அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம்
நாகேஸ்வரி அண்ணாமலை
இதுவரை உலகம் கண்டிராத ஒரு வெற்றி ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. எந்த நாட்டிலும் எந்தத் தேர்தலிலும் 96 சதவிகித இடங்களையும் 56 சதவிகித ஓட்டுக்களையும் பெற்று ஒரு கட்சி ஜெயித்திருப்பதாகச் சரித்திரம் இல்லை (தனிப்பட்ட ஒரு நபர் ஆட்சியைப் பிடித்துப் பெயருக்குத் தேர்தல்கள் நடத்தி 90 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுக்கள் பெற்றதாகப் பறைசாற்றிக்கொள்ளும் சர்வாதிகார நாடுகளில் தவிர). ஆம் ஆத்மிக்குக் கிடைத்தது பெரிய வெற்றி; பி.ஜே.பி.க்குக் கிடைத்தது பெரிய தோல்வி.
இந்த வெற்றிக்குப் பல அரசியல் விமரிசகர்கள் பலவித விளக்கங்களைக் கூறுகிறார்கள். ‘மோதியின் மேஜிக்’ முடிந்துவிட்டது என்று சிலர் கூறுகிறார்கள். அவர் கட்சியில் யாரையும் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக முடிவுகள் எடுத்தது பலருக்குப் பிடிக்கவில்லை. பல நாட்டுத் தலைவர்களையும் அழைத்துத் தன்னால் அவர்கள் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்று மார்தட்டிக்கொண்டது பாமர மக்களுக்கு எந்தவிதப் பயனும் விளைவிக்கப் போவதில்லை என்பதை ஏழை மக்கள் உணர்ந்துகொண்டார்கள் என்கிறார்கள். பி.ஜே.பி.யோடு சம்பந்தப்பட்ட பல இந்துத்துவவாதக் கட்சிகள் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்து மதத்திற்கு ஏமாற்றி இழுப்பது, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான திருமணங்களை ‘லவ் ஜிஹாட்’ என்ற பெயரில் எப்படியாவது தடுத்து நிறுத்துவது, மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்த இந்தியாவை இந்து நாடாக ஆக்க முயற்சிப்பது போன்ற பல அடாவடிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் மோதி இருந்து வருகிறார். இந்தப் போக்கு ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போல் தெரிகிறது.
மற்றக் கட்சிகளின் தயவில்லாமல் தாங்களாகவே அரசு அமைக்கலாம் என்று இறுமாந்திருக்கும் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் போலும். மோதி பதவிக்கு வந்தவுடனேயே மோதிக்குச் சார்பாக பல பத்திரிக்கைகள் திரும்ப ஆரம்பித்தன. மோதியின் புகழ்பாடுவதே இவர்களுடைய வேலையாகப் போயிற்று. இப்போது மோதியின் செல்வாக்கு ஆட்டம் கண்டிருப்பதால் இப்பத்திரிக்கைகளும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு.
பி.ஜே.பி.க்கு மூன்றே இடங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு டில்லி முதலமைச்சர் என்று அந்தக் கட்சி முன் நிறுத்திய கிரண் பேடியே தோற்றிருக்கிறார். தன் தோல்விக்குக் காரணம் பி.ஜே.பி.யின் கொள்கைகளோ அந்தக் கட்சியின் அடாவடிச் செயல்களோ காரணம் என்று கருதாத கிரண் பேடி தான் தோற்றதற்கு பி.ஜே.பி. தலைமையிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இவர் தோற்றதற்கு இவர் மட்டும்தான் காரணம் என்று கருதுகிறாரா இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி. இது கூடத் தெரியாதா இவருக்கு? தான் இன்னும் என்ன செய்திருந்தால் ஜெயித்திருக்க முடியும் என்று நினைக்கிறார்?
இதுவரை எந்தக் கட்சிக்கும் கிடைத்திராத வெற்றியைக் கண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கு இனிமேல்தான் நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று வாக்குறுதிகள் கொடுப்பது வேறு, அவற்றை நிறைவேற்றிக் காட்டுவது வேறு. உங்களுக்கு ஓட்டளித்த டில்லி மக்கள் அனைவரும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
எதிலாவது உங்களை மாட்டிவைத்து நீங்கள் பதவியைத் துறப்பதற்கு எல்லா உபாயங்களையும் மத்திய அரசு கையாளலாம். அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள். முன்னால் ஆட்சி அமைத்தபோது நடந்துகொண்டதுபோல் சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்யாதீர்கள். டில்லி மக்கள் பூராவுமே உங்கள் பக்கம். அரசு என்ன முடிவெடுத்தாலும் அடிமட்ட மக்களை அதன் பலன்கள் போய்ச் சேருகின்றனவா என்று சிந்தித்துச் செய்யுங்கள். பாரபட்சமின்றி எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையை நிறைவேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்யுங்கள். மக்களுக்குக் கல்வி புகட்டுவதுதான் உங்கள் முதல் கடமை. மக்கள் எல்லோருக்கும் கல்வி கிடைத்து அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அந்த சமூகமே மேம்பாடடையும்.
அடுத்தது மக்களுடைய ஆரோக்கியம் முக்கியமானது. பாமர மக்களுக்கும் அவர்களுக்குத் தேவைப்படும்போது வைத்திய உதவி கிடைக்கச் செய்வது. உங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இருபது அம்சங்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். அதில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதற்கு முன்னுரிமை கொடுங்கள். எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிதானமாக ஒவ்வொன்றாக நிறைவேற்றுங்கள். அரசியலில் நீங்கள் நுழைந்ததற்கே முதல் காரணமான இந்திய அரசியலில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலை முழுவதுமாகக் களைந்து இந்தியாவிற்கே உதாரணமாக விளங்குங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வெற்றி உங்கள் கண்களை மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கட்சி இந்திய அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தால் இந்தியாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை பிறக்கும்.