முனைவர் போ. சத்தியமூர்த்தி.

 

sanga time

 

 

‘‘பண்டைத் தமிழரின்; வரலாற்றுக்களஞ்சியமாக, பழந்தமிழ் வேந்தர்கள், குறுநில மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் ஆவணமாக விளங்குவது புறநானூறாகும்” புறநானூற்றில் பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்கள், தெய்வ வழிபாட்டு முறை, மன்னர்களின் கொடைத்திறன், அவர்தம் போர்த்திறன், பண்டைத் தமிழ்ப் புலவர்களின் மாண்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும் , அதே நேரத்தில் பண்டைத் தமிழரின் தொழில் திறமும், வளமும் புலவர் பெருமக்களால் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன.

புறநானூற்றில் மக்களின் வாழ்க்கை முறைக்கு அடித்தளமாக விளங்கும் பொருளியல் வளம் பெருகப் பலவிதத் தொழில்களைப் பண்டை மக்கள் செய்துள்ளனர். அவற்றைப் புறநானூற்றுப் புலவர்கள் தங்கட்குக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சுட்டிச் செல்கின்றனர். புறநானூற்றில் இடம் பெற்ற தொழில் முறைகளைச் சுட்டிக் காட்டுவது இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உழவுத் தொழில்:
தமிழகத்தின் நிலப்பரப்பை ஐந்து திணைகளாகப் பண்டைத் தமிழர் பிரித்தனர். இயற்கை வளத்தை மலை வளமாகவும், கானகத்து வளமாகவும், வயல் வளமாகவும், கடல் வளமாகவும் கண்டனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று அவற்றிற்குப் பெயரும் சூட்டினர். பெருமணல் உலகமாகிய பாலை நிலம் என்று ஒரு அமைப்பு தமிழகத்தில் இல்லாத காரணத்தால் ‘‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் ” என்ற நிலையில் ஐவகை நில அமைப்பைக் கொண்டனர். இந்த ஐவகை நில அமைப்பில்தான் பண்டைத் தமிழர் வாழ்வியல் அமைந்தது. இயற்கைச் சூழலில் பெரிதும் போற்றப் பட்ட தொழில் உழவுத் தொழிலாகும். திருவள்ளுவரும் பொருட்பாலில் நாட்டு வளத்தைக் கூறும் பொழுது, உழவுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தனி ஒரு அதிகாரத்தை அமைத்துள்ளார்.

‘‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி “என்றும் ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று உழவுத் தொழிலை முதன்மைப் படுத்துவார். உழவுத் தொழிலின் சிறப்பை வள்ளுவர் வழியில் தமிழிலக்கியங்களும் மேன்மைப் படுத்துகின்றன. உழவுத் தொழில் பற்றிய செய்திகள் புறநானூற்றில் பல பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

‘‘வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூமி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
களைகால் கழாலின்” (புறம், பா. 120)

என்ற கபிலர் பாட்டு பாரியின் பறம்பு நாட்டு வளத்தைக் கூறும் பொழுது உழவுத் தொழிலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தினுடைய மேட்டு நிலத்துக் கார் காலத்து மழையால் மிகுந்த பெரிய , செவ்வியை உடைய ஈரத்தின் கண் புழுதி கலக்கப் பல சால்பட உழுது , விதைத்து, விளைந்த பயிரில் களையை எடுப்பார்கள் என்ற செய்தியை இப்பாட்டின் பகுதி தருகிறது. உழவுத் தொழிலின் முதல் நிலையை இப்பகுதி குறிப்பிடுகிறது. உழவு ஒருமுறை அல்லாது பல சால்பட உழுவதால் எரு வேண்டாத நிலையில் நிலம் பயன் தரும் என்பதை இப்பகுதி குறிப்பிடுகிறது. இதனையே திருவள்ளுவரும்,

‘‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். “

என்று குறிப்பிடுவார். எனவே வள்ளுவத்தின்வழி புறநானூறு பலமுறை உழுது நிலம் பண்படுத்தப்பட வேண்டும் என்றும், அப்படிப் பண்படுத்தினால் உரமாகிய எரு இட வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டு, உழவுத் தொழிலுக்குரிய பயிற்சியை வெளிப்படுத்துகிறது.

சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வெள்ளைக்குடி நாகனார் உழவின் சிறப்பை எடுத்துக் கூறும் பகுதியும் நினைவு கூரத் தக்கதாகும்.

….ஞாலம்
ஆதுநன்கு அறிந்தனை ஆயின் நீயும்
நொதுமலா ளாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிப்
குடிபுறந் தருகுவை ஆயின் நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” (புறம் , பா. 35)

என்ற பகுதியில் உழவுத் தொழில் மூலம் தான் குடிமக்கள் வாழ முடியும் என்பது வலியுறுத்தப் பெறுகிறது. அதாவது அகன்ற உலகவாழ்வை நன்கு அறிந்தவர் ஆனால் மற்றவர் மொழியைக் கேட்காது, ஏரைப் பாதுகாப்பவருடைய குடியைப் பாதுகாத்து அதாவது உழவரைப் பாதுகாத்து, அககாவலால் மற்ற குடிகளையும் பாதுகாத்தால் பகைவர்கள் அரசனின் திருவடியைப் போற்றுவர் என்று கூறப்பெற்று இப்பகுதியில் ஏர்ப்பின்னது உலகம் என்ற கருத்து வலியுறுத்தப் பெறுகிறது.

இவ்வாறு உழவுத் தொழிலைப் பற்றிய செய்திகள் பலவாறாகப் பல பாடல்களில் கூறப்பெற்றுள்ளது. கட்டுரையின் விரிவு அஞ்சி சில எடுத்துக் காட்டுகளே இடம் பெறுகின்றன.

ஆ காத்து ஓம்பல்:
உழவுத் தொழிலுக்குப் பண்டைக் காலத்தில் எருதுகளை அதாவது மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர். எனவே நிலத்தைப் பாதுகாப்பது போல ஆநிரைகளைப் பாதுகாத்தல் தொழில் முறையாகக் கொள்ளப் பட்டது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் பண்டைத் தமிழரின் போர்முறை கூட ஆநிரைகளைக் கவர்தலும், அவற்றை மீட்டலும் ஆகிய வெட்சி, கரந்தைப் போர்களாக அமைந்திருந்தன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

புறநானூற்றில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாடல் மிகச் சிறப்புடையதாகும். போரினைத் தொடங்குகின்ற பொழுது பாதுகாவலாகிய இடத்திற்குச் செல்ல வேண்டிய பொருள்களைப் பட்டியல் இடும் பொழுது முதற் பொருளாக ஆநிரை இடம் பெறுகிறது.
‘‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென” (புறம், பா. 9)

இப்பட்டியலில் ஆவினைக் காத்து ஓம்புகின்ற தொழிலின் சிறப்புக் கருதி காக்க வேண்டிய பொருளில் முதற் பொருளாக ஆவாகிய ஆநிரைகள் குறிக்கப் பெற்றுள்ளது நினைவு கூரத் தக்கதாகும். இதனையே பிறிதோரிடத்தில் ஆவினைக் காத்து ஓம்புகின்ற ஆயர்களை,

‘‘அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
விழவணி வியன்களம் அன்ன” (புறம் – பா. 390)
என்ற பகுதியில் ஆநிரை காத்து ஓம்பும் ஆயர்களை அறம் பொலியும் நெஞ்சினை உடைய ஆயர்கள் என்று குறிப்பிடுவது புறநானூற்றின் சிறப்பாகும்.

‘‘ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை கொடும்பாடு இல்லை”
என்று ஆநிரை காக்கும் தொழிலன் சிறப்பு பிற இலக்கியத்திலும் இடம் பெற்றிருப்பது அத் தொழிலின் பெருமையைக் கூறுவதாகும்.

ஆவினைக் காக்கும் தொழிலினைச் செய்பவர்களைக் கோவலர் என்றும் ஆடுகளை மேய்ப்பவர்களை இடையர் என்றும் குறிப்பிடுவதும் உண்டு. இடையரின் செய்திகளையும் . அவர்தம் தொழில் தன்மைகளையும் புறநானூற்றில் காண முடிகிறது. இதனை
‘‘ மாசுஉண் உடுக்கை மடிவாய் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லா”( புறம் – பா.; 54)
இப்பகுதியில் பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும், மாசுண்ட உடையையும், மடித்த வாயையும் உடைய இடையன், சிறிய தலையை உடைய ஆடுகளை மேய்த்துச் செல்லுகின்ற இடம் குறிக்கப் பெற்றுள்ளது. மேலும்,
‘‘புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போல” (புறம், பா. 339)
என்ற பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலை உடைய இடையர்கள் மாலை நேரத்தில் சிறிய தீயினை எழுப்புவர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. எனவே ஆநிரைகளையும், ஆடுகளையும் மேய்க்கக் கூடிய தொழில் புறநானூற்றில் குறிக்கப் பெற்று, எளிய மக்களின் தொழில் பேசப் பெறுகிறது.

கொல்லர் தம் தொழில்:
உழுதலும் ஆகாத்தலும் ஆகிய இயல்புத் தொழிலோடு பண்டைத் தமிழரிடம் மிகுந்திருந்த போர்த் தொழிலுக்கு உரிய வேல் வடிக்கும் தொழில் புறநானூற்றில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றது.

‘‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே” (புறம்,பா.312)

என்ற இப்பகுதியில் வேல் வடித்துக் கொடுக்கின்ற கொல்லர் தொழில் குறிக்கப் படுகிறது. படைக் கலத்தைத் திருத்தமாகச் செய்யக் கூடிய கொல்லர் தொழில் குறிக்கப் படுவது மேலும் பல பாடல்களில் காணப்படுகிறது.
‘‘கருங்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து (புறம், பா.36)
வீகமழ் நெடுஞ்சிலை புலம்ப”
என்ற இப்பகுதியில் வேல் வடித்துக் கொடுத்தல் மட்டும் கொல்லர் தொழில் அல்ல, அவர்கள் மரம் வெட்டும் கோடரியும் செய்து கொடுப்பார்கள் என்பதும் உணர்த்தப் பெறுகிறது. அதாவது வலிய கையை உடைய கொல்லன் அரத்தால் கூர்மை செய்யப்பட்ட அழகிய வாயினை உடைத்தாகிய நெடிய கையை உடைய கோடாரி வெட்டுதலால் ப10மணம் கமழும் மரத்தின் கிளைகள் புலம்பின என்ற செய்தி இப்பகுதியில் அமைந்துள்ளது. கொல்லன் உலைக் களத்தில் தொழிலைச் செய்வான் என்பதையும் புறநானூறு குறிப்பிடுகிறது.
‘‘இரும்பு பயன்படுக்கும் கருங்கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு ஒரூஉம்
உலைக்கல் என்ன வல்லா ளன்னே” (புறம், பா. 170)

இப்பகுதியின் பொருள் – இரும்பைப் பயன் படுத்துகின்ற வலிய கையை உடைய கொல்லன், விசைத்து அடிக்கப் பட்ட கூடத்தோடு ஏற்று மாறுபடும் உலையிடத்து உள்ள கல் போலும் பிட்டன் கொற்றன் வலிய ஆண்மை உடையவன் ஆவான் என்ற குறிப்பிடுகிறது. இப்பகுதியில் கொல்லர்கள் இரும்புத் தொழில் செய்வர் என்பது பெறப் படுவதோடு, உலைக் களத்த்pல் தொழில் புரிவோர் என்பதும் , இரும்பைக் காய்ச்சிச் செம்மைப் படுத்துவதற்கு உலைக்கல் இருந்தமையும் புலனாகின்றது. கொல்லரைப் பற்றிய செய்திகளைத் தருகின்ற பிற பாடல்களும் புறநானூற்றில் உள்ளன. இரும்பு அடிக்கும் கொல்லரைப் போன்று பொன் செய் கொல்லரும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளனர்.

‘‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்சை பல்காசணிந்த அல்குல்” (புறம், பா. 353)

என்ற இப்பாடற் பகுதியில் குற்றமற்ற பொற்கொல்லன் பழுதறச் செய்த பொன்னால் ஆகிய பலமணி அணிந்த மேகலை என்று பொருள் அமைந்து , பொன்செய் கொல்லரின் தொழில் கூறப் பெற்றிருப்பது நினைவிற்கு உரியதாம்.

வேட்டுவத் தொழில்:
புறநானூறு காட்டும் தொழில் முறைமைகளில் வேடுவர் என்ற தொழிலாளரின் செயல் முறைகள் பல பாடல்களில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. முல்லை நிலத்துத் தலைமக்களாக வேடர்கள் காட்டப் பெறுகின்றனர். அவர்கள் வேட்டைத் தொழிலோடு தினைப் பயிர் விளைவிப்பவர்களாகவும், மரங்களை வெட்டி மக்கள் பயன்பாட்டிற்குத் தருபவர்களாகவும் புறநானூற்றில் படைக்கப் பெற்றுள்ளார்கள். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறப்பும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அவ்வள்ளலின் வேட்டுவத் தொழிலைப் பற்றிக் கீழ்வரும் பாடல் சிறப்புடன் குறிப்பிடுகிறது.

‘‘வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உற்Pஇப்
புழல்தலைப் புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்” (புறம்,பா. 152)

இப்பகுதியில் வல்வில் ஓரியின் வில்தொழிலின் பெருமை பேசப் பெற்றுள்ளது. வேடர்களுக்கு உரிய விற்பயிற்சியை ஒரு அரசனே பெற்றிருந்தான் என்று எண்ணும் பொழுது வேட்டுவத் தொழிலின் பெருமை தெரிய வருகிறது. அவன் விடுத்த அம்பு முதலில் யானையைக் கொன்று வீழ்த்தியது. அதன்பின் புலியைக் கொன்றது. பிறகு புள்ளிமானை உருட்டியது. அதன்பின் பன்றியை விழச் செய்தது. இறுதியாப் புற்றின்கண் கிடந்த உடும்பில் சென்று தைத்தது. இப்படிப் பட்ட வலிய வில்லால் உண்டாகிய வேட்டைத் தொழிலை வெற்றியோடு உடையவன் என்று இப் பாடற் பகுதி குறிப்பிடுகிறது. எனவே பண்டைத் தமிழரில் வேடுவர்கள் தனிஒரு இடம் பெற்றிருந்தமையை உணர முடிகின்றது. அறம் சொல்லுகின்ற பொழுது கூட அரசனுக்கு ஒப்ப வேடுவர்கள் எண்ணப் பெற்றிருந்தமையைப் புறநானூற்றுக் கீழ்வரும் பகுதி மெய்ப்பித்துக் காட்டுகிறது.

‘‘தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே” (புறம், பா. 189)

இப்பகுதியில் நக்கீரனார் செல்வத்தின் பயனைச் சொல்லுகின்ற பகுதியில் கடல்நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் தனி ஒருவனாக இருந்து ஆளுகின்ற அரசர்க்கும், இடையாமத்தும் , நண்பகலும், தூங்காதவனாய் விரைந்து ஓடுகின்ற மிருகங்களைக் கொல்லுவதற்குக் கருதுகின்ற, கல்வியில்லாத வேடர்க்கும் உண்ணப்படும் பொருள் நாழியாகும், உடுக்கப்படுவது இரண்டே என்று கூறுகின்றார். இதில் அரசரையும் வேட்டுவரையும் ஒத்தநிலையில் காணுகின்ற புலவரின் பண்பு போற்றத் தக்கதாகும். மேலும் இப்பகுதியில் வேட்டைத் தொழிலைச் செய்கின்றவர்கள் நடு இரவிலும் , நடுப்பகலிலும் துயிலாது விலங்குகளை வேட்டையாடுவர் என்று குறிக்கப் பெறுவதால் அந்த இரு பொழுதுகளில் மிருகங்கள் சுயேச்சையாகத் திரியும் என்ற வழக்கமும் பெறப்படுகிறது.

‘‘கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் வளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்” (புறம், பா. 33)
என்ற இப்பகுதியில் வேடர்களின் வாழ்க்கை குறிக்கப் பெற்றுள்ளது. அதாவது வேடர்கள் காட்டில் வாழ்வார்கள். தங்களுக்குத் துணையாக நாயைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் விரும்பி வேட்டையாடுகின்ற மிருகம் மான் ஆகும். அதனைப் பிறரிடத்தில் அதாவது உழவுத் தொழில் செய்வோரிடத்தில் தொழில் நிலையில் விற்பனை செய்துள்ளனர் என்பதும், பெறப்படுகிறது. அந்த மான் தசைகளையும் அவர்கள் பனைஓலையால் செய்யப்பட்ட கடகப் பெட்டியில் வைத்து, விற்பனை செய்தனர் என்பதும் பாடலால் புலப்படுகிறது.

வேட்டுவத் தொழிலில் வெற்றி பெறுவதும் உண்டு. தோல்வி அடைவதும் உண்டு. அவ்வாறு வெற்றி தோல்வி அடைவதற்கு வினைப்பயன் காரணம் என்று கூறும் அளவிற்கு வேட்டுவத் தொழில் புறநானூற்றில் சிறப்பிடம் பெறுகிறது.

‘‘யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு” (புறம், பா. 214)

இப்பகுதியில் யானை வேட்டைக்குச் செல்பவன் யானையை எளிதாகப் பெறுவான். அதே நேரத்தில் காடை போன்ற சிறு பறவைகளை வேட்டையாடச் செல்கின்றவர்கள் அப்பறவை கூடக் கிடைக்காது வீணே திரும்புதலும் உண்டு. அதற்குக் காரணம் அவர்கள் செய்த வினைதான் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இப்பகுதியில் யானை போன்ற பெரிய மிருகங்களையும், காடை போன்ற சிறிய பறவைகளையும் வேட்டையாடுவது வேடுவர்களின் மரபாகத் தெரிய வருகிறது. இவ்வேட்டுவத் தொழிலோடு விறகு வெட்டும் தொழிலையும் புறநானூறு குறிப்பிடுகிறது.

‘‘விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பாடு அன்றுஅவன் ஈகை
நினைக்க வேண்டா வாழ்க,அவன் தாளே” (புறம், பா. 70)

என்ற பகுதியில் விறகு வெட்டுகின்றவர்கள் காட்டில் விறகை வெட்டி , ஊர்ப்பகுதியில் கொண்டு போய் விற்கின்ற தொழிலைச் செய்கின்றவர் ஆவர். அதனால் வாழ்வதற்கு உரிய பொருளைப் பெறுவர். அவ்வாறு இல்லாது காட்டிலேயே விறகு விற்கப்பட்டுப் பொருள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று விறகு வெட்டுபவர் தொழில் உவமையாக இடம் பெற்றுள்ளது.

விறகு வெட்டி யானையின் மூலம் ஊருக்குள்ளே கொண்டு வந்து விற்பார்கள் என்ற செய்தியும் புறநானூற்றில் காணப்படுகிறது.

‘‘கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே” (புறம், பா. 251)

என்ற இப்பகுதியில் காட்டில் வெட்டப் பட்ட விறகு யானையில் ஏற்றி, ஊருக்குக் கொண்டு வரப் பட்டு மக்களிடம் விற்பனை செய்யப் பெற்றிருக்கிறது. அது நன்கு எறிகின்ற விறகாகவும் இருந்திருக்கிறது என்பதும் இப்பாடற் பகுதியால் தெரிய வருகிறது.
மரக்கலத் தொழில் புறநானூறு குறிப்பிடும் தொழில் நிலைகளில் மற்றும் ஒரு தொழில் கடலில் மரக் கலத்தைச் செலுத்தி, பிற நாடுகளில் சென்று பொருளைக் கொண்டு வந்து, தன் நாட்டில் விற்கின்ற தொழில் முனைவோர் இடம் பெற்றுள்ளனர்.

‘‘மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்பலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயோ” (புறம், பா. 30)

என்ற இப்பகுதியில் மரக்கலத்தின் நடுவே அமைக்கப் பட்ட கூம்பில் விரிக்கப் பெற்ற பாயை மாற்றாமல், மரக்கலத்தில் உள்ள சுமையையும் குறைக்காமல், ஆற்றின் முகத்தே செலுத்துகின்ற பெரிய மரக்கலத்தை உடையவர் பரதவர். அவர்கள் மரக்கலத்தைக் கொண்டு செல்லும் பொழுது பல பொருள்கள் கீழே சொரியும். அப்பண்டங்கள் கடற்கரையில் ஒதுங்கும். அவை பெருஞ் செல்வமாக விளங்கும் என்று இப்பகுதியில் கூறப் பெற்றுள்ளது. மேலும் மரக்கலம் ஓட்டும் பரதவர் நுழையர் என்றும் அழைக்கப் பெற்றனர். அவர்கள் கடலில் செல்லாத பொழுது மதுவுண்டு மகிழ்ந்து கூத்தாடுவர் என்ற செய்தியும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

‘‘செஞ்ஞாயிற்று வெயில் முனையின்
தெண்கடல்திரை மிசைப் பாயுந்து
திண்திமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு
தண்குரவை சீர்தூங்கும்” (புறம், பா. 24)

என்ற பகுதியால் மரக்கலம் ஓட்டும் தொழில் கொண்டோர் ஓயு;வக் காலத்தில் கள்ளுண்டு மகிழ்வர் என்ற செய்தி பெறப்படுகிறது. மற்றொரு பக்கம் மரக்கலத் தொழில் செய்பவர் மரக்கலம் கவிழ்ந்து துன்பப் படுவதும் உண்டு என்ற செய்தியும் புறநானூற்றில் கிடைக்கின்றது.

‘‘மாறி இரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞர் உற்ற பெஞ்சமொடு ஓராங்குக்
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு” (புறம், பா. 236)

என்ற இப்பகுதியில் மழைக்காலத்து இரவில் மரக்கலம் கவிழ்வதும் உண்டு. அதனால் பெரும் துன்பம் ஏற்படும் என்பதும் இப்பகுதியால் பெறப்படுகிறது. மரக்கலம் வைத்திருப்போர் பொருள்களை ஏற்றித் தொழில் செய்வதோடு, போர் வீரர்களை ஏற்றிக் கொண்டு போர்;த்தொழில் செய்வதும் உண்டு என்ற செய்தியும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

‘‘வளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்;ட உரவோன் மருக” (புறம், பா. 66)
என்ற பகுதியால் காற்றின் உதவியால் மரக்கலம் செலுத்தப்படும் என்பதும், காற்றில்லாத பொழுது வருணனை வேண்டி அருள் பெறுவர் என்பதும் தெரிய வருகிறது. ‘‘களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போலும்” (புறம், பா.13) என்ற புறநானூற்று வரி பண்டைக் காலத்து மரக்கலங்கள் யானை போன்ற பெருந் தோற்றத்தைப் பெற்றிருந்தன எனத் தெரிய வருகிறது. பிறிதோரிடத்தில் ,

‘‘நளிகடல் இருங் குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறு சென்று” (புறம், பா. 26)

இப்பகுதியில் நாவாய் எனப்பட்ட மரக்கலம் பெரிய கடலின்கண் ஆழத்தில் காற்றால் செலுத்தப் படும் என்ற செய்தி குறிக்கப் பெற்றுள்ளது.

கைத்தொழில்கள்:
புறநானூற்றில் குலத்தொழில் கொண்ட தொழிலாளர்களால் செய்யப் பெறும் பெருந் தொழில்களைப் போலச் சிறு கைத்தொழில்கள் சிலவும் பதிவாகி உள்ளன. மண் பாண்டம் தயாரிக்கின்ற தொழில் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

‘‘தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலஅவன்
கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே”:(புறம், பா. 32)

என்ற இப்பகுதியில் தேர்ச் சக்கரம் போன்ற திகிரியில் பச்சைமண்ணை வைத்து மண்பானை செய்யப் படும் என்ற செய்தி இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். மண்பானை செய்யும் தொழிலாளி சிறப்பிக்கப் படுகின்ற காட்சியும் புறநானூற்றில் உண்டு.

‘‘கலம்செய் கோவே கலம்செய் கோவே
——————————- —————————
———————————– ————————–
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ” (புறம், பா. 256)

இப்பகுதியில் குயவராகிய மண்பாண்டத் தொழிலைச் செய்கின்றவர்கள் இறந்தவர்களைப் புதைக்கும் முதுமக்கள் தாழியையும் செய்யக் கூடியவர்கள் என்ற செய்தி குறிக்கப் பெற்றுள்ளது. பாடியவர் பெயர் தெரியாத இப்பாடலில் இறந்துவிட்ட கணவனோடு தானும் புதைக்கப் படுவதற்கு முதுமக்கள் தாழியை ஒருபெண் குயவனிடம் வேண்டுவது படிப்போர் உள்ளத்தை இரங்கச் செய்வதாகும். மற்றொரு கைத்தொழிலான ஆடை தயாரித்தல் தொழிலும் இடம் பெற்றுள்ளது.

‘‘அளிய தாமே சிறுவெள்ளாம்பல்
இளையம் ஆகத் தழையா யினவே”” (புறம், பா. 248)
இப்பகுதியில் ஆம்பல் இலையை ஆடையாகத் தைக்கின்ற தொழில் கூறப்பட்டுள்ளது.
‘‘பாம்புஉரி அன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழைஅணி வாரா
ஒண்ப10ங் கலிங்கம் உடீஇ நுண்ப10ண்” (புறம், பா. 383)

என்ற இப்பகுதியில் ஒரு பெண்ணினுடைய ஆடையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பாம்புத் தோல் போன்ற வடிவை உடையதாய், மூங்கிலின் உட்புறத்தில் உள்ள தோல் போன்று நெய்யப் பட்ட இழைகளை உடையதாய், வடிவமைக்கப் பட்ட ஆடையை உடுத்தினாள் என்ற செய்தி குறிக்கப் பெற்றுள்ளது. எனவே புறநானூற்றுக் காலத்தில் இலைகளைக் கொண்டு தைத்த பழம் ஆடையும் மென்மையான நூல் இழைகளைக் கொண்டு தைக்கப்பட்ட ஆடையும் கூறப் பெற்றிருப்பதால் ஆடை தயாரிக்கும் தொழிலையும் அறிய முடிகிறது.

புறநானூற்றுக் காலத்தில் சுவைபட உணவு படைக்கும் தொழிலும் சிறப்பாக இருந்தது என்பதைச் சில பாடல்களின் மூலம் அறிய முடிகிறது.

‘‘குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாண்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇ” (புறம், பா. 160)
இப்பகுதியில் தாளிப்புச் சேர்க்கப் பட்ட துவையலும், நெய்யுடன் கூடிய அடிசிலும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு பாடலில், ‘‘கமழ் குய் அடிசில் “( புறம் , பா. 10) என்று குறிக்கப் பெற்று மணம் கமழும் தாளிப்புடைய உணவு இடம் பெற்றுள்ளது.

‘‘அமிழ்தென மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி” (புறம்,பா.390)
என்ற இப்பகுதியின் மூலம் அமிழ்தத்தை ஒத்துச் சுவையுடன் கூடிய துவையல் உருவாக்கப் பெற்றிருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கின்றது. இவ்வாறு அடிசிலைப் பற்றிய செய்திகள் பல பாடல்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதே நேரத்தில் அடுதல் தொழிலில் ஏற்பட்ட வறுமைக் காட்சியும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. பெருஞ்சித்திரனார் தன் குடும்பத்தின் அவலத்தை எடுத்துக் கூறும் பாடலில்,

‘‘குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோரின்று
அவிழ்ப்பதம் மறந்து” (புறம், பா. 159)

என்ற இப்பகுதியில் குப்பைக் கீரைக்கு உப்பைச் சேர்ப்பதற்குக் கூடப் புலவர் வீட்டில் உப்பு இல்லை. மோரில்லாக் கூழ் பாழ் என்பதற்கு ஏற்ப மோரில்லாத உணவும் சமைக்கப் பெற்ற வறுமைச் சூழலும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு கைத்தொழில்கள் சிலவும் புறநானூற்றில் இடம் பெற்று அக்காலத் தொழில் வளத்தைப் புலப்படுத்துகின்றன.

பிணம் சுடுதல்:
வாழ்வின் தொடக்கம் முதல் வாழ்வின் இறுதிவரை மனித வாழ்க்கை உருண்டு ஓடிடப் பல தொழில் வளம் தேவை. உயிர வாழ இன்றியமையாத உழவத் தொழிலைப் போலப் புறநானூற்றில் மனித வாழ்வின் இறுதியான உடலைச் சுடுகின்ற பிணம் சுடுதல் தொழிலும் பதிவாகி உள்ளது.

‘‘எரிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்ளலல்
குறுகினும் குறுகுக” (புறம், பா. 231)

என்றும்,
‘‘பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு; ஈமம்
உமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு” (புறம், பா. 246)
என்றும்,

ஈமத் தீயானது விறகுகளால் அடுக்கப் பெற்று உண்டாக்கப் பெறுவதாகப் பதிவு செய்யப் பெற்றிருப்பதால் விறகு அடுக்கும் தொழிலைச் செய்தவர் உண்டு என்பதும் பெறப்படுகிறது.

முடிவு:
தமிழக வரலாற்றின் கலங்கரை விளக்கமாக விளங்கும் புறநானூற்றில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகையோர்க்கு உரிய தொழில்கள் இல்லாது , உழவுத் தொழில் முதலாக ஈமத்தீ மூட்டல் ஈறாகப் பலவிதத் தொழில் முறைகள் பதிவாகியுள்ளன. அவற்றை முன்னோட்டமாக ஒருசில எடுத்துக் காட்டுகளால் காட்டப் பெற்ற் இக்கட்டுரை மேலும் ஆய்வதற்கு வழிவகை செய்யும் என்பதில் ஐயமில்லை.

 

 

 

 

DR.B.SATHIYAMOORTHY

முனைவர் போ. சத்தியமூர்த்தி
உதவிப்பேராசிரியர்
தமிழியல்துறை
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 625 021.
email: tamilkanikani@gmail.com
https://in.linkedin.com/pub/dr-b-sathiyamoorthy-bose/62/873/23
கைபேசி: 9488616100

 

 

படம் உதவி: http://www.garuda-sangatamil.com/tamil_drawings.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *