ஏப்ரல் 20, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு கவிஞர்  றியாஸ்முஹமட் அவர்கள்

றியாஸ் முஹமட்

 

இலங்கையின் கல்குடா பகுதியில் பிறந்து வளர்ந்து, இன்று வளைகுடாப் பகுதியில், மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிவரும் “கவியருவி றியாஸ் முஹமட்” அவர்களை இவ்வார வல்லமையாளராகப்  பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற திங்களன்று வல்லமை இதழில் சீதனம்”  என்ற தலைப்பில் சீதனம் தரமுடியாதக் கொடுமையால் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னிகளின் வருந்தத் தக்க நிலையினை, இந்த நூற்றாண்டிலும் நிகழும் இந்த சமுதாய அவலத்தை விவரிக்கும் கவிதையை எழுதியதற்காக வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார் கவியருவி றியாஸ் முஹமட்.   அக்கவிதையின் சில வரிகள் கீழே…

சீதனம்

கன்னிக்கு ஏன் வேதனை…?
கருமச் சீதனத்தின் சோதனை!

கன்னிக்கோ
கலியாணம்
கடந்த வயது…

கலியாணச் சந்தையில்
கனவுகளோடு
காலூன்றி நிற்கும்
கற்புக் கன்னி!

கல்யாணராமர்களோ
கன பேர்,
கருமச் சீதனக்
கனவுகளோடு…

கல்யாணராமனுக்குக்
காணிக்கையில்லை,
காணிக்கை கேட்பவன்
கடவுளுமில்லை!

கரும்பு தின்னக் கூலியோ… ?
கணவனாகக் காசோலையோ…?

[…]

பள்ளிநாட்களில் எழுதுவதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, “மாவடிச்சேனை முஸம்மில்” “றியாஸ் முஹமட்” என்ற பெயர்களுடன் தொடங்கியது கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப்பயணம்.    கதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் றியாஸ் முஹமட்டின் படைப்புகள் இந்நாள் வரை மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளன. மண் வாசனையுடன் எழுதுவதே தனக்கு மிகவும் விருப்பம் என்று கூறும் றியாஸ் முஹமட் தனது பிறந்தமண்ணை நினைவிற்குக் கொண்டு வரும் விதமாக சமீபத்தில் “கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் மத்திய கிழக்கின் “தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதி வருவதுடன், முன்னணி சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகிறார். இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு கவிதை நூல் வெளியிடவேண்டும் என்பது றியாஸ் முஹமட்டின் அடுத்த குறிக்கோள்.

இருமாதங்களுக்கு முன், சென்ற பிப்ரவரி 2015 இல், “தடாகம் கலை இலக்கிய வட்டம்” நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் றியாஸ் முஹமட் முதற்பரிசு பெற்றதுடன் “கவியருவி” சான்றிதழும் பெற்றார்.   வல்லமையிலும் தனது கவிதைகளை தொடர்ந்து எழுதிவரும் றியாஸ்முஹமட்  கலைமகள் அழைக்கிறாள்!”  என்ற கவிதையில், “கலைமகள் கவி பாட என்னை அழைக்கின்றாள்! நசிங்கிப் போன என் சமூகத்தின் நாளைய விடியலுக்காக, எனது எழுது கோலில் தீ மூட்டித் தீக்குச்சியாய் எரியப் போகிறேன்…” என்று தனது எழுத்துப் பணியின் குறிக்கோளை தெளிவாக முழங்குகிறார்.

றியாஸ் முஹமட்1

வல்லமை இதழில் வெளியான  பாரதி கண்ட புதுமைப்பெண்,  பனமரக் காடு  போன்ற இவரது கவிதைகள், சென்றவாரத்தின் “சீதனம்” கவிதையினை ஒட்டி பெண்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கவிதைகளாக இருப்பினும்,

இவரது பெரும்பாலான கவிதைகளின் தொகுப்பு தெளிவாக விளக்குவது …
செல்வம் திரட்டப்  பணி நிமித்தமாக அயல்நாட்டிற்கு சென்ற இளைஞர்கள், குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் பிரிந்து தனிமையில் வாடுவதையும்,
தாய்நாட்டை நினைத்து ஏங்கியவண்ணம், சில சமயம் குடும்பத்தாரின் மறைவிற்கும் செல்ல இயலாது அந்தத் துயரை தனிமையில் கழிப்பதையும்,
பணம் என்ற ஒரே காரணத்திற்காக உழைத்து உழைத்து பொருளீட்டும் காலத்தில், இளமைக்காலம் இவர்கள் கண்முன்னே வெறுமையாகக் கடந்து முதிர்ச்சி அடைவதையும்,
திருமணம் செய்து கொண்டாலோ தனது துணையுடன் வாழமுடியாது போகும் நிலையை, ஒரு இளைஞனின் மனக்குமுறல்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

கவியருவி றியாஸ் முஹமட் அவர்களின் கவிதைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன….
[குறிப்பு: கவிதைகளில் சில முழுமையாக வழங்கப் பெறாமல் கருத்தைக் கவர்ந்த, மனதைத்  தொட்ட கவிதையின் பகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன, முழுக்க்கவிதைகளையும் படிக்க விரும்புவோர் சுட்டிகளைத் தொடர்ந்து சென்று படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்… ]

எங்க ஊரு! இந்த ஊரு!!

இலங்கையின் முத்துடா..!!
கிழக்கிலொரு சிப்பிடா..!!
செம்மண் புழுதிடா..!!
சங்ககால வாசமடா..!!
என் அன்னை மடிய‌டா..!!
என் அண்ணாமார் வாழும் ஊருடா..!!

ஊர் மெச்சி பாடும்
இவன் கல்குடாவின்
எழுத்தடா..!!

***
ஓட்டமாவடி பாலம்

உன்னை
நினைக்கையில்
மண் வாசனை
வருகிறது,
தாய் வீடு
தெரிகிறது.

காலில் ரெக்கைகள்
முளைக்கிறது,
இதயச் சிறகுகள்
பறக்கிறது………..

***
அம்மா

தாயே,
உன் தோளுக்கு மேல்
நான் வளர்ந்தாலும்…
தொலை தூரத்தில்
நான் இருந்தாலும்…
வீசுதம்மா
உன் சேலை
வாசம்…
ஏங்குதம்மா,
இந்தப் பிள்ளைப்
பாசம்…

இனி,
வேண்டாமம்மா
இந்த வெளிநாட்டு
நேசம்.
போதுமம்மா
இந்தப் போலி,
வேஷம்.
இனி,
உன் காலடியில்தான்
என் சொர்க்கம்.
உன்,
மடியில்தான்
என் மரணம்…

***

தந்தைக்கு ஒரு கவிதை

எழுத நினைக்கிறேன்
ஒரு கவிதை,
அடக்க முடியவில்லையே
என் அழுகை!

எழுது எழுது என்று
நினைக்கிறது மனது
அழுது அழுது
என் பேனாவும் பழுது!

என்ன வாப்பா அவசரம்?
போகும் போதும் சொன்னீர்களாமே
என்னைப் பத்திரம்!

பேனாவை எடுத்தால்
பேச்சு வரவில்லை வாப்பா
ஏட்டை விரித்தால்
எழுத்து வரவில்லை வாப்பா!

காகிதமும் என் கண்ணீரால்
கரைந்து போனதே வாப்பா
தளை தட்டுது வாப்பா
மூச்சு முட்டுது வாப்பா!

எதுகை மோனை கூட
அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
நான் எழுதிய கவிதைகளும்
கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!

கூடவே இருப்பீர்கள் என்றுதானே
கொடி போலப் படர்ந்தேன்
பாதியில விட்டுப் போகவா
பனமரம்போல வளர்ந்தேன்?

[…]

போங்கள் போங்கள்!
என் வாப்பா மண் மறைந்தார்
என்று சொல்பவர்கள்
என் கண் மறைந்து போங்கள்!

***
பணம்

போனதும் விமானம்
வந்ததும் விமானம்
மறக்க முடியவில்லை
ஏழையாகப் பிறந்ததால்
நான்பட்ட அவமானம்…!

வண்ண வண்ணக் காகிதம்
வதங்கியது என் வாலிபம்
எல்லாமே செய்தது
இந்தப் பணம்
இல்லாமல் ஆனேன்
நடைபிணம்…!

***

போச்சு எல்லாமே போச்சு!

படித்த படிப்பும்
வீணாகப் போச்சு
வேலைக்காக அரசியல்வாதி
கால் பிடித்து
மானம் போச்சு!

கையில காசி காணாது
மாமா மச்சினன் உறவுகள்
அறுந்து போச்சு
இதுதானடா உறவுகள்
என்று வெறுத்துப் போச்சு!

வாழ்ந்தும் வாழாமலும்
முடியும் நரைத்துப் போச்சு
காதல் என் காதல்
அது கண்ணீரில் கரைந்து போச்சு!

[…]

கல்குடா வாழ்க்கை
வளைகுடா வாழ்க்கையாக
மாறிப் போச்சு
தனியாகவே வாழ்ந்து
வெறுத்துப் போச்சு!

[…]

ஊர் நிலமைகளை நினைத்து
என் தூக்கமும் போச்சு
ஊர் படையெல்லாம்
பெரும் படையாகவும் ஆச்சு!

பணம் இருந்தால் மாத்திரமே
அரச உத்தியோகம் என்பது
சரியாகப் போச்சு
நாடு ரொம்ப கெட்டு போச்சு!

பட்டம் படித்தவன்
பாலைவனம் மேய்வது
பழகிப் போச்சு
சமூகமும் தம் நிலைமறந்து
போச்சு!

படித்தவர்களுக்கு
வேலை என்பது
குழந்தைப் பேச்சு
இதைக் கேட்டுக் கேட்டு
காதும் புளித்துப் போச்சு!

***

முதிர் குமரன்!

வயதுக்கு வந்து பல வருடமாச்சு
மீசையோடு வெள்ளை முடியும்
எட்டிப் பார்த்தாச்சு !

வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
தெரிந்து போச்சு நானும் ஒரு
முதுமைக் குமரன்
என்று…!

கூடப் படித்தவர்கள்
எல்லாம்
குடித்தனம் போயாச்சு!

குழந்தை, குட்டிகளோடு
கூடி வருகையில்,
மனசு துடிக்கிறது,
எரி மலையாக வெடிக்கிறது…!

என் பள்ளிப் பருவத்திலேயே
தாய்க்கு வந்தது வாதம்,
கை, கால்களை
முடக்கி வாழ்க்கையைச்
சிதைத்து விட்டது!

மூத்த தங்கை வயதுக்கு வந்து,
இருபது வருடங்களாச்சு !

கல்யாணச் சந்தையில்
காலூன்ற நிற்கும்,
இளைய தங்கை வேறு…!

தங்கைகளை நினைத்து,
உறங்கும் அம்மாவின்
அழுகையும் அதிகமாச்சு !

அவளின் மூச்சும்
வரவரக் குறைந்து போயாச்சு !

எங்கள் ஏழ்மை வாழ்வு
கண்டு குடும்பத்தாரும்,
அயலவரும்
எட்டிப் போயாச்சு !

எங்க வீட்டு எச்சி தின்னு
வளர்ந்த செல்லப்
பூனையும் வீட்டுச்சுவர்
ஏறிப் போயாச்சு !

குடும்பச் சுமையைக் குறைக்க
முதுகுச் சுமை ஏற்றியாச்சு !

வாழ்ந்தும் வாழாமலேயே,
உடம்பு தளர்ந்து,
இளமையும் போயாச்சு !

இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?

என் தங்கைகளைக்
கரை சேர்க்கும் வரை….
கனவுகளைக் கண்களில்
சுமந்து கொண்டு
வாழும்
நானும் ஒரு
முதிர் குமரன்தான்!

***

மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்…!

கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்!

நடுச் சாமம் நாய்க் குரைக்க
நடு நெஞ்சில் நெருப்பு வைக்க
நீயில்லா வீடு பார்த்து,
தெரு நாய்களும் குரைக்குது மச்சான்
என்னைக் குறுகுறுவென பார்க்குது மச்சான்!

ஆராரோ ஆரிரரோ..,
பக்கத்து வீட்டுத் தாலாட்டு
காது கேட்டு, வாட்டுது மச்சான்
என்னை வாட்டுது மச்சான்!

எண்ணைக் கிணத்துல நீங்க
உங்க எண்ணத்தில நாங்க
ராப்பகலா தூங்காம நானிங்கு ஏங்க
என்னத்த வாழ்ந்தோம் மச்சான்
எண்ணங்களுடன்தானே வாழ்கிறோம் மச்சான்!

மாரியில குளிராகி
கோடையில வெயிலாகி
உருமாறித் தடுமாறி
பனியாகிக் காற்றாகி
சருகானேன் மச்சான்!
ஒரு நேந்துவிட்ட கோழிபோல
ஆனேனே மச்சான்….

கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்கு போகாத மச்சான்!

நீங்க கழற்றிப் போன சட்டை பார்த்து கண் கலங்குது மச்சான்
நீங்க வைச்ச மரமும் வளர்ந்து நிற்குது மச்சான்
நம்ம குழந்தையும் இப்ப எழுந்து நிற்குது மச்சான்
உங்களைக் கேட்டுத்தானே அடம்பிடித்து அழுகுது மச்சான்!

ஏழு கண்டம் உன்னைத் தாண்டவைத்தான்
ஏக்கத்தோடு என்னை வாழவைத்தான்
பால் நிலவு போல என்னைத் தேயவைத்தான்
பாலைவனப் புழுதியா உன்னைப் பறக்க வைத்தான்!

நம் காதலைச் சேர்த்து வைத்த அந்த இறைவன்
வாழ்தலை ஏன் பிரித்து வைச்சான்..?

இருந்தும் இல்லையென்பது துன்பம் மச்சான்
உன்னோடு வாழ்வதே இன்பம் மச்சான்
பித்துப் பித்து பிடிக்கிறதே மச்சான்
பிச்செறிந்து வாயேன் மச்சான்!

ஏரோப்பிளேன் வாழ்க்கை
வேணாம் மச்சான்
ஏறி வாங்க வாழ்வோம் மச்சான்!

கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்க விட்டு வாயேன் மச்சான்!

சிறந்த கவிதைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப் பணியைப் பாராட்டி, விருதுகள் பல பெற்று, அவர் தமது எதிர்காலக் கனவுகளை அடைவதிலும், குறிக்கோள்களை அடைவதில் வெற்றி பெற வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

 

தகவல் பெற்ற தளம்:  கல்குடா நேசன் (kalkudahnation.com): இளங்கவிஞர் அறிமுகம்-றியாஸ் முஹமட் , ‘தடாகம் கலை இலக்கிய வட்ட’ சர்வதேச கவிதைப் போட்டி 

Facebook 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. கவியருவி ரியாஸ் முஹமத்
    மீன்பாடும்தேன்நாடு (கல்குடா மண்ணு) பெற்றெடுத்து பெருமை கூறும் 
    தவப் புதல்வன் கவியருவி ரியாஸ் முஹமத் யெனும் 
    புகழ் பரப்பும் இவன் எழுத்துக்களால் 
    பூத்து மணக்குமாம் புவி ..!
    கவிதை (கலை) துறையை சிந்தனை யிலெந்தி 
    எழுதுகின்ற படையல்கள் தமிழே யாகும் 
    துலங்கிடும் இலக்கியங்கள் சிறப்புப் பெற்று 
    தூது விடும் கலையாம் கண்கள் …!
    கவிதைக்குள் கைகட்டி பார்க்கு மிவனின் 
    கலையழகு கலைமகளின் மடியில் வாழும் 
    புவி வெல்லும் பூரணப் பெட்டகத்தின்
    புதுயாம் இவன் திறப்பு ..!
    ஆயகலை பலதும் இவன் கைகளால் 
    ஆடி மகிழுமாம் தமிழை நாடி 
    தூயவை தொட்டு எழுதும் கரங்கள் 
    தொடரும் பணியாம் சிறப்பு !
    எழுது கோலெந்தி எடுக்கின்ற முத்துக்கள் 
    எழுந்து நடக்கணும் உலக மண்ணிலும் 
    மா ளாது வாழும் மா பணி உச்சம் 
    மச்சத்தைப் பதிக்குமாம் மகிழ்ந்து …!
    கலைமகள் நேசிக்கின்ற அன்புத் தம்பி நீ 
    பக்கத்து துணையானாய் இலக்கியத்துக் குள்ளே 
    நாமுரசு கொட்டும் நல்லினிய வாழ்த்து 
    நலம் பெறுமாம் நயந்து ..!
    எழுது எழுது தொடர்ந்து வாழ்த்துக்கள் தம்பி
    உங்கள் றாத்தா கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *