நீயே என்றும் உனக்கு நிகரானவன்

0

காவிரி  மைந்தன்

அரிய இப்பாடலுக்கு அடியேன் விளக்கமளிப்பதைவிட .. தமிழ் என்னும் கடல் மூழ்கி.. தத்துவ தரிசனங்கள் காட்டி.. அடியவர்க்கெல்லாம் அடியவராக.. ஆம்.. அவர் அடியொற்றிப்போகத்தக்க அளவு சிந்தனையைச் செப்பனிட்டு.. பரம்பொருளைத் தான் உணர்ந்து பாமரரும் உணரும்வண்ணம் தான் எழுதும் பரசுராமன் என்னும் திருப்பெயரால் ஆன்மீகம்தான்தழைக்க அரும்பெரும் தொண்டாற்றும் என்னரும் நண்பரின் வாய்மொழியாலே வாசகர்கள் வாசிக்கத்த தருவதில் மெத்தவே மகிழ்கிறேன்.

இறைவன் மிகப்பெரியவன்.. அவனுக்கு இணை கிடையாது என்கிற வாசகங்களுக்கு கவியரசர் கண்ணதாசன் விளக்கம் சொல்ல கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார்!  அங்கே இறைவனுடைய தரிசனம் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல.. கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கமும் கிடைக்கிறது.

கவியரசரின் வாய் மெல்ல அசைகிறது.  வார்த்தைகள் அர்ச்சனைப் பூக்களாக வெளிவருகின்றன!

நீயே உனக்கு என்றும் நிகரானவன்..

தனக்கு உவமை இல்லாதவன் என்று தமிழ்வேதம் திருக்குறள் சொல்கிறது! அடுத்த அடியில்.. அந்தி நிழல் போல் குழல் .. என்கிறார்..  ஆம்.. அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் ‘செஞ்சடா அடவி’ என்று சொல்கிறார்.

தனக்குத் தானே நிகரானவனாகவும், எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையாகவும்,தாயகவும் இருப்பவன் இறைவன்.. ‘தாயும் நீ!  தந்தையும் நீ! என்று திருமறைகள் முழங்குகின்றன!

அப்படிப்பட்ட இறைவன் தாயாகவே வடிவம் தாங்கி வந்து பிரசவம் பார்த்தான்.  செட்டியார்குலப் பெண்மணியான ரத்னாவதிக்குத் தாயாக வந்து இப்படித் திருவிளையாடல் புரிந்த சிவபெருமானுக்கு, ‘தாயுமான சுவாமி’ என்றே திருநாமம்!

இந்த உட்பொருளை வைத்தே உருவானது – வளர்த்த தாயாகி வந்தவன்

bale pandiyaa

தாயாகி வந்த இறைவனின் தூய வடிவத்தைச் சொல்கிறார் பாருங்கள்!

இன்னது செய்யலாம்.. இன்னதைச் செய்யக்கூடாது என்று சொல்லி எல்லோருக்கம் வாழ வழி காட்டுவது வேதம்.. அப்படிப்பட்ட வேதமே இறைவனுக்கு வாயாக இருக்கிறது.  வாய் மட்டும் நல்லதைப் பேசிப் பலனில்லை.. அது செயலிலும் வரவேண்டுமல்லவா?

அதனால்தான், ‘இறைவனுக்குக் கையாக நீதி இருக்கிறது’ என்கிறார் கவியரசர்.

வாய் வேதம் கை நீதி..

இறைவனுக்கு அன்பே கண்ணாக இருக்கிறது.

விழி அன்பு

இறைவனின் வாய், கை, விழி என்று சொல்லி வந்த கவியரசர் இதுவரை இறைவனின் மொழி எது என்று சொல்லவில்லை..

இறைவனின் மொழி  கருணை..

மொழி கருணை

இப்படி.. வாய், கை, கண் என்று வடிவம் கொண்டவனா இறைவன்?  என்று நாம் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக..வடிவாகி, முடிவற்ற.. என்கிறார் கவியரசர்.

இறைவனுக்கு முடிவு கிடையாது.. எல்லாவற்றிற்கும் முதலாக இருப்பவன் இறைவன் என்று சொல்லி அழைக்கிறார்.. கண்ணதாசன்

முதலான இறைவா!

அடுத்து.. அருளை நாம் எப்படிப் பெறுவது?

கூட்டமாகக் கூடித் துதி பாடி இறைவனை நெருங்கி தூபம் போட்டுக் காட்டி அவனை மயக்கி அவன் அருளை அடைந்துவிடலாம் என்றால் அது இயலுமா?

துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதைய்யா.. வெறும்

தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா..

எல்லோரையும் தவறாமல் ஆட்டிப்படைக்கும் விதி கூட, இறைவனை நெருங்காது.. நெருங்க முடியாது..

விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா..

இறைவனை அடைய என்ன வழி.. என்றால்..

விணை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வ மலர்

இரு வினைகளை வென்ற, தூய்மையான மனம் கொண்ட நல்லவர்களை இனம் கண்டுகொள்ளவேண்டும்.  அவர்களைத் துணையாகக் கொண்டு .. பின்பற்றினால் இறைவன் அருள் கிடைத்துவிடும்.

மேலும் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சியாக மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட பாடல் ஒன்றிலும்கூட இவ்வளவு செய்திகள்.. கடவுள் பற்றிய விளக்கங்கள்.. அமைத்துத் தர முடியும் என்று அறியும்போது வியப்பின் விளம்பிற்குச் செல்லாதார் யார்?

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடியவர் – டி எம் செளந்திரராஜன் ..

யாரைப் பாராட்டுவது என்று அறிய முடியவில்லை…

tmsநடைபெறும் பரபரப்பான உலகில் எப்படி வாழ்ந்து மறைந்த கவிஞன் ஒருவரின் பாடல்களை எடுத்து இப்படி விளக்கங்கள் கொடுக்க முடிகிறது என்று நண்பர்கள் பல நேரம் என்னிடம் கேட்பதுண்டு.  வள்ளுவன் கூட வாழ்ந்து மறைந்தவன்தான்.. அவர் கருத்துக்கள் இன்றும் குறள் வடிவில் இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளவில்லையா? தமிழ்கூறும் நல்லுலகில் பல்வேறு கவிஞர்கள் அவ்வப்போது தோன்றி அரியபல கருத்துக்களை, வாழ்வின் அர்த்தங்களை நமக்குத் தருகின்றார்கள். அப்படி.. நாம் வாழ்கின்ற நூற்றாண்டில் நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த மாபெரும் கவிஞரின் படைப்புகளில் உள்ள முத்துக்களைக் கண்டெடுக்கும்போது.. அதனை தமிழ்மக்கள் அறியத்தருவதை என் கடமையாகக் கருதுகிறேன்.

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
கருணை…கருணை…கருணை…கருணை…
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
விணை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வ மலர்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
துதி பாடும் … துதி பாடும் … துதி பாடும் … துதி பாடும் …
துதி பாடும் …துதி பாடும் …துதி பாடும் … பாடும் பாடும் டும் டும்..
துதி பாடும் …

திரைப்படம் – பலே பாண்டியா

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடியவர் – டி எம் செளந்திரராஜன் மற்றும் வி.ராஜூ

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

இசை உலகில் 65 ஆண்டுகளாக அனுபவம் பெற்ற திரு. வி. ராஜூ அவர்கள் 84 வயதில் சமீபத்தில் இயற்கை எய்தினார். வீணை, மாண்டோலின், சிதார், சந்தூர் வாசிப்பதிலும் மற்றும் கொன்னக்கோல் சொல்வதிலும் வல்லவர். இந்த பாடலில் திரு எம். ஆர். ராதா அவர்களுக்கு ஜதி சொல்வது அவர் தான்.

இந்தப் பாடல் “பலே பாண்டியா” என்ற படத்தில் வருகிறது. திரு. டி. எம். எஸ். அண்ணா அவர்கள் நடிகர் திலகத்துக்கும் பாடியிருப்பார். படக்காட்சியில் எம். ஆர். ராதா அவர்களின் சேஷ்டைகளை ரசிக்காதவர் எவரும் இருக்கமாட்டார்கள்.

https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *