— கவிஞர் காவிரிமைந்தன். 


thangath thambi

அண்மையில் நான் இணையதளமொன்றில் கேட்கக் கிடைத்த புதையல் இந்தப் பாடல் என்பேன்! எத்தனை அருமையான இப்பாடல் இதுவரை கேட்டது கிடையாது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! ‘தங்கத் தம்பி’ என்கிற திரைப்படத்தில் தமிழ்த்திரையில் என்றும் வலம்வந்துகொண்டிக்கிற டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா ஆகியோரின் வளமையான குரல்களில்.. கேளுங்கள் புதிய உலகம் நுழைந்ததுபோலிருக்கும்!

பல்லவி தொடங்கி சரணங்கள் எல்லாம் செந்தமிழின் சுகமிருக்கிறது! இசையோ நம்மைக் கட்டி இழுக்கிறது! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் இதயங்கள் கட்டுண்டு போவது சகஜம்தான் என்றாலும் இந்தப் பாடல் அதற்கும் மேலே என்றே சொல்லத் தோன்றுகிறது!

 

 

ஆண்:
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதையொன்று கண்ணில் உண்டு

பெண்:
இரவெல்லாம் பாடச்சொல்லும்
பாட்டொன்று நெஞ்சில் உண்டு

ஆண்:
அம்புலிபோல் பெண்ணைக் கண்டேன்
அம்புவிழிக் கண்ணைக் கண்டேன்
அழகுரதம் ஆடக் கண்டேன்
ஆடைகொண்டு மூடக் கண்டேன்

பெண்:
கோடையிலே நிழலைக் கண்டேன்
கானலிலே நீரைக் கண்டேன்
அன்னை போலே நெஞ்சம் கண்டேன்
பிள்ளைபோல் தஞ்சம் என்றேன்.

[பொழுதெல்லாம் பேசச் சொல்லும்]

ஆண்:
காற்றுக்கு கண் கிடையாது
நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு..
கட்டிலுக்கு வாயுமில்லை
கவிதைகளை வரைவதற்கு..

பெண்:
விடிந்தபின்பு வண்ணம் காட்டும்
மன்னன்தந்த சின்னம் காட்டும்
செந்தமிழே பண்ணில் திகழும்
காண்பவர்க்கு தன்னால் புரியும்!

[பொழுதெல்லாம் பேசச் சொல்லும்]

காணொளி: http://youtu.be/qjh5KdPub38

படம்: தங்கத் தம்பி
பாடல்: வாலி
இசை: கே. வி. மகாதேவன்
குரல்: டி எம் சௌந்தரராஜன், பி. சுசீலா

 

அருமையான வரிகளில் ஆனந்தமழையடிப்பதைப்போல் இன்பம் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக்கிடக்கிறது! இசைப்பாடலுக்குத்தானே இத்தனைப் பெருமை அமைகிறது! இயல்தமிழாய் இருக்கும்போது அது கவிதை என்று மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது! பாடல் பாடப்படுகிற சூழல், பாடும் குரல்கள், பாடல் காட்சிகள் என்று பல காரணிகள் இருந்தாலும் பெளர்ணமி வெளிச்சம் பரவிக்கிடக்கிற பாடலாய் இப்பாடல் பவனிவருகிறது!

ரவிச்சந்திரன் – பாரதி இணைசேர கண்ணுக்கு விருந்தளிக்கும் இதமான ஜோடியாய் இவர்கள் நடிப்பில் பண்ணும் இசையும் பவித்ரமாய் கலக்கின்றன! ஒன்றிணையும் இருவர் இப்படி அமைய வேண்டும் என்கிற எண்ணம்கூட நெஞ்சில் பதிகிறது! கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பார்த்தால் கவிதை மஞ்சம் விரிக்கிறது! கன்னித்தமிழின் வெள்ளம் பாய்ந்துவந்து இதயத்தை இன்ப அலைகள் நனைக்கிறது!

இன்பத்தை வளரச்செய்ய இணைசேரும் வார்த்தைப்பூக்கள் மொத்தமாக அணிவகுக்க.. அன்னைபோல நெஞ்சம் கண்டேன் ..உன்னிடத்தில் பிள்ளைபோல் தஞ்சம் என்றேன் என்கிற கனிந்த சொற்களால் இப்பாடல் தரத்தில் உயர்ந்துநிற்கிறது! இனிய தம்பதியர் வாழ்வில் இப்பாடல் நிதந்தோறும் கேட்க வேண்டிய கானமாக.. என்றென்றும் ஒலிக்கட்டுமே!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *