வையவன்

சிவா வீட்டுக்குத் திரும்பிய போது தெரு முனையிலேயே திஷ்யா கதையைப் படித்திருப்பாள் என்று நினைத்தான்.
அவளைப் பார்க்க வேண்டும் என்று மனசு துடித்தது. படி ஏறி வரும்போதே அவர்கள் வீட்டில் கூச்சலும் கும்மாளமும் கேட்டன.

எதிர்ப்பட்ட சீதாவிடம் விசாரித்தான்.
“பெங்களூர் அத்தை வந்திருக்காங்க.”
அவனுக்குத் தபாலில் ‘நந்தவனம்’ வந்திருந்தது.

இரண்டு நாட்கள் தன் மகிழ்ச்சியின் எதிரொலியை திஷ்யாவிடம் கண்டு அனுபவிக்க அவன் தவித்துப் போனான்.
அதற்கு நேரம் வாய்க்கவில்லை. குழந்தைகளும் பெரியவர்களுமாக பெங்களூர் அத்தையையே சுற்றினார்கள். திஷ்யாவோடு தனித்துப் பேச வசதிப் படவில்லை.

அந்த பெங்களூர் அத்தையிடம் அவனை திஷ்யா அறிமுகம் செய்த போது எழுத்தாளர் என்று கூடச் சொன்னாள். அவன் கதை வந்த ‘நந்தவனம்’ இதழை அத்தையிடம் காட்டினாள்.

எனினும் அந்த மகிழ்ச்சி அதன் முதல் கிளர்ச்சி எல்லாம் சூபர் எக்ஸ்பிரஸில் கடந்து செல்லப்பட்ட சின்ன ஸ்டேஷன் மாதிரி புறக்கணிக்கப்பட்டு விட்டது.

அந்த இரண்டு நாட்களிலும் அவனுக்குத் தான் மாப்பிள்ளையோ தலைவரோ ஆன ஒரு சுயதிருப்தி. அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.

தாமு இல்லாததால் சமையலில் விமரிசை செய்து கொள்ளத் தோன்றவில்லை. மீண்டும் ஒருமுறை பிரீதாவைப் பார்க்கலாமா என்று யோசித்தான். பஸ் ஏறி எலியட்ஸ் ரோடில் அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கினான்.

திடீரென்று மனசு மாறி மைலாப்பூர் பீச்சுக்கு அங்கிருந்து நடந்தான். லைட் ஹவுஸின் மீது ஏறினான். கட்டு மரமும் கயிற்றுச் சுருணையையும் காவல் காத்த கரையோரத் தனிமையில் பொங்கி வந்த அலைகளில் தன் குதூகலத்தைக் கரைத்தான்.

நிலா உதித்தது.
வெளிர் நீலக் கடல் கறுத்தது.
அப்புறம் பாதரசம் கொட்டிய மாதிரி கடற் பரப்பு பளபளத்தது.

ஆங்காங்கே வெள்ளைக் குதிரைகள் நுரைத்துக் கொண்டு உதறிச் சிலுப்பி மேலெழுந்தன.
அந்த அலைகளில் பிரீதாவின் வாக்கு கேட்டது.
“எப்படி வாழ்ந்தாலும் அது நிலையற்றது தான்”
சிவா அலை முழக்கத்தை உற்றுக் கவனித்தான்.

ஒரு வழக்கை ஆர்ப்பரித்துக் கொண்டே அலைகள் அவனிடம் சொல்ல வந்தன.
அவன் உற்றுக் கேட்டான்.
ஜனனம். மரணம். உதயம். அஸ்தமனம். எழுச்சி, வீழ்ச்சி; முடிவற்றது. முடிவற்றது.

பெரிய அலை ஒன்று சீறிக் கொண்டு வந்து அவன் பாதம் வரை வந்து நனைக்காமல் பின் வாங்கிற்று.
அவன் பார்வை தொட்ட நடுக்கடல் விளிம்பில் லட்ச தீபம் ஏற்றிய மாதிரி ஒளிப் பாலம் மிதந்தது.
அங்கே நிர்ச்சலனம்.

கண்ணுக்குத் தெரியவில்லை. போனவர்கள் சொல்லக் கேட்டு மனசு கற்பித்தது.
உற்று அலைகள் பேசுவதை சிவா கேட்டான். நடுக்கடல்.
எங்கும் அமைதி இருக்க முடியாது. அங்கேயும் அமைதி போல் தென்படும் ஓர் இயக்கம்தான் இருக்குமோ?
இயங்கு, இயங்கு எழுந்து வீழ்ந்து உதித்து அஸ்தமித்து, பிறந்து மரித்து இயங்கிக் கொண்டே இரு. கரை கடக்க முயன்று கொண்டே இரு.

சிவா யோசித்தான். கரை.. எது கரை? எங்கே கரை?
எட்டு மணிக்கு வீடு திரும்பியபோது சிவா பதமுற்றிருந்தான்.
வெளியே ஒரு கார் நின்றிருந்தது. டோயோடா.
வாசலில் தெருப்பக்கத்துப் போர்ஷன்காரர் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார்.
“ஒங்களைத் தேடிட்டு யாரோ வந்திருக்காங்க”

“யார்?”
“ஒரு யங்மேன். மேலே இருக்கார்”
சிவா அவசரமாகப் படியேறினான்.
நேர் எதிரே கூடத்தில் எரிந்த விளக்கொளியில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும், வெற்றிவேல் தெரிந்தான். அவன் கையில் ‘நந்தவனம்.’

உயரமாக நிமிர்ந்த முதுகோடு வெற்றிவேல் உட்கார்ந்திருப்பது வினோதமாயிருந்தது.
ஒரு குங்ஃபூ சாம்பியன் மாதிரி…சேச்சே…ஒரு புத்தபிட்சு மாதிரி. ஊஹூம்… ஒரு யோகி மாதிரி…கரெக்ட்.
உட்கார்ந்திருக்கிற வெற்றிவேலுக்குத் தலைப்பாகை கட்டி விட்டால் அவன் அசப்பில் விவேகானந்தர் மாதிரி இருப்பான்.
காலடி ஓசை கேட்டு அவன் நிமிர்ந்தான்.

மின் சக்தி பாயும் கண்கள்.
“எங்கே போயிருந்தே?”
“எப்போ வந்தே?”
“ஒரு மணி நேரம் ஆச்சு”

ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டார்கள்.
வெற்றிவேல் உட்கார்ந்து கொண்டே கை நீட்டினான். சிவாவின் கரம் அதைச் சந்தித்தது. ஒரு குலுக்குக் குலுக்கியதுமே உடம்பில் உரம் ஏறிற்று. தான் பாதி பிரிந்து மீண்டும் வந்து இணைந்த பலம்.
“எதற்கு?” என்று கேட்டான் சிவா.

“இதற்கு” என்று தன் கையிலிருந்த ‘நந்தவனத்’தை உயர்த்திக் காட்டினான் வெற்றிவேல்.
“என்னை ரொம்ப காக்க வச்சுட்டே!” என்று கையை விடுவித்துக் கொண்டே குற்றம் சாட்டினான்.
“நீ வருவேண்ணு தெரியுமா என்ன?”

“இதைச் சொல்லலே. உங்கிட்டே இருந்து தபாலை எதிர்பார்த்தேன்!”
“எந்த விலாசத்துக்கு எழுதட்டும்? நீ தான் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் ஊருக்குப் போறியே!”
அவன் கிண்டலாக சிவாவைப் பார்த்தான்.
“அது பாதி உண்மைதான் இல்லியா?”

அவனிடம் இவனும் இவனிடம் அவனும் உண்மையை ஒளிக்க முடியாது.
உதட்டை மூடிக்கொண்டு சிவா மெதுவாகத் தலையை அசைத்தான்.
“நீ எங்கே போய்ட்டே சிவா… இவர் வந்து ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிகிட்டிருக்காரே” என்று கையில் இரண்டு ஷர்பத் டம்ளருடன் வந்தாள் திஷ்யா.

“பீச்சுக்குப் போயிருந்தேன்”
டம்ளரைக் கொடுத்து விட்டு உள்ளே போனவள் வெற்றிவேல் மறைகிற மாதிரி சுவர் ஓரம் போய் நின்று கையை அசைத்து அவனைக் கூப்பிட்டாள் திஷ்யா.

அவன் டம்ளருடன் அவளருகில் போனான்.
“சப்பாத்தி பண்ணிகிட்டிருக்கேன். ரெண்டு பேரும் இங்கேயே சாப்பிடுங்க”
“இரு… கேட்டுச் சொல்றேன்”

சிவா வெற்றிவேலிடம் வந்தான்.
“சாப்பிடுவோமா?”

ஷர்பத்தைக் குனிந்து ஒருமுறை பார்த்துவிட்டு ஒரே மூச்சில் குடித்துவிட்டு டம்ளரை கைப்பிடிச் சுவரின் மீது வைத்தான் வெற்றிவேல்.

“நோ… நாம டெங்கனிக்கோட்டா போறோம்.”
“எப்ப…”
“இப்போ….”
“இப்பவேவா?…”
“ஏன்… எதாவது வேலையிருக்கா?”

“இல்லே…” அவன் இழுத்தான்.
“ஸால்வ் தி ப்ராப்ளம்” என்று திஷ்யாவிற்குக் கேட்காத மாதிரி அவள் நிற்கிற திசைக்குத் தலையைத் திருப்பிக் காட்டினான் வெற்றிவேல்.

தன் ஷர்பத்தைக் குடித்துவிட்டு சிவா திஷ்யாவிடம் போனான்.
“ஸாரி… திஷ்யா… நாங்க அவசரமா டெங்கனிக் கோட்டா போறோம்…”
“எப்ப வருவே?” அவள் கண்களில் ஒரு புதிய உணர்வைக் கண்டான் சிவா.

ஏக்கம்!
அந்நியமானது, அவளுக்கு, அவனிடம் அவளுக்கு.
“தெரியலியே… இரு கேட்டு…” இழுத்தான்
அவன் நாக்கைக் கடித்தான்.

வெற்றிவேலைக் கேட்டு அவளிடம் திரும்பி வருகிற நாளைச் சொல்ல நினைத்ததன் அசட்டுத்தனத்தை எண்ணி அவன் கண்ணை மூடிச் சிரித்தான்.

அந்தச் சிறிய கணத்தில் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த மானசீக இடைவெளி சட்டென்று குறைந்ததை அவன் உணர்ந்தான்.

வெளியே வெற்றிவேல் காத்திருக்கிறான். சிவா வந்தான்.
“சரி… கிளம்பு… நான் ஏதாவது டிரஸ் எடுத்துக்கணுமா?”
“வேண்டாம்…”

“எத்தனை நாள் அங்கே இருப்போம்?”
“ரெண்டு நாள். நாளை மறுநாள் ஒன்னைக் கொண்டு வந்து இங்கே விட்டுடறேன்.”
திஷ்யாவுக்குக் கேட்டிருக்கோம். கேட்க வேண்டும் என்று உரக்கச் சொன்னானோ?
வெற்றிவேல் எழுந்தான்.

“ஒரு லுங்கியாவது எடுத்துக்கறேனே…”
“லுங்கி… பனியன், வேஷ்டி, சட்டை எல்லாம் காரிலே ரெடியா இருக்கு. கௌம்பு”
மறு வார்த்தை பேசாமல் காத்திருந்த திஷ்யாவுக்கு சிறிதாகத் தலையசைத்து விட்டு வெற்றிவேலின் பின்னால் படியிறங்கினான் சிவா.

காரில் உட்கார்ந்து கதவைச் சாத்தும் போது அது மூடும் ஓசை கூட மெல்லத்தான் வந்தது. சொன்ன சொல்லைக் கேட்கிற மாதிரி கார் ஸ்டார்ட் செய்ததும் புறப்பட்டது.

பின்னால் பார்த்து விட்டு ரிவர்ஸ் எடுத்தான் வெற்றிவேல்.
சந்து திரும்பி சாலை வந்ததும் பேச்சை ஆரம்பித்தான்.
“என்னடா?”

“சொல்லுடா”
“தேசீயப் பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கியா?”
வெற்றிவேல் குத்தலாகக் கேட்டான்.

“எதைச் சொல்றே… வேலை தேடறதையா?”
“இல்லே. ‘லவ் பண்றதை”

“ஓ… அந்தப் பொண்ணை வச்சு சொல்றியா? டோண்ட்பி ஜெலஸ், அது சும்மா பரிச்சயம்”
“ஒரு நண்பனை காதலி முதலில் பங்கு போடறா. அப்புறம் முழுசா கபளீகரம் பண்ணிடறா…”
“எனக்கு இன்னும் அனுபவமில்லே”

“நம்பறேன். உன் நந்தவனம் கதை…” என்று வெற்றிவேல் இடது கைப் பெருவிரலை உயர்த்திக் காட்டினான்.
சிவாவுக்கு மார்பு விம்மிற்று.

“ஆனா எனக்கு வருத்தமா இருந்தது”
“ஏன்..”
“ஹீரோயிஸம் இல்லாத ஹீரோ. இன்னிக்கு ஓடிட்டிருக்கிற லட்சியம் இல்லாத வாழ்க்கை மாதிரி…”

வெற்றிவேல் ஒரு சைக்கிள்காரருக்கு ஹார்ன் செய்தான்.
“எதிர்மறையா அணுகியிருக்கேன். ஹீரோயிஸம்…நீ சொல்றியே அந்த லட்சியம், அது குற்றுயிரா இருக்குண்ணு காட்டியிருக்கேன்.”

“எதிர்மறை எதிர்மறையைத் தான் தோற்றுவிக்கும்.”
“இங்கே எதுவும் எதையும் தோற்றுவிக்காது. ஓயாமே குடுமிபிடிச் சண்டை நடக்கும். ஒரு விஷயம் கிடைச்சா கொஞ்ச காலம் வெறும் பேச்சுப் பேசுவாங்க. அப்புறம் சென்ஷேனலா வேற ஏதாவது கெடைக்குமானா அதை விட்டு நகந்துடுவாங்க.”

“ஊருக்குப் போயிருந்தேன். நண்பர்களைப் பாத்தேன் எல்லாரும் ஒன் கதைண்ணு தெரிஞ்சுகிட்டாங்க.”
“என்ன சொன்னாங்க?” சிவா ஆவலோடு கேட்டான்.

“டர்ஜனீவ் மாதிரி இல்லேண்ணா ஒருத்தன். டால்ஸ்டாய் மாதிரி இல்லேண்ணா இன்னொருத்தன். புதுமைப்பித்தன் ‘பவர்’ இல்லேண்ணான் வேற ஒருத்தன்.”

“நீ என்ன சொன்னே?”
“நன்றி சொன்னேன். அத மாதிரி இது மாதிரிண்ணு சொன்னா அவமானப்படுத்தற முயற்சி. இது பரவால்லே நீ ஒன் மாதிரி எழுதியிருக்கேண்ணு மறைமுகமான சர்ட்பிகேட்.”

சிவாவுக்கு வருத்தமாக இருந்தது.
“ஸோ…தே டோன்ட் லைக் இட்!”
“யூ டோன்ட் பாதர்… ஒனக்குப் புடிச்சிருக்கு இல்லே, எழுது.”

“என் அம்மாவைப் பார்த்தியா?”
“உன் அப்பாவைப் பார்த்தேன்.
சிவா நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“எங்கே?”

“டெங்கனிகோட்டா பக்கத்திலே. அண்செட்டி என்கிற சின்ன ஊரிலே. ஒரு சிவன் கோயில்லே. நேத்து வரிக்கும் அங்கே தான் இருந்தார்… அவருக்கு என்னை அடையாளம் தெரியலே…நான் புரிஞ்சுகிட்டேன். ஒடனே ஒனக்குத் தெரிவிக்கணும்னு.. நோ ஒன்னைக் கூட்டிட்டுப் போயி காட்டணும்னு தோணிச்சு.”

“தாங்க் யூ…” என்று அவன் தோளைத் தொட்டான் சிவா. அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.
“எப்படி இருக்கார்?”

“பெரிய ரிஷி மாதிரி தாடி வச்சிருக்கார். தலை நரைச்சு தாடி நரைச்சுப் போயிருக்கு… மீதி எல்லாம் நேரிலே பார்.”
வெற்றிவேல் ஒரு பெரிய அசைவ ஹோட்டல் எதிரே காரை அதற்காக அனுமதித்திருந்த இடத்தில் நிறுத்தினான்.
அது அசைவம் என்று தெரிந்தும் வெற்றிவேலுக்காக சிவா ஆட்சேபிக்கவில்லை.

“கார் வாங்கினயா வெற்றி?”
“இல்லே… ஒரு பந்தயத்திலே ஜெயிச்சேன்.”
“பந்தயமா?”

“ஆமா…” அவன் கதவை மூடிப் பூட்டிக் கொண்டே சொன்னான்.
“அண்செட்டியிலிருந்து பெங்களூர் போற ரோட்லே என் மோட்டார் பைக்லே இந்தக் காரை ஓவர்டேக் பண்ண முடியாதுண்ணு ஒரு கோடீஸ்வரன் சொன்னான். இந்தக் காரே பந்தயம்ணு கட்டினான். தட் வாஸ் எ சாலஞ்ச்..ஜெயிச்சுட்டேன்.”

“காரை எப்படி வாங்கிக்கிட்டே? இது ஒன்னாலே முடியாதே!”
வெற்றிவேல் கம்பீரமாகப் புன்முறுவல் செய்தான்.

“யூ ஆர் கரெக்ட்… இதை எவன் எடுத்துக்கப் போறான்? ஆனா அந்தக் கோடீஸ்வரனுக்கு இது ரொம்ப அற்ப விஷயம்.. அவன் ஒரு அமெரிக்கன். டெட்ராயிட்லே மோட்டார் கம்பெனி மானேஜிங் டைரக்டராம். கேம் ஈஸ் எ கேம்னு சொன்னான்.”
இருவரும் சாலையைக் கடந்து கொண்டே பேசிச் சென்றனர்.

“போட்டி, யந்திரத்துக்கும் மனுஷனுக்கும் தான், பரிசுக்காக இல்லேண்ணு சொன்னேன். யூ… ப்ரீக்ணு சொன்னான். ஆல்ரைட்… இதை நான் ஜெயிச்சேண்ணு ஓர் அடையாளத்துக்காக மெட்ராஸுக்கு எடுத்துட்டுப் போறேன், ஒரே ஒரு ட்ரிப் மட்டும் அப்புறம் திருப்பி எடுத்துக்கோண்ணு சொல்லிக் கொண்டு வந்திருக்கேன்…”
அவர்கள் ஹோட்டலிற்குள் நுழைந்து கையலம்பினர்.

வெயிட்டர் வந்ததும் வெற்றிவேல் ஆர்டர் சொன்னான்.
“ரெண்டு தந்தூரி சிக்கன்…”

வெற்றிவேலை சிவா இடைமறித்தான்.
“ஒரு தந்தூரி சிக்கன். ஒரு ப்ரெட் பட்டர் ஜாம்.”

“மறந்துட்டேண்டா சிவா… நீ இருக்கறப்ப இந்த கசாப்புக் கடைக்கு வந்திருக்க வேண்டாம்.”
“இட்ஸ் ஆல் ரைட்… நீ எழாதே உட்கார்”
வெயிட்டர் ஆர்டர் எழுதிக் கொண்டு போனான்.

இருவரும் காத்திருக்கும் வேளையில் வெற்றிவேல் ஒரு கேள்வி போட்டான்.
“வேலை கெடைச்சிருச்சா?”
“கெடைச்சிருந்தா சொல்லியிருப்பேன்.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *