மீ.விசுவநாதன்

vallamai
காலக் குழந்தை , கவுனும் புதுச்சட்டைக்
கோலமுமாய் இன்பமும் கூட்டியே ஏலமாய்
எப்போதும் வாச இயல்போடு போகிறது !
இப்போதும் அந்த எழில் ! (1) 31.12.2014

பிறந்த தினமழகு , பேருலக மின்பம் ,
கறந்த பசும்பால் கனிகள் சிறப்பு ,
துறந்து விடவே துடிப்போர்க்கும் ஞானம்
நிறைந்து வழங்கும் நிலம். (2) 01.01.2015

மாய உலகம் ! மனமோ மயக்கத்தில்
தோய அலையும் ! துளிர்விடும் , காயும் !
செடிபோல் வருவதும் செல்வதும் காலம்
விடிவதற் கான விதி. (3) 02.01.2015

பம்பரம் , கோலி , பசுகாளை ஓட்டியே
வம்புட னாடிய வாலிபத் தெம்பு
பதுங்கிய போதும் , பசுமை நினைவு
பிதுங்கி வருவது பேறு (4) 03.01.2015

பேரருவி , ஓடைநீர் , பீறிவரும் காட்டாறும்
நீரழகி காட்டும் நிலத்தினது பேரழகு !
வானருவி கொட்டும் மழைச்சொட்டு காலத்தின்
தேனருவி என்றே தெளி. (5) 04.01.2015

வால்மீகி , காளிதாசன் , வள்ளுவ(ன்) , ஆழ்வார்கள் ,
நால்வருட(ன்) , ஆண்டாளும் , நக்கீரன் , மால்வியாசன்
ஞானியாம் சங்கரர் , நம்கம்பன் , பாரதியும்
காலக் கவிதையே காண். (6) 05.01.2015

இருக்கும் வரையில் இதமாய்ப் பழகு !
இருக்கும் பணமோ எதுவோ உருகும்
பனிபோல் மறையும் ! பளிச்சென வாழ்ந்து
பனிபோல் சிறக்கப் பணி. (7) 06.01.2015

தேரைப்பார் என்னவோர் தெய்வீகம் ! இந்தந(ம்)
ஊரை வலம்வந்(து) உடனங்கோர் ஓரமாய்
நிற்கிறது ; உள்ளுக்குள் நிற்கின்ற ஆதிக்கே
கற்பூர ஆரத்திக் காப்பு. (8) 07.01.2015

வாழப் பழகுவதே வாழ்க்கையாம்; வாழைப்பூ
தாழ இருப்பதுவும் , தாமரைப்பூ ஆதவனை
ஆழநீர் மேல்பார்த்(து) அரும்பிப்பின் மூடலும்நாம்
வாழவழி சொல்லும் வகை. . (9) 08.01.2015

நடைவண்டி ஓட்டி நடைபயின்றேன் ; வாக்குத்
தடையின்றிக் கொட்டத் தமிழை அடைமழைபோல்
நாளும் விடாதுநான் நாப்பயிற்சி செய்கின்றேன் ;
வாளுக்குக் கூர்மை வலு. (10) 09.01.2015

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காலம்

  1. ரொம்ப அழகிய கருத்துச் சிலிர்ப்பை ஊட்டும் வெண்பாக்கள். வாழ்க விசு
     கவியோகி

Leave a Reply to kaviyogivedham

Your email address will not be published. Required fields are marked *