மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகம்

0

–சித்தார் கோட்டை நூர் மணாளன்.

 

பிறப்பும் சிறப்பும்:
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
மக்களின் மனதில் நிற்பவர் யார்…?
என்ற இந்த வினாவை தமிழறிந்த மக்களிடம் வினவினால் எம்.ஜி.ஆர். தான் என பட்டென பதில் வரும்!

இந்த இருபதாம் நூற்றாண்டில் திரையுலகிலும் அரசியலிலும் விடி வெள்ளியாக ஒளிர்ந்து, தொட்டதெல்லாம் துலங்க கொடிகட்டிப் பறந்து நட்புக்கரம் நீட்டி தன்னை நேசித்த நெஞ்சங்களை அரவணைத்த அற்புதமான கரத்திற்கு சொந்தக்காரரே எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக் காரர்தான்.

மாநிலத்தில் மானிடராய் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால்… மறைந்த பின்னும் மக்களின் மனதை விட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர்!!

வரலாற்று வரிகளில் மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்தும் வாழுகின்ற அறிஞர் கூட்டம் ஏராளம்! அவர்களது படைப்புகளும் அசாதாரணமான பங்களிப்புகளும்தான் மக்களின் மனங்களில் விழுந்த விதையாகிப் பின் முளைத்து தழைத்து விருட்சமாக எழுந்து பரந்து நிற்கிறது!

இளமைப் பருவம்:
வாழ்க்கைத் தளத்தில் முறையாக நடந்து நெறியோடு வாழத் தகுந்த பாதை எதுவென தேடி ஓடிய எம்.ஜி.ஆருக்கு நாடகக் கூடாரம் ஒளி விளக்குடன் மிளிரி அழைப்புக் கொடுத்து அரவணைத்தது!

நான் ஏன் பிறந்தேன்? என தனக்குத் தானே வெந்து வேதனை வினாவினை தன்னுள் எழுப்பியவாறு வாழும் மக்களிடையே … மக்களின் நெஞ்சங்களில் மஞ்சம் அமைத்து வாழும் அளவுக்கு, மன்னாதி மன்னனாகவும், நாடோடி மன்னனாகவும், காவல்காரனாகவும், அன்னமிட்டகையாகவும், குடியிருந்த கோவிலாகவும், எண்ணை விளக்குகளின் ஒளியில் வாழ்க்கை துவங்கிய எம்.ஜி.ஆர். கண்ணைக்கவரும் வண்ணமயமான மின்னொளியில் மிளிரும் காலம்வரை மண்ணில் வைரமாகவும் விண்ணில் கண் சிமிட்டும் நட்ச்சத்திரமாகவும் ஜொளிக்கலானார்.

ஆரம்பக் காலங்களில் சில அணாக்களை சம்பளமாகப் பெற்று நடிப்புத்துறையில் நுழைந்தார். தனது சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, தளாரத முயற்சி, இடைவிடாப் பயிற்சி, கண்ணியம் இவைகளுடன் கடமையைச் செய்ததால் பல கோடி பணம் ஈட்டி உயரும் உன்னத நிலையை அடைந்தார்.

நட்ட மரமே பலனளிக்கும்… என்ற உண்மையை உணர்ந்தவர். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும் என எண்ணினார். அதனால் ஏழை எளிய மக்கள் மீது அக்கறை காட்டினார். தன்னால் ஆன உதவிகளைச் செய்து ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சொந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது.

பருவ வயது:
புகழடைய வேண்டுமென்ற அவாவில் மக்களெல்லாம் எதையெதையோ தேடி ஓடும் காலத்தில் எம்.ஜி.ஆரைத் தேடி புகழ் வந்தது. நாடக வாழ்வு முடிவுற திரையுலக வாழ்வுத் தொடரலானது.

மக்களின் யதார்த்தங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட வசனங்களுக்கு ஏற்ப திரையுலகில் காட்சியளித்த எம்.ஜி.ஆரின் நடிப்பு அவர்பால் மக்கள் மட்டுமல்ல… பற்பல கதாசிரிய விற்பன்னர்களும் அவரது தொடர்புக்காக காத்திருந்தனர். கழகங்கள் பலவும் அவரின் ஆதரவுக்காக அணிவகுத்தது. ஆரம்ப காலங்களில் காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். காங்கிரஸ்காரராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். கதர் ஆடையுடனும் கழுத்தில் துளசி மாலையுடனும் வலம் வந்த அவரை அறிஞர் அண்ணாவின் அழைப்பும், அரவணைப்பும் திரையுலகில் முன்னணி நட்ச்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. அது மட்டுமல்ல… அவருடைய இளமைக் கால கனவுகளை நனவாக்க அரசியல் பாட்டையும் அவருக்கு கை கொடுத்தது. கால சுழட்சிக்குப் பின்னால் மள மளவென புகழ் அடைந்துவிட்ட பல படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்த்தது.

திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணியும் பங்கும் மகத்தானது.

அண்ணாவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தம்பியாக ஆரம்பத்தில் இருந்தவர் அண்ணாவின் மறைவுக்குப் பின் அவரது கனவுகளை நனவாக்கிக் காட்டி தமிழ் திரையுலகிலும் அரசியல் உலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து அவரின்றி வேறொருவர் அவரிடத்தை அடைய முடியாது என்ற நிலைக்கு ஆளாகிப் போய்விட்டார். அண்ணாவைத் தொட்டவர்களில்… தொடர்ந்தவர்களில் அரியணை ஏறிய பலரில் முதலாமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் என்றால் அது மிகையில்லை.

பிறந்தது முதல் வேதனைகளும் சோதனைகளும் எம்.ஜி.ஆரின் கரம்பிடித்து நடந்தும் அவரது சுய சாதனையால் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

திரைத்துறை:
‘ரத்னகுமார்’ என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கத் துவங்கியவரை ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படம்தான் எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்திக் காட்டியது. அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கதை வசனங்களுக்கு ஏற்ற நடிப்பு எம்.ஜி.ஆருக்கு ஈடு இணையில்லை என்கிற நிலையை உருவாக்கியது.

தொடர்ந்து அவர் நடித்த படங்களும், அதன் தலைப்புகளும் அவர் நடந்த தடங்களாகவும், அவர் நடத்தியப் பாடங்களாகவும் ஆகின. பெற்றால்தான் பிள்ளையா, தாயைக் காத்த தனயன், அன்னமிட்டகை, பாசம், ஊருக்கு உழைப்பவன், படகோட்டி, தொழிலாளி, ரிக்க்ஷாக்காரன், விவசாயி, காவல்காரன் என ஒவ்வொரு படத்தின் தலைப்பும் அவருக்குப் புகழை வாரி வாரி வழங்கிட… திரை உலகில் ஒளி விளக்காக மிளிர்ந்து உலகம் சுற்றும் வாலிபனாக இறுதியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனுடன் அவர் தனது திரையுலகத் தொடர்பை காரண காரியங்களை முன்னிட்டு துண்டித்துவிட்டார். அவரது நடிப்பு தான் நின்றுபோனதே தவிர அவரின் இதயத்துடிப்பு நின்றபாடில்லை. இன்றும்கூட அவரது படங்களை விரும்பிப் பார்க்கும் மக்கள் இருந்து கொண்டுள்ளார்கள் என்பதே அதற்குச் சான்று!

அரசியல்:
புரட்சி நடிகர் என மக்களால் புகழப்பட்டவர் புரட்சித் தலைவரானார். நாத்திகர்களால் மட்டுமல்ல.. ஆத்திகர்களாலும் போற்றப்பட்டவர். நாட்டின் பற்பல விருதுகளையும், பட்டங்களையும் சுமக்கலானர். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் ‘பொன்மனச் செம்மல்’ என்கிற பட்டத்தையும் பெற்றார்.

காங்கிரஸ்காரராக கட்சியில் இணைந்தவர் கலையுலகப் பிரவேசத்தின் முதிர்வில், கழகக்காரராக கட்சியில் இணைந்து தமிழக அரசியல் வானில் உதயசூரியனாக உயர்ந்து வலம் வந்தார்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞரின் ஆட்சி தொடங்கியது. கொள்கைகள் அளவில் உண்டான கருத்து வேறுபாடுகளால் திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டும் நீங்கியோ, நீக்கப்பட்டோ போன எம். ஜி.ஆர். நன்றி மறவாத தனது தன்மையின் வெளிப்பாடாக அறிஞர் அண்ணாவின் பெயரை முன்வைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கி இரட்டை இலையை சின்னமாக்கி தமிழக அரியணையில் ஏறி அமர்ந்தார்.

தனது பிரகாசம் பொருந்திய சட்டதிட்டங்களால் மக்களுக்கு பயனளிக்கும் உதவிகளையும் உபகரணங்களையும் அரசு மூலம் நல்கினார். மறைந்த பின்னும் மக்களின் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகமாக – திகழக் காரணம் அவரது சரியான திட்டங்கள்தான்.

ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது, பள்ளிமாணவ மாணவியர்க்கு சீருடை வழங்கியது, சத்துணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது, இன்ன பிற திட்டங்களுடன்… அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றைக்கொண்டு கருணை உள்ளம் கொண்டு மக்களை அரவணைத்துச் சென்றதால் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்து ‘மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகம்’ என்று போற்றுதலுக்கு உரியவராக உயர்ந்துள்ளார்.

வாழ்க அவரது புகழ்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *