–வெ.சந்திரமணி.

கண்டி டூ கும்பகோணம்…

சினிமாத் துறையிலும், பின்னர் அரசியல் துறையிலும் சகாப்தம் படைத்து, தமிழக முதல்வராக 10 ஆண்டுக் காலம் பணியாற்றிய எம்.ஜி.ஆர்., இலங்கையில் உள்ள கண்டியில் 1917 ஜனவரி 17ம் தேதி பிறந்தார். தந்தை கோபால மேனன். தாயார் சத்தியபாமா. கோபாலமேனன், கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், திருச்சூர், அரூர், கரூர், எர்ணாகுளம் முதலிய இடங்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். பின்னர் இலங்கைக்குச் சென்று ஒரு கல்லூரியில் முதல்வராக அமர்ந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆர்., பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ராமச்சந்திரன்.

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும் அழைக்கப்பட்டார். திரை வாழ்க்கையில் சிகரத்தை அடைந்த பின் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்’ ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,’ என்றும் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு இருண்டரை வயதாகும்போது தந்தை இறந்து விட்டார். எம்.ஜி.ஆருக்கு கமலாட்சி, சுமித்ரா என்ற 2 மூத்த சகோதரிகளும், பாலகிருஷ்ணன், எம்.ஜி. சக்ரபாணி என்ற இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு. குடும்பத்தில் 5வதாக பிறந்தவர் எம்.ஜி.ஆர். கோபாலமேனன் காலமானதும், சத்தியபாமா, குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார். கும்பகோணத்தில் உள்ள அணையாடி பள்ளிக்கூடத்தில் எம்.ஜி.ஆர் சேர்க்கப்பட்டார். வறுமையுடன் போராடிக் கொண்டு, குழந்தைகளை அன்புடன் வளர்த்தார் சத்தியபாமா. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி கமலாட்சி 16 வயதில் மரணம் அடைந்தார்.

படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றி:
ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., காங்கிரசில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கதர் வேட்டி, சட்டைதான் அணிவார். 1952ல் எம்.ஜி.ஆரை அறிஞர் அண்ணாவிடம் டி.வி.நாராயணசாமி அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது கலைஞர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்படவே, அவர்கள் பங்குதாரர்களாக மேகலா பிக்சர்ஸ் படக் கம்பெனியை தொடங்கினார்கள். பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரை சிகரத்துக்கு உயர்த்தயது. சினிமாத்துறையில் புகழேணயில் உயரே உயரே சென்று கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அரசியலிலும் உயர்ந்து கொண்ட போனார். திமுகவிலிருந்த இளைஞர்களின் நெஞ்சில் இடம் பெற்றார். தி.மு.க., கொடியை தன் படங்களின் தொடக்கத்தில் காட்டினார்.

திமுக பொதுக் கூட்டங்களில் பேசினார். நன்கொடைகளை வாரி வழங்கினார். இதன் காரணமாக அண்ணா எம்.ஜி.ஆரை இதயக்கனி என்று குறிப்பிட்டார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர்., துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர்., கழுத்தில் பாய்ந்த குண்டு, ஆபரேஷனில் அகற்றப்பட்டது. மறுபிறவி எடுத்தார். அப்போது எம்.ஜி.ஆர்., ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. அண்ணா முதல்வரானார். 1969ல் அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வரானார். அந்தநேரத்தில் எம்.ஜி.ஆர்., திமுக பொருளாளனார்.கருணாநிதி முதல்வரான பிறகு திரை உலகிலும், அரசியலிலும் உயிர் நண்பர்களாக இருந்த இருவர் நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. அதனால், திமுக சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., பகிரங்கமாகப் பேசினார். அதைத் தொடர்ந்து 1972 அக்டோபர் 18ம் தேதி ‘அண்ணா திமுக’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். 1977ல் நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1980 ஜனவரியில் நடந்த லோக்சபாத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவே எம்.ஜி.ஆர்., மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குப் பின் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எம்.ஜி.ஆர்., மீண்டும் முதல்வரானார்.

எமனை வென்றவர்:
1984ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, உடலில் வலது பக்கம் செயல் இழந்தது. நவம்பர் 5ம் தேதி அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சிறுநீரகம் அளித்தவர், அண்ணன் சக்ரபாணியின் மகள் லீலாவதி. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருக்கும்போதே, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருக்க, தமிழ்நாட்டில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எமனை வென்ற எம்.ஜி.ஆர்., 1985 பிப்ரவரி 4ம் தேதி சென்னை திரும்பி, 10ம் தேதி 3வது முறையாக தமிழக முதல்வரானார். அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஆரோக்கியமாக இருந்தாலும், அவருக்கு பேச்சு வரவில்லை. என்றாலும் விடா முயற்சியுடன் பயிற்சிகள் பெற்று ஓரளவு பேசினார். இந்நிலையில் 1987 டிசம்பர் 23ம் தேதி அவர் உடல்நிலை மோசமடைந்நது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 24ம் தேதி எம்.ஜி.ஆர்., மறைந்தார். திரை உலகிலும், அரசியலிலும் ஒரு சகாப்தம் முடிந்தது.

எம்.ஜி.ஆருக்கு ரசிகர்களும், தொண்டர்களும் ஏராளம், அவர் எதை செய்தாலும், அதை வேதவாக்காக ஏற்று செயல்பட்டார்கள். ‘கையில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியதும், அனைவரும் பச்சை குத்திக் கொண்டனர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, பல சோதனைகளில் வெற்றி கண்டு, சாதரண நடிகராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, அரசியலில் மும்முறை முதல்வரான எம்.ஜி.ஆர் மறைந்தாலும், மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 

 

 

வெ.சந்திரமணி
பெரிய காஞ்சிபுரம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *