நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -8

3

ரிஷி ரவீந்திரன்

ங்கராஜின் உடல் மெல்ல மெல்ல அந்தரத்தில் உயர்ந்து கொண்டிருந்ததைக் கண்டு டாக்டர் பால சுப்ரமணியன், டாக்டர் ராதாகிருஷ்ணன், கோபால்ஜி, ஐஐடி சிவா, தாத்தா, பாட்டி மற்றும் அனைவரும் வெல வெலத்துப் போயினர். டாக்டர் பாலாவின் உடல் உரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. முகமெல்லாம் குப்பென்று வியர்த்துக் கொட்டியது.

ரங்கராஜின்  உடல் மூன்று நான்கு அடிகளுக்கும் மேலெழும்பியது.

ஐஐடி  சிவா தன் பலமனைத்தையும்  ஒன்று திரட்டி ரங்கராஜின் வலக்கையைப் பிடித்துக் கீழ்நோக்கி இழுக்க…. கோபால்ஜி இடக்கையை இழுக்க… டாக்டர்கள் ஆளுக்கொரு காலைப் பிடித்துக் கீழ்நோக்கி இழுக்க….

அமானுஷ்யமாய்  உணர்ந்தனர். போராட்டம் தொடர்ந்தது…. உடல் மரக் கட்டை போன்று கனத்தது. கனத்த உடல் மிதக்குமோ….? என ஐஐடி சிவா ஆச்சர்யப்பட்டான்.

ஐஐடி  சிவாவின் பிடிமானம் ரங்கராஜின் வலது மேல் கையிலிருந்து சிறிது சிறிதாக நழுவி மணிக்கட்டினை நோக்கி வழுக்கி…. பிடிமானமின்றி ரங்கராஜின் மஞ்சள் நிற ரப்பர் வளையத்தின் மீது விழுந்தது…..வேறு வழியின்றி வளையத்தினை இறுக்கிப் பிடித்து இழுத்தான். அனைவரும் பலங்கொண்ட மட்டும் ரங்கராஜினை இழுக்க ரங்கராஜின் உடல் இப்பொழுது சடேரென கட்டிலில் விழ….. வலியினால், ‘ம்ம்மா…….’ என அலறி…..

ரங்கராஜ்  இப்பொழுது தன் சுய நினைவிற்கு வந்திருந்தான்.

டாக்டர்கள்  அருகிலிருந்த மானிட்டர்களை நோக்கினர்.

BP / Pulse Rate Monitorல் அவனின் Systolic, Diastolic Pressure மற்றும் Pulse Rate மாறி மாறி வந்து கொண்டிருந்தன. அனைத்துமே குறைவாக … குறைந்து கொண்டே சென்று கொண்டிருந்ததைக் காட்டின.

EEG மானிட்டர் ரங்கராஜின் மன அலைச் சுழலை பூஜ்ஜியத்திற்கும் கீழே காட்ட முயற்சித்திருந்தது.

டாக்டர் பாலா, ‘ஓ… மை காட்….. EEGன் அளவீடுகள்  ஜீரோவினைவிடக் குறைவாகக்  காட்ட முயல்கின்றது…….’

‘அதனாலென்ன  சைக்ரியாட்ரிஸ்ட்……?’

‘தேட் இஸ் எ டெட் ஸ்டேட்….. மருத்துவ அறிவியலில் மூளையின் அலைச் சுழல் டெல்டா நிலை அதாவது 1- 3 Cycles per Secல் இருந்தால் அது கோமா ஸ்டேஜ்… ஆனால் ஜீரோவினை அடைந்தால் மரணித்து விட்டான் எனப் பொருள். ஜீரோவிற்கும் கீழே இதுவரை மருத்துவ அறிவியலில் கண்டு பிடிக்கவில்லை…..’

‘ஓ… மை காட்…..!’

அனைவரும்  திட்டுத் திட்டாக அதிர்ந்தனர்.

”ஆனால்  ரங்கராஜ் உயிருடன் இருக்கின்றான். திஸ் இஸ் எ மெடிக்கல் மிஸ்ட்ரி….…..” என்றபடியே தன் முகத்திலிருந்த நெற்றி வியர்வையைக் கைக் குட்டையால் ஒற்றி யெடுத்தார்.

டாக்டர் பாலசுப்ரமணியம் தன் இத்தனை வருட அனுபவங்களில் இவ்வளவு  சிக்கலான, விநோதமான ஒரு நிகழ்வினைக் கண்டதில்லை எனவும் அதீத மனம் என்றழைக்கப்படும் Para Psychology யில் கூட இது போன்ற ஒன்றினை எங்கும் படித்ததாய் நினைவில்லை என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் வேதனை கலந்த பயத்துடன் கூடிய வியப்புடன் கூறிக் கொண்டிருந்தார்.

கோபால்ஜி, ”ரங்கராஜின் சக்கரங்களை என் தவத்தின் மூலம் ஸ்கேன் பண்ணும் பொழுது குண்டலினியில் பிரச்சினை எனத் தெரிகின்றது. குறிப்பாக மூலாதாரம், மணிப்பூரகம் மற்றும் அநாகதம் என இந்த மூன்று சக்கரங்கள் மிகக்  கடுமையாய் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அந்தரத்தில் உடல் எழும்புவதுதான் எனக்குப் புரியாத புதிராய் இருக்கின்றது. தவத்தினில் அந்தரத்தில் உடல் எழுவதற்கும் ரங்கராஜனின் லெவிட்டேஷனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு… ரங்கராஜின் லெவிட்டேஷன் தவத்தினால் அல்ல. அமானுஷ்யத்தினால்….” கொஞ்சம் நிறுத்திவிட்டுப் பின் மீண்டும் தொடர்ந்தார்.

“எப்பொழுதிலிருந்து ரங்கராஜ் த்யானம் செய்றான்….? முறைப்படிக் கற்றானா….?”

பாட்டி, “ஒரு நாள் அவன் மூன்றாம் வகுப்புப் படிக்கும்பொழுது….. பள்ளி திறந்த முதல் நாளே பாடசாலையிலிருது மாலையில் திரும்பியவுடன்,

‘ம்மா…… இவர் யாரு….?.’ எனத் தன்  வரலாறு புதுப் புத்தகத்திலிருக்கும் புத்தரைக் காட்டிக் கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

’யார் இவர்….? ஏன் இப்டி வித்தியாசமா  உட்கார்ந்துட்ருக்கார்…?..’

புத்தரைப் பற்றி நன்கு விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டபின் அவன், ‘நானும் புத்தர் மாரி ஆகப் போறேன்….. ம்மா…..’ எனக் கூறி அதே போல் உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்வான்.

இந்தப் படத்தைக் காண்பிப்பதற்கு உங்கள் உலாவியின் ஆதரவு இல்லாமல் இருக்கலாம்.

 

அப்பொழுதெல்லாம் அவனுக்கு யோகாவே அறிமுகம் இல்லை. அதனால் அது பத்மாசனம் எனத் தெரியாது. அதன் பின்னர் நிறையத் தேடல்கள்…. அவனாகவே பல யோகியர்களைத் தேடிப் பிடித்து நிறையக் கற்றுக் கொண்டான். முதன் முதலாய் முறைப்படி தியானம் பயின்றது மகரிஷி மகேஷ் யோகியிடம் ஆழ்நிலைத் தியானம். அதிலிருந்து பல தியான முறைகள்….. விவேகாநந்தா கேந்திரா…. ராமகிருஷ்ண மடம், திருச்சுழியிலிருக்கும் ரமண மகரிஷி மடம்… சுவாமி ஸஹஜானந்தா, சுவாமி புத்தானந்தா…. விவேகாந்தரினால் அதிகம் ஈர்க்கப்பட்டு அவரது முறைகளில் கவனம் செலுத்தியிருக்கின்றான். ஆனால் குண்டலினி மட்டும் இன்னும் முறைப்படிப் பயிலவே இல்லை. குண்டலினித் தவம் பயிலாமல் எப்படி குண்டலினி எழும்ப முடியும்…..?”

”ஒருவேளை  புத்தகங்களைப் படித்து  முயன்றிருக்கலாம்…..” நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“நான் துரியாதீதத் தவத்தில் இதற்கு என்ன விடை என அறிந்து சொல்கின்றேன். ஒரு 2 மணி நேரம் அவகாசம் தேவை…..” என்றார்.

இதற்குள்  குழாயிலிருந்து வடிந்த ரத்தத்தினை பரிசோதனை செய்வதற்குக் கொடுத்த  விஷயம் உரையாடல்களில் வெளிப்பட ஐஐடி சிவா அந்த பரிசோதனைக் கூடத்தினை நோக்கித் தன் யமஹாவினை விரட்டினான்.

டாக்டர் பாலா ரங்கராஜின் மனதினிலிருக்கும் தேவையற்ற பயங்களைப் போக்க  எண்ணி கீழ்க்கண்ட பயிற்சியினைக் கொடுக்கலானார்.

முதலில் Progressive Relaxation முறைப்படி உச்சந் தலையிலிருந்து உள்ளங் கால்கள் வரை உடலின் ஒவ்வொரு பாகமாய்த் தளரச் செய்தார். Hynosisல் வரும் Dave Induction முறைப்படி அதி விரைவாக மிக ஆழமாய் மனதினைத் தளர்வுறச் செய்தார்.

ரங்கராஜின்  மகிழ்ச்சியானத் தருணங்களை  மனதினில் ஓட விடும்படிக்  கேட்டுக் கொண்டார். வெற்றி பெற்றத் தருணங்களையும்  உற்சாகத் தருணங்களையும்  தன்னம்பிக்கை நிகழ்வுகளையும் மனத் திரையில் ஓட விடும்படிக் கேட்டுக்கொண்டார். அதனுடன் ஒரு நல்ல பாடலினை மகிழ்ச்சியான அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய பாடலொன்றினை மனதினில் ஓட விடும்படிக் கேட்டுக் கொண்டார். பாடலில் எதிர் மறையான வார்த்தைகள் (Negative Words) இல்லாமல் இருக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

ரங்கராஜனின் மனதினில் கீழ்க்கண்ட சினிமா ஓடியது.

 

[youtube=http://www.youtube.com/watch?v=DspnhJJF29k&w=640&h=385]

இந்த  சினிமாவை ஒரு 15 முறை ஓடவிட்டார். பின்னர் சிறிது ஓய்வு. ஓய்விற்குப் பின்னர் மீண்டும் 15 முறை. இம்முறை முன்பை விட வேகமாக ஓட விட்டார். பின்னர் ஓய்வு. பின்னர் மீண்டும் 15 முறை முன்பை விட வேகமாக ஓட விட்டார். இப்பொழுது ஒரு பத்து நிமிடங்கள் ஓய்வு கொடுத்தார். இப்படியாக ஒரு 3 செட் பயிற்சி கொடுத்தார்.

இப்பொழுது ரங்கராஜனின் மனதினில் மகிழ்ச்சியான உற்சாகமான எண்ணங்கள் வேர் விட ஆரம்பித்தன. ரங்கராஜ் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவனாய்…. மகிழ்ச்சியாகக் காணப்பட்டான்.

 

—————-

 

ரெங்கநாயகியம்மாள்..

ரங்கராஜின்  தந்தையின் சகோதரி.

ரங்கராஜின்  ஜாதகத்தினை எடுத்துக் கொண்டு கவலூர்க்காரரிடம் சென்றார். கவலூர் அந்தப் பகுதி வட்டாரத்தில் எதிர் காலத்தினை மிகத் துல்லியமாகச் சொல்லும் வல்லமையுடையவர் ஒருவர் மிகவும் பிரபலம்.

வள்ளுவர் தன் அன்றாட பூஜையை முடித்துவிட்டு நெற்றி நிறைய விபூதியும் புருவ மையத்தினில் ஐம்பது பைசா நாணயத்தின் அளவில் குங்குமம் தரித்து மஞ்சள் நிறமும் காவி நிறமும் கலந்த ஒரு விநோதமான வேட்டியுடுத்தி அதே நிறத்தில் துண்டினை மார்பினில் ஆடையாகத் தவழ விட்டிருந்தார். கழுத்தினில் நடுத்தர அளவுள்ள ருத்ராட்சங்களை மாலையாக்கியிருந்தார். கண்களில் கூர்மையான பார்வை.

ஜாதகத்தினை  வாங்கி ஒரு முறை ராசிக் கட்டத்தினையும், நவாம்சக் கட்டத்தினையும் உற்றுப் பார்த்துவிட்டு மூடி வைத்துவிட்டார்.

இப்பொழுது வள்ளுவரின் முகம் இறுகியிருந்தது.

ரெங்கநாயகியம்மாள் கலவரத்துடன் உட்கார்ந்திருந்தார்.

வள்ளுவர் பேச ஆரம்பித்தார்.

”இந்த ஜாதகம் சரியான ஜாதகம் தானா என்பதற்காக நான் சில கேள்விகளைக்  கேட்கின்றேன். பதில் சொல்லுங்கள்….”

”சரி  சாமி…..”

“இது  நாள்வரை ரங்கராஜ் மூன்று முறை தான் வளர்த்த நாயினாலேயே செல்லமாகக் கடிக்கப்பட்டிருப்பான்…. ”

ரெங்கநாயகியம்மாள் வெல வெலத்துப் போனார்.

”இவனது  தந்தையின் ஒரே சகோதரி அனைவருக்கும் மூத்தவர். சின்ன வயதினிலேயே தன் மாங்கல்ய பாக்கியத்தினை  இழந்திருப்பார்….”

”ம்….”

”இவனது  தாய் வழியினர் உபதேசிக்கும் குருவாய் வாழையடி வாழையாய் இருந்திருப்பர். இவனது பெற்றோர்களும்  உபதேசிக்கும் குருக்களே….. இவனும் தற்சமயம் ஒரு குருவே…..”

“சரிதான்  சாமி….. மேலே சொல்லுங்க…..”

“இவன் நுண்ணிய மதி நுட்பம் மிகுந்தவன். நுணுக்கி ஆராய்பவன்…. பூதவியல் விஞ்ஞான சாஸ்திரத்தில் இயல்பிலேயே நிபுணத்துவம் பெற்றிருப்பான். பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பான். குருவருள் மிகுந்த புத்திமான். ஆயினும் என் செய்வேன்….? வலிது…. வலிது…. விதி வலிது…..”

ரெங்கநாயகியம்மாளின் இதயம் இப்பொழுது வேகமாய்  துடிக்க ஆரம்பித்திருந்தது….

‘என்ன சாமி சொல்றீங்க……?’

‘இவனுக்கு இது தான் மிகப் பெரிய கண்டம். இந்தப் புவி வாழ்க்கை விரைவில் அஸ்தமனத்தில் முடியும்…..’

‘சாமி எதாச்சும் பரிகாரம்….? அனுமாருக்கு வேண்டிக்கறோம்….’

வள்ளுவர் கண்களை மூடி நிஷ்டையிலிருந்தார்.

”ம்ம்…  ஒன்றா….? இரண்டா….?. எல்லா கோணங்களிலிருந்தும் அவனை விதி துரத்துகின்றது……”

”எப்படியாவது  காப்பாத்துங்க சாமி….”

“ம்ம்ம்ம்……. என்னிடம் இல்லை தாயி….. ஆண்டவன்  விட்ட வழி…..”

“என்ன சாமி சொல்றீக…..?”

“பல திசையிலிருந்து விதி துரத்துது  தாயி…. அமாவாசையன்று சரியாக மரணிப்பான்….. இது சத்தியம்……”

 

———-

 

கோபால்ஜி  துரியாதீதத் தவத்திற்கு ஆயத்தமானார்.

தன் உயிராற்றலினை பிரம்மரந்திரத்திலிருந்து சிரசிலிருந்து ஓரடி மெல்ல உயர்த்தி தவமியற்றி பின்னர் சந்திரனிற்கு உயிராற்றலைச் செலுத்தி சந்திரனுடன் உயிர் கலப்புப் பெற்று அதன் பின்னர் சூரியனுடன் உயிர் கலப்பு பெற்று அதன்பின் நம் பால்வழி மண்டலத்துடன்(Milky Way Galaxy) உயிர் கலப்புப் பெற்று அதன் பின் நம் அண்டை கேலக்ஸியான M80, M82 ஆண்ட்ரோமீடா ஆகியவற்றில் உயிராற்றலினைச் செலுத்தி அவைகளுடன் உயிர் கலப்பு பெற்று தன் உயிராற்றலினை சக்தி களம் எனப்படும் இந்தப் பிரபஞ்சம் முழுதுமாக விரித்து….விரித்து….. உயிர்கலப்புப் பெற்று….. அதன்பின்னர்….. சித்தர்கள் கூறும் சிவ கலத்துடன் தன் உயிராற்றலினை ஒன்றச் செய்தார். சிவ கலத்துடன் ஒன்றும் பொழுது அங்கே சமாதிநிலை ஏற்பட்டது. Quantum Physicsல் வரும் Absoulte Free Space….. Nothingness….சுத்த வெளியுடன்… பாழ் வெளியுடன் சூன்யத்துடன் ஒன்றினார். அங்கே Mu-Meson போன்ற எந்தவொரு Fundamental Particleம் இல்லாத ஒரு அரூப நிலை. சுத்த வெளி. பாழ்வெளி. இறை நிலை. ஆதிமூலம். இதுவே Universal Intelligence. Origin of Universe. பேராற்றல்,பேரறவு,பூரணம்(Power,Planum and Wisdom) என்ற முத்தரங்கள் இங்கே அடங்கியுள்ளன. உயிராற்றல் இங்கே ஒன்ற ஒன்ற பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அறிய முடிகின்றது.. எந்த ஒரு பிரச்சினைக்கும் இங்கே தீர்வு கிடைக்கின்றது.

தன் உயிராற்றலினை ரங்கராஜின் பிரச்சினையுடன் Resonate பண்ணி ட்யூன் பண்ணப் பண்ண…… அவருக்குக் கீழ்க்கண்ட காட்சி கிடைத்தது…..   ஒரு பக்கம் தாயுறவுள்ள ஸ்த்ரீயொருத்தி பில்லி சூன்யம் ஏவியிருக்கா…. அகோரமா ஏவியிருக்கா….. இன்னொரு புறம் அவனது சக நண்பன் விஞ்ஞானத்தில் போட்டியாக வளர விடாமல் அழிக்க முயல்கின்றான்….. இன்னொரு புறம் அவனது அதீத யோகாவில் இருக்கும் அந்த ஆசையே அவனை அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்கின்றது……இன்னொரு புறம் மருத்துவர்களால் இன்ன பிரச்சினை என சரியாக அனுமானிக்க இயலாமல் திக்கித் திணறி தோராயமான பாதையில் செல்கின்றனர்…..வரும் அமாவாசையன்று சரியாக இரவு 12 மணிக்கு ரங்கராஜின் மரணம் நிகழும்…….

 

தொடரும்……..

 


 

நன்றி

 

– குருஜி  வேதாத்திரி மகரிஷி

– குருஜி கோபால்ஜி

– நண்பன் நித்யசாந்தி பிக்கு

– கீழ்க்கண்ட என் நண்பர்கள்

  • டாக்டர் விஜயலஷ்மி பந்தையன், ஆல்ஃபா மைண்ட் பவர்
  • Laura Silva, President, Silva Systems
  • Ken Cosia, Connecticut. Silva Instructor
  • Theresa Schielisa, Reverand,  Manhatten, New York.

– ஐஐடி சிவா

 

Eugen Merzbacher,(Noble prize winner) ‘Quantum Mechanics’, John Wiley & Sons, 1970

– Vimuttidhamma From Chakra to Dhammachakra by Priyadhassi Bhikku.  Chapter VIII Pages 179 – 256. Published by Dhamma Publication Fund, Wat Tam Doi Tone, Chiang Mai, Thailand. First Publishing May 2011

– Raveendrans Mind Movie

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -8

  1. ஆச்சரியமாக இருக்கிறது.
    பில்லி சூனியம் எல்லாம் உண்மை தானா?
    தொடர்ந்து படிக்கிறேன்.
    நன்றி ஐயா.

  2. அத்தியாய முடிவில், நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தேன்!
    நிறைய பேசுவோம் நண்பரே!

    துரந்தோ வண்டியின் வேகம்!

    தொடர்க!

  3. அறிவியல் பார்வையும் எடுத்து வைக்கும் சான்றுகளும் தங்கள் கதைக்குத் தனித்துவம் சேர்க்கின்றன.

    அந்தரத்தில் மிதக்கும் கனத்த உடல், மேலும் பல ஆய்வுகளுக்குக் களம் அமைக்கிறது.

    தாங்கள் உருவாக்கிய காணொலி நன்று; தமிழிலும் இப்படி உருவாக்கலாம்.

    துரியாதீத தவத்தின் அறிமுகம் நன்று; அதன் பலன்களை இங்கே அறியலாம் – http://mkgthavamaiyam.blogspot.com/2010/10/blog-post_14.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *