தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 15

0

இன்னம்பூரான்

 

சமஷ்டி ஆராதனை

2011  ஜூலை மாதம் 13ம் தேதி அன்று, வரலாறு காணாத வகையில் ஒரு சமஷ்டி ஆராதனை நடந்தது. கச்சா எண்ணெய் கசியுதோ இல்லையோ, அது சம்பந்தமான வரைவு தணிக்கை அறிக்கை கசிந்து விட்டது என்று சொல்லி ஊடகங்கள் புகுந்து விளையாடின. கச்சா எண்ணெய் அமைச்சரகம் கச்சை கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்க முடியவில்லை. இக்கட்டான நிலை. ஒரு கோர்ட் கதை ஞாபகம் வரது. புருசன் அடிக்கிறான் என்று விவாகரத்து கேஸ். இவனோட வக்கீல் பெரிய கை. பலமா சாட்சி வைத்திருக்கிறார். அவளோட வக்கீல் ப்ராக்டிகல்.  இவனை சாட்சிக் கூண்டில் நிற்க வைத்து, சத்திய பிரமாணம் வாங்கி, கேட்கிறார், ‘நீங்கள் மனைவியை அடிப்பதை எப்போது நிறுத்தினீர்கள்?’ இருதலை கொள்ளி நிலை. என்ன பதில் சொன்னாலும் மாட்டிப்பான். அதுதான் இந்த அமைச்சரகம் நிலைமை. ஆடிட் பண்ணுங்கோ என்று வினயமாக கேட்டதும் இவர்கள். ஆகஸ்ட் 2010லேருந்து பதில் சரியாக கொடுக்காமல் இழுத்து அடிப்பதும் இவர்கள். ஆடிட்டர் ஜெனெரல் திட்ட வட்டமாக சொல்லி விட்டார், கசிவுக்கு அவருடைய துறை காரணமில்லை என்று, பொருத்தமாக. போதாக்குறைக்கு, ஸீ.பீ.ஐ. விரட்டுகிறது. பிரதமரிடம் போய் பதிலளிக்க அவகாசம் கேட்கிறார்கள். அதைக் கொடுத்தால், ஆடிட் ரிப்போர்ட் நாடாளுமன்றத்துக்கு வரத் தாமதம் ஆகும். திரு.முரளி மனோகர் ஜோஷியின் பொதுக் கணக்குக் குழுவின் தலைமை காலாவதி ஆகி விட்டால், தண்டன கட்டலாம் என்று பார்க்கிறார்களா என்று விசாரிக்கிறார்கள். இதற்கு நடுவில் ரிலையன்ஸ் என்னென்னமோ சொல்லிப் பார்த்தது; ஆனால் எடுபடவில்லை.

இந்த சூழ்நிலையில், 2011, ஜூலை மாதம் 13ம் தேதி அன்று, ஒரு சமஷ்டி ஆராதனை. ரிலையன்ஸ், கைர்ன் இந்தியா, பிரிட்டிஷ் காஸ் என்ற தனியார் கூட்டாளிகளும், அரசின் இத்துறைத் தலைவரும் ஆடிட்டர் ஜெனரலைக் கண்டு பேசினர். பக்கம், பக்கமாக, பதில்கள் பல அளித்தனர்.

பாயிண்ட்ஸ்:

ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு செலவுகளை $2.4 பில்லியன் டாலர்களிலிருந்து, $8.8 பில்லியன் டாலர்களாக ஏற்றியதின் பின்னணி; உலகளவில் ஒப்பிட்டால், நாங்கள் அதிகப்படியாக கேட்கவில்லை எனலாம் என்ற பொத்தாம் படை பதில், ரிலையன்ஸிடமிருந்து, என்று ஊடகச் செய்தி. ரிலையன்ஸ் தகவல் கொடுக்கவில்லை, ஊடகத்துக்கு. அந்த கம்பெனி அதிகாரி பீ.எம்.எஸ். பிரசாத் ஒரு 250 பக்க விளக்கம் அளித்தாராம்.

பிரிட்டிஷ் காஸ், இங்கிலாந்து கம்பெனி. அவங்களுக்கு தணிக்கை விதிகள் தெரியும். எனவே, ‘ஆடிட்டின் பரிசுத்தம் அறிவோம்.’ என்று சாக்கிரதையாக பேசியுள்ளார், அந்த கம்பெனியின் அதிகாரி வால்டர் சிம்ஸன்.

கைர்ன் கம்பெனியின் அதிகாரி இந்தர்ஜித் பானர்ஜி  அரை மணி நேரம் விளக்கம் அளித்தாராம்.

தலைமை தணிக்கை அதிகாரியை தனித்து பார்த்து, அரசு அதிகாரி திரு.எஸ்.கே. ஸ்ரீவத்ஸவா, 200 பக்கமுள்ள விடைத் தாள் கொடுத்தாராம்.

அவர் ஆடிட் ஊகங்கள் தவறு என்றும், செலவுகள் நடந்த பிறகு, உள்ளது உள்ளபடி செய்யப்போவதால், அரசுக்கு நஷ்டமாகாது என்றாராம். (எனக்கு, இது புரியவில்லை.)

ரிலையன்ஸ் கம்பெனிக்காரங்க, நாங்கள் ஏமாற்றமாட்டோம் என்றார்களாம்.

ஒரு செயல் நடக்கும் முன் தோராயமாக நாங்கள் சொன்னதை, செயல் நடந்தபின் கிடைத்தத் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்யலமா என்றார்களாம். இது என்னுடைய சொல்லாக்கம். அவர்கள் இதையே எப்படி சொன்னர்களோ?

மடியிலெ கை போடறமாதிரி, ஆடிட் டிப்பார்ட்மண்ட், செயல்களை திறானாய்வு செய்வது (performance auditing), எல்லை மீறிய செயல் என்றார்களாம். அடேங்கப்பா!

ஒரு நுட்பம் நோக்கவேண்டும். ரிலையன்ஸ் ஆறு மாதங்கள் எட்டு அதிகாரிகள் எங்களை ஆடிட் செய்தனர் என்றனராம். இந்த பதில்களை அப்போது கொடுத்தார்களா, தெரியவில்லை.

ஆக மொத்தம், தாமதமாக வந்த இந்த 500 பக்க பதில்களை ஆராய்ந்து ஆடிட் ரிப்போர்ட் பார்லிமெண்ட்டுக்கு வர இரண்டு மாதங்கள் ஆகலாம். வரப் போகும் சபையில் அது தாக்கலாவது துர்லபமே.

சமஷ்டி ஆராதனை என்று பெயரிட்டதற்குக் காரணம், ‘ ஆடிட்டை தூர விலக்கி வைப்பவர்கள், சமஷ்டியாக ஆராதனைக்கு வந்தது. அதுவும் முதல் தடவையாக.

என்ன நடக்கிறது பார்க்கலாம்.நால்வர் அளித்த பதில்களும் கசியத் தொடங்கி விட்டன, பூஜை வேளையில் கரடி புகுந்தாற் போல். ‘கசிவு’ மன்னர்கள் யாவர்?”

 

(தொடரும்: அடுத்த பத்தி வரை)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *