-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் போட்டிக்கான ஒளி ஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. எச். பிலால் அவர்களுக்கும், இப்படத்தைத் தெரிவுசெய்த திருமிகு. சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் நன்றி.

 

11129746_819039241483610_1321350885_n

அரத்தநிறச் சேலை, கழுத்திலே உருத்திராக்கத்தை ஒத்த பல்நிற மணிகள், தலையிலே அப்பிய மஞ்சள்வண்ணப் பொடி என்று மங்கலக் கூட்டணியோடு காட்சிதரும் இப்பெண்களின் கையிலிருக்கும் வீச்சரிவாள்தான் சற்றே நமக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது.

யார் இவர்கள்? தமக்குப் பிறரிழைத்த அநீதி கண்டு பொங்கிச் சினந்து, நீதிகேட்டு ஆயுதமேந்திப் புறப்பட்டிருக்கும் கண்ணகியின் வழித்தோன்றல்களா? இல்லை வண்ணமும் சுண்ணமும் தண்ணருஞ் சாந்தமும், கோடும் குழலும் பீடுகெழு மணியும் கையேந்தி வீச்சரிவாளால் விலங்கை வீழ்த்திக் கொற்றவைக்குப் பலியிடவந்த தொல்குடிப் பெண்களா?

ஆண்களே அச்சத்தோடு இப்பெண்களைப் பின்னால் நின்றுபார்ப்பது இவர்கள் கொண்ட கொள்கையின் உறுதியைக் காட்டுகின்றது.

நம் புலவர் தோழர்களின் உள்ளங்களில் இப்படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அவர்தம் ஆக்கங்கள் வழியாய் இனிக் காண்போம் வாருங்கள்!

கவிதைகள் வெள்ளமெனப் பொங்கிப் பாய்ந்திருக்கின்றன இம்முறையும்! என் உள்ளம் தொட்ட வரிகள் அவற்றினின்று…

###########################################

சிவப்புச் சக்திகளை அடையாளம் காட்டும் திருமிகு. ரேவதி நரசிம்மனின் வரிகள்…

மனதில்,கண்களில்,கைகளில் 
உறுதி காட்டும் சிவப்பு சக்திகள். 
ஆக்கவும்  தெரியும் 
தாக்கப் பட்டால் அழிக்கவும் தெரியும் 
என்கிறார்களோ !

###########################################

’உரிமை தேடி!’ எனும் தலைப்பில் திரு. சி. ஜெயபாரதன் எழுதிய வரிகள்…

காட்டு ஜாதி ஆயினும், நியாயம்
கேட்க வருகிறோம் !
கத்தி காட்டி மிரட்டியும்
சத்தியம் காக்கத் திரள்கிறோம் !
பூர்வ குடியினர் யாமெல்லாம்
பூரண உரிமை கேட்கிறோம் !
வாழ எமக்கு ஊழியம்
வயிற்றை நிரப்ப ஊதியம்.
பிள்ளை குட்டி படித்திட
பள்ளிக்கூடம் கட்டுவீர் !

 ############################################

உடலில் பூசிய வண்ணங்களை மிஞ்சும் வகையில் சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் வர்ணங்களைச் (சாதிகளை) சாடும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

குருதியில்
பச்சை உண்டோ?
கருப்பு உண்டோ?
நீலம் உண்டோ?
ஆனால், உனக்கு மட்டும்
ஏதடா
வண்ணத்தை மிஞ்சும்
வர்ணங்கள்?

எவனோ அன்று
பிரித்தாளச் செய்த
சூழ்ச்சியை;
இன்றும் நீ
பிடித்துக் கொண்டு
இருக்கிறாயே
மூடனே!

 ###########################################

மாரியாத்தாளை மங்கையர் போற்றுவதைக் காட்டும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

அம்மனுக்கு வேண்டியே தான்விரதம் இருப்போம்
ஆடிமாதம் வந்திடக் கொண்டாட்டம்
கும்மியடிப் போம்குல வைச்சத்தம் இடுவோம்
கையிலேதான் தூக்குவோம் ஓர்அறிவாள்
செம்மையுடை மஞ்சளை யும்தடவிக் கிட்டு
சுத்திவந்தா நல்லதே எங்களுக்கு
மும்மாரி பெய்யவே செய்திடுவா அருள்மிக்()
மாரியாத்தா எங்களைக் காத்திடுவா

#############################################

ஆயுதம் ஏந்தியும் அமைதியையே நாடும் அரிவையரைப் போற்றும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

ஆயுதம் சுமந்து நின்றாலும்
அமைதியையே இறைவனிடம்
இறைஞ்சி
நிற்கின்றோம் !
சக்தி
வடிவம் நாங்கள்
எந்நாளும்
ஆக்க சக்தியாய்-
ஊக்க
சக்தியாய் திகழ்வோம் !
நானிலம்
நலமுடன் விளங்க
நல்லெண்ணங்களை
மனங்களில்
வித்தாக்கிடுவோம் !

############################################

வாளேந்திய வஞ்சியரை வாழ்த்தும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

செஞ்சாந்து பொட்டிட்டு செவ்வாடை மேலுடுத்தி 
மஞ்சளிலே நீராடி மங்களமாய்அஞ்சாமல் 
வஞ்சியரும் வில்லுடன் வாளேந்தி ஆடிவர 
தஞ்சமுற கெஞ்சும் சனம் .

############################################

கண்ணப்பன்போல் கடவுள்பால் முரட்டுக்காதல் கொண்ட பெண்களைப் பாராட்டும் திரு. ஜெயராம சர்மாவின் வரிகள்…

கண்ணப்பன் பக்தியைநாம்
எண்ணியே பார்த்துவிடின்
கையில்கத்தி வைத்துள்ளார்
பக்திகொள்ளல் தவறாமா?

சிறுத்தொண்டர் வெட்டியதால்
சிவனருளைப் பெற்றாரே
அவர்வழியில் இவரெல்லாம்
ஆயுதத்தை ஏந்துகிறார் !

#############################################

பெண்மையின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

அன்பின் திருஉருவாய் ஆளும் பெண்மை
இன்னல் படுவோர்க்கு இரங்கும் பெண்மை
தீமை கண்டு கொதித்தெழும் பெண்மை
ஊமை மடந்தையாய் காதல் செய் பெண்மை
இன்னும் பற்பல சக்தியாய் உலகினில் பெண்மை

############################################

தலைமுறை காக்கவும், கயவரைக் கருவறுக்கவும் பெண்கள் வாளேந்தியிருப்பதை விளம்பும் திரு. கொ.வை. அரங்கநாதனின் வரிகள்

பெண்ணைப் பெருந்தெய்வம் என்று சொன்ன நாட்டிலின்று
கண்ணைச் சுடும் காட்சிகள்தான் எத்தனை எத்தனை
அன்னை என்றார் ஆண்டவனில் பாதியென்றார் இன்று
அரக்கராய் மாறிவிட்டதே அவர்தம் கொடுஞ்செய்கைஅதனால்தான்
வளயல் அணியும் கைகளில் இன்று வாளேந்தினோம்
களையெடுக்க அல்ல கயமையின் கருவறுக்க!
கலை யுரைத்த கைகளில்  இன்று கருவிகள் கொண்டோம்
தலைகள் எடுக்க அல்ல எங்கள் தலை முறையை காக்க!

############################################

புத்தரின் அகிம்சைவழியை ’வாளே’(!) வஞ்சியர்க்கு வலியுறுத்துவதாய் அமைந்த டாக்டர். லட்சுமியின்  வரிகள்…  

மண்ணுலகில் படைத்திட்ட
அனைத்தையும் அன்பே வழிநடத்தும்
அகிம்சையால் அகிலத்தை ஆள
தூக்கிய என்னைத் தூர எறிந்து
தூரத்துமரத்தின் ஆணியில்
தொங்கவிடப்பட்ட புத்தரின் வழி நடப்போம்.

############################################

மேற்கண்டவை நான் மெச்சுகின்ற கவிதை வரிகள்.

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார்? எனும் கேள்வி உங்களிடம் தொக்கி நிற்பதை உணர்கின்றேன். இதோ அவரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

சமீபத்தில் ஆந்திராவிற்குச் செம்மரங்களை வெட்டச்சென்ற நம் தமிழகத் தொழிலாளர்களை அரக்கமனம் படைத்த ஆந்திரக் காவல்துறை இரக்கமின்றிச் சுட்டுக்கொன்றதையறிந்து நம் குருதி கொதித்ததல்லவா! இப்பின்னணியைப் பாடுபொருளாக வைத்து அப்படுகொலை நிகழ்த்திய பாதகர்களைக் பலிகொள்ள இச்செவ்வாடைப் பெண்கள் சிலிர்த்தெழுந்து புறப்படுவதாய்ப் புனையப்பட்ட கவிதையொன்று என் உள்ளம் தொட்டது; உணர்வைச் சுட்டது. அக்கவிதையின் படைப்பாளர் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

#############################################

”எதிரிகளை உதிரிகளாக்கத் தமிழர்களே அணிதிரளுங்கள்!” என்று அறைகூவல் விடுக்கும் அக்கவிதை…

மரம்வெட்ட போன மறத்தமிழன் மேனி
மரமாகிச் சாயத் துடித்தோம்சரமாரி
எனவே பொழிந்த எதிராளித் தோட்டா
சினம் கண் டெழுந்தோம் சிவந்து. 

உயிரெடுக்குந் தெய்வ உருவெடுத்து விட்டோம்
கயிறாய் திரித்திடுவோம் தமிழன் உயிரை
பயிராய் அறுக்கும் பகைவன் திமிரை
தயிராய்க் கடைவோம் துணிந்து.

காட்டு மகமாயி காளி வழிகாட்ட
நாட்டில் நலிந்த தமிழரினிகூட்டுக்
குயில்போல் குமுறும் நிலைமாற்றிக் காட்ட
எயிலாய் இருப்போம் இணைந்து.
(
எயில்அரண்

##############################################

அடுத்து, தெய்வங்களிலும்கூடப் பணமற்றோர் வணங்கும் பாமரத் தெய்வங்கள், பணம்படைத்தோர் போற்றும் பகட்டான தெய்வங்கள் எனும் வேறுபாடிருப்பதைக் கண்டு உளங்கொதித்துச் ’சாமிக்குள்ளயும் சாதியிருக்கா?’ எனும் பகுத்தறிவுக் கேள்வியை வீச்சரிவாளாய் வீசியிருக்கும் திரு. நல்லை. சரவணாவின் கவிதையை இவ்வாரத்திற்கான பாராட்டத்தக்க கவிதையாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

அக்கவிதை…

ஆடம்பரக் கோவிலில்லகாவி 
அடிச்சிவிடக் காசுமில்ல…!
ஆலமரத்தடிக் கீத்துக் கூடு 
அதச்சுத்தியொரு காரச் செவரு..
மஞ்ச வேட்டி இடுப்புத் துண்டு 
மச மசன்னு கம்பங் கூழு
பஞ்சாமிர்தம் ஊட்டலையே
சந்தனக் கூழும் ஊத்தலையே
இத்தனக் கொறயிருந்தும்
இரும்புத் தூணா காத்து நிக்கெ
தலமொறையத் தவறாம
தழைக்க வச்சிப் பாத்து நிக்கெ…!
எஞ்சாமிஎஞ்சாமி..
எங்காதுக்குள்ள சொல்லிப்புடு..
மறுவீடு மாமியா வீடுன்னு
எங்கிட்டும் போகாம
இங்கனயே நிக்கிறியே…. !

சாமிக்குள்ளயும் சாதியிருக்கா?

############################################

படக்கவிதைப் போட்டியில் தொடர்ந்து நாட்டத்துடன் பங்கெடுத்து நல்ல கவிதைகளை நல்கிவரும் கவிஞர் பெருமக்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி 8-இன் முடிவுகள்

  1. அன்பிற்கினிய நடுவருக்கும், சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்ற மெய்யன் நடராஜ் அவர்களுக்கும், மற்றும் அனைத்து சக கவிஞர்கள் அனைவருக்கும், அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்!

    மீண்டும் அடுத்த கவிதைப் போட்டிக்குத் தயாராவோம்!

    அன்புடன்
    சுரேஜமீ

  2. முதலில் இதுபோன்ற ஒரு சிறந்த மின்னிதழ் கண்டு வியந்தேன் ….மகிழ்ந்தேன்….என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் .

    “படக்கவிதைப் போட்டி 8-இன் படைக்கப்பட்ட அத்துணை  கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள். 

    குறிப்பாக என் அன்பு நண்பர்  மெய்யன் நடராஜ் அவர்களின் படைப்பை தேர்வு செய்து  சிறந்த  கவிஞராக தேர்வு செய்தமைக்கு  பாராட்டுக்கள் .
    கவிஞருக்கு என் இதயம்  கனிந்த   வாழ்த்துக்கள் . 

  3. நடுவருக்கும், சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்ற மெய்யன் நடராஜ் அவர்களுக்கும், மற்றும் பாராட்டுக்குறிய கவிஞராக தேர்வு செய்யப்பட்டூள்ள திரு நல்லை சரவணா அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  4. தேர்வு பெற்ற கவிஞர்களுக்கும்,  நடுவருக்கும் பாராட்டுக்கள்,  நல்ல கவிதைகளைத்தந்த மற்ற கவிஞர்களுக்கும்( நடுவர் மெச்சிய)   வாழ்த்துக்கள்
    சரஸ்வதிராசேந்திரன்

  5. முதலில் இதுபோன்ற ஒரு சிறந்த மின்னிதழ் கண்டு வியந்தேன். பன்முக ஆளுமைகளின் பலம்  வல்லமையின் வளம் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  6. இந்த வார சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்  திரு .மெய்யன் நடராஜ் அவர்களுக்கும் , பாராட்டுக்குரிய கவிஞராய் தேர்வு செய்யப்பட்ட நல்லை சரவணா அவர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ….!!
    வெற்றிகள் தொடரட்டும் ….!!

  7. வாழ்த்துக்கள் தந்த அனைத்து உள்ளங்களுக்கும்  கவிதையை வெற்றிக் கவிதையாய் தேர்ந்தெடுத்த வல்லமை இதழின் தேர்வாளர் மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் எனது நன்றி.

Leave a Reply to ரோஷான் ஏ.ஜிப்ரி.

Your email address will not be published. Required fields are marked *