சனியைப் பிடித்த சனி! – கட்டுரை

2

மு. கோபி சரபோஜி

ravananஇப்ப அவனுக்கு நேரம் சரியில்ல. சனி பிடிச்சு ஆட்டுது. ஏழரைச் சனி நடக்குதாம். அதுனால எதைத் தொட்டாலும் ஏழரை தான்! ஒன்னுமே வெளங்க மாட்டேங்குது. துலங்க மாட்டேங்குது. சனிச் சுழி சும்மா இருக்குமா? அதான் அவனைப் போட்டு சுழட்டியடிக்குது. இப்படியான மிரட்டல்களையும், பயமுறுத்தல்களையும் தனக்கே உரிய அடையாளமாகக் கொண்டிருப்பவர் சனிபகவான். இந்தப் பகவானுக்குப் பலம் மிக்க பகவான்கள் பலர் பயந்து ஓடியிருக்கின்றனர். ஒளிந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சனிபகவானையே ஓட, ஓட விரட்டியடித்த ஒருவர் இருக்கிறார். அவர் தான் அனுமன்!
சனிபகவான் அனுமனிடம் சிக்கி அவஸ்தைப்பட்டதற்கு ஒரு நெடுங்கதை உண்டு. அரக்கர்களின் அரசனான இராவணன் தன் பலத்தால் இறைவனையும் வெல்லும் வலிமை கொண்டிருந்தான். ஒவ்வொருவராக வீழ்த்தித் தன் வெற்றியை நிலை நாட்டி வந்த வேளையில் குபேரனை வென்று அவனுடைய நாடான இலங்கையையும் கைப்பற்றிக் கொண்டான். ஏழேழு உலகங்களையும் வெல்லும் ஆவல் கொண்டிருந்தவனுக்கு பம்பர் பரிசாய் குபேரனின் வாகனமான புஷ்பக விமானம் கிடைத்தது. ஆகாயத்தில் பறக்கும் சக்தி கொண்ட அவ்விமானம் மூலம் உலகம் முழுக்க வலம் வந்தான்.

தன் இயக்கத்தின் மூலம் மனிதர்களுடைய நிலையை, இருப்பை மாற்றியமைக்கும் சக்தி கொண்ட எல்லாக் கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். சாஸ்திரங்களில் வல்லவனான இராவணன் தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளை அனைவரையும் வெல்லும் வலிமை கொண்டவனாகவும், சகல சம்பத்துக்களை பெற்றவனாகவும் இருக்க வேண்டும் என நினைத்தான். அதற்காகத் தன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லாக் கிரகங்களையும் குப்புறத் தள்ளி இயங்காதவாறு அவைகளின் மேல் தன் கால்களை வைத்து அழுத்திக் கொண்டான்.

இராவணனின் இந்தச் செயலால் அவன் நினைத்தபடியே அவனுக்குப் பிறக்கும் குழந்தை இருக்கும் என்பது உறுதியானது. அப்பன் செய்யும் அட்டூழியம் போதாதென்று பிள்ளையும் சேர்ந்து தங்களை இம்சிக்கப் போகிறானே என நினைத்த தேவர்கள் எல்லாக் கிரகங்களையும் சந்தித்து இயக்கத்தின் மூலம் தங்களின் நிலைகளை மாற்றிக் கொள்ளும் படிக் கேட்டனர். காசு கொடுத்தால் மட்டுமே உனக்கு வாக்களிப்பேன் எனச் சொல்லும் நவீன வாக்களனைப் போல உங்கள் கெஞ்சலுக்காக எல்லாம் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றினால் வெற்றி பெற்ற பின் தனக்கு வாக்களிக்காத மக்களை பழி வாங்கும் அரசியல் தலைவர் போல இராவணன் தன் பலத்தினால் எங்களை உண்டு, இல்லைன்னு ஆக்கி விடுவான். அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கிரகங்கள் எல்லாம் மறுத்து கை விரித்து விட சனிபகவான் மட்டும் தன்னுடைய இயக்கத்தை மாற்றிக் கொண்டு அதன் மூலம் இராவணனின் ஆசைக்கு முதல் சங்கை நான் ஊதுகிறேன் என தேவர்களுக்கு உறுதியளித்தார். உறுதியளித்த கையோடு அப்படிச் செய்ய வேண்டுமானால் இராவணன் தன் மீது வைத்து அழுத்திக் கொண்டிருக்கும் கால்களை சிறிது நேரம் எடுக்க வேண்டும் என்று ஒரு கண்டிசனையும் போட்டார். ”கண்டிசன் அப்ளே” (CONDITION APPLY) அப்பவே இருந்திருக்கு!

கண்டிசன் என்னமோ கேட்க நல்லாத்தான் இருக்கு? ஆனால் நடைமுறைக்கு உகந்ததாய் இல்லையே? என தேவர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். உன் காலைக் கொஞ்சம் எடு என இராவணனிடம் போய் கேட்க அவன் நம் தலையை எடுத்து விட்டால் என்ன செய்வது? இதைக் கேட்ட மாத்திரத்தில் நம்மைக் குதறி எறிந்து விடமாட்டானா? என புலம்பித் தவித்தவர்கள் தங்களுக்கு உதவ நாரதரைத் தேர்ந்தெடுத்தனர். அவரைச் சந்தித்து விசயத்தைச் சொன்னார்கள். வளர்த்த அப்பனுக்கு எதிராக மகனையே கொம்பு சீவி விட்டு அவனுக்காகவே திருமாலை நரசிம்ம அவதாரம் எடுக்க வைத்த நாரதரோ அது ஒன்றும் தனக்குப் பெரிய விசயமில்லை. ஒரு சூழ்ச்சி நாடகத்தைப் போட்டாவது நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறி விட்டு நாராயண நாமத்தைச் சொல்லியபடியே இராவணனை வந்து சந்தித்தார். புகழுக்கு அலையும் இராவணனை அந்தப் புகழ் வார்த்தையாலயே வீழ்த்துவது என முடிவு செய்த நாரதர், “அரக்க மகாராஜாவே! போரில் வென்றவன் வீழ்ந்தவர்களின் மார்பில் கால் வைத்து நிற்பது தானே வழக்கம். ஆனால், பெரும் பலசாலியான, வெற்றி வீரனாகத் திகழும் நீங்கள் கிரகங்களை எல்லாம் குப்புற வீழ்த்தி முதுகில் கால் வைத்து நிற்கிறீர்களே! இது உங்களுக்கு அவமானமில்லையா?” எனச் சொன்னதும் இராவணன் எல்லா கிரகங்களையும் திருப்பி போட்டான். அப்படி சனிபகவானை திருப்பிய விநாடி அவர் இராவணனை பார்த்து விட அவனுக்கு கஷ்டகாலம் ஆரம்பமானது. வந்த வேளையை நாசுக்காய் முடித்த நாரதர் வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து கிளம்பினார்.

அச்சமயத்தில் இராவணனின் சகோதரி இராம, இலட்சுமணரிடம் போய் வம்பிழுத்து மூக்கறுபட்டு வந்து நின்றாள். தன் தங்கைக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பழிக்குப் பழி வாங்க முடிவு செய்த இராவணன் அடுத்தடுத்து செய்த செயல்கள் அவனுக்கே தீராத தலைவலியாய் மாறியதால் கடுப்பானவன் இதற்கெல்லாம் காரணமான சனிபகவானை ஒரு இருட்டு அறையில் தள்ளி பூட்டிச் சிறை வைத்தான்.

அச்சமயத்தில் சீதையைத் தேடி இலங்கைக்கு வந்திருந்த அனுமனைக் கட்டி வைத்து வாலில் தீ வைத்து அரக்கர்கள் பொசுக்க நினைத்த போது அவர்கள் வைத்த நெருப்பைக் கொண்டே அரக்கர்களை அழித்த அனுமன் இலங்கை நகருக்கும் தீ வைத்தான். அப்படி தீ வைத்துக் கொண்டு வந்த சமயத்தில் இருட்டறை ஒன்றிற்குள் முனங்கும் சப்தம் கேட்க அதற்குள் நுழைந்த அனுமன் அங்கு எலும்பும், தோலுமாய் கிடந்த ஒரு உருவத்தைக் கண்டு அதிர்ந்து போனார். அழாத குறையாய் நடந்தவைகளைச் சொல்லி தன்னைக் காப்பற்றும் படி சனிபகவான் வேண்டிக் கொள்ள அனுமனும் அவருக்கு உதவினார்.
இனாமாய் கொடுத்த இடத்தை தன் பெயருக்கே பத்திரம் போட்ட கதையாய் தன்னைக் காப்பாற்றிய அனுமனிடம் ”என் பார்வை யார் மீது படுகிறதோ அவர்கள் ஏழரை ஆண்டுகள் கஷ்டப்பட்டே ஆக வேண்டும்” எனத் தான் வாங்கி வந்த வரம் காரணமாக இப்போது என் பார்வை பட்டதால் நீயும் கஷ்டப்பட்டே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறாய் என சனிபகவான் கூறினார். பரமன் இராமபிரானின் பக்தன் நான். உன் கஷ்டம் என்னை ஒன்றும் செய்து விடாது எனக் கூறிய அனுமன் உன் பார்வை பட்டதால் அப்படி என்ன கஷ்டம் எனக்கு வந்து விடப்போகிறது? எனக் கேட்டார். சனிபகவானோ, ”உன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, வீட்டை விட்டு விலகிச் சென்று கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்” எனச் சொன்னதும் சிரித்துக் கொண்ட அனுமன், ”இவ்வளவு அப்பிராணியா இருக்கியே சனிபகவானே! நீ சொல்லும் கஷ்டமெல்லாம் சம்சாரிகளுக்கு. சராசரிகளுக்கு. நானோ பிரம்மச்சாரி எனச் சொன்னதோடு நீ வாங்கி வந்த வரம் அப்படி என்பதால் வேண்டும் போது வந்து என்னை பிடித்துக்கொள்” எனச் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.
சிலகாலம் கழித்து சீதையை மீட்க இராம, இலட்சுமணர் தலைமையில் வானர சேனைகளின் உதவியுடன் இலங்கைக்கு பாலம் அமைக்கும் (சேது அணை) பணியில் அனுமன் பிசியாக இருந்த போது அங்கே வந்த சனிபகவான் தங்களை ஒன்றரை மணி நாழிகை பிடிக்க வேண்டும் எனக்கூறி அனுமதி கேட்டார். அதோடு, தாங்கள் இராமபக்தராக இருப்பதால் நான் பிடிக்க வேண்டிய இடத்தை நீங்களே தேர்வு செய்து சொல்லலாம் எனச் சலுகையும் தந்தார். இன்னைக்கு சிக்குன சனி இனி நம்ம பக்கமே வரக்கூடாது என முடிவு செய்த அனுமன் பல வீடுகளில் கோபத்தால் ஆண்கள் சொல்லும் டயலாக்கைப் போலவே என் தலையில் உட்காரு எனச் சொன்னார். வீட்டு ஆண்கள் திமிரில் சொல்வதை அனுமன் திட்டமிட்டுச் சொன்னார். அடடா……….இவ்வளவு எளிதாக அனுமதி கிடைச்சிடுச்சேன்னு நினைத்த சனிபகவானும் சமர்த்தாக தலையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

அடுத்த நொடி சனிபகவானுக்கு பிடித்தது சனி! அனுமன் அணைகட்டுவதற்கு வேண்டிய பெரிய கற்களையும், வேரோடுimages பறித்த மரங்களையும் தன் தலையில் ஏற்றிக் கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் சங்கடமாக உணர்ந்த சனிபகவானுக்கு நேரம் போகப் போக மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. துடி துடித்துப் போனார். உங்களின் பெருமை தெரியாமல் உங்களைப் பிடிக்க வந்தது என் தப்பு தான். என்னை விட்டு விடுங்கள். உங்கள் பக்கமே இனி தலைவைத்துப் படுக்க மாட்டேன் என அனுமனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.

அப்படியானால் எனக்குக் கொடுத்த இதே உறுதிமொழியை என் பக்தர்களுக்கும் சேர்த்து தருவதாய் உத்தரவாதம் கொடுத்தால் விட்டு விடுகிறேன் என அனுமன் கூறினார். கண்டிசனா? கஷ்டமா? என யோசித்த சனிபகவான் கண்டிசனுக்கு ஒப்புக்கொண்டு உத்தரவாதம் தர தலையில் இருந்தவரை தரையில் இறக்கி விட்டார். அதனால் தான் அனுமனின் பக்தர்களிடம் சனி பகவானின் சால்சாப்புகள் எடுபடுவதில்லை. சனிபகவான் மாதிரி தாங்க நம்மில் பலர் விசயம் தெரிந்தவர்களிடம் தன்னுடைய அரைகுறை ஞானத்தைக் காட்ட நினைத்து தங்களுக்குத் தாங்களே சூடு வைத்துக் கொள்கிறார்கள். சரி…நீங்க எப்படி?
—————————————————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சனியைப் பிடித்த சனி! – கட்டுரை

  1. கதையின் நடை நகைச்சுவையோடு இருந்தது .படிக்க சுவையாகவும் இருந்தது .
    வாழ்த்துகள்

  2. வாசிப்பின் வழியான தங்களின் கருத்துக்கும், வாழ்த்துக்கும்  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *