என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 38

0

சு. கோதண்டராமன்

ருதம் என்பது என்ன?

மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் மூன்றாவதான ‘ருதம்’ என்ற சொல், ரிக் வேதத்தில் 600 தடவைகளுக்கு மேல் வருகிறது.
அகராதியில் ஸத்யம், ருதம் என்ற இந்த இரண்டு சொற்களுக்கும் உண்மை என்றே பொருள் சொல்லப்படுகிறது. ஸத்யமும் ருதமும் ஒன்றா என்றால் இல்லை.

பரிஷேசன மந்திரம் “ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன்” என்கிறது. வேத இலக்கியத்தில் ருதம் வரும் இடங்களில் எல்லாம் ஸத்யமும் கூடவே வருகிறது.

ருதம் வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி
ருதம் அவாதிஷம், ஸத்யம் அவாதிஷம்
ருதம் ஸத்யம் பரம் ப்ரம்ம

ருதத்தை அனுசரித்து, அங்கிரஸ்கள் ஸத்யத்தை அடைந்தனர். (5.45.7)
மருத்துகள் ருதம் வழியாக ஸத்யத்தை அடைகின்றனர். (7.56.12)
கடும் தவத்தின் விளைவாக ருதமும் ஸத்யமும் தோன்றின. (10.190.1)
மேற் கண்ட மந்திரங்களிலிருந்தும் ருதமும் ஸத்யமும் வேறு வேறு

பொருள் கொண்டவை என்பதும் அவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்ட இரட்டைகள் என்பதும் தெரிகிறது.
ருதம் என்பதன் அடிப்படைப் பொருள் இயற்கை நியதி என்பது. அதைத் தெரிந்து கொள்ள அச் சொல் பயன்படும் எல்லா இடங்களையும் தொகுத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்ததால் கிடைத்த முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

ரிஷிகளுக்கு வியப்பை ஊட்டிய மூன்று விஷயங்கள் ருதம் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.

ஆறுகள்

ஆறுகள் ஆண்டாண்டு காலமாக இடைவிடாமல் குறிப்பிட்ட திசையிலேயே ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை ஒரு போதும் திசை மாறி, அதாவது கீழிருந்து மேலாக, ஓடுவதில்லை. தன்னிடமுள்ள நீரைக் கடலில் சேர்ப்பதால் அவை வற்றுவதில்லை. எவ்வளவு நீர் வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அது தன் நீரை ஆவியாக்கிக் கொடுத்து விடுகிறது. ஆவியாவதால் கடல் வற்றுவது இல்லை. புதிய புதிய மேகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேகங்கள் தன்னிடமுள்ள நீரைப் பொழிந்து கொண்டிருக்கின்றன.

இது ருதத்தின் வேலை என்று ரிஷிகள் நினைக்கிறார்கள். அதனால் ஆறுகளை ருதாவரி என்று அழைக்கிறார்கள். ஆறுகள் கொண்டு வரும் நீரையும் அதற்குக் காரணமான மழையையும் மேகத்தையும் ருதம் என்றே அழைக்கின்றனர்.

ஆறுகள் தங்கள் வெள்ளப் பெருக்கில் ருதத்தைக் கொண்டு வருகின்றன. (1.105.12)

“மேகம் எப்பொழுதும் தாவரங்களுக்கு நீர் தந்து கொண்டிருக்கிறது. அதனிடத்தில் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றின் உயிரும் இருக்கிறது. அதுதான் ருதம். (7.101.6)

ருதத்தின் காரணமாக தெய்விக ஆறுகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. (4,3.12)

சவிதாவிற்காகவோ இந்திரனுக்காகவோ ஆறுகள் நிற்பதில்லை. அவை ஓடத் தொடங்கி எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?(2.30.1)

ஆறுகள் வருணனின் ருதத்தால் ஓடுகின்றன. அவை நிற்பதில்லை, ஓய்வெடுப்பதில்லை. (2.28.4)

ஆறுகள் எவ்வளவு வெள்ளம் கொண்டு வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அதற்குக் காரணமான சிறந்த அறிவுடைய அந்தத் தேவனின் மாயா சக்தியை ஒருவரும் தடுக்க முடிந்ததில்லை. (5.85.6)

இடையறாத இயக்கமும், அதில் காணப்படும் ஒழுங்கு முறையும், தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையும் ருதத்தின் பண்புகள் ஆகும்.

சூரியன்

விண் வெளியில் சூரியன் இடைவிடாமல் இயங்கி இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துக்கு முன் உஷை தோன்றி உயிரினங்களைச் செயல்படத் தூண்டுகிறாள். நம்முடைய முன்னோர் பலர் இதைப் பார்த்துச் சென்று விட்டனர். நம்முடைய சந்ததியினர் பலர் இதைக் காணப் போகிறார்கள். ஆதி அந்தம் இல்லாத, இடையறாத இந்த சூரிய உதயம் ரிஷிகளுக்கு ருதத்தின் அடையாளமாகத் தோன்றுகிறது. அதனால் சில சமயங்களில் சூரியனை ருதம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர். உஷஸ் ருதாவரீ (ருதத்தோடு கூடியவள்) எனப்படுகிறாள்.

கீழ்க்கண்ட மந்திரங்களைக் கவனியுங்கள்.

ருதத்தால் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொண்டு உஷஸ் உலகம் முழுவதும் உறங்கும் மக்களை, பறவைகளை, மிருகங்களைத் துயிலெழுப்பிக் கொண்டு பயணிக்கிறாள். (4.51.5)

கிழக்கே உஷஸ் தோன்றுகிறாள். அவள் ருதத்தின் பாதையைப் பின்பற்றுகிறாள். அவள் ஒரு போதும் தவறுவதில்லை. (1.124.3)

உலகம் தோன்றிய நாள் பற்றி உஷஸ் அறிவாள். அவள் ருதத்தை மீறுவதில்லை. நாள் தோறும் குறித்த இடத்துக்கு வந்து விடுகிறாள்.(1.123.9)

ருதத்தின் பாதை கிரணங்களால் அமைக்கப்பட்டுள்ளது. (1.136.2)

வருணன் சூரியனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளின் அலைகளை உண்டாக்கினார். ருதத்தை அனுசரித்து அவர் இரவையும் பகலையும் பிரித்து வைத்தார்.(7.87.1)

ருதத்தின் அடிப்படையில் உஷையை முன் தள்ளிக் கொண்டு விண்ணிலும் மண்ணிலும் சூரியன் தோன்றினார். மித்திர வருணர்களின் அற்புதச் செயலை அவர் நிறைவேற்றினார். (3.61.7)

ருதத்திலிருந்து தோன்றியது ருது. பருவ காலங்கள் குறித்த நியதிப்படி ஆண்டு தோறும் வந்து செல்வதால் அவை ருது எனப்படுகின்றன.
இடையறாத இயக்கமும் அதில் காணப்படும் சீர்மையும் ருதத்தின் பண்பு என்பதை இதுவும் உறுதிப்படுத்துகிறது.

பசுக்கள்

ரிஷிகள் கவனித்து வியந்த மூன்றாவது விஷயம் – பசுங் கன்று மாடாக வளர்ந்து இனிய பாலைக் கொடுப்பது. அது வரையில் இல்லாதிருந்த பால் கன்று ஈன்றதும் சுரப்பது அதிசயம். மாடு எந்த நிறத்தில் இருந்தாலும் பால் மட்டும் வெள்ளையாகவே உள்ளது மற்றொரு அதிசயம் என வியக்கிறார்கள்.

கன்றாக இருந்தது பால் கொடுக்கத் துவங்குகிறது. மாடு கறுப்பாக இருந்தாலும் அதன் பால் வெள்ளையாக இருக்கிறது. ருதத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த ருதத்தைப் போற்றுகிறேன். (4.3.9)

தன்னைச் சார்ந்து வாழும் கன்றுக்கு உணவளிக்கும் உந்துதலும் அதற்குரிய வசதிகளும் தானாகவே பசுவுக்கு ஏற்படுகின்றன.
பசு என்பது ஒரு உதாரணம்தான். உண்மையில் எல்லாப் பிராணிகளுக்கும் மனிதருக்கும் இத் தன்மை பொருந்தும்.
எனவே ருதம் என்பது இடையறாத தொடர்ச்சி, சுழற்சி, வளர்ச்சி, ஒழுங்கு முறை, தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் இயல்பு, சார்ந்தாரைக் காத்தல் ஆகியவை கொண்ட இயற்கை நியதியைக் குறிப்பது அறியப்படுகிறது.

ருதத்தின் தாய்மார்கள்

பூமியும் ஆகாயமும் ருதத்தின் தாய்மார்களாகக் கூறப்படுகின்றனர். அவ்வாறே இரவும் பகலும் ருதத்தின் தாய்மார்களாகக் கூறப்படுகின்றனர். இரண்டு தாய்கள் என்பதே பொருந்தாக் கூற்று. இரண்டு ஜோடித் தாய்மார்கள் என்பது முரண்பாடு போல் தோன்றுகிறது அல்லவா?

வேத மொழி நடையின் தனிச் சிறப்பை நாம் அறிவோம். தாய் என்று சொன்னால் அதை அப்படியே நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ருதம் என்னும் கருத்துருவை ரிஷிகளுக்குத் தந்தவை விண்ணும் மண்ணும். அதே போல இரவும் பகலும் உதவியிருக்கின்றன. விண்ணையும் மண்ணையும் உற்று நோக்கி அதில் காணப்படும் ஒழுங்கு முறையைக் கவனித்து ருதம் என்னும் கருத்துருவைப் பெற்றனர் அவர்கள். அதே போல இரவும் பகலும் மாறி மாறி வருவதில் நிலவும் சீர்மை அவர்களுக்கு இதில் ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதைப் புரிய வைத்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *