கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

நாட்டார் பாடல்கள். இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்மத்தியில் இந்தப் பாடல்கள் பிரசித்தி பெற்றவைகளாகும்

ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம்

ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள்.

ஆனால் இன்றைய கால கட்டத்தில்,நாட்டார் பாடல்கள் அன்றைய தலைமுறையு டன்  அழிந்து விடுகின்றது .

 நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.

தற்போது அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்

,இயந்திர மயப்படுத்தல்,

கட்டாயக் கல்வி முறை,

 இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.

தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை  போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.இதோ

கச்சான் அடித்த பின்பு -நடுக்
காட்டில் மரம் நின்றதுபோல்
உச்சியில் நாலு மயிர்-தலை
ஓரம் எல்லாம் வழுக்கை

கண்ணுமொரு பொட்டை-இரு
காதுகளும் செவிடாம்
குருத்தெடுத்த வாழை போல-அவர்
கூன் வளைந்திருப்பார்

முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
மூணு பல்லுத்தான் மீதி
காகக் கறுப்பு நிறம்-ஒரு
காலுமெல்லோ முடமவர்க்கு

நாணற்பூப்போல -தலை
நரைத்த கிழவனுக்கு
கும்மாளம் பூப்போல -இந்தக்
குமர்தானோ வாழுறது

தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
தக தகவென்ற பட்டுடையும்
பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.

அத்தர் புனுகாம்
அழகான பவுடர் மணம்
இஞ்சி தின்ற குரங்குபோல –
இவருக்கேனோ இச்சொகுசு.

பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
பவுசாக நடந்திட்டாலும்
அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
ஆறுநாட் பட்டினியாம்.

சங்கிலியும் தங்கமில்லை –
சரியான பித்தளையாம்
இடுப்பிலேயும் வாயிலேயும்-
இருக்கிறது இரவல் தானாம்…!

இந்த அருமையான அன்றைய பாடல் இன்றைய சினிப்  பாடலை முந்திவிட முடியாது

கிராமியக் கவிதைக்கு  புகழ் பெற்ற இடம்  மட்டக்களப்பு.( கிழக்கு மாகாணம் )

 தேனுக்கும் ,பாலுக்கும்,மீனுக்கும்   ,அன்புக்கும் ,விருந்துக்கும்  அறிவுக்கும் புகழ் பெற்றவர்கள்  மட்டக்களப்பு மக்கள்

கலைகளைபேணி வளர்பதிலும்,  தலைசிறந்து விளங்குகின்றவர்கள்மட்டக்களப்பு மக்கள் .உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து வழங்குகின்றன.

கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் ,வயல்வெளிகளிலும் ,வீடுகளிலும் ,வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும் பெரிது கவனம்இதுவரை  செலுத்தவில்லையென்பது கவலையாகும்

.இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது.

 நாட்டுப்புற பாமரமக்களுக்கும், நகரமக்களுக்கும் ,வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனால்

பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம்.

 நாட்டுப்பாடல்களை படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில் நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.என்ற அச்சம் என்னைப் போன்ற பலருக்கும்  உண்டு

கவி என்னும் சொல் மட்டகளப்பிலே அகத்தினை ,நாட்டுப்பாடல்களைக்குறிக்கும்
சிறப்புசொல்லாக வழங்குகின்றது.

 இக்கவிகளில் அதிகம் ஈடுபாடுடையவர் மட்டக்களப்பு இஸ்லாமிய மக்களே.

 சிறந்த கவிவளைப்பாடவல்லவர் இன்றும் பலர் உளர்.
இத்தகைய உணர்ச்சிமிக்க காதற்பாடல்களாகிய கவிகள் கூற்றுக்குரியோர் பெயராற் காதலன் கூற்றாய் உள்ளவை,

காதலி கூற்றாய் உள்ளவை,

தோழி கூற்றாய் உள்ளவை,

தாயார் கூற்றாய் உள்ளவை,

 நான்கு பிரிவுகளாகஇவை  வகுக்கப்பட்டுள்ளன.

இக் காதற்கவிகள் தமிழிலுள்ள அகப்பொருள் மரபுக்கு மாறாகஇருக்ககூடும்

உதாரணமாகத் தமிழ் இலக்கியத்திற் களவு ஒழுக்கம் பெரும்பாலும் தோழி துணை கொண்டே நடக்கும்.

தலைவி ஒருபோதும் குறியிடம் கூறமாட்டாள். ஆனால் நாட்டுப்பாடலில் தலைவி தானே தலைவனிடம் குறியிடம் கூறும்வழக்கைகாணலாம்.

சந்தன மரத்தை மச்சான்
சந்திக்க வேன்டுமென்றால்
பூவலடிக்கு மச்சான்
பொழுதுபட வந்திடுங்கோ.

கடப்படியில் வந்து நின்று
காளை கனைக்கும் மென்றால்
எங்கிருந்த போதும் நாகு
எழுந்துவர மாட்டாதோ
போன்ற பாடல்கள் தலைவி தலைவனிடம் குறியிடம் கூறுவதைக் குறிக்கின்றன.

மட்டகளப்பில் – மழைவளம் குறைந்து, பசியும் பிணியும் பெருகும் காலத்து கண்ணகி தேவிக்குச் சாந்தி செய்யும் போது கொம்புவிளையாட்டு நடத்தி மகிழ்வர்.

கொம்புவிளையாட்டில் ஊர் முழுவதும் இருகட்சியாகப் பிரியும்.

ஒன்று கோவலன் கட்சி,

மற்றது கண்ணகி கட்சி.

இக்கட்சிகள் வடசேரி, தென்சேரி என்ற பெயர் பெறும்.

இவ்வாறாக பிரிந்து, போட்டியாக ஒரு சேரியார் இன்னொரு சேரைப்பழித்து வசைப் பாடல்கள் பாடுவர்.
பால்போல்நிலவெறிக்கப் படலை திறந்தவன ஆர்தோழி
நான்தாண்;டிவடசேரியான் உனக்கு நழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.
என்பன போன்ற தனி வசைப்பாடல்களும் பல உள.

 இப்பாடல் இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் மண்டூர் ,தமபிலுவில், காரைதீவு, வந்தாறுமூலை, போன்ற ஊர்களில் மட்டும் ஆடப்படுகின்றது.

 துன்பத்தைப்போக்கி இன்பத்தை பெருக்கப் பாடப்படும் இப்பாடல்கள் அழியாமற் காக்கப்படவேண்டியவை.
ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்கள் பலதுறைப்பட்டு விளங்குகின்றன.

 நாட்டுப்பாடல்களை இறவாமல் காப்பது எல்லோருடைய கடமையாகும்

தமிழரின் இலக்கிய செல்வத்திலே இப்பாடல்களுக்கு சிறந்த இடம்முண்டு.

தமிழில் எத்தனையோ இலக்கிய நு}ல்களும், இலக்கண நு}ல்களும், இறந்து போய்விட்டன என்று வரலாறு கூறுகின்றது.

 யாழ் நூலகம் எரிக்கப் பட்டபோது சாம்பலாக்கப் பட்டுவிட்டது மனித ஆத்மாக்கள் கவலைப் படுகின்றது

மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற் பதிவு 1960 ம் ஆண்டில் வெளிவந்ததுள்ளது

ஈழத்திலுள்ள அறிஞ்ஞர் பலர் ஈழத்து நாடோடிபாடல்களை அவ்வப்போது சேர்த்துப்பத்திரிகைகளிலும,; துண்டு பிரசுரங்களிலும் வெளியிட்டு வந்துள்ளனர். இவர்களுள் திரு. மு. இராமலிங்கம் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

நாட்டுப்பாடல், நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும்.

இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன.

 அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.

நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன.

நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, பாமர ஜனகானம்பொதுஜனகானம்கிராமியபாடல், எனப் பலவாறு அழைப்பர்.

 பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம்.

 மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும்.

ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.

சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும்.

 சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம்.

 சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

 இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன.

பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டுதமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.

நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார்

பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார்,இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர்.

பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும்.

 மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும்.

 எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.

நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்5]

நாலு மூலை வயலுக்குள்ளே

நாத்து நடும் பொம்பிளே

நானும் கொஞ்சம் ஏழையடி

நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

நண்டு சாறு காய்ச்சி விட்டு

நடு வரப்பில் போற பெண்ணே – உன்

தண்டைக் காலு அழகைக் கண்டு

கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

நானும் கொஞ்சம் ஏழையடி

நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

பெண்டுகளே! பெண்டுகளே!

தண்டு போட்ட பெண்டுகளே! – உன்

கொண்டை அழகைக் கண்டு

கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

நானும் கொஞ்சம் ஏழையடி

நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார்

நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது

கிராமத்து வாழ்க்கை மிகவும் இனிமையானது. அமைதி நிறைந்தது. உற்சாகம் மிகுந்தது. கிராமிய மக்கள் அன்பும் நல்ல பண்பும் கொண்டவர்கள். அழகியல் சூழலில் ஆனந்தமாக வாழ்பவர்கள். இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் அவர்களின் காலம் கழிகிறது. இத்தகையவர்கள் வாழ்க்கையிலும் எத்தனையோ தொல்லைகளும் பிரச்சினைகளும் அவை காதல், சோகம், ஏமாற்றம், வறுமை, விவேகம் என பல்வேறு வகைப்பட்டு நிற்கிறது.

வாழ்வியல் பிரச்சினைகளை அவர்கள் இனிய கவிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இக்கவிகள் வாழும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன. கிராமிய கவிகளும் இலக்கியமும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

திருமண பந்தத்தில் இணைய நினைக்கும் ஒரு இளஞ் சோடியின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் வரிகளாக பின்வரும் வரிகள் (அமைந்துள்ளன. வருமானம் இல்லாத காரணத்தால் கல்யாணம் செய்து கைப்பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தலைவனின் பாடலடிகள் சுட்டி நிற்கின்றன.

காலயும் புலந்திருக்கு
கனவெல்லாம் கலைஞ்சிரிச்சி
மாலையும் கையுமா
மச்சான் ஒன்ன கண்டிருந்தேன்

வேலயும் இல்ல மச்சி
வருமானம் கொறஞ்சிரிச்சி
தோளிலே ஒன்ன வைக்க
தோது இல்ல என் கிளியே!

அடக்கு முறைக்குள் இருந்து வெளிவரத் துடிக்கும் ஒரு யுவதியின் மனோ வலிமையை சுட்டி நிற்கிறன.கீழ் உள்ள வரிகள்  அதில் தனது நியாயமான சுதந்திரத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி முன்னேறத்துடிக்கும் பாங்கில் அது அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

சுற்றி வர நெருஞ்சி முள்ளு
சுருண்டிருந்து பாத்திருக்கேன்
தடை தாண்டிப் பாய்ந்து வர
நல்ல சப்பாத்துக்காய் 
காத்திருக்கேன்!

இன்றைய காலத்தில் பெண்களுக்கான அடக்கு முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றங்களைக் கண்ட போதும் ஆணாதிக்கத்தின் பலம் குறைந்தபாடில்லை என்பதாக நினைக்கும் ஒரு யுவதியின் மனவெளிப்பாட்டை மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கின்றன.

அலைகள் ஒரு போதும் ஓய்வதில்லை. அதேபோல இந்தப் பெண்ணும் தன் நினைவலைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு கன்னியின் மன ஏக்கத்தை பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

ஓடுகின்ற
தண்ணியிலே
ஆடுகின்ற
அலையெல்லாம்
தேடுகின்ற
என் மனதின் 
ஏக்கங்களைக்
கூறாதோ!

தொழில் நிமித்தம் வீட்டைவிட்டு வெளியூருக்குச் சென்ற கணவன் பல நாட்களாக திரும்பி வரவில்லை. அவரது வருகையை எதிர்பார்த்து மனைவி வாடிப் போகிறாள். கணவனை நினைத்து அவள் ஏங்கும்; பாடல்  இப்படி வருகிறது.

கழுத்திலே மின்னுகிற
கரிச மணிக் கோர்வையிலே
கைய வைத்து உருட்டி விடும்
என் ஆசைக் கண்ணாலா

தொழிலுக்கு தொலை தூரம்
போனவரே
நெடுநாளா சேதியில்ல
என் நெஞ்சம் வெடிக்குதுகா!

பருவகால மழை பிழைத்துப் போனால் உழவர்களின் பாடு திண்டாட்டம்தான். உழவர்கள் விளைச்சலை நன்றாகத் தந்தால் தான் நாட்டு மக்கள் நன்றாக சாப்பிட முடியும். விளைச்சலில் பிரச்சினைகள் ஏற்படாமல் அல்லாஹ்வை வேண்டி நிற்கும் சூடடிக்கும் பாடல் இப்படி வருகிறது.

மாடுகள் வலய வலய
நெல் மணிகள் குலய குலய
பாடுகிறோம் பாட்டு
சூடடித்து முடியும் வர
சுகமாகக் கேட்டு!

நாடுகிறோம் அல்லாஹ்வை
நல் விளைச்சல் கெடச்சிடவே
தேடுகிறோம்
கடனெல்லாம் தீர
ஒரு நல் வாழ்வை!

சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அச்சிறுவர்களின் தாயாரோ அல்லது உறவினர்களோ பாடும் பாடல் இது.

 எதுகையும் மோனையும், இயைபுத் தொடையும் மிக இயல்பாக இப்பாடலில் அமைந்துள்ளது. இப்பாடலை மறுவாசிப்பு செய்யும்போது, நம்மையும், இப்பாடல் கரைந்து மோன காலத்திற்குள் தள்ளுகிறது. ஞாபகம் வருகிறதே பாணியில் பின்னோக்கி நம் நினைவின் நிழல்களை நகர்த்தினால், நம் குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் நினைவுக்கு வரும். இனி பாடலைப் பார்ப்போம்.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சாயக் கிளியே சாய்ந்தாடு

அன்னக் கிளியே சாய்ந்தாடு

ஆவாரம் பூவே சாய்ந்தாடு

குத்து விளக்கே சாய்ந்தாடு

கோயில் புறாவே சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு

மாடப் புறாவே சாய்ந்தாடு

குழந்தைகள் பாடிக்கொண்டு விளையாடும் விளையாட்டுப் பாடல்கள் தனி ரகமானவை. குழந்தைகளின் விளையாட்டோடு, இசையும், இலக்கியமும் கலந்தது வியப்பான விசயமாகும்.

குழந்தைகளின் விளையாட்டுக்கள் காலாவதியானதுடன், சேர்ந்து அவர்கள் விளையாட்டோடு பாடிய பாடல்களும் காற்றில் கரைந்து விட்டன.

கண்ணாம் கண்ணாம் பூச்சாரே,

காது காது பூச்சாரே

எத்தனை முட்டை இட்டாய்?

மூணு மூட்டை!

மூணு முட்டையும் தின்னுப்புட்டு

ஒரு சம்பா முட்டை கொண்டுவா!

என்பன போன்ற பாடல்களைப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களுக்கு நாம் பொருள் விளக்கம் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கக்கூடாது.இத்தகைய பாடல்களின் இசை அமைதியையும் தாளக்கட்டையும்,சொற்செட்டுகளையும் மட்டும் நாம் அனுபவிக்கவேண்டும். பொருளற்ற வெற்றசைச் சொற்களாகவே இத்தகைய பாடல்களில் வார்த்தைகள் வந்து உக்கார்ந்திருக்கும். சான்றாக,

மாப்பிள்ளை மாப்பிள்ளே

மண்ணாங்கட்டி தோப்புளே

அரைக் காசு வெற்றிலைக்கு

கதி கெட்ட மாப்பிள்ளே. . .!

என்ற பாடலைக் கூறலாம்.

மைத்துனன் முறை உள்ள பையனை மச்சினன் முறை உள்ள பையன் கேலி செய்து பாடுவதாக அப்பாடல் அமைந்துள்ளது.

சக்கு சக்குடி சருவொலக்கையடி

குத்தொலைக்கையடிகுமரன் பொண்டாட்டி

பாளையத்திலே வாழ்க்கைப்பட்ட

பழனி பொண்டாட்டி. . .

வெற்றசைச் சொற்களால் ஆன இசைப்பாடல் இது.

பனை மரமாம் பனை மரமாம்

பச்சைக் கண்ணாடி

பல் இல்லாத கிழவனுக்கு

டபுள் பொண்டாட்டி. . .

என்ற குழந்தைப் பாடல் இரண்டாம் தாரமாகக் கிழவர் ஒருவர் இளம்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதைக் கேலி செய்கிறது. இரண்டு பொண்டாட்டி என்பதை டபுள் பொண்டாட்டி என்று பாடுவது தமிழ் மொழியில் ஏற்பட்ட மொழிக்கலப்பைப் பதிவு செய்கிறது.

பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?

பல்லு ரெண்டும் போவானேன்?

உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்

ரெண்டு பணம் தெண்டம்தெண்டம்!

என்கிற பாடலிலும் கேலி செய்யும் தொனியே மிஞ்சி நிற்கிறது.

கிக்கீக்குஸ் கம்பந் தட்டை

காசுக்கு ரெண்டு கெட்டு

கருணைக் கிழங்கடா

வாங்கிப்போடா. . . வாங்கிப்போடா. . .!

இந்தப்பாடல் கரிசல் காட்டில் தோன்றியதாக இருக்க வேண்டும். கம்மங்கதிர்,கம்பு, கம்மஞ்சோறு, கம்மந்தட்டை என்பவை கரிசல் காட்டிற்கே உரியவையாகும். இப்பாடலும் பொருளற்ற வெற்றசைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

சடுகுடு விளையாடும்போது, பிள்ளைகள் பலவிதமான சிறுபாடல்களைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். அவைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அத்தகைய குறும் பாடல்களில் சிலவற்றைக் கீழே காண்போம்.

சடுகுடு மலையிலே

ரெண்டானை

தவறி விழுந்ததுதவறி விழுந்தது

கிழட்டானை. . . கிழட்டானை.

வெள்ளிப் பிரம்பெடுத்து

விளையாட வாராண்டா. . .

தங்கப் பிரம்பெடுத்து

தாலி கட்ட வாராண்டா. . .

தாலி கட்ட வாராண்டா. . .

தூத்தூ நாய்க்குட்டி

தொட்டியக்குடி நாய்க்குட்டி

வளைச்சி போடடா. . நாய்க்குட்டி. .

இழுத்துப் போடடா. . நாய்க்குட்டி. . .!

அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை

கல்லிலே போட்டா சுரைக் குடுக்கை

சுரைக் குடுக்கை. . . சுரைக் குடுக்கை. . .!

‘கழிச்சிக் கல்’ விளையாட்டு என்று ஒருவித விளையாட்டைச் சிறுவர்கள் சென்ற தலைமுறைவரை விளையாடினார்கள். இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலும் காணக் கிடக்கிறது.

சங்ககாலம் முதல் சென்ற தலைமுறைவரை தொடர்ந்து வந்த இந்தக் குழந்தை விளையாட்டை, இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் கடத்த முடியாமல் போனது எதனால்?

இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமிக்க இந்தச் சிறுவர் விளையாட்டை,சமீபத்திய வாழ்க்கை முறையால் நாம் தொலைத்துவிட்டோம்.விளையாட்டிலும், உலக மயமாக்கல் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிறது.

விளையாட்டு என்றதும் மட்டைப் பந்து என்ற கிரிக்கெட்தான் இக்காலத்துப் பிள்ளைகளின் நினைவுக்கு வருகிறது. இந்த மட்டைப் பந்து விளையாட்டு என்பதும் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகள் விளையாடிய கிட்டிப்புல் என்ற சில்லாங்குச்சி விளையாட்டின், விஞ்ஞானபூர்வமான விரிவாக்கமே!

‘கழிச்சிக் கல்’ விளையாடும் பிள்ளைகள் விளையாட்டின்போது ஒவ்வொரு கல்லையும் எடுக்க, ஒருவிதப் பாடலைப் பாடுவார்கள். அத்தகைய பாடல் இதில் ஒன்று முதல் பத்துவரை உள்ள எண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டப்படுகின்றன!

கொக்குக்கிக் கொக்கு

ரெட்டை சிலாக்கு

மூக்குச் சிலந்தி

நாக்குலா வரணம்

ஐயப்பன் சோலை

ஆறுமுக தாளம்

ஏழுக்குக் கூழு

எட்டுக்கு முட்டு

ஒன்பது கம்பளம்

பத்துப் பழம் சொட்டு

இதுவும் பொருளற்ற ஒரு வித இசைப்பாடலே. குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க இத்தகைய பொருளற்ற இசைப்பாடல்கள் உதவின.

அந்தாதித் தொடை அமைந்த வினா-விடை பாணியிலான சில குழந்தைப் பாடல்கள் கேட்பதற்கும் பாடுவதற்கும் ரஸமாக இருக்கிறது. அத்தகைய பாடல்களில் சான்றுக்கு ஒரே ஒரு பாட்டு

ஆண்டி. . . ஆண்டி.. .

என்ன ஆண்டி?

பான்னாண்டி. .

என்ன பொன்?

காக்காப் பொன்.

என்ன காக்காய். . .?

அண்டங்காக்காய். . .

என்ன அண்டம்?

பூ அண்டம்.

என்ன பூ?

பனம் பூ.

என்ன பனை?

தாளிப் பனை.

என்ன தாளி?

நாக தாளி.

என்ன நாகம்?

சுத்த நாகம்

என்ன சுத்தம்?

வீட்டுச் சுத்தம்

என்ன வீடு?

ஓட்டு வீடு

என்ன ஓடு?

பாலோடு

என்ன பால்?

நாய்ப் பால்

என்ன நாய்?

வேட்டை நாய்

என்ன வேட்டை?

பன்றி வேட்டை

என்ன பன்றி?

ஊர்ப் பன்றி

என்ன ஊர்?

கீரையூர்

என்ன கீரை?

அறைக்கீரை

என்ன அறை?

பள்ளி அறை

என்ன பள்ளி?

மடப் பள்ளி

என்ன மடம்?

ஆண்டி மடம்

என்ன ஆண்டி

பொன்னாண்டி . . .

இந்தப் பாடல் இத்துடன் முடிவதில்லை. தேவை எனில் குழந்தைகள் ‘என்ன பொன்?’ என்று கேள்வியை எழுப்பி அதற்கு ‘ஆணிப் பொன்’ என்று விடையும் கூறிச் சங்கிலித் தொடர்போல் பாடலைத் தொடரலாம்.

மொழிப் பயிற்சிக்கும், உச்சரிப்புப் பயிற்சிக்கும், நினைவாற்றலை வளர்க்கவும் கேட்ட கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் கூறும் மனத்திறனையும் இத்தகைய பாடல்கள் வளர்க்க உதவின.

குழந்தைப் பருவம் முடிந்து வளர் இளம் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் இளங் குமரிப்பெண்கள் மற்ற முறைகாரப் பெண்பிள்ளைகளைக் கேலி செய்து விளையாட்டாகச் சில பாடல்களைப் பாடுகிறார்கள். நேசமிக்க இத்தகைய பாடல்களும் இன்று காணாமல் போய்விட்டன.

மாதிரிக்கு அத்தகைய பாடல்களில் இந்த ஒன்றை மட்டும் வாசகர்கள் சுவைக்கலாம்

அத்தான் தங்கையே ராமக்கா

அரிசிக் காரன் வந்திட்டான்

சின்ன வீட்டிலே புகுந்துக்கோ

சிலுக்குத் தாளம் போட்டுக்கோ

புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ

புருசன் கூடப் பேசிக்கோ. .!

ஒரு காலத்தில் குழந்தைகளின் வாழ்வுலகமும், இளம் பருவத்து வளர் இளம் பெண்களின் கனவுலகமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிய சோலைகளாக இருந்தன!

இன்று அவர்களின் கனவுலகமே பாலைவனங்களாகிவிட்டன. கட்டற்ற கற்பனை வெளியில், மொழியின் கைபிடித்து இசையின் காலடித்தடம் தேடி அலைந்த பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வனுபவம், இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. இந்தக் கலாச்சார மாற்றம் நம்மை மேல் நோக்கி நகர்த்துகிறதா? புதைகுழியில் தள்ளுகிறதா? புரியவில்லை.

நாடோடிப்பாடல்களில்
கதை

இசைப் பாடல்கள்

 கவிதைகள்

பழ மொழிகள்

விடுகதைகள்

ஒப்பாரி

கவிகள்

தாலாட்டுக்கள்

ஊஞ்சல் பாடல்கள்

கப்பற் பாடல்கள்

பாலர் விளையாட்டுப் பாடல்கள்

இவையெல்லாம் நாட்டார் இலக்கியங்களாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கிராமிய கவிகளும் இலக்கியமும்

  1. ஈழத்தமிழரின் நாட்டார் பாடல்களைப் பற்றியும், அவர்தம் வாழ்வியல் பற்றியும் நன்கு ஆவணப்படுத்தியுள்ளீர்கள்  கலைமகள் ஹிதாயா. மிக அருமையான பகிர்வு.  பாராட்டுகள்.

Leave a Reply to தேமொழி

Your email address will not be published. Required fields are marked *