ஒரு குடும்பத்திற்குப் பத்துக் குழந்தைகள்?

0

நாகேஸ்வரி அண்ணாமலை.

வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிய யூதர்கள் பாலஸ்தீனம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த இடம் என்று கூறிக்கொண்டு அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர்; இன்னும் வெளியேற்றிக்கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாட்டை உருவாக்கி அதை ஆள ஆரம்பிக்கும்போது இஸ்ரேல் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான பென்–குரியன் அந்த நாட்டு ஒவ்வொரு யூதப் பெண்ணையும் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகத்து நாடுகள் அனைத்தும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த முயன்று வரும்போது பென்–குரியன் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இஸ்ரேல் யூத நாடாக உருவாக வேண்டும், அங்கு யூத மதச் சட்டங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று யூதர்கள் விரும்பினர். இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடாக உருவாகும்போது அதில் யூதர்கள் பெரும்பான்மையானவர்களாக இருக்க வேண்டும், அதற்கு அரேபியர்களை வெளியேற்றுவதோடு யூதர்களின் எண்ணைக்கையையும் கூட்ட வேண்டும் என்று இஸ்ரேல் தலைவர்கள் திட்டமிட்டனர். யூதப் பெண்கள் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு வழி என்று நினைத்தனர்.

overpopulation-in-indiaஇஸ்ரேலில் யூதர்களின் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்தது போல் இப்போது இந்துச் சாமியார்கள் எல்லோரும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையைப் பெருக்க நினைக்கிறார்கள். பா.ஜா.வைச் சேர்ந்த எம்.பி. சாக்‌ஷி மகராஜ் ‘இந்துக்கள் அனைவரும் ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இந்த ‘அறிவுரைக்கு’ பிள்ளையார் சுழி போட்டார். அவரையடுத்து மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. பிரமுகர் ஷியாமல் கோஸ்வாமி என்பவரும் ‘இந்துக்கள் ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால்தான் எதிர்காலத்தில் பிற மதங்களுடன் சம நிலை காணப்படும்’ என்று முத்து உதிர்த்திருக்கிறார். பிற மதங்களுடன் சம நிலை காணப்படும் என்று இவர் கூறுவது உலக அளவிலா அல்லது இந்திய அளவிலா? இந்த அறிவுரைகளுக்கும் மேலாக சாமியார் வசுதேவானந்த் ஒவ்வொரு இந்துவும் பத்துக்குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

பத்துக் குழந்தைகளைப் பெற்று அவற்றை என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் தெரியுமா? விவசாயத்திற்கு ஒரு பிள்ளையாம்; அடுத்த நான்கு குழந்தைகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் ராணுவ வீரர் ஆகவும் உள்நாட்டு பாதுகாப்பு வீரர் ஆகவும் சமூகதொண்டர் ஆகவும் மாற வேண்டுமாம். மீதமுள்ள ஐந்து குழந்தைகளை இவரிடம் கொடுத்துவிடவாம். இவர் அவர்களை துறவிகளாகவும் சன்னியாசிகளாகவும் மாற்றுவாராம்! இந்தச் சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க மத குருவான போப் பிரான்ஸிஸ் பிலிப்பைன்ஸில் நடந்த ஒரு கூட்டத்தில் ‘கத்தோலிக்க மதம் கருத்தடைச் சாதனங்களைத் தடைசெய்திருந்தாலும் முயல்களைப் போல் (நாம் கூறுவதுபோல் கூறுவது என்றால் பன்றிகளைப்போல்) பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுங்கள் என்று அர்த்தம் இல்லை’ என்று கூறியிருப்பதை நினைவுபடுத்தலாம்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இந்திய அரசு எவ்வளவோ முயன்று இப்போது கிராமத்து ஜனங்கள் கூட குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதில் உள்ள நன்மையை உணர்ந்து ‘நாம் இருவர். நமக்கு இருவர்’ என்ற கணக்கில் குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இத்தனை காலம் பாடுபட்டு அடைந்த இந்த இலக்கை இந்தச் சாமியார்கள் தங்கள் அறிவுரைகள் மூலம் முறியடித்துவிடுவார்கள் போல் தெரிகிறது.

இந்துக்கள் இந்தியாவில் பெரும்பான்மையராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்களே. இப்போது இந்தியாவில் அவர்கள்தானே பெரும்பான்மையர். இதற்கு மேல் என்ன பெரும்பான்மை வேண்டும்? இவர்கள் யாரைக் கண்டு தாங்கள் சிறுபான்மை ஆகிவிடுவோம் என்று பயப்படுகிறார்கள்? இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்து மதத்திலிருந்து தோன்றியதாக ஒரு சாமியார் கூறியிருக்கிறார். இது என்ன பிதற்றல்? இந்து மதம்தான் மதங்களிலேயே சிறந்தது என்று வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். இந்து மதத்திலிருந்து மற்ற மதங்கள் பிறந்தன என்று கூறி மற்றவர்களின் கேலிக்கு ஆளாக வேண்டுமா?

world-population-growth-forecastபத்துக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் யாருக்கு நன்மை? நாட்டிற்கா? உலக நாடுகளிலேயே ஜனத்தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில் இன்னும் ஜனப்பெருக்கமா? தாங்காது இந்தியா. குஜராத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு முன்னாள் குஜராத் முதலமைச்சர் – இன்றைய பிரதமர் – எத்தனை குஜராத் ஏழைகளை வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தினார்? எவ்வளவு பொருளாதார மேம்பாடுகள் ஏற்பட்டாலும் உயர்த்தப்பட வேண்டிய ஏழைகள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்கள் இப்போது இருக்கும் ஜனத்தொகைக்கே போதவில்லை. இனி ஒவ்வொரு குடும்பமும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் அதிகரிக்கும் ஜனத்தொகையை எப்படிச் சமாளிப்பது? இப்போதே வெளிநாட்டவரிடம் இந்தியாவின் ஜனத்தொகை 1.2 பில்லியன் என்றால் இவ்வளவு பெரிய ஜனத்தொகையை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒவொரு குடும்பமும் பத்துப் பிள்ளைகள் பெற்று இந்தியாவின் ஜனத்தொகை இன்னும் பல மடங்கு பெருகினால் உலகத்தாரின் ஏளனத்திற்குத்தான் ஆளாவோம். உலக வங்கி (World Bank), உலகநிதி மையம் (International Monetary Fund) போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்கு நிதி உதவி செய்வதற்குத் தடை போட்டாலும் போடலாம்.

பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதால் நாட்டிற்கு நன்மை இல்லையென்றால் தனி மனிதனுக்கு நன்மையா? மத்தியதரக் குடும்பங்களில் இரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களுக்குக் கல்வி புகட்டி வேலை தேடிக் கொடுத்து அவர்களை வாழ்க்கையில் செட்டில் ஆக்குவதற்கே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மத்தியதரக் குடும்பங்களிலேயே இப்படி என்றால் ஏழைக் குடும்பங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பத்துக் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்தப் பொறுப்பு ஐந்து மடங்கு ஆகிவிடும். ஒரு குழந்தையை விவசாயம் செய்வதற்கு விட்டுவிட வேண்டுமாம். இப்போது விவசாயத்தில் இருப்பவர்களுக்கே அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இன்னும் சிலர் விவசாயிகள் ஆக வேண்டுமா?

ஒரு குழந்தையை ஐ.ஏ.எஸ். ஆக்க வேண்டுமாம். வீட்டிற்கு ஒரு ஐ.ஏ.எஸ். பதவி வேண்டுமானால் எத்தனை ஐ.ஏ.எஸ். பதவிகளை உருவாக்க வேண்டும். இப்படியே ஐந்து குழந்தைகளுக்கும் வேலை கொடுத்த பிறகு மீதி ஐந்து குழந்தைகளை இந்தச் சாமியார்களிடம் விட்டுவிட வேண்டுமாம். அவர்கள் இவர்களை துறவிகளாகவும் சாமியார்களாகவும் மாற்றுவார்களாம். இப்போதிருக்கும் சாமியார்கள் கூட்டம் போதாதென்று இன்னும் சாமியார்கள் கூட்டத்தை அதிகரிக்கவா? இப்போது உலக அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் இந்தச் சாமியார் கூட்டங்கள் பெருகினால் போய்விடும்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களும் பங்கு வகிக்க வேண்டும் என்பது பற்றி இந்தச் சாமியார்கள் என்ன சொல்கிறார்கள்? பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு வேறு எதற்கு நேரம் இருக்கும்?

இந்துத்வவாதிகளும் இந்துச் சாமியார்களும் அவர்கள் பாட்டுக்கு என்னென்னவோ உளறிக்கொண்டு போகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க வேண்டியது நாட்டின் நலனுக்கும் எல்லா மக்களின் நலன்களுக்கும் பொறுப்பேற்றிருக்கும் பிரதமரின் கடமை அல்லவா? இதையெல்லாம் கண்டும் காணாததுபோல் இருப்பது எதில் சேர்த்தி? இந்துத்வவாதிகளின் பிரச்சாரங்களும் இந்துச் சாமியார்களின் கேலிக் கூற்றுக்களும் இந்தியாவையே நிலைதடுமாற வைத்துவிடாதா? உலகம் முழுவதும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்க இந்தியா மட்டும் பின்னோக்கிச் செல்வதா? பல நாட்டுத் தலைவர்களையும் ஐ.நா. பொதுச்சபையின் தலைவரையும் (இந்தியா மற்ற நாடுகளோடு செய்யப் போகும் வாணிபம் பற்றிய இந்த மாநாட்டில் இவருக்கு என்ன வேலை என்று தெரியவில்லை) குஜராத்தில் கூட்டி இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறேன் என்று சூளுரைத்த மோதியின் முயற்சிகளை இந்தச் சாமியார்களின் உபதேசம் முறியடித்துவிடும் என்பது தெரியவில்லையா? ‘நான் பாட்டுக்கு பொருளாதார வளர்ச்சி, பெருக்கம் (Economic Growth, Development) என்று கூறிக்கொண்டு போகிறேன். இந்துத்வவாதத்தைப் பறைசாற்றுவது உங்கள் பொறுப்பு’ என்று கூறுவதுபோல் இருக்கிறது மோதியின் மௌனம்.

Picture Credits:
http://chandigarhenvis.gov.in/beta/EnvisPdfFiles/nl070912.pdf
http://www.english-online.at/geography/india/india-population-problems.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *