மார்ச் 9, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திருமிகு அனிதா சத்யம் அவர்கள்

 

Anita Sathiam

 

 

வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் புகைப்படக் கலைஞரான திருமிகு அனிதா சத்யம் அவர்கள். உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் இவர் வெளியிட்ட, பெண்களை…குறிப்பாக வளரும் சிறுமியரை ஊக்கப்படுத்தும் கருத்துமிக்க அழகிய படமொன்றிற்காக இவ்வார வல்லமையாளராக அனிதா பாராட்டப்படுகிறார்.

பூனே, மகாராஷ்ட்ராவில் வசிக்கும் அனிதா சத்யம் வல்லமை மின்னிதழுக்கும், “வல்லமை” மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்திற்கும், வல்லமையின் ஃபேஸ்புக் குழுமத்திற்கும் புதியவரல்ல.

வல்லமை இதழ் படக்கவிதைப் போட்டியைத் துவக்கியபொழுது, முதல் படமாக “மங்கையர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும்” கருத்தைக் கவரும்காட்சி கொண்ட இவரது படம்தான் “வல்லமை” மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் சாந்தி மாரியப்பன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வல்லமை ஆசிரியர் குழுவிற்கு வழங்கப்பட்டது. அப்படம் தந்த தாக்கத்தில் 25 கவிதைகள் வல்லமை வாசகர்களால் போட்டிக்கு அனுப்பப்பட்டதில் புனிதா கணேசனின் கவிதை சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது.

Anita Sathiam 4

அனிதா ஃபோட்டோகிராஃபி (Anita’s Photography) என்ற புகைப்பட நிறுவனத்தின் உரிமையாளரான, தொழில்முறை புகைப்படக் கலைஞரான அனிதா வழங்கிய உலக மகளிர் தின சிறப்புப் படத்தின் கருத்து நூல்களிலும் பத்திரிக்கைகளிலும் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வெளிவர வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் கொண்ட பெண்களின் கனவைச் சித்தரிக்கிறது. பள்ளிச் சிறுமி ஒருத்தி விண்வெளி வீராங்கனையான “சுனிதா வில்லியம்ஸ்” பற்றிய நூல் ஒன்றைப் பார்த்து கற்பனையில் திளைப்பதையும், முக மலர்ச்சியுடன் இருப்பதையும் காட்சிப்படுத்தியதுடன் அருமையான வாசகம் ஒன்றையும் படக்குறிப்பாக இணைத்துள்ளார்.

Anita Sathiam 0

“அனைவரும் பாராட்டும் வண்ணம் புகழ் பெற்ற நிலையை அடைய வேண்டும் என்பதும், பத்திரிக்கைகளில் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வரவேண்டும் என்பதும் பெண்கள் எல்லோரின் கனவாகும். ஆகவே, (பெண்ணே) முன்னேறுவதை நிறுத்திவிடாதே. தடைகளைக் களையும் போராட்டத்தைக் கைவிடாதே, வெற்றிக் கனவு காணுவதை நிறுத்திவிடாதே. ஒருநாள் உனது கனவு நினைவாகும் … உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம் … “

என்ற உற்சாகமூட்டும் வாக்கியமும், ஆயிரம் வார்த்தைகளில் விளக்க வேண்டியதை ஒரு படம் விளக்கிவிடும் என்ற சொல்வழக்கை நிரூபிக்கும் வண்ணம், புகைப்படத்தில் பெண்ணின் முகம் காட்டும் உணர்வை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டார் அனிதா. “கனவு காணுங்கள்” என்று இளைய சமுதாயத்தை உற்சாகப்படுத்துவதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இதில் கைகோர்த்துள்ளார். அந்தப் பெண் கையில் வைத்திருக்கும் அறிவியல் சார்ந்த நூலை எழுதியவர், சமீபத்தில் வல்லமைக்குழுவினரால் வல்லமையாளராகப் பாராட்டப்பட்ட அறிவியல் எழுத்தாளர் “ஏற்காடு இளங்கோ”   என்பது ஒரு மேலதிகத் தகவல்.

உற்சாகமூட்டும் மனப்பான்மை இவர் வாழ்விலேயே இவருக்கு எவ்வாறு உதவியது என்பதையும், தனது துயர நிலையில் தாம் ஆர்வம் காட்டிய புகைப்படக்கலையே எவ்வாறு தம்மை துயரத்தில் இருந்து மீட்டது என்பதையும் இவர் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். வல்லமையின் மற்றொரு வல்லமையாளரான வைதேகி புற்று நோயுடன் போராடி மீண்டதைப் போலவே இவரும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நோயுடனும் உடல்நலக் குறைவுடனும் போராடி மீண்டதைக் குறிப்பிட்டிருந்தார். நோய்க்கான காரணமும் கண்டுபிடிக்க இயலாமல், மருத்துவமனையில் மாதக்கணக்காக இருந்த நாட்களில் மகனையும் மகளையும் பார்க்க இயலாது பிரிந்திருந்ததையும், உடலில் நிணநீர் மண்டலத்தில் ஏற்பட்ட கோளாறினால் காய்ச்சல், பிறகு சிக்கிசையின் பொழுது எலும்பு வலி, பார்வைக் குறைவு போன்று மருந்து தந்த பக்க விளைவுகள் பலவும் இவரைத் தொடர்ந்து  வாட்டியிருக்கிறது. பரிசோதனைகளும் சிகிச்சைகளும் என சற்றொப்ப மூன்றாண்டுகள் பட்ட அல்லலின் போது, இவருக்கு ஆர்வமளித்த புகைப்படம் எடுக்கும் பொழுதுபோக்கை தொடர்ந்து கைவிடாது செய்து தம் மனதை வேறுவழியில் திசை திருப்பி இருக்கிறார். உதவி இன்றி எழுந்து நடமாடவும் முடியாத உடல்நிலை இருந்த பொழுதுகூட, கையில் காமெரா இருந்துவிட்டால் படமெடுக்கும் ஆர்வத்தின் காரணமாக எழுந்து நடமாட முயன்றதைக் குறிப்பிட்டு, தமது ஆர்வமே தம் நோயைத் தாங்கி எதிர்க்கும் சக்தியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வலிமிகுந்த துன்பமான நேரங்களில் ஒருவர் தனக்கு ஆர்வமான பணிகளில் மனதை செலுத்துவது வலியை மறக்கச் செய்யும், வாழ்வதற்கு நம்பிக்கையை அளிக்கும் என்பது இவர் தனது அனுபவத்தின் மூலம் கண்ட பாடம். தனது வாழ்க்கைப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டாரோ அது போலவே; சோர்ந்துவிட வேண்டாம், போராடும் குணத்தையும், நம்பிக்கையையும் கைவிட வேண்டாம், வெற்றி நிச்சயம் என்ற அறிவுரை கூறி, உற்சாகமூட்டி நம்பிக்கைத்தரும் வாசகத்தையும் தனது படத்துடன் வழங்கியுள்ளார். ஒரு பெண் தனது குறிக்கோளை கல்வியின் மூலம் அடையும் வழியை சிறந்த படத்தின் வழி கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். வளரும் பெண்களுக்கு ஊக்கமூட்டும் தமது நோக்கத்தை தமது  புகைப்படக்கருவியின் உதவியுடன் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

மனிதர்களின் உணர்வுகளை மிகவும் திறம்பட படமாக்குவது அனிதாவின் தனிச்சிறப்பு. இவரது தொடர்ந்த கலைப்பயணத்தில் இவர் எடுக்கும் புகைப்படங்கள் பலரையும் கவர்கிறது என்பதையும் அறிய முடிகிறது. ஃபேஸ்புக்கில் , ~ 20,000 புகைப்பட ஆர்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு  இயங்கி வரும் ‘புகைப்படப்பிரியன்’ குழுமம்  தனது மூன்றாம் ஆண்டு கூட்டத்தை “எக்ஸ்போஷர் 15” எனும் புகைப்படக் கண்காட்சியாக சென்ற சனி-ஞாயிறு (மார்ச் 7, 8ஆம் தேதிகளில்) நடத்தியது.  நாகர்கோவிலில் நடைபெற்ற இக்கண்காட்சியில் உலகெங்கிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள், பற்பல பிரிவுகளில் தேர்வாகிக் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றோடு “ஃபோட்டோ ஆஃப் தி டே” எனக் கடந்த 45 நாட்களில் தினம் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்களும் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவில் அனிதாவின் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவரது படங்கள் பலவும் காட்சியிலும் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது.

Anita Sathiam 1

 

Anita Sathiam 2

கீழே அனிதாவின் புகைப்படங்கள் சில பார்வைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது:

Anita Sathiam 5

 

தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மறு உருவமான அனிதா புகைப்படக் கலையில் மேலும் பல சிகரங்களைத் தொடக்கூடிய திறமை கொண்டவர் என்பதை இவர் பெற்று வரும் பாராட்டுகள் காட்டுகின்றன. இவர் தனது வாழ்வில் மேலும் பல சாதனைகள்  செய்ய வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

 

படங்களும் செய்திகளும் பெறப்பட்ட தளங்கள்: 
Celebrating Woman’s Day
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/11004632_797455013680132_2660827701843388004_o.jpg

Exposure 2015 – Photography Exhibition’s Photo of the Day
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpa1/t31.0-8/10530653_786743984712561_8778096198208339583_o.jpg

Padak Kavithai Potti
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/10830794_1024126740936314_3854470771912612369_o.jpg

Anita’s Photography (Anita’s Click)
https://www.facebook.com/pages/Anitas-Photography/744799132202411?pnref=lhc

Anita Sathiam
https://www.facebook.com/anitasathiam

 

நாகர்கோவிலில் 7,8 தேதிகளில் புகைப்படக் கண்காட்சி – தி இந்து   –   http://tamil.thehindu.com/tamilnadu/article6962689.ece

புகைப்படப்பிரியன் – https://www.facebook.com/profile.php?id=100008964732801

Nellai Weekend Clickers Nwc- https://www.facebook.com/profile.php?id=100008368991065&fref=photo

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. I really don’t know how to thank you or how to express this ………. just wanted to do some good things to help girl’s or woman’s who are not educated by telling my +ve’s n -ve’s …………. so that they can utilize it, i can’t help them financially but still i try it 🙂 to do that……… All just i need is uneducated or housewife should do something in there life to achieve there dreams …. For me this is a like winning National Award which you gave to me ………… thank you so much Vallamai team n Themozhi ………….. still i have to go far ……………….. my Heartily Thanks to you all …
        

  2. வாழ்த்துக்கள் அனிதா சத்தியம் அவர்களே – உங்கள் பணி தொடரட்டும்

Leave a Reply to புனிதா கணேசன்

Your email address will not be published. Required fields are marked *