவரது மேற்பார்வையில் தயாரித்தேன்.

இதில் குறிப்பாக பவழ விழா மலர் மற்றும் அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் தயாரிப்புகளின்போது ஆசிரியர் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த மலர் தயாரிப்புப் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பது பற்றி அவருக்கு நான் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

abs3

அமரர் எஸ்.எஸ். வாசன் மலர் தயாரிப்பின்போது சில பேட்டிகளைத் தயார் செய்ய ஆசிரியரின் அனுமதியின்பேரில் மும்பை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிரபல இந்தி நடிகர் திலீப்குமார், இயக்குநர் ராமானந்த் சாகர், டாக்டர் சுசீலா ராணி படேல் (‘மதர் இந்தியா’ இதழின் ஆசிரியர் பாபுராவ் படேலின் மனைவி), எடிட்டர் உமாநாத் போன்ற பிரபலங்களை மும்பையில் பேட்டி கண்ட நாட்கள் என் நெஞ்சில் இருந்து நீங்காதவை.

பிரபல இந்தி நடிகர் திலீப்குமாருடன் அப்போது நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்துள்ளேன். எங்களுக்கென ஸ்பெஷலாக சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை வரவழைத்து விருந்து தந்தார்.

அமரர் எஸ்.எஸ். வாசன் மலரில் வெளியாவதற்கென்று பிரபலமான மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கட்டுரை தந்திருந்தார். பிரபல எழுத்தாளரான அவர் தந்த கட்டுரை ஆசிரியர் தீர்மானித்திருந்த பக்க அளவைத் தாண்டி விட்டது. அந்தக் கூடுதல் பக்கங்களை நானே எடிட் செய்து ஆசிரியரிடம், ‘சார்… இந்தக் கட்டுரைக்கு இத்தனை பக்கம் என்று தீர்மானித்துள்ளோம். ஆனால், இது ஒரு சில பக்கங்கள் கூடுதலாகப் போகிறது. எனவே, இதை எடிட் செய்துள்ளேன்’ என்றேன் பவ்யமாக.

ஆசிரியருக்குக் கோபம் வந்து விட்டது. ‘பிரபலமான அந்த எழுத்தாளரின் எழுத்திலே நீங்கள் எப்படிக் கை வைக்கலாம்? மிகவும் சீனியர் அவர். அவருடைய எழுத்தை எடிட் செய்யக் கூடாது’ என்று சொன்னவர் அடுத்த விநாடி என்ன தோன்றியதோ தெரியவில்லை… ‘அந்த ஆசிரியரின் எடிட் செய்யாத பேட்டியையும், நீங்கள் எடிட் செய்த பேட்டியையும் எனக்குக் கொடுங்கள்’ என்றார்.

abs1

ஆசிரியர் சொன்னபடியே அவற்றை அவரது டேபிளுக்கு அனுப்பினேன். இரண்டு மணி நேரம் கழித்து என்னை அழைத்தார். ‘நீங்கள் கச்சிதமாக எடிட் செய்திருக்கிறீர்கள். இப்போது இந்தப் பேட்டி நன்றாக உள்ளது’ என்று என்னைப் பாராட்டினார்.

கோபத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் கோபத்தைக் காட்டினாலும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டத் தயங்காதவர் எங்கள் ஆசிரியர் – ஆசான் எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள்.

அவரது மறைவைக் கேட்டதும் அவருடன் பழகிய நாட்கள் நினைவுக்கு வந்து, பல சம்பவங்கள் என் நெஞ்சில் நிழலாடின.

மனிதருள் ஒரு மாணிக்கமாக விளங்கியவர் அவர்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆனந்த விகடன் – நான் படித்த பள்ளிகளுள் ஒன்று

  1. இதழியல் உலகில் தனி முத்திரை பதித்தவர் எஸ்.எஸ்.பாலன். மாணவப் பத்திரிகையாளர்களை உருவாக்கியதன் மூலம், தலைமுறை தோறும் அவரது பங்களிப்பு தொடர்கிறது. விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

Leave a Reply to அண்ணாகண்ணன்

Your email address will not be published. Required fields are marked *