— சுரேஜமீ.

 

நான் பார்த்த எம்.ஜி.ஆர்

அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும் என நினைக்கிறேன். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, களத்த்தில் நிற்கும் ஜாம்பவான்களுக்கிடையே, புதிதாய் முளைத்த இலை வருகிறது! முதன் முதலில் எங்கள் வீட்டில், DMK & ADMK என்ற சொற்கள் உபயோகிகப் படுகின்றன. அதுதான், என் முதல் பசுமையான நினைவு மக்கள் திலகம் பற்றி! (1976-77).

அதன் பின்னர், வெள்ளித் திரையில் நான் பார்த்த பல திரைப்படங்கள்! ஒரு காலத்தில் காலை, பகல் மற்றும் இரவுக்காட்சியென மூன்று வேளைகளிலும் பைத்தியமாக என் தந்தையுடன் பார்த்த திரைப்படங்கள் சொன்னது …
யார் இவர் என!

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்!

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !

என எத்தனையோ பாடல்களின் வரிகள் என் இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் இரத்தமாக்கிய தருணங்கள் பொன்னானவை என்றால் மிகையாகது!
தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர்! இன்றைக்கு இருக்கக்கூடிய பல அரசியல் தலைவர்களை இனம் கண்டு படிக்க வைத்து, வாழ்க்கை கொடுத்தவரை வள்ளல் என்றுதானே தமிழ் சொல்கிறது! கர்மவீரர் காமராஜருக்குப் பின் கல்வியின் வலிமையை அறிந்து அதைக் கடைக்கோடித் தமிழனும் பெறவேண்டுமென்றும், பட்டினி பள்ளிக் கல்வியைத் தடுக்கக் கூடாதென்றும், சத்துள்ள உணவு தந்த அன்னை சத்யாவின் புதல்வர்தான் எம்.ஜி.ஆர்!

தலைவனுக்கு எடுத்துக்காட்டு:
அடுத்து நான் பார்த்த எம்.ஜி.ஆர் ஒரு பத்து பதினோரு வயது இருக்குமென நினைக்கிறேன்! முகவை மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம்; வானம் பார்த்த பூமி. மக்கள் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் என அனைத்திலும் பின் தங்கியிருந்த காலம். சாதிக்கலவரம் கோலோச்சிய நேரம். (1981).

அப்படி ஒரு கலவரத்தில், முகவையும்; சுற்று வட்டாரமும் பற்றி எரிகிறது! வீடுகளை விட்டு வீதிகளில் செல்கின்றனர் மக்கள். உடமைகள் போனால் என்ன; உயிரல்லவா முக்கியம் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தஞ்சம் தேடி அலைகிறது! வீடுகள் தீக்கிரையாக்கப் படுகிறது! எங்கு பார்த்தாலும் வெட்டு; குத்து; கொலை; மனித உயிரைக் குடிக்க மனிதனே துடிக்கின்ற அவலம்! ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது. கலவரம் கட்டுக்குள் வருகிறது.

மக்களின் தலைவர், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வருகிறார். என்னுடைய கிராமத்திற்கு மிக அருகில் உள்ள கிராமத்திற்கு! அவரது கண்கள் பனிக்கின்றன! வேதனை அவர் நெஞ்சை அடைக்கிறது! பார்த்த அத்துனை உள்ளங்களும் உடைந்து உருகுகின்றன! இதுதான் ஒரு தலைவனுக்கு எடுத்துக்காட்டு என என் பிஞ்சு நெஞ்சில் அன்று விதைத்த விதைதான் இன்னும் என்னை மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கிறதென்று பெருமைப்படுகின்ற தருணங்கள் அவை!

வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன்:
அடுத்து வருவதோ, எம் இனப் பிரச்சினை. நாங்கள் இருப்பதோ முகவை. கரைக்கு இந்தப் பக்கம் ராமேஸ்வரம். அந்தப் பக்கம் மன்னார். ஈழத்தின் இனவாதம் உச்சத்தில் இருக்கிறது. பிரித்தானிய கொள்கையை; பிரித்தாளும் சூழ்ச்சியை இலங்கைப் பேரினவாதம் தமிழ் குழுக்களுக்குள் வித்திட்டு, இரண்டு பக்கங்களிலும் (ஒன்று அரசாங்கம்; மற்றொன்று போராடும் தமிழ் வர்க்கம்) நம் இன மக்கள் அவதியுற்று அடைக்கலம் நாடி தாய்த்தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்! (1981-82).

மக்களுக்காகவே தலைவனானவனாயிற்றே. எப்படிப் பொறுப்பான்? அகதிகளுக்காகவே, அன்றைக்கு ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, அதற்கு அமைச்சராக அன்றைய முகவை சட்ட மன்ற உறுப்பினர், அருமை அண்ணன் மறைந்த திரு. டி. இராமசாமி அவர்கள் அமைச்சராக்கப் படுகிறார்கள்! அதுமட்டுமா? அதன்பின் மக்கள் திலகம் செய்த உதவிகள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக ஏராளம்! அது நம் நெஞ்சத்தில் என்றும் நிலழாடும்!

வாழ்க்கையப் பார்த்து அஞ்சிய தலைவர்களுக்கிடையே, வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன் ‘மக்கள் திலகம்’ என்றால் மிகையாகாது! முன் வாழ்க்கையின் வறுமை தந்ததுதான் பின் வாழ்க்கை என்பதனால் தானோ, மக்களின் வறுமையை ஒழிக்க எண்ணிய வள்ளலாகத் திகழ்ந்த ஒப்பற்ற, மாற்றாரும் வணங்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள்:
பொன்மனச் செம்மல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள் ஏராளம்; அதில் முத்தாய்ப்பான சிலவற்றைப் பார்போமா?

1. முதலில் வருவது நான் வணங்கும் ஆசான், என் தமிழின் தடாகம்; தமிழ்த்தாயின் இளைய மகன் முத்தையா எனும் கண்ணதாசன்; கவிக்கெல்லாம் அரசன்; கலைவாணியின் அருள்பெற்ற கவியரசரை அரசவைக் கவிஞராக அமர்த்தி அழகு பார்த்தது! (1978)

2. தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது. எத்தனை பேருக்கு இது நினைவில் இருக்குமெனத் தெரியவில்லை! (உதாரணத்திற்கு: றா, னா, ணா, லை, ளை, னை, ணை என்பன)

3. சங்கம் வளர்த்த மதுரையில், தமிழுக்கு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தித் தமிழ் அறிஞர்களைக் கொளரவப்படுத்தியவர்!

4. கல்லாதோரில்லாத் தமிழகத்திற்காக ‘முதியோர் கல்வி’!

5. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம்!

6. இலவச பாடநூல் வழங்கும் திட்டம்!

7. ஈழப் பிரச்சினைக்கு ஆற்றிய பணிகள்!

என அடுக்கிக்கொண்டே போகலாம்; ஆனால், எழுத்தின் அளவும்; வாசிப்பின் சுவாசிப்பும் கருதி, என் கருத்தினை, நான் பார்த்த அனுபவத்தின் அடிப்படையில், என்னுள் வாழ்கின்ற தலைவனைப் பற்றி எடுத்து வைத்திருக்கிறேன். அதன் முடிவாக,

தமிழகம் போற்றும் ஒப்பற்ற தலைவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான் என்ற செய்தி ஊடகங்களில் பரவக் கேட்ட மக்கள் அலை மோதுகின்றன மருத்துவ மனை நோக்கி, மக்கள் தலைவனின் நலம் வேண்டி! என் இதயக் கண் முன்னே அன்றைய நிழல் காட்சிகள் ஓடுவதை வர்ணிக்க மனம் சற்று கிலேசமடைகிறது!

அமெரிக்கா பயணம்:
பின்னர், மேல் சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்கிறார். அங்கு உலகில் தலை சிறந்த மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைத் தொடர்கிறது. ஆனால், தமிழகத்திலோ, தங்கத் தலைவனின் நலம் வேண்டி கோவில்கள்; தேவாலயங்கள்; மசூதிகள் என எல்லா இடங்களிலும், மக்களின் பிரார்த்தனை எம் மன்னனை வாழவிடு என்று!

இச்சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒளி விளக்கு என்ற ஒரு திரைப்படம். அதில் வரும் ஒரு பாடல் காட்சி; சொகார் ஜானகி அவர்கள், மனமுருகி இறைவனிடம் வேண்டுவார்….

என்னுயிரைத் தருகின்றேன்…..மன்னனுயிர் காத்துவிடு என்று!

இப்பாடலின் முதல் வரிகள்

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு;
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு !

தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் இப்பாடல் ஒலிக்காத இடமே இல்லையெனலாம்! அவர்கள் அத்துனை பேருடைய நம்பிக்கையும், மக்கள் திலகத்தை மீட்டுக் கொண்டுவந்தது என்று சொன்னால், அது தலைவனின் மேல் தமிழனுக்கு இருந்த நம்பிக்கைக்குக் கிடைத்த பெருமை!

கடைசி அரசு விழா:
கடைசி அரசு விழா. அதுவும் என் நெஞ்சைத் தட்டுகிறது. ஆசிய ஜோதி நேருவுக்கு, சென்னை கத்திப்பாராவிலே சிலை திறக்கும் விழா! அன்னை இந்திரா மறைந்த செய்தி கூட என் மன்னனின் உடல் நலம் கருதி மறைக்கப்பட்டிருந்தாலும், இந்திராவின் புதல்வர், மறைந்த இளம் இந்தியப் பிரதமர் ராஜீவுடன் கலந்து கொண்ட அந்த விழாதான், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் கடைசி விழாவாகிப்போனது!

மறைவின் செய்தி பரவிய நேரம், தமிழகமே திரண்டது தலை நகர் நோக்கி! எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்! தன் வீட்டில் ஒருவன் மறைந்தது போன்ற உணர்ச்சிப் பெருக்கு!
மன்னவனை மண்ணும் போற்ற, தன்னுள்ளே வாங்கிக் கொண்டது!
அலைகடலும், அடைக்கலம் நானென்றது!
வான் மகளோ தினமும் நானுன்னை வணங்குவேன் என்றது! மன்னவன் புகழ் பாட

மக்கள் திலகம் பற்றி ஒரு சின்னக் கவிதை!
(பொன்மனச் செம்மலின் பிறந்த தினமான ஜனவரி 17 அன்று எழுதியது)

இவன்
மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய்
இருந்தும்;
மணம் வீசியதென்னவோ
நம் தோட்டத்தில்தான்!

தமிழுக்கே
திலகம்
வைத்தவன்!
தமிழகத்திற்குத்
திலகமாய்
இருந்தவன்!
அவன் தான்
மக்கள்
திலகம்!

தாயைவிட
தமிழை
நேசித்தவன்!

ஆம்!
பசுத்தோல்
போர்த்திய
புலிகளுக்கிடையே
புலியையே
மடியில்
கிடத்தி
போலிகளை
விரட்டிய
புண்ணியவான்!

இன்னும்
என் மக்களின்
இதயக் கோயிலில்
வாழும்
இரட்டை இலைத்
தெய்வமிவன்!

இந்த நாள்
அன்று
தீர்மானிக்கப் பட்டது;
இவன் பிறந்தால்
தமிழகம்
தலை நிமிரும்
என்று!

அந்தப்
பொன்னாள்
இன்றும்
வருகிறது!

வாழ்த்தும்
உள்ளங்கள்
வாழட்டும்!
பொன்மனச்
செம்மலின்
பொன்னான
பிறந்தநாள்
இன்று!!

முடிவுரை:
இந்தக் கட்டுரைத் தகவல்கள் தாங்கி வந்தது என் இதயத்திலிருந்த நினைவுகளை! இதைப் படிக்கும், உங்கள் உள்ளத்தில் கடுகளவாவது என் மன்னனின் பண்புகள் வேரூன்றுமானால்,

அந்தப் பரிசுக்கு இணை நிச்சயமாக வேறேதுமில்லை எனக்கு!

வாழ்க தமிழ்! வளர்க தமிழர் தம் இல்லங்கள்! ஓங்குக மக்கள் தலைவனின் புகழ்!!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனதில் நிறைந்த மக்கள் திலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *